வெள்ளி, 7 டிசம்பர், 2012

சாபமே... வரமாக வா !! (சிறுகதை)
       சூரியக் கணவனின் மோகப்பார்வை இன்னும் இவைகளின் மேல் படாததால் நிர்வாண மரங்கள் தங்களின் மேகப் போர்வையை விலக்காமல் தூங்கிக் கொண்டிருந்தன.
     மிதுனா, வாழ்க்கையைப் போலவே வழுக்கும் நடைப்பாதையில் அடியை அழுத்தமாக எடுத்து வைத்து நடந்தாள்.
     அவள் பள்ளிக்கூடத்தில் நுழைந்த பொழுது குழந்தைகள் கால் முளைத்த மலர்கொத்துகளாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
     மூன்றிலிருந்து ஆறு வயதிற்குள் இருக்கும் அந்த குழந்தைகள் தான் எத்தனை எத்தனை அழகு! எத்தனை கண்களுக்கு எத்தனை காட்சிகள்!
கவிஞர்களின் கண்களுக்கு கவிதைகளாக!
ஓவியனின் கண்களுக்கு நடமாடும் ஓவியங்களாக!
மேதைகளின் கண்களுக்கு தத்துவங்களாக!
முதியவர்களின் கண்களுக்கு ஞாபகங்களாக!
எழுத்தாளனின் கண்களுக்கு புத்தகங்களாக!
தந்தையின் கண்களுக்கு எதிர்காலமாக!
தாயின் கண்களுக்கு எல்லாமுமாகத் தெரியும் குழந்தைகள் தான் இறைவனின் ஈடில்லாப் படைப்பு!
    இத்தனைக் குழந்தைகளில் ஒன்றேயொன்று....
    ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மிதுனாவைப் பார்த்ததும் குழந்தைகள் ஓடிவந்தனர்.
      போன்ழூர் மெத்ரஸ்.. சவா மெத்ரஸ்..? புர்க்குவா வுஜரிவ்பா ஆலெக்கோல்? (வணக்கம் டீச்சர். நல்லா இருக்கிறங்களா? ஏன் பள்ளிக்கு வருவதில்லை?)
     இன்னும் நிறையக் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக...
      பொன்ழூர் லேஸான்பான்.. தெமன் ழெசெரே ஆலெக்கோல்.. செஸ்சூர்“ (வணக்கம் பிள்ளைகளே.. பள்ளிக்கு நாளை நிச்சயமாக வருவேன்) என்று அனைவருக்கும் சேர்த்து ஒரே வரியாகச் சொல்லிவிட்டு நடந்தாள்.
     வந்த பிரட்சனையால் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடந்தது எவ்வளவு பெரிய தவறு... கண்களுக்கு முன் கவிதைகளாக குழந்தைகள் இருக்கும் பொழுது மனத்திற்கு அமைதி தனிமையிலா கிடைக்க முடியும்...?

