வெள்ளி, 18 ஏப்ரல், 2014

யார் சொன்னது....? கண்டுபிடியுங்கள் ….




    நட்புறவுகளுக்கு வணக்கம். நான் ஐந்து பிரபலங்கள் சொன்னதை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து எழுதுங்கள். அனைத்தும் நாம் அறிந்த முக்கிய பிரபலங்கள் தான். கண்டுபிடியுங்கள்.

1. ஒரு கொப்பையிலே என் குடியிருப்பு.
  ஒரு கோலமயில் என் துணையிருப்பு....

2. போகனும்ன்னு மட்டும் தான் தோணுது. ஆனா...எங்க
   போவனும்ன்னு தோணலையே.....

3. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  துப்பாய துர்உம் மழை.

4. உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில்
   உதிரங் கொட்டுதடீ...

5. எழுதுவது எப்படி சுகமாக இருக்கிறதோ அதே மாதிரி எழுதாமல்    இருந்தாலும் வருகிறது.... அதாவது சோம்பேறியாக இருப்பதும் சுகமாக இருக்கிறது.

 என்ன... கண்டுபிடித்து விட்டீர்களா....? பதில் எழுதுங்கள். பத்து பதில்களுக்கு மேல் வந்ததும் வெளியிடுகிறேன். சரியான பதில் எழுதியவர்களுக்கு இரண்டு அடி.... நிச்சயம் உண்டு.

அருணா செல்வம்.
19.04.2014

வியாழன், 17 ஏப்ரல், 2014

வலி!! (நிமிடக்கதை)





   “என்னங்க நாளுநாளா இந்த கழுத்து வலி இருந்து உயிரை வாங்குது. எந்தத் தைலம் போட்டாலும் சரியாகலை. நான் இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திடுறேன்“ காவேரி அம்மாள் கழுத்தைத் தேய்த்து விட்டவாரே சொன்னாள்.
   “மூனுநாளா நான் சொல்லிக்கினே தான் இருக்கிறேன். நீ கேட்டியா? இப்பவாவது டாக்டரைப் பாக்கனும்ன்னு தோணுச்சே ஒனக்கு. சரி இரு நானும் வர்றென்.“ கணவர் நாதன் சொல்லவும்..
   “வேண்டாங்க. ரொம்ப வெயிலா இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்.“ சொல்லிக் கொண்டே கிளம்பிவிட்டாள்.

   காலை வெயில், ஸ்ட்ரா இல்லாமல் உடலில் உள்ள இரத்தத்தை வியர்வையாக்கி உரிஞ்சியது. காவேரி அம்மாள் நடைப்பாதையில் நடந்து சென்ற போது சாலையைக் கடந்த பள்ளிச் சிறுமி ஒருவளை ஆட்டோ ஒன்று இடித்துவிட்டு நில்லாமல் சென்றது.
   இடித்த வேகத்தில் அந்தப்பெண் குப்புறவிழுந்தாள். விழுந்தவள் எழுந்திருக்கவில்லை. காவேரி அம்மாள் பதறிபோய் அவசரமாக அந்தப் பெண்ணைத் திருப்பினாள். தலையிலிருந்து இரத்தம் வழிய அந்தப் பத்து வயது மாணவி பேச்சுமூச்சின்றி மயங்கிப் போய் இருந்தாள்.
   காவேரி அம்மாள் அந்தப் பெண்ணை மடியில் கிடத்திச் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லாத தெரு அனாதையைப் போல் இருந்தது. என்ன செய்வது என்று யோசனையில் இருந்த போதே அவளை இடித்துவிட்டுச் சென்ற ஆட்டோ திரும்பி வந்து அவளருகில் நின்றது.
   “என்னம்மா ஆச்சி..?“ என்று கேட்டுக்கொண்டே இறங்கி வந்த  ஆட்டோ ஓட்டுனர் இரத்தத்தைப் பார்த்ததும், “ஐயோ.... லேசா தானே ஒராஞ்சது. ஒன்னும் ஆயிருக்காதுன்னு நெனச்சேன். ஐயோ இப்படி ஆயிடுச்சே.... நான் வேற ஸ்கூல் சவாரிக்கு போவனும். சரி. வாங்க பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில விட்டுடறேன்.“ என்று சொல்லியபடியே இருவரையும் ஒரு தனியார் மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

    மதியம் உணவுநேரம் கடந்து வந்தவளின் சேலையில் இரத்தக் கரையைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் “என்னாச்சி?“ என்று கேட்டார் நாதன்.
   “அது ஒன்னுமில்லைங்க. நான் காலையில போறப்போ ஒரு ஸ்கூல் பொண்ணை ஆட்டோக்காரன் இடிச்சிட்டான். பாவம் அந்த பொண்ணு அங்கேயே மயக்கமாயிட்டா. அப்புறம் நான் தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கோண்டு போயி சேர்த்திட்டு அவளோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் காத்திருந்து விட்டுட்டு வந்தேன். அதான் நேரமாயிடுச்சி“ என்றாள்.
   “அப்போ... உன் கழுத்து வலிக்கு டாக்டரைப் பாக்கலையா...?“ கேட்டார்.
   அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே.. “இது கிடக்குது. பாவம் அந்த பொண்ணு. தையல் வேற போட்டிருக்கு. எப்படி வலிக்குமோ....“ சொல்லியபடி தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் காவேரி அம்மாள்.
   அடுத்தவரின் வலியைத் தணிக்க நினைத்தால் தன் வலி காணாமல் போய்விடுகிறது.

