வெள்ளி, 7 அக்டோபர், 2016

இராவணன் பேசுகிறான்!!





அவை வணக்கம் !

தங்கத் தமிழை அளித்திட்ட
    தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
    எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
    சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
    அவைக்கும் என்றன் நல்வணக்கம் !

குரு வணக்கம் !

ஆசும் மதுரமும் ஆனந்த சித்திரமும்
பேசும் பெரும்வித் தாரமும் – வீசுபுகழ்ப்
பாட்டரசே ! நான்குகவி பாணரே ! என்குருவே !
சூட்டுகிறேன் பாக்கள் சுடர்ந்து !

கம்பனைக் கண்டு கதைக்கின்றான்!


இராவணன் !!

கம்பன் கதையைக் கணித்திட்டான் !
    கதையைக் கேட்டோர் களித்திட்டார் !
இம்மண் இருக்கும் வரைபேசும்
    இன்பத் தமிழின் புகழ்வீசும் !
எம்மான் என்றார் இராமனையே !
    இறைவி என்றார் சீதையையே !
செம்பொன் அருளைப் பெற்றிடவே
    செய்த நுாலைப் போற்றுகவே !

கற்றோர் மனத்தின் மகிழ்நிலையைக்
    கவியில் கூறல் எளிதன்று!
நற்றேன் தமிழின் அழகினையும்
    நவின்ற விருத்த எழிலினையும்
சொற்கள் அமைத்த முறையினையும்
    சுவையாய்ச் சேர்த்த உவமையையும்
பெற்றோர் வியந்தார் ! தமிழுக்குப்
    பெருமை யென்றே தினம்புகழ்ந்தார்!

இன்பம் பொங்க அமர்ந்திருந்தார்
    எங்கள் கம்ப கவியாழ்வார்!
நன்மை எதுவோ அதைமுதலாய்
    நலங்கள் சேர நல்கியவர்!
துன்பம் கூடச் சிலவிடத்தில்
    சுகத்தைத் தரவே கவிசெய்தார்!
என்றும் இன்பம் நீடிக்கும்
   என்றே நினைத்தே இருக்கையிலே!

கண்முன் ஒருவன் வந்துநின்றான்!
    கண்கள் கசக்கிப் பார்க்கையிலே
உண்மை வீரம் பொங்குகின்ற
    ஒளிரும் உடலைப் பெற்றவனும்
பெண்மேல் ஆசை உற்றவனும்
    பேதை போன்று மாண்டவனும்
விண்ணோர் பணிந்த வேங்கையெனும்
    இலங்கை வேந்தன் எதிர்நின்றான்!

அவனைக் கண்ட கவிகம்பர்
    அதிர்ந்து எழுந்து நின்றிட்டார்!
தவங்கள் செய்த முனிவரிடம்
    தலையைத் தாழ்த்தி வணங்குதல்போல்
புவனம் வென்ற இராவணனை
    போற்றி வணங்கி கவிசொன்னார்!
அவனும் கீழாய்த் தாள்பணிந்தான்!
    அருமைக் கம்பர் மனம்நெகிழ்ந்தார்!

பேச அமர்வாய் இராவணனே!
   பெருமை இலங்கை காவலனே!
வாசம் போன மலர்நோக்கி
    வண்டு வருதல் கிடையாது!
வேசம் களைத்து விட்டபின்பு
    வீர வசனம் கூடாது!
நேசம் கொண்டு வந்துள்ளாய்
    நெஞ்சின் வருத்தம் சொல்என்றார்!

விருத்தப் பாவால் விருந்துவைத்தோன்
    வெந்த சோற்றின் பதம்பார்த்தான்!
பருத்த உடலைக் கொண்டோனோ
    ”படித்தோர் போற்றும் பாவலனே!
திருவின் புகழை எனக்களித்தாய்!
    திறமை அனைத்தும் சீர்சேர்த்தாய்!
அருமை பெருமை அனைத்தையுமே
    அள்ளி கொட்டிப் புகழ்சேர்த்தாய்!