      கூட்டம் கூடி இருந்தது. மிதுனாவுடன் தலைமை ஆசிரியை, உடன் வேலை செய்யும் இரண்டு ஆசிரியர்கள், மயுரனின் பெற்றோர், நான்சியின் பெற்றோர் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தனர்.
     மயுரன் அங்கிருந்த விளையாட்டுக் காருடன் விளையாடிக் கொண்டிருந்தான். நான்சி கையை மடக்கிக் கட்டிய மாவு கட்டுடன் தன் தாயின் அருகில் அமர்ந்திருந்தாள்.
       மிதுனா.. நீங்கள் தான் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்று விளக்கிச் சொல்ல வேண்டும் தலைமை ஆசிரியைக் கட்டளைக் குரலில் சொன்னாள்.
      எப்பொழுதும் போலத் தான் அன்றும் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உங்கள் எல்லோருக்கும் தெரியும் மயுரன் ஒரு இடமாக உட்கார்ந்து விளையாட மாட்டான் என்பது. அவன் விளையாடும் பொழுது எதிரில் வந்த நான்சியின் மேல் மோதி விட்டான். அவள் நிலை தடுமாறி எதிரில் இருந்த மரத்தின் மேல் மோதிக் கொண்டாள். நான் ஓடிப்போய் துக்கினேன். அழுதாள். ஆனால் காயம் எதுவும் தென்படவில்லை. நான் மயுரனைக் கண்டித்து விட்டு நான்சியை சமாதானப் படுத்தி வகுப்பறைக்கு அழைத்து வந்து விட்டேன்.
     ஆனால் சற்று நேரத்தில் நான்சி மயங்கி விழுந்து விட்டாள். நான் பயந்து போய் பக்கத்து வகுப்பு ஆசிரியரை உதவிக்கு அழைத்துப் பேசி உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் சொன்னேன். இது தான் நடந்தது.என்றாள்.
       இதுல என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தலைமை ஆசிரியை நான்சியின் பெற்றோரைப் பார்த்துக் கேட்டாள்.
      இந்தப் பள்ளிக்கூடத்தில் சரியான கண்டிப்புக் கிடையாது. பிள்ளைகளைச் சரியாக கவனிப்பது கிடையாது. அப்படிச் சரியாக கவனித்திருந்தால் என் மகளுக்கு இப்படி அடிப்பட்டிருக்காது. நான்சியின் தாய் ஒட்டு மொத்தமாக பள்ளியைக் குறை கூறியதைத் தலைமை ஆசிரியையால் ஏற்று கொள்ள முடியவில்லை.
      இது ஒரு விபத்து. இதற்காக நீங்கள் ஒட்டுமொத்த பள்ளியையோ ஆசிரியர்களையோ குறைகூறக் கூடாது. உங்கள் குழந்தை மட்டும் இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. நிறையக் குழந்தைகள். இது வரை எந்தப் பெற்றோரும் எங்கள் பள்ளியைக் குறைக்கூறியது இல்லை.
      எந்தப் பெற்றோருக்கும் இந்த மாதிறியான நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. ஒரு முறை நடந்தால் பரவாயில்லை. போன முறையும் இதே பையன் என் பெண்ணைப் பிடித்துக் கீழே தள்ளியதால் கண்ணுக்குப் பக்கத்தில் நல்ல அடி. அந்த ரத்தக்கட்டு கரைவதற்கே பலநாள் ஆனது. அப்பவே நங்கள் சொன்னோம். இந்த மாதிரி முரட்டுப் பையனைப் பள்ளியிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று. நீங்கள் கேட்கவில்லை. இப்போ என்னவாயிற்று பார்த்தீர்களா...? என் கொழந்தைக்குத் தலையிலே அடிபட்டு மண்டையில இரத்தம் கட்டிப்போய் மூனுநாள் மயக்கத்துல இருந்தாள். கை எலும்பு வீரல்விட்டு கட்டு போட்டு இருக்கிறது. இப்போ என்ன சமாதானம் சொல்ல போறீங்க...?“
     நான்சியின் தாய் கோபமாகப் பேசினாள்.
      அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தை போல் இல்லை. மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளன்னு நினைக்கிறேன். அதனால அவனை இந்தப் பள்ளியை விட்டு அனுப்பிடனும். நான்சியின் தந்தை தான் கண்டுபிடித்ததைச் சொன்னார்.
    அதைக் கேட்ட மயுரனின் பெற்றோர் கோபத்துடன் பேச... பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. ஓர் அளவிற்கு மேல் மயுரனின் தந்தை நான்சியின் பெற்றாரிடம் மன்னிப்புக் கேட்டார்.  

