திங்கள், 24 ஜூன், 2019

ஐயவதிசயம்!



அதிசயவணி!

பாடலில் ஒரு பொருளை உலக நடையைக் கடந்து ஐயத்துடன் அதிசயத்துப் பாடுவதுஐய அதிசயம்ஆகும்.

உ ம்
செந்தமிழைத் தேவியவள் செப்பிடும் போதெல்லாம்
செந்தேன் குடித்த செயலானேன்! – முந்தும்
கவிதான் இனிப்போ! கருத்தைச் சுவைக்கும்
செவிகளுக்கும் வாயுண்டோ செப்பு!

பொருள்செம்மையான தமிழ் மொழியில் பெண்ணானவள் பேசிடும் பொழுதெல்லாம் நான் தேனைக்குடித்ததைப் போல் மயங்கினேன். இப்படி ஆவதற்கு காரணம் முந்திவந்து காதுக்குள் நுழையும் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியென்றால் அந்தக் கவிதையில் உள்ள கருத்தின் சுவையை உண்பதற்கு செவிகளுக்கு வாய்தான் உண்டோ…. சொல்வாயாக.
   இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தமிழின் சுவை ஆகும். தமிழைக் காதால் கேட்டதும் மனமானது தேன் குடித்த நிலையை உணர்கிறது. அதற்கு காரணம் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியானால் காதுகளுக்கு இனிப்பைச் சுவைக்க வாய் இருக்கிறதா ? என்று உலகநடையைக் கடந்து  ஐயமுடன் அதிசயத்துக் கூறியுள்ளதால் இதுஐயவதிசயம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.06.2019

புதன், 19 ஜூன், 2019

கூடா உவமை!



உவமை அணி!
ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமை“ எனப்படும்.

உ.ம்
மலர்ச்சொரியும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும், – நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல், கடந்து போன காலங்கள், மலரில் உள்ள சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
    மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.06.2019

வெள்ளி, 14 ஜூன், 2019

வன்சொல் விலக்கணி!



முன்ன விலக்கணி!

பாடலில் வன்சொல் சொல்லி ஒரு செயலை விலக்குவது வன்சொல் விலக்குஎனப்படும். பொதுவாக இதிலிருந்து தொடரும் எட்டு விலக்கும் தோழி கூற்றாகவே உதாரணப் பாடலைக் கொடுத்துள்ளார்கள்.

. ம்
கருவேல முட்களெல்லாம் கால்களில் குத்தும்
திருமேனி நோயால் துவளும்! – அருவுயிர்ப்
போகும்! புதுவிடம் போகா(து) இருதோழி!
போகுமுயிர் நிற்கும் பொலிந்து!

பொருள் புது இடத்திற்கு போனால் கருவேலம் முள் கால்களில் குத்தும். அதனால் நோய் உண்டாகும். அழகிய மேனி துவண்டு கடைசியில் அரிய உயிரும் போய்விடும். அவ்விடம் போகாது இருந்துவிட்டால் உயிரானது நின்று வாழும்.
   ஓர் இடத்திற்கு செல்லும் தன் தோழியை, அங்கே போனால் முட்கள் குத்தும். நோய் வந்து சேரும். உயிர் போகும் என்ற வன்சொற்களைச் சொல்லி அந்த செயலை விலக்குவதால் இது வன்சொல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2019

செவ்வாய், 11 ஜூன், 2019

ஒட்டணி!



அடையும் பொருளும் வேறுபட மொழிதல்!

 அடை என்பது பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழி ஆகும்.
பாடலில் ஒரு பொருளைச் சிறப்பிக்க வந்த அடைமொழிகளையும், அவற்றால் சிறப்பிக்கப்படும் பொருளையும் வேறாகக் கூறி, அவற்றால் தன் உள்ளத்தின் கருத்தைச் சொல்வதுஅடையும் பொருளும் வேறுபட மொழிதல்எனப்படும்.

. ம்
சிறகில்லாப் புள்லெல்லாம் சேர்ந்தந்தக் கூட்டில்
இறவா திருக்க இரையைத்திறத்துடன்
கொண்டுவந்து ஊட்டும்! குவிந்திருக்கும் தாய்மையைப்
பெண்பறவை கொண்டிருக்கும் பேறு!

பொருள்சிறகில்லாத சின்னச்சின்னக் குஞ்சுகள் கூட்டில் சேர்ந்திருக்க, அக்குஞ்சுகள் இறவாமல் இருக்க தாய் பறவை உணவைக் கொண்டுவந்து ஊட்டும். இப்படி செய்வது உள்ளத்தில் குவிந்திருக்கும் தாய்மை  குணத்தைக் கொண்டிருக்கும் பெண்பறவைகளுக்கு உரிய தகுதி.

பாடலில் வீட்டில் குழந்தைகள் இருக்கின்றனர். வெளியில் சென்ற பெண்ணானவள் எங்கிருந்தாலும் வந்து அக்குழந்தைகளின் பசியைப் போக்குவாள் என்பது சொல்லக்கருதிய பொருளாகும்.  ஆனால் அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் பறவையும் அதன் குஞ்சுகளும். கூட்டில் வாழும் தன் குஞ்சுகளுக்கு இரையைத் தாய் பறவை கொண்டுவந்து கொடுக்கும் என்பது. இவ்வாறு தான்கருதிய பொருளை மறைத்து அதனை வெளிப்படுத்த வேறொன்றினைச் சொன்னதால் இதுஒட்டணிஆகியது.
   தான் சொல்லக்கருதிய பொருள் அன்னையாக இருக்க அதற்கு நிகராக பறவையைச் சொல்லி அதற்கு ஏற்றார் போல் அடைமொழிகளைச் சொல்லியுள்ளதால் இதுஅடையும் பொருளும் அயல்பட மொழிதல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.06.2019

திங்கள், 10 ஜூன், 2019

விபாவனை அணி!



வினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்!

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் உலகறிந்த பொருளைக் கூறாமல் அவ்வினை அந்தப் பொருளுக்கானது அல்ல என்று இவ்வினையை மறுத்து அதற்கு எதிரான வேறு ஒரு நிகழ்வைக் கூறுவதுவினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்எனப்படும்.

. ம்
தேயாத வெண்ணிலவில் தேர்ந்த இருளான
வேயாத கூறை விரிந்திடப்பாயாத
கூர்வேலால் தாக்கக் கொடியில்லாப் பூவிதழாள்
சேர்க்காமல் சென்றதேன் செப்பு!

பொருள்தேயாத வெண்ணிலவில் (பெண்ணின் முகம்) மிகவும் அடர்ந்த இருளான வேயாத கூறை விரிந்திட (தலையில் உள்ள கற்றைக் குழல் விரிந்திட), பாயாத கூர்வேல் தாக்க (கண்கள் தாக்க) கொடியில்லா பூவிதழாள் (செவ்விதழ்வாய்) தன்னைச் சேர்த்து அணைக்காமல் சென்றது ஏன் ? இது தலைவனின் கூற்று இயல்பாக வந்துள்ளது.
    தேய்ந்து வளரும் தன்மையுள்ளது வெண்ணிலவு. இங்கே தேயாத நிலவு என்றதால் இது அந்த மங்கையின் முகத்தைக் குறிக்கிறது. குடிசைகளில் கீற்றோலையால் அடுக்கப்படுவது. இங்கே வேயாத கூறை என்றதால் இது அவளின் தலை முடியைக் குறிக்கிறது. வேல் பாய்ந்து தாக்கும். இங்கே பாயாத கூர் வேல் என்றதால் இது அவளின் கண்களைக் குறிக்கிறது. பூக்கள் கொடியில் பூக்கும். இங்கே கொடியில்லாப் பூ இதழ் என்பதால் இது அவளின் வாயைக் குறிக்கிறது.
   தேய்ந்து வளருதற்கு வெண்ணிலவும், குடிசைக்குக் கீற்று வெய்யப்படுவதும், வேல் பாய்வதும், பூக்கள் கொடியில் இருப்பதும் அதன் அதன் வினைகள். இவ்வினைகளை மறுத்து, முகம், தலைமுடி, கண்கள், வாய் என்று பி பொருட்கள் புலப்படுத்துவதாக வந்துள்ளதால் இதுவினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
10.06.2019

வெள்ளி, 7 ஜூன், 2019

உயர்ச்சி வேற்றுமை அணி! – குறிப்பு



வேற்றுமை அணி!

     பாடலில் இரண்டு பொருளுக்கு உள்ள ஒப்புமைகளைக் கூறிப் பின்பு அதனில் ஒன்றுக்கு மட்டும் அதன் உயர்வைக் குறிப்பால் கூறுவது உயர்ச்சி வேற்றுமைஆகும்.

. ம்
எண்ணில் அடங்காத எண்ணங்கள் ஓடிடும்
விண்ணில் தவழும் வியன்மேகம்! – கண்காண
காற்றடிக்க மேகம் கலைந்தோடும்! எண்ணங்கள்
ஈற்றுவரை வாழும் இணைந்து!
.
பொருள் எண்ணில் அடக்க முடியாத அளவு எண்ணங்கள் (கற்பனைகள்) ஓடிடும். வானத்தில் அழகிய மேகமும் எண்ணில் அடங்காத அளவு ஓடிடும். எனினும், கண்கள் மேகத்தைக் கண்டுகொண்டு இருக்கும் பொழுதே காற்று வீசுவதினால் கலைந்து ஓடும், ஆனால் எண்ணத்தில் தோன்றியவைகள் வாழும் வரையில் நம் மனத்துடன் இணைந்தே வரும்.
    பாடலில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்று மனத்தில் தோன்றும் எண்ணங்கள். மற்றொன்று வானில் தோன்றும் மேகம். முதல் இரண்டு அடிகளில் இரண்டிற்கும் உள்ள ஒப்புமையைக் கூறிப், பின்பு எண்ணத்தை மட்டும் குறிப்பால் உயர்த்திக் கூறியுள்ளதால் இது உயர்ச்சி வேற்றுமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2019

செவ்வாய், 4 ஜூன், 2019

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!



.
அருமை பிறையைக் கண்டிடவே
   அமைதி கொண்டே நோன்பிருந்தும்
கருத்தில் உயர்ந்த எண்ணமுடன்
   கணிவு கருணை கலந்திருந்தும்
விரும்பி உண்ணும் உணவினையே
   விருந்தாய் கொடுத்து மகிழ்ந்திருக்கும்
பெருநாள் கண்ட தோழர்களைப்
   பெருமை பொங்க வாழ்த்துகிறேன்!
.
பாவலர் அருணா செல்வம்
05.06.2019