சிவனும் திருமால் பிரம்மனையும்
    சிறந்த உலகம் மூன்றினையும்
நவகோல், ஐந்து சக்தியையும்
    நலிவாய் என்முன் பணியவைத்தாய்!
தவத்தால் பெற்ற வரத்தினையும்
    தருக்குச் சேரக் கொடுத்துவிட்டாய்!
எவரும் இணையாய் இலையென்றே
    எழுத்தில் கூட்டிக் கதைவடித்தாய்!

என்னை வெல்ல எவருமில்லை
    என்றே இருந்தேன் இருமாப்பாய்!
பொன்மான் சீதை அவளிடத்தில்
    பிணைந்த காதல் உண்மையன்றோ!
நன்மை தீமை அறியாமல்
    நயந்து வருதல் காதலன்றோ!
இன்பம் பொங்கும் உலகத்தில்
    இதனைப் பிழையாய்க் கொள்வீரோ?

விண்ணின் தேவர் வணங்குமென்னை
    வீழ்த்தி நின்றான் ஓர்மனிதன்!
பெண்மேல் கொண்ட காதலினால்
    பெருமை போமோ சொல்புலவா?“
கண்கள் சிவக்க இராவணனோ
    கம்ப னிடத்தில் கேட்டுநின்றான்!
பண்பா டென்னும் நன்னெறியைப்
    பண்பாய்ச் சொன்னார் திருக்கம்பர்!

”இருவர் நெஞ்சம் கலப்பதையே
    இன்பம் பொங்கும் காதலென்பர் !
ஒருவர் மட்டும் நினைத்திருந்தால்
    ஒன்றும் அதிலே பழியில்லை!
அருமைக் கணவன் நெஞ்சிருக்க
    அவளை வருத்தல் நெறியில்லை!
கருமை நெஞ்சாய் நீயிருந்தாய்
    கற்பின் கனலில் அழிவுற்றாய்!

எந்தப் புகழைக் கொண்டாலும்
    எளிதாய் அழிக்கும் காமப்பேய்!
இந்த உண்மை சொல்வதற்கே
    இராமக் காதை வந்ததுவாம்!
சிந்தை கலங்கா இராவணனே
    அந்தக் கதையில் மாண்டாலும்
அந்தம் இருக்கும் நாள்வரையில்
    அழியா திருக்கும் உன்பெயரே!

என்றே வாழ்த்தி விடைதந்தார்
    இன்பத் தமிழின் பெரும்புவலர்!
“அன்றே இதனை அறிந்திருந்தால்
    ஆசை தீயை அணைத்திருப்பேன்!
இன்றே அறிந்தேன் உண்மையினை!
    என்றன் இறப்பும் உலகிற்கு
நன்றே“ என்று மனமகிழ்ந்தான்
    நம்மின் இலங்கை வேந்தனவன்!

பாவலர் அருணா செல்வம்
17.09.2016

பிரான்ஸ் கம்பன் விழா (25.09.2016) கவியரங்க கவிதை.

வியாழன், 22 செப்டம்பர், 2016

வேற்று நாட்டவரின் பழமொழிகள் !





1 கண் உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான் !  - ஜெர்மன்

2. சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன் !  - சீனா

3 .குளிர் வந்துவிட்டால் அழுக்குத் துணியும் அவசியமாகும் !  - ஜப்பான்

4. குணமில்லாத அழகு மணம் அற்ற மலர் ! – பிரான்ஸ்

5. அகம்பாவன் ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது ! – ஸ்காட்லாந்து

6. அதிஷ்டமில்லாத காலத்தில் உங்கள் கைத்தடி கூட பாம்பாகி விடும் ! – இங்கிலாந்து.

7. கனவுகள் நனவாக வேண்டும் என்றால் முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் ! – ரஷ்யா

8. குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர் ! – டென்மார்க்

9. தாழ்வது வெட்கப்படத்தக்கது அல்ல. தாழ்ந்தே கிடப்பது தான் வெட்கப்படத் தக்கது ! – சுவீடன்


10. கடவுள் எல்லாப் பறவைகளுக்கும் உணவைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் உணவைக் கூட்டுக்குள் எறிவதில்லை ! - ஹாலந்து
-

வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழ்ப்பெண்!



இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

கவிஞர் அருணா செல்வம்
04.02.2016

ஞாயிறு, 24 ஜூலை, 2016

செங்கழுநீர் அம்மா !





செங்கழுநீர் அம்மா, செழிக்கின்ற வாழ்வினை
எங்களுக்குத் தந்தருள் என்னாளும்! – மங்கையர்
குங்குமத்தின் உள்ளே குடிகொண்ட தேவியே!
பொங்கல் படைப்போம் புகழ்ந்து!

வேப்பிள்ளை ஆடை விரும்பிடும் வித்தகியே!
கூப்பிட வந்தருளும் கோமதியே! – காப்பாய்!
வருத்திடும் அம்மை வடிந்தோடச் செய்யும்
மருந்தைக் கொடுத்ததுன் மாண்பு!

அலைதொடரும் வாழ்வும் அடங்காத் துயரும்
நிலையிலா வேலை நிலத்தில்! – தலைமகள்
உன்முகம் கண்டால் உயர்ந்தோங்கும் வாழ்வு!நல்
பொன்னென மின்னும் பொலிந்து!

தளிர்இலைப் பந்தலிட்டுத் தண்ணீர் தருவார்!
குளிர்மோர் கஞ்சியுடன் கூழும் - அளிப்போர்க்குச்
செங்கேண் அம்மா சிறப்பெலாம் தந்திடுவாள்
அங்கம் குளிர அறிந்து!

ஆடிவரும் தேரில் அமர்ந்து மகிழ்பவள்!
கோடி நலத்துச்செங் கேணியவள்! – தேடியே
ஓடிவந்து காப்பாள்! உளமொன்றித் தாய்பாதம்
கூடிடும் நெஞ்சம் குளிர்ந்து!

(கட்டளை வெண்பா)
கவிஞர் அருணா செல்வம்

22.07.2016

திங்கள், 18 ஜூலை, 2016

தமிழே அருள்வாய் !




ஒருநாள் அறிந்தேன் ! உயிராய் உணர்ந்தேன் !
திருவாய் மொழிந்தாய் ! திடமாய்க் கலந்தேன் !
கருவாய் வளர்ந்தாய் ! கவியாய்ப் பிறந்தாய் !
உருவால் தமிழாள் ! உயர்ந்தேன் வளமாய் !

மனமோர் குரங்காம் ! மதியோ நிலவாம் !
கனமோர் தலைப்பால் கவியாய்ப் புணைந்தேன் !
இனமாய் இருந்தால் எதுதான் கசப்பாம் ?
சினமோ எழுந்தால் சிரம்தான் ! குலைந்தேன் !

உனையே நினைத்தேன் ! உறவாய் மதித்தேன் !
பனைபோல் வளர்ந்தாய் ! பனிபோல் மறைந்தாய் !
எனையே மறந்தேன் ! இனியார் இருப்பார் ?
நினைவே வளர்வாய் ! நிறைவே தருவாய் !

புவியோ பொதுவாய்ப் புறனே புணைந்தால்,
செவியே செயலால் செவிடாய் இருப்பாய் !
தவியாய்த் தவித்தே தனியாய் இருந்தால்
கவிதான் வருமோ ? கனியாய்க் கரும்பாய் ?

அணைபோல் திரண்டே அறிவே வளர்வாய் !
கணைபோல் விரைந்தே கலையே அருள்வாய் !
இணைந்தே இருப்பாய் இனிதாய்த் தமிழே !
துணையாய் இருப்பாய் ! தொடர்வேன் தொழுதே !

(சந்த விருத்தம்) 
கவிஞர் அருணா செல்வம்
14.07.2016

திங்கள், 20 ஜூன், 2016

விருதுகளும் அதன் பெருமைகளும் !




பாரத ரத்னா விருது
    இந்திய அரசால் கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த பணி இவற்றில் சிறப்பாகச் செயல் படுவோருக்கு இது அளிக்கப்படுகிறது.

