வெள்ளி, 19 ஜூலை, 2013

காதல் கடிதம்! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் போட்டி)






   எப்படித் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் தொடங்கி விட்டேன்.
   இந்தக் கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டீர்கள். நேற்றுவரை நானும் தான் இப்படி ஒரு கடிதம் எழுதுவேன் என்று நினைக்கவில்லை.
   மாமா... காதல் என்ன முட்டாள் தனமா...? காதலைப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எப்படி எப்படியோ புகழ்ந்து பேச, அது எனக்கு மட்டும் முட்டாள் தனமாகத் தெரிவது எனது காதல் தோல்வியில் முடிந்தது என்பதாலா...?
    மாமா என்று உரிமையுடன் எழுதும் எனது மனது அன்று உங்களிடம் உள்ள உறவை எவ்வளவு அலட்சியப் படுத்தியது! என்னை விட ஆறு வயது மூத்தவர் என்றாலும் மாமன் மகன் தானே என்ற உரிமையில் ஒருமையிலும் சற்று குறைவாக அழைத்ததை இப்பொழுது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது.
    நித்தம் ஒரு தாவணியில் பட்டாம் பூச்சியாய் பறந்த என்னை உங்கள் அறிவோ, அழகோ எதுவும் செய்யவில்லையே...
    நான் எழுதிய துளிக்கவிதை ஓர் இதழில் வெளி வந்ததை உங்களிடம்தான் முதன் முதலில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிவந்த என்னுள் காதலும் கலந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் தான் இருந்தது.
    ஆனால்... அந்தக் காதல் கவிதைக்காக நீங்கள் திடிரென்று என் கன்னத்தில் இட்ட முத்தம் இன்னும் ஈரப்பதமாக என் நெஞசிலே ஒட்டிக்கொண்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா... அந்த ஈரத்தின் வலிமை என் நெஞ்சை இன்று முள்ளாகக் குத்துகிறது என்றால்தான் நம்புவீர்களா...?
    இளமையில் ஏற்பட்ட காதல் நினைவுகள் ஆறாத புண்ணாக நெஞ்சில் பதிவது எவ்வளவு பெரிய அவதி... சில நேரம் அதுவே அசிங்கமும் கூடத்தான்...
    அன்று உங்கள் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள்... அதுவரை அப்படி ஓர் எண்ணமே எனக்கு இல்லை என்று நான் சொன்னால் அது முற்றிலும் பொய்தான் என்பது எனக்குத் தெரியும். ஒருவர் ஒருவரைப் பார்த்து ஒரே நேரத்தில் ஏற்படுவது தானே காதல்! அது நமக்குத் தெரியவர எவ்வளவு நாட்கள்... ஆண்டுகள்...!
    அதன் பிறகு வந்தவைதான் எத்தனை இனிமையான நாட்கள்...! நாம் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டது கூடக் கிடையாது. எப்போதாவது ஒரு பார்வை. அதில் தான் எத்தனை பொருள்! மற்றவர்களுக்குப் புரியாத அந்தப் பார்வையில் நாம் புரிந்துக்கொண்ட வார்த்தைகள் தான் எத்தனை...! எத்தனை...!