பிள்ளைகளின் அறியாதச் செயல்களால் பெற்றோருக்குத் தானே இழுக்கு!
    ஆனால் இவர்கள் விடவில்லை. மயுரனைப் பள்ளியை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்.
     கடைசியாகத் தலைமை ஆசிரியைப் பொதுவாக சொன்னார்.
     நான் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியைத் தான். ஆனால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் நான் இல்லை. இதற்கான பொருப்பு மிதுனா டீச்சர் தான். இவங்க நடந்ததைக் கைப்பட எழுதிக் கொடுத்தால் தான் மயுரனைப் பள்ளியை விட்டு நீக்க முடியும். அதனால் மிதுனா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?
    அனைவரும் மிதுனாவைப் பார்த்தார்கள். மிதுனா திரும்பி நான்சியைப் பார்த்தாள். அவள் மயுரனுடன் விளையாக் கொண்டிருந்தாள்.
    குழந்தைகள் நடந்ததை மறந்து விடுகிறார்களா? அல்லது..
தவறாக எடுத்துக் கொள்வதில்லையா?
     நான்சியை அவள் தாய் இழுத்துக் கொண்டுவந்து தன் அருகில் அமர வைத்தாள். நான்சி அழுதாள். மயுரன் அவளைப் பாவமாகப் பார்த்துவிட்டு பின்பு தன் விளையாட்டைத் தொடர்ந்தான்.
     மயுரன் மற்ற குழந்தைகளைப் போல் அமைதியானவன் இல்லை தான். கால்கள் ஒருநிமிடம் தரையில் நிற்காது. துறுதுறு வென்று இருப்பான். சில நேரங்களில் அவன் செயல்கள் அளவுக்கும் அதிகமான ஆத்திரத்தை உண்டு பண்ணும். தலைமை ஆசிரியரிடமும் அவனின் பெற்றோரிடமும் இரண்டு முறை இது குறித்துப் பேசி இருக்கிறாள். ஆனால் அதற்காக அவனை மூளை வளர்ச்சியற்றக் குழந்தை என்று சொல்லிவிட முடியாது.
     ஒருமுறை கீழே விழுந்து எழுந்தவன் மனிதன் புத்திசாளின்னு சொல்லிக்கலாம். ஆனால் சின்னப் பறவையைப் போல பறக்க முடியலையே... என்றான். அப்படியென்றால் பறக்க முயற்சித்து இருக்கிறான்!
     ஒருநாள் கால்கள் இல்லாத மண்புழு எப்படி மண்ணைத் தோண்டி பூமிக்குள் செல்கிறது என்று ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கானப் பதிலை அவன் யாரிடமும் கேட்க விரும்பவில்லை. அவனே பதிலைத் தேட முயற்சி செய்கிறான்.
     இப்படிப்பட்ட ஐந்து வயதானப் பிள்ளையை மூளை வளர்ச்சி இல்லாதப் பிள்ளை என்று எப்படி சொல்லிவிட முடியும்....?
     நிமிர்ந்து அமர்ந்தாள் மிதுனா.
      என் வகுப்புல படிக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் என்னோட பிள்ளைகள் மாதிரி தான். ஒரு குழந்தைக்குச் சாந்த குணம் என்றால் இன்னொரு குழந்தையின் மனம் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆனால் எல்லா குழந்தையுமே குழந்தை மனத்துடன் தான் இருக்கிறது. அன்று நடந்தது ஒரு விபத்து. அதற்காக மயுரனைப் பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்று எழுதித் தர மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்கள்.
     முடிவாகச் சொன்னவளைக் கோபமாகப் பார்த்துவிட்டு எழுந்தாள் நான்சியின் தாய்.
      உன் வயத்துல பொறந்த பிள்ளைக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கணும். அப்பொழுது தான் தெரியும் என் மனம் எவ்வளவு வேதனைப் படுகிறது என்று.... வாங்க... நம்ம நான்சியை வேற பள்ளியில் சேர்க்கலாம்....
    கோபத்துடன் சாபமும் இட்டுச் சென்றாள் நான்சியின் தாய். இவள் விட்டச் சாபத்திற்காகவாவது ஒரு குழந்தை தன் வயிற்றில் வந்து பிறக்காதா...
     கல்யாணமாகிப் பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மிதுனா தன் வயிற்றைத் தொட்டுப் பெருமூச்சு விட்டாள்.

அருணா செல்வம்.

