செவ்வாய், 24 டிசம்பர், 2019
வியாழன், 19 டிசம்பர், 2019
தன்மேம்பாட்டுரை அணி!
ஒருவர் தன்னைத்
தானே புகழ்ந்து கொள்வது
“தன்மேம்பாட்டுரை அணி“
எனப்படும்.
உ.ம்
என்னிகர் ஆடுவோர்
இங்குண்டோ? என்நடனம்
மின்னல்போல் கண்ணுள்
விரைந்திடும்! – என்விரல்
காட்டிடும் ஆடல்
கலைநயம் வேறெந்த
நாட்டிலும் இல்லையென்பேன்
நான்!
பொருள் – எனக்கு
நிகராக நாட்டியம் ஆடுபவர்
இங்கு இருக்கின்றனரா ? நான்
ஆடும் நடனம் வானத்தில்
தோன்றிடும் மின்னலைப் பார்ப்பது
போல் விரைவாக நடந்து
கண்ணுக்குள் கமழும். என்
விரல் காட்டும் கலைநயம்
மிக்க நாட்டிய பாவனைகள்
வேறெந்த நாட்டிலும் காட்டுவதற்கு
எவரும் இல்லை என்பேன்
நான்.
பாடலில்
தனக்கு நிகர் நாட்டியம்
ஆடிட வேறு எவரும்
இல்லை என்று தன்னைத்
தானே புகழ்ந்து கொள்ளுவதால்
இது
“தன்மேம்பாட்டுரை அணி“
ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019
கரகாட்டம்!
.
தலையிலே சுமைசுமந்து
தளராமல் ஆடிடுவார்!
கலையிலே பண்பாடாய்
காட்டிவிட்ட ஆட்டமிது!
ஒலிக்கின்ற ஓசைக்கே
உணர்வளித்து ஆடிடுவார்!
கலிகால நடப்புகளைக்
ஆட்டத்தில் காட்டிடுவார்!
கிராமத்துக் கலையுணர்வு
கவிஞனையும் பாடவைக்கும்!
இராக்கால வேளையிலும்
இயல்பாக பார்க்கவைக்கும்!
எத்தனையோ இன்னல்கள்
எல்லோருக்கும் உண்டன்றோ!
அத்தனையும் தலைசுமந்து
இத்தரையில் வாழ்கின்றார்!
என்றான உணர்வுகளை
எடுத்தோதும் ஆட்டமிது!
நன்றான கலையாகும்
நம்நாட்டின் அடையாளமே!
.
பாவலர் அருணா செல்வம்19.12.2019
இகழ்ச்சி விலக்கணி! (அணி இலக்கணம்)
பாடலில் ஒரு செயலை விலக்குவதற்கான காரணத்தை
இகழ்ந்து கூறி விலக்குவது “இகழ்ச்சி விலக்கு“ எனப்படும்.
உ. ம்
தொடர்ந்துவந்து வாழ்வில் துயரமிடும்! நாளைக்
கடத்தும் தொலைக்காட்சித் தொல்லை! – நடத்திடும்
நாடகங்கள் உண்டாக்கும் நன்மையெனும்
தீமையாம்
ஊடகம் வேண்டாம் ஒழி!
பொருள் – தொலைக்காட்சியில்
நடக்கும் நாடகங்களால் வாழ்வு துயரம் தரும். நாட்களைக்
காரணமின்றிக் கடத்திவிடும். அதில் கிடைக்கும் இன்பங்கள்
நன்மை போன்று தீமை பயக்கும். அதனால் ஊடகம் என்னும்
தொலைக்காட்சிப் பெட்டியை வேண்டாம் என்று ஒழிப்போம்.
பாடலில் விலக்குவதற்கான தொலைக்காட்சிப் பெட்டியை இகழ்ந்து கூறி
விலக்குவதால் இது “இகழ்ச்சி விலக்கு“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019
வெள்ளி, 13 டிசம்பர், 2019
உதாத்தவணி – 22
வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்.