    மூன்று தங்கைகளைக் கரையேற்ற நீங்கள் படித்த படிப்புக்கு தேவையான வேலை தேவைப்பட்டது. அதே நேரம் இரண்டு தங்கைகளுக்குத் தடையாக நான் நந்தியாக இருப்பது என்னைப் பெற்றவர்களுக்கு எரிச்சலாக இருந்தது. கணவன் என்று ஒருவர் திணிக்கப்பட்டு, அவர் கைபற்றி கடல் கடந்து வெளியேறும் போது உங்கள் மனத்திலிருந்து நான் வெளியேறிவிட வேண்டும் என்று எவ்வளவு கடவுள்களை வேண்டி இருப்பேன் என்று தெரியுமா உங்களுக்கு?
    எப்படிப்பட்ட மனவலியுடன் பண்பாடு, கட்டுப்பாடு என்று கட்டிய கணவருடன் வாழப் பழகிக்கொண்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் என் மனத்தின் காயத்திற்கு மருந்து போட்டது என் கணவரின் அன்பான வார்த்தைகளும் அனுசரணையான அரவணைப்பும் தான்.
    எனது மனவலிக்குக் காரணம் காதல் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமா... இல்லையா... என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அவர் என்னிடம் காட்டின அன்புக்கு களங்கமே சொல்ல முடியாது.
    கால்கள் இல்லாத காலங்கள் ஓடிக்கொண்டே இருக்க... எனது காதல் கனவுகளும் இறந்த காலம் என்ற கடலில் கரைந்து விட்டது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், உங்களுக்கு அந்தக் காலங்கள் தேங்கி நின்று குட்டையாகி விட்டன என்பதை பத்தாண்டுகள் கழித்து நாட்டுக்குத் திரும்பி வந்த போதுதான் தெரிந்து கொண்டேன்.
    கடமைகள் அனைத்தும் முடித்தும், திருமணமே வேண்டாம் என்றிருக்கும் உங்கள் மனத்தில் உள்ள காதல் குட்டை சாக்கடையாக மாறி உங்கள் மனத்தை நாற்றமடிக்க வைத்துவிட்டதோ...
   சிறு வயதில் ஏற்படும் காதல் எவ்வளவு புனிதமானது... ஆனால் அதுவே கைசேராமல் போனால் எவ்வளவு விகாரமானது என்பது உங்களைப் பார்த்தப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
    ஆனால் அந்த நிலையிலும் உங்களை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா... என்று ஏங்கிய என் மனத்தில் காதல் இல்லை. வெறும் கரிசனம் மட்டுமே இருந்தது.
    உங்கள் போக்கால் மனம் ஒடிந்துப் போயிருந்த என்னைக் காணவந்த உங்கள் தங்கையிடம் என் மனஎரிச்சலைக் கொட்டியதும் அவள் உங்களிடம் அதைச் சொல்ல... அதன்பிறகு உங்களுக்காகவே காத்துக்கொண்டிருந்த உங்கள் தாய்மாமன் மகளைத் திருமணம் செய்ய நீங்கள் சம்மதிச்சப் பிறகுதான் நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்... மகிழ்ச்சியாக!
   