பத்ம விபூஷன்
    மத்திய அரசால் எந்த துறையிலும் தனிச்சிறப்பு அடையும் பெருமக்களுக்கு அளிக்கப்படும் விருது இது.

பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள்
    மத்திய அரசால் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு, பொதுச்சேவை மற்றும் அறிவியல் துறைகளில் தனிச்சிறப்பு அடையும் பெருமக்களுக்கு வழங்கப்படுகிறது.

பாரதீய ஜன்பத் விருது
    இந்திய மொழி பற்றிய கட்டுரைக்கும், இந்திய தத்துவம் மற்றும் புத்தகத்திற்கும் தொழிலதிபர் சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் அளிக்கப்படும் விருது இது. இது 2.5 லட்சம் பண முடிப்பு ஆகும்.

தாதே சாகேப் பால்கே விருது.
    திரைப்படத் துறையில் சிறப்பாகச் செயல்படும் நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு இந்திய திறைப்பட துறையின் பாட்டனார் என்று அழைக்கப்பட்ட தாதா சாகேப் பால்கேவின் நினைவாக இந்திய அரசாங்கம் தரும் விருது இது.

வீரத்திற்கான விருதுகள்
    வீரச் செயல் புரிந்தவர்களுக்கு பரம் வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர சக்ரா, அசோக சக்ரா விருதுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இராணுவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

பி.சி.ராய் விருது
    மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்திரா காந்தி விருது
    தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

அர்ஜீனா விருது
    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய சினிமா விருது
    சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், குழந்தை நடிகர், மற்றும் துணை நடிகர்களுக்காக வழங்கப்படும் விருது இது.

மத்திய சாகித்ய அகாடமி விருதுகள்
    இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படுகிற விருது இது.

பிர்லா விருது
    மனித நேயத்திற்காக ஜி டி பிர்லா விருது வழங்கப்படுகிறது.

கோயங்கா விருது
    பத்திரிக்கைத் துறையின் சிறந்த சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு
    விருதுகளில் தலைசிறந்த விருது நோபல் பரிசு விருது ஆகும். இது ஆல்பிரட் பெர்னாடு நோபல் என்கிற ஸ்வீடன் நாட்டு வேதியியல் மற்றும் பொறியியல் வல்லுநரின் நினைவாக இவர் விருப்பத்தடன், அவர் இறந்த பிறகு வழங்கப்படுகிறது.
    இயற்பியல் வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் சிறந்த சேவைக்காகவும்,
    எழுத்துத்துறையில் சிறந்த பணிக்காகவும்,
    உலக அமைதிக்காகவும் சிறப்பாகப் பணியாற்றும் பெருமக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஞானபீட விருது
    இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது.

டாக்டர் இராதாகிருஷ்னன் நல்லாசிரியர் விருது.
    தமிழக அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்படும் விருது இது.

அண்ணா விருது.
    தமிழக அளவில் காவல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் விருது இது.

தெரிந்ததைத் தெரிவித்தேன்
அருணா செல்வம்.

கொசுறு

   நான் ஏன் இந்த விருதுகளைப்பற்றி எழுதினேன் என்றால்….. எனக்கும் ஒரு விருது கிடைத்தது.
   நான் கடைசியாக வெளியிட்ட வேலியில்லாப் பயிர் என்ற புத்தகத்திற்கு, அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு BEST APPRECIATION AWARD வழங்கி சிறப்பித்துள்ளது என்பதை மகிழ்வுடன் உங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்

அருணா செல்வம்

புதன், 4 மே, 2016

நிலம் பேசினால்…… !



மண்ணிற்குள் ஓர்விதையை
   மறைத்துவைத்துக் காத்திருந்தால்
விண்ணிற்கும் வியப்பாக
   விதைமுளைத்து வெளிதெரியும்!
கண்ணிற்கு பசுமையெனும்
   கருத்திழுக்கும் காட்சிபோல
பெண்ணிற்குள் நடந்திடவோ
   பேருதவி ஆண்வேண்டும்!!

