வியாழன், 19 ஏப்ரல், 2012

திருட்டுக் குட்டி!!



திட்டம் போட்டே செய்திட்டாள்.
திறமை யானக் கைகாரி!
சட்டம் என்றே ஒன்றிருந்தால்
சரியாய்ப் பிடித்து வைத்திடுவேன்!

எதிரி எவனும் இருந்ததில்லை.
எதிர்த்தே எவனும் நின்றதில்லை.
கதிரு போன்ற பெண்ணவளோ
கடுதில் நுழைந்த மாயமென்ன?

அஸ்தி வாரம் பலமான
அமைத்து வளர்ந்த தேகமிது!
பஸ்கி குஸ்தி செய்துநன்றாய்ப்
பருவம் மயக்கும் பளிங்கானது!

நாட்டுக் கோழி நல்லெண்ணெய்
நாளும் உண்டு வளர்த்தவுடல்!
தீட்டும் தமிழை இதயமேந்தித்
திளைத்தச் சுவையால் களித்தவுடல்!

தெள்ளத் தெளிந்தே நானிருந்தேன்!
தெரிந்தே திமிராய் எதிர்வந்தாள்!
கள்ளச் சாவி இல்லாமல்
கண்ணின் வழியில் புகுந்துவிட்டாள்!

கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
இருட்டில் கலந்த புகைபோல
இருந்த இடமோ தெரியவில்லை!

எதையோ எடுத்துச் சென்றுவிட்டாள்
இதயம் ஏங்கித் தவிக்கிறது!
இதைதான் காணோம் என்றில்லை
இருந்த அனைத்தும் காணவில்லை!

பசிக்க வில்லை! வாழ்க்கையும்
ருசிக்க வில்லை! காட்சிகளை
ரசிக்க வில்லை! கவிதைகளோ
கசிய வில்லை! கலங்குகிறேன்!
 
திருடிச் சென்ற அவளைநான்
தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
திருட்டுக் குட்டி என்கையில்
திரும்ப கிடைத்தால்... திருவிழாதான்!



செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அம்மா இங்கே வா...வா...!!



பல்லாயிரம் மையிலுக்கப்பால்
பாசத்தை தேடுகிறேன்
சொல்லாயிரம் இருக்கிறது
சொல்லத் தெரியவில்லை!

நில்லாமல் சுற்றுமுலகம்
நினைவலையோ பின்சுழல
கொல்லாமல் கொல்கிறது
குழந்தைபோல் ஆனமனது!

பாசத்தை வளர்த்திடவும்
பணம்தான் வேண்டுமென்று
நேசத்தை துளைத்தவிட்டு
நெஞ்சுருகத் தேடுகிறோம்!

உறுதியுடன் மனமிருந்தும்
உடல்நோயில் படுத்துவிட
மருந்தென்ற மாத்திரைகள்
மனதிற்கு இதமில்லை.

கருத்தெல்லாம் தேடுவதோ
கனிவான உன்முகந்தான்!
ஒருமுறையே உன்குரல்கேட்க
உடனெழுவேன் பார்அம்மா!!


திங்கள், 16 ஏப்ரல், 2012

தாய் மொழி!!



தாயின் மொழிக்கோர்ப் பாட்டெழுதத்
      தானே அமர்ந்தேன் தாளெடுத்து!
வாயில் வார்த்தை வதைந்தாலும்
      வடிவாய்ச் சேர்த்தேன் கோலெடுத்து!
தீயின் தன்மைச் சேர்க்காமல்
      சிறந்த சீரால் சொல்லெடுத்துச்    
சேயின் குரலால் செப்புகிறேன்
      செம்மைத் தமிழில் கவிதொடுத்து!

இம்மாம் பெரிய உலகத்தில்
     இனிய மொழிகள் பலவுண்டு!
தம்மா தோண்டு சொன்னாலும்
     தமிழின் சொல்லில் இனிப்புண்டு!
அம்மா என்றே சொல்லிப்பார்!
     அமிர்தம் ஊறும் உன்வாயில்!
சும்மா நானோ சொல்லவில்லை
     சொல்லும் போதே சுவையறிவாய்!

நாடு விட்டு நாடுவந்தோம்
     நல்ல நிலையில் வாழுகின்றோம்!
வீடு விட்டு வெளிசென்றால்
     வேற்று மொழியைப் பேசுகின்றோம்!
ஓடு கின்ற காலமதில்
     ஒருநாள் ஒன்றாய்ச் சேருகின்றோம்!
கூடும் இந்த இடத்தினிலும்
     கொஞ்சும் மொழியை மறக்கலாமா?

சிறந்த நாட்டில் இருந்தாலும்
     சீரும் சிறப்பாய் வாழ்ந்தாலும்
பிறந்து வளர்ந்த பொழுதினிலே
     பேசி வந்த மொழியென்றோ
மறந்து போக வழியுண்டா?
     மயக்கம் வேற்று மொழிமேலா?
கறந்த பாலோ மடிபுகுமோ?
     கருத்தில் தாயை மறப்போமோ?

