செவ்வாய், 2 ஜூன், 2020

சித்திரச் சிரிப்பு! (காவடிச் சிந்து)




சித்திரம் போலவள் சிரிக்க – கண்
                   பரிக்க – மனம்
                    அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும் செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத் துப்பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்து ஆடி நெகிழ்வேன் !
.
நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்கக – மனம்
நிம்மதி யாய்அதை ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும் கடல்லையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் – அந்த
வஞ்சியாலே கவி வழியும்!
.
எண்ணத்தில்  வந்த    பெண்ணேஎன்
                       கண்ணேமுகில்
                       விண்ணேவளர்
இன்பத்தைக் கொடுக்கும் மண்ணே! – உன்னை
இலையாகவும் கொடியாகவும் மலராகவும் கனியாகவும்
இறைவன் படைத்த எழிலே! – என்றும்
குறைவில்லாப் இன்பப் பொழிலே!

பண்ணுக்குள் உன்னைநான் தீட்டஇசை
                          மீட்ட - கவி
                          கூட்டநம்
பைந்தமிழ்    அமுதை   ஊட்டகரு
பறந்தேவர அருகேயுற உறவேபெற உயிரேயெனப்
பண்புடன் எழுத்தில் கொஞ்சும்! – அதைக்
கண்டிட ஆடுமென் நெஞ்சம்!
.
பாவலர் அருணா செல்வம்
(என்கம்பனுக்குக் ணினி விடு தூது“ என்ற நூலிலிருந்து…..)

ஞாயிறு, 24 மே, 2020

அத்தைமக இரத்தினமே! - இலாவணி.





.
அத்தைமக இரத்தினமே சித்தமதில் அமர்ந்துகொண்டே
ஆசையினைக் கூட்டுவதும் ஏனோ ஏனோ?
அத்தனையும் உன்செயலால் பித்தனென ஆக்கிவிட்டே
அந்நியமாய் பார்க்கிறது மீனோ மீனோ!
.
அன்புமொழி பேசிடவும் இன்பமுடன் பாடிடவும்
என்னவளே உனைநாடி வந்தேன் வந்தேன்!
பொன்மொழிகள் ஏதுமின்றிப் புன்சிரிப்பும் ஏந்தலின்றிப்
பொய்முகத்தால் ஊடியதால் நின்றேன்  நின்றேன்!
.
ஏட்டினிலே பாட்டெழுதி தீட்டுகிற உணர்வுடனே
ஊட்டிவிட இங்குவந்தேன் தேடித் தேடி!
பாட்டுலகம் எமதென்றே பாட்டெதற்கு உனக்கென்றே
பண்ணரங்கைக் கண்மறைத்தாய் மூடி மூடி!
.
ஆற்றலினைக் கண்டுகொண்டே ஏற்றமிட்ட இவ்வுலகம்
ஆதரவாய்த் தந்ததொரு விருது விருது!
ஏற்றிடவே சென்றுவந்தேன்! ஏதுமொரு தவறுமின்றி
ஏகலைவி யாகிவிட்டேன் கருது கருது!
.
அமிழ்தென்ற பண்ணிருக்கும் தமிழ்கொண்டு கவிபடைக்கும்
அன்னவளை மனம்வைத்தேன் அன்றே அன்றே!
உமிழ்கின்ற எச்சிலென இமிகூட நினைவின்றி
ஒதுக்கிடவே முன்வந்தாய் இன்றே இன்றே!
.
சொட்டுகிற மொழியினிலே சுட்டுவிடும் ஓர்வார்த்தை
சொந்தமதை அழித்திடுமா சொல்லு சொல்லு!
கொட்டகிற கவியினியே சட்டமுடன் எழுதியதைக்
காட்டிவிட்டுத் தள்ளிநின்று கொல்லு கொல்லு!
.
தவறற்ற நினைவலைகள் சுவரிருக்கும் ஓவியமாய்
தவறின்றி நெஞ்சிருக்கு மின்னி மின்னி!
எவரிடத்தில் சொல்வதிதைக் கவரிமுடிப் போல்காத்தே
எனக்குள்ளே மகிழ்கின்றேன் எண்ணி எண்ணி!
.
பொன்னிருக்கும் பொருளிருக்கும் முன்னவரின் தமிழெடுத்துப்
புண்பட்ட நெஞ்சமதை ஆற்று ஆற்று!
புன்னகையும் பொலிந்துவரும் துன்பமெதும் ஓடிவிடும்
பொய்யற்ற தேனையதில் ஊற்று ஊற்று!
.
முத்துக்கள் ஆயிரமும் மொத்தமதைக் கோர்த்தெடுத்து
முத்தழிழால் கொடுத்திடுவாய் பெண்ணே! பெண்ணே!
சொத்தெல்லாம் நீயென்றே பித்தமுடன் வாழ்கின்றேன்
சொல்லியதை வரைந்திடுவாய் கண்ணே! கண்ணே!
.
தீயென்றால் வடுவிருக்கும் நோயென்றால் உடலிளைக்கும்
சீயென்றால் என்செய்வேன் உன்னை உன்னை!
சேயென்றே அழுகின்றேன்! பேயென்று விலக்காமல்
தாயென்றே அணைத்திடுவாய் என்னை என்னை!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2020

திங்கள், 4 மே, 2020

அன்ன நடை நடந்து செல்லாதே!



(இசைப்பாடல்)
.
அன்ன நடை நடந்து செல்லாதே – உன்
சின்ன இடை அழகால் கொல்லாதே!
.
மணமான புதியதில் எனையன்றி வேறுண்டோ
மனந்துள்ளும் சொர்கமென நீயுரைத்தாய்!
குணமான கொண்டவன் நீயென்று குழந்தையாய்
கொஞ்சமும் பிரிந்தாலும் துயரென்றாய்!

