திங்கள், 28 ஜனவரி, 2013

நம்பிக்கை!!




நட்புறவுகளுக்கு  வணக்கம்!


     இந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் குறளரங்கத்தில் கொடுக்கப்பட்டத் தலைப்பு நம்பிக்கை“

     நான், மற்றவிடத்தில் வைக்கும் நம்பிக்கையை விட தன்மேல் நம்பிக்கை வைத்தால் எதையும் அடையலாம் என்னும் பொருளில்,  கவிதை எழுதினேன். இந்தக் கவிதையின் உட்பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற “தன்னம்பிக்கை“ யுடன் உங்களுக்குப் படைக்கிறேன்.



நம்பிக்கை !!


நமக்கோ ஏதும் வேண்டுமென்றால்
    நம்பி கேட்போம் கடவுளிடம்!
தமக்கோ இதுதான் வேண்டுமென்று
    தானாய்க் கடவுள் கேட்டதில்லை!
எமக்கோ இதைநீ செய்துவிட்டால்
    இதனை உனக்கு தருவதுவாய்
நமக்கே கொடுக்கும் கடவுளுக்கே
    நாமாய்த் தருவோம் இலஞ்சத்தை!

நம்மின் மீதே முழுதான
   நம்பிக் கையை அற்றதினால்
எம்மண் காக்கும் கடவுளிடம்
   எளிதில் பேரம் பேசுகிறோம்!
வம்பில் மாட்டிக் கொண்டாலோ
    வகையாய் வெளியே வருவதற்கு
தம்மின் திறத்தை ஆராய
    நம்மின் அறிவால் யோசிப்போம்!

அன்பை, அறிவை, ஆற்றலையும்
    அன்னை தந்தை பாசத்தையும்
பொன்னைப், பொருளைப், பணத்தினையும்
     பொளிரும் அழகாய்ப் பூவுடலும்
இன்மை மறுமை வாழ்விற்கும்
     இயன்ற பெருமை பெற்றிருந்தும்
தன்மேல் நம்பிக் கையிழந்தால்
     நாளும் வாழ்வில் துன்பம்தான்!

எம்பி குதித்தும் கிடைக்காமல்
    இந்தப் பழமோ புளிக்குமென்று
வெம்பி போன நரிகதையோ
    விவேகம் அற்ற நீதியது!
நம்மின் பிள்ளை தன்மேலே
    நம்பிக் கையை வளரவைத்தால்
அம்மை அப்பன் அளித்திட்ட
    அறிய சொத்தாய் அதைநினைப்பான்!

தன்..கை தானே எப்பொழுதும்
    தனக்கே உதவி என்பார்கள்!
முன்னால் கையைக் மூடிவிட்டு
    முயற்சி இன்றி நின்றிருந்தால்
என்றும் முடிவை அறியாதே!
    எதையும் முயன்றால் முடித்திடலாம்
என்றே நம்பிக் கைவைத்தால்
    இமயம் கூட தொட்டிடலாம்!

அருணா செல்வம்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

“சாமி படம்“ எது..? (நகைச்சுவை நிகழ்வு)





