அறமும் அன்பும்
இல்வாழ்வில்
அமையும் அழகை எடுத்துரைத்தார்!
புறமும் பொறையும்
பொதிந்துவிடப்
புகழைப் பெறவே வழிசொன்னார்!
பிறனில் விழையாத்
தன்மையினால்
பெருகும் பேற்றை வகுத்திட்டார்!
துறவும் தவமும்
துறந்தோர்க்கே
பிறவும் சொன்னார் அறப்பாலில்!!
தெரிந்து தெளிதல்
என்னென்றும்
தெளிவு என்ப(து) என்னென்றும்
அறிவாம் உடைமை
என்னென்றும்
அரணும் என்ப(து) என்னென்றும்
குறிப்பும் அறிதல்
என்னென்றும்
குடிமைப் பெருமை என்னென்றும்
பெரியார் துணையும்
வேண்டுமென்றும்
பிரித்து உரைத்தார் பொருட்பாவில்!
மோதல் கூடக் காதலிலே
மோகம் என்று மொழிந்திட்டார்!
மாதர் கொண்ட ஆசைகளை
மனத்தில் கொண்டு வரைந்திட்டார்!
பாதல் படைக்கும்
பாவலர்கள்
படித்தால் கவிதை வளம்பெருகும்!
காதல் சிறப்பைக்
கருத்துடனே
கவிதை படைத்தார் இன்பத்தில்!!
அருளாய் நெறியாய்
அமுதமாய்
அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
கருத்தாய் அமைந்த
கவியமுதைக்
கருத்தில் கொண்டு படித்திட்டால்
அருளும் பொருளும்
என்னென்றும்
அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
உருளும் மனமும்
பொய்யென்றும்
உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!
அருணா செல்வம்
(தலைப்பைப்
பார்த்துவிட்டு வந்தவர்கள் என்னைத் திட்டாதீர்கள். இப்படியெல்லாம் தலைப்புப்
போட்டால் தான் என் வலையைத் திறக்கிறார்கள். அதனால் தான்! பெரியவர்கள்
மன்னிக்கணும்)