    இதோ மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறேன். என் மனத்தில் இருந்த காயமெல்லாம் ஆறி வடுக்கள் கூட மறையத் தொடங்கிவிட்டன. நேற்றுவரை நான் உங்களைக் காணாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த வடுக்கள் கூட காணாமல் போயிருக்கும்.
    ஆனால்... உங்கள் நெஞ்சத்தில் அந்த காதல் காயங்கள் ஆறவில்லை என்பது மட்டுமல்லாமல், அதைக் கிண்டி கிளறி புண்ணாக்க உங்கள் மனைவியே வார்த்தை என்ற வாள் கொண்டு அறுப்பதைப் பார்த்ததும் யார் மீது தவறு என்று அறியாமல் தவித்துத் துடிக்கிறேன்.
    மாமா... நேற்று இருளத் தொடங்கும் நேரம். கடற்கரை சிமெண்ட் பலகையில் நான் என் மகனுடன் அமர்ந்திருக்க... ஒரு இரண்டு வயது குழந்தை அருகில் வந்து என் மகனைப் பார்த்து சிரித்தது.
    அப்பொழுது ஒரு பெண், ரசிகா... ரசிகா... என்று குரல் கொடுத்துக்கொண்டு குழந்தையைத் தேடிக்கொண்டே வர, யார் என்னைக் கூப்பிடுவது? என்று தெரியாமல் நான் விழித்தேன். ஆனால் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.
     ஏன்டி ரசிகா... சனியனே... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுவது? ஒரு அஞ்சி நிமிசம் என்னை நிம்மதியா இருக்க விடுறியா...? கல்யாணத்துக்கு முன்னாடி பத்து வருசமா ரசிகா... ரசிகான்னு அந்த சனியனை நெனைச்சிக்கினு கிடந்தாரு உன் அப்பா... இப்போ உனக்கும் அந்த பேரை வச்சி ரசிகா ரசிகான்னு என்னைக் கத்தவிடுறாரு. சீ... இந்த பேரு என்னைக்கு என் வாழ்க்கையிலிருந்து தொலையுமோ அன்னைக்குத்தான் எனக்கு நிம்மதி...
    என் நெஞ்சத்தைக் கிழித்த வார்த்தைகள்!
    அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டாள்.
    அவளுக்கு என்னை யார் என்று தெரிந்திருக்காது. நல்லதுதான்! ஆனால் நான் அவளைத் தெரிந்து காண்டேன். அந்த இருள் சூழ்ந்த நேரத்திலும் உங்களை நான் கண்டுகொண்டேன்.
    என் எதிரிலே நீங்கள், உங்கள் மனைவி, மகள்!
     சனியன்... இந்தப் பேரை குழந்தைக்கு வைக்காதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா...? எனக்குக் கிடைக்காதவ என் மகளா பிறந்திருக்காள்ன்னு சொல்லி அவ பேரை வச்சீங்க. இந்த சனியனும் உங்கக்கூடவேவா இருந்திடப் போவுது...? ஆனால்... நானு... நீங்க மட்டும் தான் என் வாழ்க்கைன்னு, நீங்க விலகி விலகிப் போனாலும் நான் உங்களையே ஒட்டி ஒட்டி வர்றேனே... என்னை என்னைக்குத் தான் புரிஞ்சிக்குவீங்களோ? என உங்கள் மனைவி புலம்பிக்கொண்டே நடக்க, நீங்கள் ரசிகாவைத் தூக்கிக்கொண்டு பின்னால் செல்ல...
    இப்பொழுது என் மனத்தில் குத்திக்கொண்டிருப்பது இன்ப வேதனையா... நெரிஞ்சி முள்ளா... என்பது எனக்குத் தெரியவில்லை.
    ஆனால் எதுவாக இருந்தாலும் ஒன்று விழுங்கிவிட வேண்டும். அல்லது வெளியே துப்பிவிட வேண்டும். நீங்களும் தான்!
    விழுங்க முயற்சி செய்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. அதனால்.... துப்பிவிட்டேன் கடிதத்தில் வார்த்தையாக.
    இந்தக் கடிதம் உங்களைச் சேர வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. என் மனபாரம் குறைய வேண்டும் என்பதற்காக.
    இந்த கடிதம் உங்களுக்குக் கிடைத்தால் உங்கள் மனபாரம் அதிகமாகும் என்பது எனக்குத் தெரியும்.
    உங்கள் ரசிகா வளர வளர உங்களின் மனபாரம் காலத்தால் கரைந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எனது மனபாரத்தை (இந்தக் கடிதத்தை) இரண்டாக, நான்காக, எட்டாக... கிழித்து மறைந்துபோன காதலுக்கு நினைவு சின்னம் தேவையில்லை என்று தீயிட்டு கொளுத்தி விடுகிறேன்!
    அது எரிந்து சாம்பலாகட்டும்!  நம் காதலைப் போல!
                               என்றென்றும்
                                  ரசிகா.

(கற்பனை கதை)
அருணா செல்வம்
20.07.2013


   

44 கருத்துகள்:

  1. காதலில் ஏது தோல்வி? ஆனால் குழந்தைக்கு தன்னுடைய பழைய காதலி பெயரை வைப்பது மனைவியால் எப்படி ஏற்க முடியும்? நன்று. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “காதலில் ஏது தோல்வி?“

      காதலிச்சதையே மறந்துவிட்டால் அது தான் தோல்வி.