நட்புறவுகளுக்கு வணக்கம்.
     இங்கே பிரான்ஸில் வாழும் ஒரு சில நம் தமிழ்க் குடும்பத்தில் கூட பிறந்த பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தெய்வ நம்பிக்கையை வளர்ப்பதில்லை.
     அதற்கு மாறாக தன்னம்பிக்கையை அதிகமாக வளர்க்கிறார்கள்.
     உதாரணத்திற்கு பெற்றோர்கள் இருவரும் வேலைக்குக் சென்று விடுவதால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்று வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும்... யார் யாருக்குப் போன் செய்து அழைக்க வேண்டும். அந்த இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்வது என்று அறிவுரைகள் சொல்லி வளர்க்கிறார்கள்.
     இது உண்மையில் ஆரோக்கியமான செயல் தான்.
அதற்காக ஒரு சில குடும்பங்களில் “சாமி“ என்பதென்றால் என்ன என்று அறியாமலே வளர்ந்து விட்டப் பிள்ளைகளும் உள்ளார்கள்... என்றால் நீங்கள் நம்புவீர்களா...?
   என் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    என் கணவர் தெய்வபக்தி நிறைந்தவர். வெள்ளிக் கிழமைகளில் நான் பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தால் அவர் வேலை முடித்து வந்ததும் கற்புரம் ஏற்றி சாமி கும்பிடுவார்.
    ஒரு வெள்ளிக்கிழமை அன்று எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் குடும்பம் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நான் அவர்களுடன் பேசிய படியே எல்லா வேலையையும் முடித்துவிட்டேன். என்னவர் வரும் நேரம் என்பதால் தோட்டத்தில் பூத்திருந்த ஒரு ரோஜாவைப் பறித்து (அந்த மாதம் நவம்பர் என்பதால் ஒரே ஒரு ரோஜாதான் செடியில் இருந்தது.) இருந்த அந்த ஒரே ஒரு ரோஜாவைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த  தோழியின் பத்து வயதாகும் மகன் சதிஷிடம் கொடுத்து “இதைச் சாமி படத்தில் வைத்திடு“ என்று சொல்லி கொடுத்தனுப்பி விட்டு வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
    அவனும் “பூவை வைத்து விட்டேன் ஆண்ட்டி“ என்று என்னிடம் வந்து சொல்லிவிட்டு தொலைக்காட்சியில் படம் பார்க்க அமர்ந்து விட்டான்.
    என் கணவர் வந்ததும், வந்தவர்கள் அவருடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள். சதிஷ் ஏதோ திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்ததால் “நான் பிறகு வருகிறேன்“ என்று சொன்னான். அதனால் அவனை என்னிடம் விட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள். அதன் பிறகு என் கணவர் சாமி கும்பிட போனார். அங்கே சாமி படத்தில் ஒரு பூவும் இல்லாததைக் கண்டு... “இன்று ஒரு பூக்கூடவா பூக்கவில்லை“ என்று கேட்டார்.
    நானும் “ஒரே ஒரு பூதான் பூத்திருந்தது. அதைச் சதிஷ் தான் சாமி படத்தில் வைத்தான்“ என்று சொல்லிக் கொண்டே போய் பார்த்தால் அங்கே படத்தில் பூ இல்லை. ஒரு சமயம் படத்தின் பின்னால் விழுந்திருக்குமோ என்று நினைத்து அங்கிருந்த எல்லா படங்களையும் ஆராய்ந்து பார்த்தேன். பூவைக் காணோம்.
    அப்பொழுது தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த சதிஷிடம் “சாமி படத்துக்கு பூ வைக்க சொன்னேனே வச்சியாடா...?“ என்று கேட்டேன். “ம் வச்சிட்டேன் ஆண்ட்டி“ என்றான். “அங்க இல்லையேடா...என்றதும் “நான் ஒழுங்காத்தான் வச்சேன் ஆண்ட்டி... முதலில் எனக்கு எட்டலை. மாமா ரூமுல இருந்த ஸ்டூலை இழுத்து போட்டு ஏறி வச்சேன்“ என்றான்.
    அப்பவே நான் யோசித்தேன். மாமா ரூம்பிலா... ஒரு சமயம் அவன் நாற்காலியை எடுக்கப்போய் பூ கீழே விழுந்து விட்டதா என்று எண்ணிய படி மாமா அறைக்கு சென்று பார்த்தால்....

    அவன் பூவை அழகாகத்தான் சாமி படத்திற்கு வைத்திருந்தான்.
எந்தச் சாமி படம் என்று கேட்கிறீர்களா...?

    “சாமி“ விக்ரம் பட போஸ்டருக்கு... !!!!

