வியாழன், 8 மே, 2014

பாவம் அவன்! ஆணாகப் பிறந்துவிட்டான்...!!





    ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஜென்மத்திலாவது ஆணாகப் பிறந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையில் பெண்களுக்கு வரும் உடல்ரீதியான பிரச்சனைகளால் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் பெண்கள் இப்படி நினைப்பது உண்டு.
    இப்படி இருக்க....

    நேற்று நானும் என் கணவரும் ஒரு முக்கிய விசயமாக பாரீஸ் சென்றோம். ஒரு சிக்னலில் கார் நின்ற போது ஒரு பிரென்சு இளைஞன், வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். அவன் எங்கள் வண்டியின் அருகில் வந்து எனக்குப் பணமாவது சிகரெட்டாவது கொடுங்கள் என்று கேட்டான். உடனே என் கணவர் இரண்டு யுரோவை எடுத்துக் கொடுத்தார்.
   அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்து விட்டது. நான் தானம் பண்ணக்கூடாது என்று சொல்லும் கருமி கிடையாது. சென்னை பித்தன் ஐயா சொன்னது போல் அட்சய திருதையை அன்று மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் நம்மால் முடிந்ததை யாருக்காவது கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் தான்.
   ஆனால்.... இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தான் நாம் உதவ வேண்டும் என்று நினைப்பவள். அந்த வெள்ளைக்கார இளைஞனைப் பார்த்தால் நல்லா கடோர்கஜன் போன்று இருந்தான். அவன் பிச்சை எடுப்பதே அவனுக்கு அவமானமாக இருக்க வேண்டும். அப்படி அவமானப்படாமல் அவன் பிச்சை எடுக்க, என் கணவரும் பணத்தைக் கொடுத்ததும் நான் கோபமாக, “அவன் நல்லா தானே இருக்கிறான்? போயி வேலை செய்து சாப்பிடுன்னு சொல்லாமல் காசு கொடுக்கிறீங்களே...“ என்றேன்.
   அதற்கு என் கணவர், “பாவம் அவன். ஆண்பிள்ளையா போறந்திட்டான். விடு அருணா“ என்றார்.
   எனக்கோ ஆச்சர்யம்! “என்னங்க நீங்க? ஆம்பளையா பொறந்ததுக்குப் போயி இப்படி சொல்லுறீங்களே....“ என்றேன்.
   “பின்ன என்ன? இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ என்றார்.
   எனக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் வாய் அடைத்தது போல் இருந்தாலும், அவன் ஆண்பிள்ளை எப்படியாவது பொழைச்சிக்குவான்...என்று நம் நாட்டவர் சொல்வது இந்நாட்டில் எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை நினைத்து வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தேன்.

   “நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை. மேலிருந்து கீழே இறங்குவது தான்“ என்பதே இங்கே நான் கண்ட உண்மை.                                                                                                                                                                                  
அருணா செல்வம்
09.05.2014

திங்கள், 5 மே, 2014

சட்டென்று வந்துவிடு!!






நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!

பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!

எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!

கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!

மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!

பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!

அருணா செல்வம்
06.05.2014

வெள்ளி, 2 மே, 2014

தாய் மனசு!! (நிமிடக்கதை)




   தொலைக்காட்சி தொடர்களில் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அம்பிகா, நாடகம் ஓடிக்கொண்டிருக்க ஏதோ யோசனையுடன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
   இதைப்பார்த்த முகிலன் பெருமூச்சு விட்டான். போன வாரம் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் தாய் அம்பிகா பழைய அம்பிகாவாக இல்லை. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ... என்று மனம் உறுத்தியது.
   அருகில் அமர்ந்திருந்த கருணாகரன், “அம்பிகா.... முகிலன் வந்துவிட்டான். எழுந்து போய் அவனுக்குச் சாப்பாடு போடு“ என்றார்.
   அம்பிகா எழுந்து போய் சாப்பாட்டைத் தட்டில் போட்டு மேசையின் மீது வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்து விட்டாள்.
   முகிலனுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்...? என்று கேட்டு கேட்டு உபசரிக்கும் அம்பிகாவாக இவள் இல்லை. மனது நோக, போட்ட சாப்பட்டில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்து விட்டான். முதலில் என்றால்... ஏன் சாப்பாட்டை வச்சிட்ட? இது பிடிக்கலையா? வேற ஏதாவது செய்யட்டுமா...?“ என்று கேட்டே நச்சரிப்பாள். ஆனால் இன்று அவள்பாட்டுக்கு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
   முகிலன் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தன் அறைக்குள் சென்று விட்டான்.