      “குழந்தைக்கு தன்னுடைய பழைய காதலி பெயரை வைப்பது மனைவியால் எப்படி ஏற்க முடியும்?“

      நிறைய பேர் வீட்டில் நடப்பது தான் இது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இத்போலான கடிதங்கள் மட்டுமல்ல,நினைவுகளும் தீயிட்டுக்கொளுத்தப்படுவது இங்கு நிறையவே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே நியாயமானதும் கூட.
      வேற வழி...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  3. கடிதத்தில் ஒரு திரைப்படமே மனதில் ஓடியது...

    கடிதம் வித்தியாசம்... உள்ளங்கள் பிரிந்தது... காதல் காதலாக உள்ளது...!

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு கொடுக்காமலேயே ஒரு திரைப்படம் பார்த்து விட்டீர்களா...?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. கற்பனை என்றாலும் கதை என்னவோ செய்கிறது... தோழி. ஆரம்பித்த மாதிரி வெளிநாடு சென்று திரும்பி வந்து அவளையே மணப்பதாக முடித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி முடித்தால்... அரைத்த மாவை அரைப்பது
      போல இருக்கும்.
      இது சற்று வித்தியாசம், மட்டுமல்ல.... வாழ்வின் நடப்பு.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு

  5. வணக்கம்!

    காதல் கமழ்கின்ற கன்னல் எழுத்துக்களை
    ஓதும் இதயம் ஒளிர்ந்திடுமே! - போதும்!உம்
    போதுமெனப் போடும் விருந்தாகும் இம்மடல்!
    மாதுன் படைப்பின் வளம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருந்தென்று சொன்ன விதமோ அருமை
      கரும்பாய்ச் சுவைத்தேன் கவி!

      வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  6. விழுங்க முயற்சி செய்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. அதனால்.... துப்பிவிட்டேன் கடிதத்தில் வார்த்தையாக.
    >>
    அப்ப இது எச்சிப்பட்டதா?! நான் படிக்கலை. முதல்ல போய் கை அலம்பனும்:-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அப்ப இது எச்சிப்பட்டதா?! நான் படிக்கலை. முதல்ல போய் கை அலம்பனும்:-(“

      கூடவே... சோப்புப் போட்டு கண்களையும் திறந்து அலம்புங்கள் தோழி.

      நீக்கு
  7. கதை நல்லா இருக்கு அருணா. பரிசு பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... நீங்களே வாழ்த்திட்டீங்களா....?
      அப்போ எனக்குத் தான் பரிசு!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. நல்ல கதை..... பரிசு பெற வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  9. காதலின் பெருமை! கற்பனை என்றாலும் கடித வழி எழுதிய நடை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. மிகமிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றது. கதை என்பதை மறந்து ஒரு நிகழ்வாகவே மனக்கண்களில் காணவிட்ட எழுத்துநடை அலாதிதான்.

    நன்றாகவே இருக்கின்றது தோழி!
    வெற்றி பெற்றிட மனமார வாழ்த்துகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. காதல் வழிகிறது...
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார் தம்பி.

      நீக்கு
  12. நிறைவேறாத காதலில் அவரவர் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது .... உண்மையான காதல் என்றால் இதுதான்.!


    அருணா உங்களை தொடர் பதிவிட அழைப்பு விடுத்திருக்கிறேன்... நீங்களும் உங்க பங்குக்கு நாட்டுக்கு தேவையானத சொல்லிப்புடுங்க... ப்ளீஸ்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நாட்டுக்கு தேவையானத சொல்லிப்புடுங்க... ப்ளீஸ்.....!“
      ஹா ஹா ஹா... சொல்லிபுடுறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி உஷா.

      நீக்கு
  13. காதலில் உணர்ச்சி பொங்குகின்றது! வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற§

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  14. நல்ல கதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழ் முகில்.

      நீக்கு
  15. மனதை வலிக்க வாய்த்த வார்த்தைகளை நிரப்பி கொடுத்திருகிறீர்கள் துக்கம் தொண்டையை அடைத்து நிற்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோவை மு சரளா அவர்களே.