    அதைக் கண்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. அவனிடம் “இதுவாட சாமி படம்? என்று கேட்டதற்கு “ஆமாம்... இது தான் சாமி படம்.. ஏன்.. உங்க வீட்டில் வேற சாமி படம் கூட இருக்குதா...?“ என்று வேறு கேட்டான்.
    அவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் நான் சிரித்துக் கொண்டே என் கணவரிடம் சொல்ல அவரும் என்னுடன் சேர்ந்து சிரித்தார்!

அருணா செல்வம்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பார்த்தவன் எல்லாம் பாதிக் கணவன்!!




உலகம் இருண்டு உறங்கும் நேரம்
நிலவு மங்கையை நெருங்கும் மேகம்
வாச மலர்கள் வண்டுடன் உறங்க
மோச நினைவுகள் மோதிய தென்ன!

காதல் என்பதைக் கானல் நீரென
வேதம் சொன்னது வியப்போ அன்றோ
தானாய் மனத்தை நழுவிடா வண்ணம்
தேனாய் வாழ்க்கை தித்தித்த தென்ன!

பருவ வயது பதினெட் டானதால்
உருவ அமைப்பில் ஒழுங்கு கொள்ள
உடையை மாற்றி உடுத்தத் துவங்க
நடையில் கூடிய நளினம் என்ன!

மனத்தில் ஏனோ மாற்றம் இல்லை
கணத்தில் ஓடிடும் காலப் பிடியில்
திருமணம் முடிக்கத் தேடினார் வரனை!
தருணம் பார்த்துத் தரகர் வந்தார்!

பெண்ணைப் பார்த்தவன் பேதையின் மனத்தைக்
கண்களால் பேசிக் காதல் புரிந்தே
அன்னை தந்தை அறியா வண்ணம்
கண்ணால் கவர்ந்தே இழுத்த தென்ன!

வந்தவன் அவனே வாழ்க்கை என்று
சொந்தம் கொண்டே சூழ்ந்த உள்ளம்
கனவில் வந்த காமுகன் அவனை
மனத்தில் வைத்து மகிழ்ந்த தென்ன!

தீதும் என்பது தெரிந்து செய்வது
சூதும் இல்லை! சூழ்நிலை மயக்கத்
தடாகம் தொட்டிடும் தாமரை இலையாய்த்
தொடாமல் கற்பைத் தொலைத்த தென்ன!

வரன்கள் நான்கு வந்து பார்க்கக்
கரத்தைப் பிடிக்கும் கைதான் எதுவோ?
பார்த்தவன் எல்லாம் பாதிக் கணவனாகச்
சேர்த்துப் பார்த்தச் செய்திதான் என்ன!

பெண்ணைப் பார்க்கும் படலம் பேதையை
மண்ணைப் பார்க்க மயக்கும் ஆண்களை
வேண்டாம் என்று வெறுப்பாய்ச் சொல்லித்
தூண்டில் புழுபோல் துளைத்தா லென்ன!

மறத்தமிழன் நல்ல மங்கையை மணக்க
வரவு வைத்தே பேசி யதனால்
தரவே மறுத்தார் தந்தை! வேறு
வரனைக் கூட்டி வாழவைத்த தென்ன!

பழகிப் பார்த்திடாப் பைந்தமிழ்க் காதலாய்க்
குழவி இல்லாக் குடும்பத் தலைவியாய்த்
தீமை தராத தீஞ்சுடர் நெருப்பாய்
ஊமை மொழியாய் உருகிய தென்ன!

கட்டியக் கணவன் காதல் உடனே
கட்டி அணைத்தான் கட்டிலின் மேலே
கெட்டுப் போனது கேவலம் மனம்தான்
விட்டு விலகி விளக்கவா முடியும்?

சவம்போல் இல்லை பெண்ணின் சரீரம்
துவர்ப்பும் சுவைதான்! தொட்டதும் தெரிந்தது!
தவம்தான் வாழ்க்கைத் தத்துவம் என்பது
தவறே என்றால் தகிப்பாய் நெஞ்சே!!

(
அகவல்)

அருணா செல்வம்.