செவ்வாய், 18 மார்ச், 2014

இப்படியும் ஒருத்(தீ)



(காதலுக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை) 
  
    அன்றொரு நாள் மாலை சேன் நதிக்கரை ஓரத்தில் இருந்த பெஞ்சியில் அமர்ந்து கொண்டு வெயிலில் மினுமினுக்கும் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.
    அப்பொழுது ஐம்பது வயதுதிற்கு மேல் மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் என்னைப் பார்த்து சினேகிதமாக முறுவலித்தார். நானும் லைட்டாக சிரித்துவைத்தேன்.
    என்ன நினைத்தாரோ... என் அருகில் வந்து அமர்ந்தார். பின்பு திரும்பவும் என்னைப் பார்த்து சிரித்தார். வேறுவழியில்லாமல் நானும் கொஞ்சம் சங்கடமாக முறுவலித்தேன். உடனே அவர் சட்டென்று என்மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து உனக்கு அவரைத் தெரியும் தானே...என்றார்.
    எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திரும்பி அவரைப்பார்த்தேன். உண்மையில் அவரின் அதிகப்படியான மேக்கப் அவரின் வயதைக்கூட்டித் தான் காட்டியது. இவர்கள் யாரைக் கேட்கிறார்.... அவரின் மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் யார்... உங்கள் மகனைக் கேட்கிறீர்களா...?என்றேன்.
    அவர் உடனே செல்லமாக என் முகவாயில் இடித்துவிட்டு “எனக்கு இன்னும் குழந்தையெல்லாம் பிறக்கவில்லை.... இதை அவர்தான் என்னிடம் கேட்கச்சொன்னாரா...?“ என்றார்.
    நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். “எனக்கு குழந்தைகளும் கிடையாது. இன்னும் கல்யாணமும் ஆகவில்லை... நான் அவருக்காகவே காத்திருக்கிறேன் என்று நீ சொல்லு“ என்றார் சற்று வெட்கத்துடன்.
    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அவர் என்னை வேறுயாரோ ஒருவர் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பது புரிந்து. உடனே “நீங்கள் என்னைத் தவறாக நினைத்திருகிறீர்கள். என் பெயர் அருணா. “ என்றேன்.
    “ஓ... உன் பெயர் அருணாவா....? ஆமாம்... அவர் பெயர் என்ன?“ என்றார். எனக்கு புரிந்து போனது... ஏதோ ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத ஒருவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று...
    திரும்பி அவரைத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் இல்லை... நான் பார்ப்பதைப் பார்த்து, “யாரை தேடுகிறாய்... ஆக்நெசையா....? அவள் அந்தப் பிள்ளைகள் பார்க்கில் என்னைத் தேடிக்கொண்டிருப்பாள்..“ என்றார் சர்வசாதாரணமாக.
    அப்போ... இது அடிக்கடி நடக்கிற நிகழ்ச்சி என்று புரிந்து போனது. சரி அந்தப் பெண்ணை விட்டு மெல்ல நகர்ந்துவிடலாம் என்று எழுந்தேன். சட்டென்று என் கையைப் பற்றி “என்ன அவசரம்? உட்கார். உன்னிடம் நான் நிறைய பேசவேண்டும்“ என்று சொல்லி என்னைக் கட்டாயமாகத் தன் அருகில் அமர வைத்தார்.
    நானும் வேறு வழியில்லாமல் அமர்ந்தேன்.
    “அருணா... நான் அவரை அல்ஸாஸ் டூர் போனபோது தான் பார்த்தேன். என்னை மூன்று முறை பார்த்து சிரித்தார். அருகில் அவரின் மனைவி பிள்ளைகள் இருந்ததால் என்னிடம் அவர் ஒன்றுமே பேசவில்லை. நானே போய் பேசலாம் என்று நினைத்தால் அவரின் மனைவி அவருடனே இருந்ததால் அந்த டூர் முடியும் வரையிலும் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை... “
   பெறுமூச்சியுடன் நிறுத்தினார். பாட்டி ஏதோ பழைய காதலை நினைத்து சொல்கிறது என்ற சந்தோசத்தில் நானும் கதை கேட்க ஆவலானேன்.
   “அந்த முறை அவரிடம் நீங்கள் ஒன்றுமே பேச வில்லையா... ம்... அப்புறம் என்னவாச்சி...?“ கேட்டேன்.
    “அந்த முறை பேச சந்தர்ப்பம் கிடைக்காததால்... அடுத்த ஒரு டூருக்குப் பணம் கட்டினேன். ஆனால் இந்த முறை நான் பியுட்டி பாருக்குப் போய் அவரின் மனைவி போலவே முடியை கட் பண்ணினேன்.... நிறைய விலை உயர்ந்த மேக்கப் செட்டெல்லாம் வாங்கி என்னை அழகுப்படுத்தினேன். பழைய மாடல் டிரெஸ்சையெல்லாம் மாற்றி புது பேஸனாக உடுத்திக்கொண்டேன்.... ஆனால்... அந்த டூருக்கு அவர் வரவேயில்லை....“ என்றார். எனக்குக் கொஞ்சம் மனம் இடித்தது. நான் பேசாமலேயே அமர்ந்திருந்தேன்.