      நீக்கு
  16. மனதை வலிக்க வைய்த்த வார்த்தைகளை நிரப்பி கொடுத்திருகிறீர்கள் துக்கம் தொண்டையை அடைத்து

    பதிலளிநீக்கு
  17. அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....




    காதல் என்பது ஒருவகை உணர்வு அதை அழகாகவும் மிருதிவாகவும் கையாள்வதே சுகம் . இன்றைய காதலர்கள் எல்லாம் காமத்தைக் காதல் என்று புரிந்து வைத்துள்ளார்கள். காமம் வேறு காதல் வேறு. சீலேன்பது காமம் உணர்வென்பதே காதல். இன்றைய இளைஞர்களுக்கு காதல் உணர்வு என்பதைவிட காம உணர்வே மேலோங்கியிருக்கின்றது. காமத்தைக் காதலென தவறாக புரிந்துகொள்வதே காதல் பிரிவில் முடிகின்றது. இதற்க்கு காரணம் இன்றைய காட்சி ஊடகங்களின் வழிகாட்டுதலே.

    காதல் இருந்தால் எந்த மதமும் எந்த குறுக்கே நிற்காது அப்படி குறுக்கே நின்றாலும் காதலே ஜெயிக்கும்

    இன்றைய காதல் ஒருவித கவர்ச்சியால் உருவாகின்றது. அதில் காமமே பிரதானமாக இருக்கின்றது. இந்த வேறுபாட்டை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

    மேலை நாட்டில் இளைஞர்கள் காமம் காதல் இரண்டையும் அழகாக வேறுபடுத்தி பார்க்கின்றார்கள் உண்மையை அறிந்து புரிந்து கொள்கின்றார்கள். ஆகவே மேலைநாட்டினர் டேட்டிங் என்று சொல்வார்கள். எது காமம் எது காதல் என்பதில் நம் இளைஞர்களின் புரிதல் காட்சி ஊடகங்களால் பாழ்பட்டுக் கிடக்கின்றது. அத்தகைய இளைஞர்கள் மனதில் உள்ள நஞ்சை நீக்கி அவர்கள் வாழ்வில் உண்மையான காதலுடன் நல்வழியில் நடந்திட உதவிடும் வண்ணம் விழிப்புணர்வு செய்திடுவோம்.இல்லையேல் நம் மனிதவளத்தை வீணாக செய்துவிட்டு அரசியல் கட்சிகள் இந்தியத் திருநாட்டையே வெளிநாட்டு உள்நாட்டு சுயநல சக்திகளுக்கு விற்றுவிடுவார்கள் இந்தியா விலைபோகும் மீண்டும் நாம் அடிமை ஆவோம். காந்தி தேசமே விழித்தெழு!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mr.Balasubramanian sir very nice words
      intha mathiri thesathil irupathai nan manam nekilkeren.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பால சுப்பரமணியன் அவர்களே.

      நீக்கு
  18. காதல் கடிதம் கடைசியில் எங்கெங்கோ போய்விட்டதே!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  19. உங்களைப் பார்த்தல் பொறாமையாக இருக்கிறது! காதல் கடிதம் எழுதாத- எழுதத் தெரியாத முட்டாள் நான்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நல்லா போச்சி நம்பள்கி.
      நீங்கள் மட்டும் காதல் கடிதம் எழுதி
      அக்காவிடம் தந்திருந்தால்.... அக்கா.. உங்களுக்குக் கிடைத்திருக்க்
      மாட்டார்கள் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். ஹா ஹா ஹா...

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  20. very nice intha mathiri karpani kaviyam thodarattum yanathu anbu valthukkal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மோகன் குமார்.

      நீக்கு

  21. நெஞ்சத்தில் அறைந்தது போல் உள்ளது... அற்புதம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மணிமாறன் ஐயா.

      நீக்கு
  22. கலங்க வைத்தக் கடிதம். மிகவும் வித்தியாசமான கரு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி அப்பாதுரை ஐயா.

      நீக்கு