   “அம்பிகா... உனக்கு என்னாச்சி? ஏன் முகிலனிடம் சரியா பேச மாட்டேங்கற? அவன் உயிர் பிழைச்சி வாழுறதே பெரிய விசயம். அப்படி இருக்கும் போது நீ இப்படி இருக்கலாமா...?“ கருணாகரன் மெதுவாக மனைவியிடம் கேட்டார்.
   அவள் பதில் சொல்லவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் ஆறாக வழிந்தது. அதைக்கண்டதும் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து, “ஏன்ம்மா அழற? நம்ம பையன் தான் பெரிய கண்டத்திலேர்ந்து தப்பிச்சி வந்திட்டான் இல்ல...? பிறகு என்ன? எதுவா இருந்தாலும் மனசுலேயே வச்சிக்காமல் சொல்லுமா....“ என்றார் மிருதுவாக.
   “ஏங்க.... நமக்கு இருக்கிறதே ஒரே பையன்னு நான் எவ்வளவு செல்லமா வளர்த்தேன். இருவத்து அஞ்சி வருஷமா நான் பாசத்தைக் கொட்டி வளர்த்தது உங்களுக்குத் தெரியாதா...? அப்படிப்பட்ட என்னோட பாசத்தைக் கூட மறந்துட்டு ஏதோ ஆறு மாசம் பழகின காதலுக்காகத் தற்கொலை பண்ணிக்க முடிவு பண்ணிட்டானே.... என்னை ஒரு நிமிஷம் நினைச்சானா...?  அதை நினைக்க நினைக்க என்னால தாங்க முடியலைங்க.....“ என்று குரல் தழுதழுக்க சொன்னாள்..
    “சரிம்மா... அதுக்காக என்ன செய்ய முடியும்? காதல் அவன் கண்ணை மறச்சிடுச்சி. அந்தப்பொண்ணு இவனைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்காக இவன் இப்படியா செய்ய துணிவான்...? இதுக்குத் தான் புள்ளைங்க மேல அதிகமா பாசம் வைக்கக்கூடாதுன்னு சொல்லுறது. எனக்குக் கூட தான் அவன் மேல வெறுப்பா இருக்குது. அதுக்காக என்ன செய்ய முடியும்? பெத்துட்டோம். கடமையேன்னு இருப்போம்“ என்றார் கருணாகரன் சற்று தளர்வாக.
   அவர் அப்படி சொன்னதும் அம்பிகா சட்டென்று அவரை முறைத்தாள். “என்னது... ஏதோ அவன் இப்படி செஞ்சிட்டானேன்னு மனசு உடைஞ்சி பேசினா.... உடனே நீங்க வாய்க்கு வந்ததைப் பேசுறதா...? நான் என்ன அவனை கடமைக்காகவா பெத்தேன்? இனிமே இந்த மாதிரி பேசுற வேலை வச்சிக்காதீங்க. வெறுப்பா இருக்குதாமில்ல....? இருக்கும். இருக்கும். அவன் எவ்வளவு கவலைப்பட்டு இந்த முடிவுக்கு வந்தானோ.... அதை நினைக்காம.... பாவம் புள்ள. இப்பவெல்லாம் ஒழுங்கா சாப்பிடறது கூட இல்லை....“ என்று சொல்லியபடியே பாலைக் கலக்கிக்கொண்டு மகனின் அறையை நோக்கி நடந்தாள்.

   தன் குழந்தையை மற்றவர் கண்டிப்பதற்கு முன் கை ஓங்கி விடுவது தானே தாயின் மனசு.  இதில் என்ன வியப்பு இருக்கிறது என்று எண்ணியபடி தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தார் கருணாகரன்.

அருணா செல்வம்.
02.05.2014