புதன், 16 அக்டோபர், 2013

உங்கள் மனைவி போல! (சிரிக்க-சிந்திக்க)




டாக்சியின் மீட்டர்! (நகைச்சுவை)

   ஓர் ஜப்பானியர் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த போது ஒரு டாக்சியில் பயணம் செய்தார்.
   டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்றார் டிரைவர். அதைக் கண்ட ஜப்பானியர், “என்ன டிரைவர் டாக்சி இவ்வளவு மெதுவாகச் செல்கிறது? எங்கள் ஜப்பானில் எல்லாம் எவ்வளவு வேகமாகச் செல்லும் தெரியுமா? பறக்கும்!“ என்றார்.
   டாக்சி டிரைவர் எதுவும் பேசாமல் கரை ஓட்டினார்.
   பயணம் முடிந்து டாக்சியை விட்டு இறங்கிய ஜப்பானியப் பயணி அதிர்ந்தார்.
   மீட்டர் 1000 ரூபாய் காட்டியது.
   “என்ன டிரைவர் இது? மீட்டர் 1000 ரூபாய் காட்டுகிறதே!“ என்று ஆச்சர்யமாகக் கேட்டார் ஜப்பானியர்.
   “இந்த மீட்டர் உங்கள் ஜப்பானில் செய்தது சார்!“ என்று அமைதியுடன் பதிலளித்தார் டாக்சி டிரைவர்.

-----------------------------------------------------------
உங்கள் மனைவி போல!  (நகைச்சுவை)


   ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன், ஒரு நாள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
   பெட்டியில் அவருக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.
   ஆப்ரஹாம் லிங்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆகவே அவர் புகைப்பிடிக்க எண்ணினார்.
   அவர் அந்த இளம் பெண்ணைப் பார்த்து, “பெண்ணே... நான் புகைபிடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?“ என்று மரியாதையுடன் கேட்டார்.
   அதற்கு அந்த இளம் பெண், “வீட்டில் உங்கள் மனைவியின் முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகைப்பிடிப்பீர்களோ அந்த மாதிரி புகை பிடியுங்கள்!“ என்று கூறினாள்.
   “என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை!“ என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.
   “அப்படியா...! தயவு செய்து ரெயிலை விட்டு இறங்கும் வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்!“ என்றாள் அவள்.
   புகைபிடிக்க வேண்டாம் என்பதை அவள் இவ்வளவு நாசூக்காகச் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்க்காத ஆப்ரஹாம் லிங்கன், புகைப்பிடிக்காமல் பயண இறுதிவரை நாகரீகமாகவே நடந்து கொண்டார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

திங்கள், 14 அக்டோபர், 2013

எது இழிவு?




இழிவென்று சொல்லிவிட்டு
   இளகாரம் பேசலாமா?!
கழிவென்ற நம்கழிவைக்
   கழிக்காமல் அடக்குவோமா?
தொழிலென்று செய்கின்றார்
   தொடர்ந்தேதான் செய்கின்றார்!
பழியொன்றும் இதிலில்லை!
   படைத்தவனின் செயலுமில்லை!

ஏனிந்தத் தொழிலென்றும்,
   எப்படித்தான் செய்கின்றார்?
கூன்மனத்தை நேராக்கி
   கொஞ்சமெனும் யோசித்தால்
மேன்மக்கள் என்போரே
   மேலிருந்து மிதித்திருக்க,
தானிருந்த நிலையினையே
   தலைநிமிரா வாழ்கின்றார்!

இல்லாமை என்றாலும்
   ஈனமெனச் சொன்னதில்லை!
கல்லாமை ஒன்றைத்தான்
   கற்றோர்கள் சாடிநிற்பர்!
நல்வாழ்வை வாழ்வதற்கு
   நல்லோர்கள் சொன்னவழி
“கல்வியெனும் ஒன்றேதான்
   கடவுளென வழிகாட்டும்!“

அருணா செல்வம்
14.10.2013





வெள்ளி, 11 அக்டோபர், 2013

சத்தியத்தை மீறலாமா? (நகைச்சுவை)




   “ஏன்டி காலையிலிருந்து மூஞ்சை உம்முன்னு வச்சிக்கினு எதுவுமே பேசமாட்டேங்கிற. என்னவாச்சி?“ மனைவியின் முகவாயைத் தன் கையால் தூக்கிக் கேட்டான் கணவன்.
   “நீங்க இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்யுங்கள். அப்போத்தான் நான் உங்களோட பேசுவேன்.“ கையைத் தட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மனைவி.
   “ஓ... இது தான் உன் கோபமா...? சரி, நாளையிலேர்ந்து குடிக்கமாட்டேன். இது சத்தியம். போதுமா...?“ என்ற கணவனைப் பாசத்துடன் பார்த்தாள்.

   மறுநாள் இரவும் குடித்துவிட்டு வந்தவனிடம், “நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இன்னைக்கும் இப்படி குடிச்சிட்டு வந்திருக்கிறீங்களே.... ஐயோ.. இந்த மாதிரி பொய் சத்தியம் பண்ணலாமா...? குடும்பத்துல கேடு வந்திடுமே...“ என்று சொல்லி அழுதாள் மனைவி.
   “அடியேய்... அழுகைய நிறுத்து. நான் நாளையிலேர்ந்து தான் குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணினேன். அதனால நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன். நான் ஒன்னும் சத்தியத்தை மீறலை. நம்ம குடும்பத்தக்கு ஒன்னும் ஆகாதுடி. அழதே...“ என்று அவன் சொன்னதில் ஆறுதல் அடைந்தாளாம் அவனின் மனைவி.

உண்மையில் சத்தியத்தை மீறலாமா...? ஒரு சீன கதை இதோ.

   “கன்ஃப்யுஷியஸ்“ என்ற சீன தந்துவ ஞானி, அவர் நாட்டிலிருந்த அரசியல் பகை காரணமாக, தன் சீடர்களுடன் ரகசியமாக புறப்பட்டு வேற்று நாட்டிற்கு போய்க்கொண்டிருந்தார்.
   அப்பொழுது உள்ளுர் படைஅதிகாரிகள் வந்து அவரை மடக்கி “நீங்கள் வெளி நாட்டுக்கு போய் தங்கிவிட மாட்டேன் என்று சத்தியம் பண்ணி வார்த்தை கொடுங்கள். அப்போது தான் நீங்கள் எங்கே செல்லவும் அனுமதிப்போம்“ என்றார்கள்.
   ஞானியும், “சரி“ என்று சத்திய வார்த்தைத் கொடுத்துவிட்டு, தன் சீடர்களுடன் வெளிநாட்டிற்குப் போய் தங்கிவிட்டார்.
   இந்தச் செயல் அவரின் சீடர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “நம்ம குரு சத்தியத்தை மீறிவிட்டாரே!“ என்று கிசுகிசுத்தார்கள்.
   அதைக்கண்ட ஞானி அவர்களை அழைத்து, “நாமாக மனமுவந்து சத்திய வார்த்தை கொடுத்தால் தான் அதை மீறக்கூடாது. காப்பாத்தணும். கட்டாயப்படுத்தி சத்தியம் வாங்கினால், அதை மீறுவது தவறில்லை“ என்றாராம்.

   ஆகவே, சத்திய வார்த்தை என்பது, தன்மனச் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அடுத்தவர் கேட்பதற்கெல்லாம் வாக்கு கொடுப்பது சத்திய வாக்கு ஆகாது.

அருணா செல்வம்.
12.10.2013