22 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

தலைப்பிற்கும் கதைக்குதான்
எத்தனைப் பொருத்தம்?
கதை சொல்லிப் போனவிதமும்
முடித்த விதமும் மிக மிக அருமை
எனக்கும் இது சாபமா வரமா எனப் புரியவில்லை
மனம் கவர்ந்த கதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

கார்த்திக் சரவணன் சொன்னது…

எத்தனை பேர் சபித்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வாள் மிதுனா... நெகிழ வைக்கும் கதை... வாழ்த்துக்கள்... நன்றி...

கும்மாச்சி சொன்னது…

"சூரியக் கணவனின் மோகப்பார்வை இன்னும் இவைகளின் மேல் படாததால் நிர்வாண மரங்கள் தங்களின் மேகப் போர்வையை விலக்காமல் தூங்கிக் கொண்டிருந்தன".

அருணா நல்ல ஆரம்பம், நல்ல நடை வாழ்த்துகள்.

கும்மாச்சி சொன்னது…

த.ம.2

அருணா செல்வம் சொன்னது…

எனக்கும் இது சாபமா வரமா எனப் புரியவில்லை

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நட்பே.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வரமோ சாபமோ
அருமையான மனம் படைத்த
ஆசிரியைக்கு குழந்தை செல்வம் பெரும் பேறாகக் கிடைக்கட்டும் ...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கண்களுக்கு முன் கவிதைகளாக குழந்தைகள் இருக்கும் பொழுது மனத்திற்கு அமைதி தனிமையிலா கிடைக்க முடியும்...?

ezhil சொன்னது…

அருமையான வர்ணனை. அழகான குழந்தைகள் கவிதை.வரமோ,சாபமோ ஒரு மனிதம் நிறைந்தவராக அவரின் முடிவு சரி அதனால் வரம் கண்டிப்பாக அமையும் .. அசத்தலான கதை.வாழ்த்துக்கள் அருணா

G.M Balasubramaniam சொன்னது…


கதை “ த்ரெ பான் “! வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

கும்மாச்சி அண்ணா....

இன்னும் நிறைய நிறைய வர்ணனைகளைக் கதையில் கோர்கலாம்.
அழகாகத் தான் இருக்கும்.
எனக்கும் அதுதான் விருப்பமும் கூட...
ஆனால்... கதை சற்று பெரியதாக எழுதினாலே யாரும் வந்து படிக்க மாட்டேங்கிறார்கள். அதனால் கதைகளைச் சுறுக்கி சுறுக்கி எழுத வேண்டியுள்ளது.
உங்களைப் போன்று வர்ணனைகளையும் இரசித்துப் படிக்கும் இரசிகர்கள் மிகக்குறைவு தான்.
என்ன செய்வது...?

தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி.

(பெரிய கதையை யாரும் படிக்காததால்
கதை நன்றாக இருந்தால் கூட ஓட்டும் விழ மாட்டுது.
பிறகு எப்படி நான் சி.எம் ஆவது...?)

பெயரில்லா சொன்னது…

அருமையான தொடக்கமும் அதைவிட சிறப்பான முடிவும்... பெருசா கதை எழுதினா ஓட்டு வருதோ இல்லையோ, உங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும்! அதனால் நிறைய எழுதுங்க! நல்லா எழுதுரீங்க!
த.ம 4

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல கதை அருணா.நன்றாக எழுதி இருக்கிறீர்கள். இது போன்ற சம்பவங்கள் தமிழக அரசு பள்ளிகளிலும் நடைபெறுவது உண்டு. அப்போதெல்லாம். எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆசிரியர்கள்தான் தண்டிக்கப் படுவார்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

மீண்டும் நன்றி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அருமையான கருத்திற்கும்
வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டும் அழகிய
பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

இங்கே குழந்தைகளைக் குழந்தைகளாகத் தான் பாவிக்கிறார்கள்.

ஆசிரியர்கள் என்றுமே குழந்தைகளுக்கு முன்னோடிகளாகத் தான் இருக்கிறார்கள்.
தங்களின் வருகைக்கும் அனுபவ கருத்தைப் பகிர்ந்தமைக்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.