பிள்ளைகள் பிறந்தாலும் பேரெழிலை நான்மகிழ
பின்னலைத் தொட்டாலும் முறைக்கின்றாய்!
கள்ளையுன் கண்ணுக்குள் வைத்தென்னைப் பார்த்துக்
காதலாய்ச் சிலநேரம் மயக்கின்றாய்!

பக்கத்தில் தாய்வீடு இருப்பதனால் தினமும்
பாசாங்கு காட்டியே செல்கிறாய்!
துக்கத்தில் நானிருப்பதைக் கண்டும் எனைத்
தொல்லையாய் எண்ணியே தள்ளுகின்றாய்!
.
ஊடலுடன் போகின்ற தேரழகே என்மீது
உள்ளாடும் ஆசையால் வந்திடுவாய்!
கூடலிலே கோபத்தை எடுத்தெறிந்து அமுதைக்
குறைவின்றி அன்புடனே தந்திடுவாய்!
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2020

வியாழன், 30 ஏப்ரல், 2020

கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு!



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு - எனைக்
கண்டதும் முகமூடிப் போவதேன் விட்டு!
.
(தொடுப்பு)
பொன்னான பொழுதினில் தொடர்ந்திட்டப்
பொலிவான காலங்கள் நினைவில்லையோ!
அன்றாடிய இனிமையை எடுத்தோத
அழகான தமிழிலே சொல்லில்லையோ!
.
எண்ணத்தில் உருவான இனிமையை
எழுதிய அடியெல்லாம் கவியில்லையோ!
அன்பாக அதைக்கூட்டிப் பாடிட
அருளான நெஞ்சிலே இடமில்லையோ!
.
துள்ளாமல் வளர்ந்திட்ட காதலால்
துணிவாகக் கரம்பிடித்த உறவில்லையோ!
தள்ளாத வயதாகி விட்டதனால்
தளர்வாயில் சொல்லுரைக்கப் பல்லில்லையோ!
.
என்னென்றும் ஏதென்றும் அறியாமல்
இளமையினைப் பேசுதல் சரியில்லையோ!
உன்னுயிர் இங்கிருப்பதை உள்ளாடும்
உணர்வெலாம் உன்மனதைக் கொல்லலையோ!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

புதன், 22 ஏப்ரல், 2020

நிலம்வாழ அருள்வாயே!



(வண்ணப் பாடல் – 2)
.
தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான தனதானா (அரையடிக்கு)
.
விலையி லாத பொருளோடு
  குறையி லாத திருவோடு
    வினையி லாத அழகான பெருமாளே!
விரசி லாத மொழியோடு
  பிழையி லாத அணியோடு
    வெருவி லாத மலைவாழும் பெருவேலே!
.
மலைக ளோடு நிறைந்தாடி
  இணையி லாது கலந்தாடி
    மனதி னோடு வளமான தமிழாலே
மரபி னோடு விளையாடி
  இனி தா கருவோடு
    வழுவி லாத கவிபாடி விழைவேனே!
.
நிலையி லாத உயிரோடு
  நிறைவி லாத வகையோடு
    கிருமி வாழு முலகான நிலையேனோ?
நிழலி லாத அளவோடு
  சுமையி லாத முடியோடு
    நெருட லான உயிரோட வருவாயோ!
.
அலையி லாத கடலேது?
  அடரி லாத இருளேது?
    அரிது வான பதிலேது வடிவேலா!
அகம மாக அதையோதி
  வதையி லாத வழியேகி
    அளவி லாத நிலம்வாழ அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
22.04.2020

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஏனென்று குழம்பினேன்!



(இசைப்பாடல்)
.
ஏனென்று குழம்பினேன் மானே – அச்சம்
தானென்(று) உணர்ந்துடன் மாறினேன் நானே!
.
அன்பு கவியொன்றை வரைவான் – அதில்
அழகென்ற உவமையை அடுக்கியே வைப்பான்!
துன்பம் வருமென்று எண்ணி – நான்
தொடராத இடத்திலே வைத்ததை மறைப்பான்!
.
கூடிக் களித்திட உழைப்பான்  - இதயக்
குளமொன்றைத் தீட்டிக் கூவியே அழைப்பான்!
தேடிக் குளித்திடச் சென்றால் – அதைத்
தேனான தமிழுக்கே தோண்டினேன் என்பான்!
.
யாருக்கும் பயமில்லை என்பான் – எதிராய்
எவரேனும் வந்தாலும் வீழ்த்துவேன் என்பான்!
நேருக்கு நேர்சென்று நின்றால் – பேயின்
நிகராக எனைக்கண்டு அஞ்சியே செல்வான்!
.
உள்ளத்தில் ஆசையை வைத்தான் – அதை
உருவான கருகொண்ட கவிதையில் புதைத்தான்!
துள்ளிடும் குதிரைபோல் ஆசை – அதைத்
தூயதமிழ் சொல்லாலே கடிவாள மிட்டான்!
.
காதலை நினைத்திடும் நெஞ்சம் – அதைக்
கவிதையாய் எழுதியே உயர்த்திட மிஞ்சும்
போதனை செய்திட விஞ்சும் – உயிர்
போகிடும் வேதனை தனக்கென அஞ்சும்!
.
அவனுயிர்த் தமிழாலே இசைப்பேன் – காதல்
அச்சத்தை அதனுள்ளே ஆழப் புதைப்பேன்!
தவறல்ல காதல் மலைத்தேன்! – அதைத்
தழைத்திடும் தமிழாலே அஞ்சாது குடிப்பேன்!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2020

(பாரதியின் “தீராத விளையாட்டுப் பிள்ளை“ என்ற இராகத்தில் பாடிப்பாருங்கள்)