----- 73
பொருள் – ஓர்
இடத்தில் உள்ள செல்வத்தின் உயர்ச்சியையும், உயர்ந்த உள்ளத்தில் ஏற்கப்பட்ட உயர்ந்த உணர்ச்சியையும் மிகுத்து அழகு பொருந்தக் கூறுவது “உதாத்தவணி“ எனப்படும்.
1,
செல்வ மிகுதி
பாடலில் ஓர் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் உள்ள செல்வத்தின் மிகுதியை அல்லது அதன் பெருமையை அழகு பொருந்தப் பாடுவது “செல்வ மிகுதி உதாத்தம்“ எனப்படும்.
உ. ம்
மண்வளமும் இன்ப மழைவளமும் உள்ளுயர்
பெண்வளமும் வீரப் புகழ்வளமும் – தண்டமிழ்
ஊட்டிடும் சொல்வளமும் ஒன்றாக எங்களின்
நாட்டிலுண்டே செல்வ நயம்!
பொருள் – செல்வங்கள்
எனச்சொல்லும் மண்ணின் வளமும், இன்பத்தை நல்கும் மழைவளமும், உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கும் பெண்களும், வீரம் கொண்ட ஆண்களால் புகழ்வளமும், தாய்த்தமிழால் எங்களிடம் உள்ள மொழிவளமும் ஒன்றாக எங்களின் நாட்டினில் நிறைய உண்டு.
ஓர் இடத்தில் இருக்கும் செல்வ மிகுதியைப் பாடி இருப்பதால் இது “செல்வ மிகுதி உதாத்த அணி“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.12.2019
செவ்வாய், 10 டிசம்பர், 2019
பாரதியைப் போற்றுவோம்!
பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல் – வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்து – வேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?
காட்டுக்கே அரசன் சிங்கமன்றோ – அதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும் – தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!
வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள் – கண்டு
வாடி வதங்கிய பாரதியே – தீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியே – நாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!
நாட்டுக்கு நன்மையைச் செய்திடவே – நல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும் – வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!
மூட்டிய வீரச் சொற்களாலே – நெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம் – தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவே – உடன்
கடமை சூட்டை ஏற்றியதே!
ஏட்டினில் உள்ள இலக்கணத்தை – யாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப் – புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்த – உயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019
லேபிள்கள்:
கவிதை,
கும்மி,
பாரதியார்,
மரபு,
Bharathiyar
சனி, 7 டிசம்பர், 2019
தூது போ வண்ணமலரே !
.
அல்லி குளத்தில்
நீராடுகிறாள் என்
நெஞ்சிற்கினியாள்!
ஆம்பலும் அவள்
முகத்தைக்
காண நாணும்!
கயல்களும் அவள்
கண்ணழகில்
மயக்கம் கொள்ளும்!
நீரைவிட்டு வெளிவரும்
நிலா போன்ற
அவளின்
உருவைக் காண
அன்னங்கள்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்!
அவளின் மேனியைத்
தொட்டிடும்
குளத்து நீருக்கும்
குளிரெடுக்கும்!
அவள் முகத்தைக்
கண்ட
வண்டுகள் பூந்தாதின்
மதுவருந்த வட்டமிடும்!
இயற்கை அவளைத்
தொட்டே தழுவினாலும்
சிணுங்காத சின்னவள்
என்பார்வை பட்டதும்
நாணங்கொள்வாள்!
வண்ணமலரே….
நானும் உங்களைப்
போலவே
அவளிடம் மயங்கி
இருப்பதைத்
தூதாக போய்
சொல்லிவிடு!
உன்னிடத்தில் நான்
கொடுத்த முத்தத்தை
உனைத் தூக்கி
அவள் முகரும் போது
நீ கொடுத்து,
என் நினைவைக்
காட்டிவிடு!
.
பாவலர் அருணா செல்வம்
07.12.2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)