அருணா செல்வம்.
18.04.2014

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

ரஜினியின் பன்ச் பத்து!





1. சாகிற நாள் தெரிஞ்சுட்டா …
    வாழற நாள் நரகமாயிடும். (சிவாஜி)

2. வாழ்க்கையில பயம் இருக்கலாம்.
   ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது. (பாட்ஷா)

3. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. ஆனால்
   கஷ்டப்படாம கிடைக்கிறது
   என்னைக்கும் நிலைக்காது. ( படையப்பா)

4. கெட்டுப் போனவன் வாழலாம். ஆனால் நல்லா வாழ்ந்தவன்       கெட்டுப் போயிடக்கூடாது. (அண்ணாமலை)

5. இந்த உலகத்துல எது எடுத்தாலும்
   ஒண்ணை விட ஒண்ணு பெட்டராகத்தான் தெரியும். (ஜானி)

6. கையளவு காசு இருந்தா அது நம்மளைக் காப்பாத்தும்.
   அதுவே கழுத்து வரை இருந்தா
   அதை நாம காப்பாத்தனும். (எங்கேயோ கேட்ட குரல்)

7. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.
   கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. (முத்து)

8. அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி.
   அசராம அடிக்கிறது பாபா பாலிஸி. (பாபா)

9. பார்த்து வேலை செய்யுங்கள்.
   பார்க்கும் போது வேலை செய்யாதீங்க. (அருணாச்சலம்)

10. இது எப்படி இருக்கு..... (பதினாறு வயதினிலே)


(சும்மா ஜாலிக்காக எழுதினேன். இதெல்லாம் ஒரு பதிவா என்று யாரும் கல்லை எடுக்க வேண்டாம்.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...

அருணா செல்வம்.
16.04.2014

சனி, 12 ஏப்ரல், 2014

காதல் என்பது இவ்வளவு தானா...? (நிகழ்வு)