தங்கமென்ன? வைரமென்ன?
   தகரமென்ன? இரும்பென்ன?
அங்கமெல்லாம் அலங்கரிக்கும்
   அற்புதங்கள் என்னிலுண்டு!
சங்ககாலம் என்பதுவும்
   சரித்திரங்கள் பேசுவதும்
மங்கலமாய் வாழுமென்தன்
   மடிபிறந்த பிள்ளைகளே!

வானழுவும் நீரையெல்லாம்
   வளம்கொடுக்க வாங்கிவைப்பேன்!
ஊனழுகிப் போனதையும்
   உள்வாங்கி மக்கவைப்பேன்!
தானழுதும் ஆறாகித்
   தாகத்தைத் தணிக்கவைப்பேன்!
கான்வாழும் உயிர்களுக்கும்
   கவித்துவமாய் இடம்கொடுப்பேன்!

அசையாத சொத்தென்றே
   ஆசையுடன் வாங்கிவைப்பார்!
இசைபோன்ற வாழ்வினிலே
   இன்னுமின்னும் சேர்த்துவைப்பார்!
பசையுள்ள ஆளென்பார்
   படுக்கையிலே விழும்பொழுது
திசைபுள்ளி ஏதென்று
   தெரியாமல் தேடிடுவார்!

துடிக்கின்ற இதயமது
   துடிப்பின்றி நின்றுபோனால்
அடிகணக்கில் வாங்கிவைத்த
   ஆறடியும் உதவிடாது.
படிக்கணக்குப் பார்த்துவைத்தால்
   பசித்தவுடன் சாப்பிடலாம்!
நொடிகணக்கு உன்வாழ்க்கை
   நுரைபோன்று மறைந்திடுமே!

அன்றுதொட்டு இன்றுவரை
   ஆராய்ந்துப் பார்த்திட்டால்
தொன்றுதொட்டு என்னுடனே
   தொடராக வருவதெல்லாம்
குன்றின்மேல் விளக்காக
   குறைவின்றி ஒளிர்கின்ற
நன்றுதவும் என்றுதந்த
   நல்லறிஞர் எழுத்தாகும்!!
 
அன்றிருந்தார் இன்றில்லை!
   அவரெல்லாம் எங்குசென்றார்?
இன்றிருப்போம் நாளையில்லை!
   இதுதானே மனிதவாழ்க்கை!
நன்றென்று நன்மைசெய்து
   நல்லவராய் வாழ்ந்துவந்தால்
என்றென்றும் வாழுகின்ற
   என்னைப்போல் உயர்ந்திடுவீர்!


அருணா செல்வம்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பருவ ஞாபகங்கள்!




மனமென்னும் தோட்டத்தில்
மலர்கின்ற மலர்களெல்லாம்
மாயனவன் செய்துவைத்த
மனம்நிறைந்த மதுக்குடங்கள்!

எத்தனையோ பூவினங்கள்!
எந்நாளும்   காய்த்தாலும்
காய்க்காமல் போனாலும்
காலத்தின் கவித்துவங்கள்!

இன்பங்கள் நிறைந்திருந்தால்
இனிக்கின்ற தேன்சுரந்து
இன்பமனம் வீசுகின்ற
எழுதாத வர்ணனைகள்!

பருவத்தில் உணர்வுகளைப்
படைத்திட்ட அருமைகளைப்
பளிங்காகக் காட்டிநம்மைப்
படபடக்க வைப்பவைகள்!

மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையினைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!

தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயதின் இன்பங்கள்
எந்நாளும் இனிப்பவைகள்!

மரணகனம் வந்தாலும்
மகிழ்வளிக்கும் ஞாபகங்கள்!
மனமதிலே வாடாமல்
மலர்ந்தாடும் சோலைகளே!


அருணா செல்வம்

வியாழன், 7 ஏப்ரல், 2016

கண்ணே கண்ணுறங்கு!!



கண்ணே! மணியே! கற்கண்டே!
       கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
       பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
       முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
       பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
       இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
       திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
       அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
       இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
       காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
       விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
       மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
       நலமாய் இன்றே கண்ணுறங்கு!


அருணா செல்வம்