எங்கள் இதயம் ஏற்றமொழி
     எண்ணம் எழுத்தில் மின்னுகிறாள்!
எங்கள் பிள்ளைச் செல்வங்கள்
     ஏனோத் தமிழைத் தள்ளுகிறார்!
சங்கம் அமைத்தச் சான்றோர்கள்
     சரியாய் இதனைக் கவனித்தால்
தங்கம் போன்ற மொழிகற்றுத்
     தாயாம் தமிழை அறிந்திடுவார்!
  
அன்னை மொழிக்கோர் அழகுண்டு
     ஆழ்ந்து கற்றால் பயனுண்டு
பொன்னை விடவும் மதிப்பதுண்டு
     புதிய பொருளும் உதிப்பதுண்டு
முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
     முன்னில் பிறந்து வந்ததென்று
தொன்மை நுர்ல்கள் சொல்வதுண்டு
     தொழுது படித்தால் உயர்வதுண்டு!

                    அருணா செல்வம்
                        14.04.2012

(பிரான்சு தமிழ்க் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடந்த சித்திரைத் திருவிழாவில் வாசித்தக் கவிதை) o:k

வியாழன், 12 ஏப்ரல், 2012

தயக்கம் ஏனடி அதைச்சொல்ல?



 
கன்னித் தமிழ்மேல் மட்டும்தான்
காதல் என்றாளாம் கள்ளியவள்!
கவிஞன் என்னிடம் பொய்யாய்க்
கதைதான் அளந்தாள் சொல்லிலவள்!


கண்ணே! என்காதலே! கேள்பெண்ணே!
காற்றுக் கேதுஉருவம்? ஓடிடும்
காலத்திற் கேதுகால்கள்? வணங்கும்
கடவுளுக்கு எத்தனை வடிவங்கள்?

ஏட்டுக் கவிமேல் காதலென்றாய்!
எடுத்து அதனை அணைப்பாயா?
தீட்டும் பாட்டில் சொல்கின்றேன்
தீந்தமிழும் நானும் ஒன்றென்றே!

கருவறைக்குள் குடியிருந்த நாளில்
கருத்தாக ஊறிய குருதியவள்!
உருவெடுத்து வெளிவந்த பின்னால்
உயிர்வாழ உதவிய மூச்சுஅவள்!

அன்பென்று அன்னை ஊட்டிட
அமிர்தமாய்க் காதினுள் நுழைந்தவள்!
அமைதியாய் நான்னுறக்கம் கொள்ளவே
ஆசையாய்த் தாலாட்டியத் தாயவள்!

அம்மா என்றுநான் அழைத்தபோது
ஆனந்தம் பொங்கிய உணர்வுஅவள்!
அப்பா என்றபோதோ என்னுள்ளே
ஆணவம் தோன்றிட வைத்தவள்தான்!

ஏட்டில் கண்ட அவளுருவால்
ஏங்க வைத்த அழகிஅவள்!
எழுதிப் பழகிய நாள்முதலாய்
என்னுள் புணர்ந்த இன்பமவள்!

பாட்டில் பார்த்த இலக்கியத்தில்
பண்பு பொங்கும் நாயகியவள்!
பழகிப் படித்த இலக்கணத்தில்
பண்பாடு நிரம்பிய பதுமையவள்!

தீட்டும் ஒவ்வோர் பாட்டினிலும்
தீட்ட ஒளிரும் வைரம்அவள்!
வாட்டும் காதல் வேகத்தில்
வளமை கூட்டும் கவிதையவள்!

புவியில் பிறந்த நாள்முதலாய்ப்
புவிக்குள் போகும் நான்வரையில்
தமிழைத் தவிர்த்தால் நானில்லை
தமிழும் நானும் வேறில்லை!

விருப்பம் தமிழ்மேல் என்றேநீ
வியக்கும் வகையில் பதில்சொன்னாய்!
மயக்கம் கொண்டது தமிழென்றால்
தயக்கம் ஏனடி அதைச்சொல்ல?

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அத்தை மகள் சொன்னது...!! (கவிதை)




உயிர்கலந்த உன்கவியை உரைத்தேன் மாமா!
     ஊசிபோல எனைப்பார்த்தாள்! பின்பு சொன்னாள்
பயிறுஎன்றால் பசிக்குதவும் என்றே எண்ணிப்
     படிப்படியாய் வாங்கிவைக்க உதவும் பின்னே!
கயிறுபோன்று திரிப்பதுதான் கவிஞர் உள்ளம்!
     கருத்திருக்கும் கதைதானே காதல் எண்ணம்!
மயிலில்லை கவிமழைக்கு மயங்கி ஆட!
    மயக்கமெலலாம் கவித்தமிழில் மட்டும் என்றாள்!!