      
    நான் பிரான்ஸ் வந்த புதியதில், நான் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் என் பக்கத்து போஷனில் ஒரு கணவன் மனைவி இரண்டு ஆண் பிள்ளைகள் என்று ஓர் அழகான பிரென்சு குடும்பம் வாடகைக்கு வந்தார்கள்.
    பக்கத்து வீடு என்பதால் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நல்ல தோழமை ஏற்பட்டது. என்னை விட அந்தப் பெண் பத்து வயதுக்கு மேல் பெரியவர்(ள்). (இருந்தாலும் அனைவரையும் பெயர்விட்டு அழைப்பது தான் இங்கே மரியாதை என்கிறார்கள்.) அந்தப் பெண்ணும் வேலைக்குப் போவதால் சனி ஞாயிறுகளில் அதிகமாகப் பேசிக்கொள்வோம். அப்படி பேசும் பொழுது ஒரு நாள் காதல் விசயம் வந்தது. அவள் ஒரு நாள் என்னிடம்... “அருணா... செல்வம் தான் முதன் முதலில் காதலைச் சொன்னாரா? நீ முதலில் சொன்னாயா...?“ என்று கேட்டாள்.
   நானும் (கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு) “எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை. இருவருக்கும் வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள்“ என்றேன்.
   அதைக் கேட்டதும் அவளால் தன் அதிர்ச்சியை அடக்க முடியவில்லை. (ஏதோ நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது போல் என்னை விநோதமாகப் பார்த்தாள்) அவளாள் இதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
   “எப்படி... எப்படி...?“ என்று பல கேள்விகள் கேட்டாள். என்னால் அவளின் அனைத்துக் கெள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றாலும் “எங்கள் நாட்டில் இப்படித் தான் வழக்கம். அதற்காக காதல் கல்யாணம் என்பதெல்லாம் இல்லாமல் இல்லை“ என்று பொதுப்படையாகச் சொல்லிவைத்தேன்.
   நட்புறவுகளே.... எனக்குத் தெரிந்து இந்த நாட்டில் காதலிக்காமல் கல்யாணம் கிடையாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதினெட்டு வயதிற்கு மேல் காதலிக்கவில்லை என்றால் தான் கவலை படுகிறார்கள். தானே தன் துணையை ஆணோ பெண்ணோ தேடவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை அப்படியே தனிமையில் தான் போகிறது. இப்படிப்பட்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
   அதனால் தான் அவளின் ஆச்சர்யம் மேலோங்கியது. அதன் பிறகு அவளின் காதல் கதையைப் பற்றி சொன்னாள். படிக்கும் பொழுது துவங்கியதிலிருந்து பத்து பனிரெண்டு வயதில் இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு போன மாதம் இங்கே இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வரையில் சொன்னாள்.
   சிறு சிறு குடும்ப சண்டைகள் என்று அவர்களுக்குள் நடந்தாலும் நான் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடி பெயர்ந்தது வரையில் நன்றாகத் தான் இருந்தார்கள். அதன் பிறகு கடந்த பத்து வருடத்தில் நேற்று தான் அவளை ஒரு கடையில் பார்த்தேன்.
   பிள்ளைகள் மற்றும் உடல்நலம் என்று பலவிசயங்களைப் பேசிவிட்டு அவளின் கணவரைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது தான் அவள் சொன்னாள். “நீ அங்கிருந்து வந்த ஒரு வருடத்தில் எங்களுக்குள் விவாகரத்து ஆகிவிட்டது. அவர் அடுத்த இரண்டு வருடத்திலிருந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள். இப்பொழுது இவருடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதாம். போனமுறை போயிட்டு வந்த என் சின்ன மகன் சொன்னான்“ என்றாள்.
   எனக்கோ உண்மையில் பயங்கர அதிர்ச்சி.... என்னமோ எவ்வளவோ வருடங்களாக காதலித்தவர்களாம்.... பிறகு எப்படி இப்படியானது...? என்ன காரணமாக இருக்கும்....? கேட்டுவிட்டேன்.
   “அது பழைய கதை. விடு அருணா“ என்றாள். 
   “அப்போ நீங்க காதலிச்சோம் என்று சொன்னதெல்லாம் சும்மாவா...?“ என்றேன்.
   “இல்லை. அது அந்த வயதில் உண்மை தான். காதலிச்சதுக்காக அவரிடம் எவ்வளவு அன்பா இருக்கனுமோ அவ்வளவு அன்பா இருந்தேன். ஆனால் அதுக்காக அடிமையாக என்னால் வாழ முடியாது.“ என்றாள்.
   அன்புக்குப் பணிவது அடிமைத்தனமா...? நான் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். அவளே... “என்ன அருணா... என்னைப்பற்றி கேட்க மாட்டாயா...?“ என்றாள்.
   இதற்கு மேல் இவளைப்பற்றி கேட்க எனக்கு விருப்பம் இல்லாததால் நான் பேசாமல் இருக்க அவளே தொடர்ந்தாள், “நான் இப்போ ஒருவருடன் வாழுகிறேன்“ என்றாள். எனக்கு இது அதிர்ச்சியாக இல்லை. இங்கே கழுதை கெட்டா குட்டிச்சுவர் என்ற கதை என்பது எனக்குத் தெரிந்தது தானே!
   நான் ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற நோக்கத்தில், “எப்போ கல்யாணம்...?“ என்று கேட்டு வைத்தேன்.
   “ஐயோ கல்யாணமா....? ஒருத்தரிடம் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டது போதும்பா. இன்னொரு கல்யாணமா...? வேண்டவே வேண்டாம். அவர் என்னைக் காதலிக்கிறதாக சொன்னார். நானும் ஏத்துக்கிட்டேன். இப்போ ஒன்னா வாழுறோம். இது போதும்“ என்றாள்.
   “பிற்காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டாமா...?“ கேட்டேன்.
   “பிற்காலத்தை நினைச்சிக்கினு இப்போ வாழுற வாழ்க்கையை நான் வீணாக்கிக்க விரும்பலை. இப்போ என் இஷ்டம். எந்த நேரத்திலேயும் எங்கே வேண்டுமானாலும் போகிறேன். பிடிச்சதை சாப்பிடுறேன். விருப்பட்டதை வாங்கிக்கிறேன். யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிக்கிறது“ என்றாள்.
   எனக்கு அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேச இல்லாதது போல் தோன்றவே அவளின் தொலைபேசி எண்ணை மட்டும் கேட்டுக் குறித்துக் கொண்டு வந்து விட்டேன்.
  
   இருந்தாலும் மனம் அவளைப் பற்றியே சுழல்கிறது.
   என்ன காதல் இது? காதல் என்பது உண்மையில் வெறும் இனக்கவர்ச்சி தானா...? எத்தனை நாட்களுக்கு அது நீடிக்கும்...? புரியவில்லை.
   காதலித்துக் கல்யாணம் செய்துக்கொண்டால் அன்றோடு காதல் முற்று பெற்று விட்டதா?
   காதலித்துப் பிரிந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அந்தக் காதலை நினைத்து வாழுவதால் அந்த காதல் முற்று பெறாமல் தொடர்கிறதா?
   உண்மையில் காதல் இந்த இரண்டில் எதில் வாழ்கிறது...?

  
யோசனையுடன்
அருணா செல்வம்.
13.04.2014