    “என்ன கேக்குறியா...?“ என்றார் சற்று அதிகாரமாக.
    “ம்... கேட்கிறேன் “ என்றேன். என்னத்தைக் கேட்பது...!! இருந்தாலும் “அவரைப்பற்றி உங்களுக்கு என்ன தான் தெரியும்...?“ என்று கேட்டேன்.
    “என்னைப் போலவே அவரும் என்னைக் காதலிக்கிறார் என்பதைத் தவிர அவரைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது...“ என்றார்.
    “ஒன்றுமே தெரியாது என்றால்...“
    “ஒன்றுமே தெரியாது... அவர் பெயர், எந்த ஊர், எந்த முகவரி, எங்கே வேலைசெய்கிறார் என்று எனக்கு எதுவுமே தெரியாது“ என்றார்.
    “அதற்காக ஏதாவது முயற்சி எடுத்தீர்களா...?“
    “ம்... மூன்று வருடமாக நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்... ஆறு மாதத்திற்கு முன் என் அம்மா இறந்துவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை... நிச்சயம் அவர் என்னைத் தேடி வருவார். காத்துக் கொண்டிருக்கிறேன்“ என்றார்.
    அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்கும் பொழுது அங்கே ஒர் இளம் வயது பெண் வந்தாள். இவரைக் கண்டுபிடித்ததில் திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.
    அவள் என்னைப் பார்த்து இலேசாக சிரித்துவிட்டு.. அவரிடம் திரும்பி “பொழுதாகிப் போயிடுச்சி... எழுந்திருங்க... வீட்டுக்குப் போகலாம்..என்று அந்தப் பெண்ணின் கையைப்பிடித்து எழப்பினாள்.
    அவர், “இரு. நான் அருணாவிடம் பேசிவிட்டு வருகிறேன். நீ போ.“ என்றார் சற்று கோபமாக. எனக்கு ஒன்றும் புரியாமல் நான் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.
    அந்தப்பெண்... என்னிடம் “இவங்களை உங்களுக்குத் தெரியுமா...?“ என்று கேட்டாள்.
    நான் உடனே... “இல்லை தெரியாது. இன்று தான் முதல்முறையாகப் பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு... என்ன இவங்களுக்கு?“ என்று அவளுக்கு மட்டும் கேட்க்கும் விதத்தில் கேட்டேன்.
     அவள் லேசாக சிரித்துவிட்டு “இவங்களுக்கு தெளீர்என்ற வியாதி. இது ஒருவகை மனவியாதி.  இவர் யாரோ ஒருவர் ஒரே ஒரு நாள் தன்னைப்பார்த்துச் சிரித்ததை வைத்துக்கொண்டு அவர் தன்னைத் தான் காதலிப்பதாக கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரே நிச்சயம் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்றும்... அல்லது யாரிடமாவது தன் காதலைச் சொல்லி அனுப்புவார் என்றும்  காத்துக்கொண்டே இருக்கிறார்.“ என்றாள்.
    எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “இது எப்போது குணமாகும்?“ என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
    “குணமாகாமல் இப்படியே இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கடந்த மூன்று வருடமாக இப்படி இருந்தவர் அவரின் தாய் இறந்தவுடன் யாருமே இல்லாத நிலைக்கு ஆளானதால் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி பண்ணிவிட்டார். நான் அவர் வீட்டில் பார்ட் டைம் வேலைசெய்வதால் அந்த நேரத்தில் உடனே காப்பாற்றி விட்டேன். இப்பொழுதும் அவருக்கு நேர்மாறாக யாராவது பதிலளித்து விட்டால் உடனே மூர்க்கமாகி விடுவார். அதனால் கிட்டேயே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்நேரமும் அவருடனே என்னாலும் இருக்க முடியாது“ என்றாள்.
    “ஏன்...?“
    “நான் காலேஜியில் படித்துக்கொண்டே இவர் வீட்டில் வேலை செய்கிறேன். இவருக்கு இன்னும் அறுபது வயது ஆகவில்லை. அதனால் முதியோர் இல்லத்திலும் சேர்க்க முடியவில்லை. அதனால் நான் கூடவே இருக்க வேண்டியுள்ளது“ என்றாள்.
     எனக்குக் கவலையாகத் தான் இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்...? நான் பேசாமல் எழுந்து கிளம்பத் தயாரானேன்.
      என் கையை உடனே அந்தப் பெண்மணி பிடித்துக்கொண்டார். “அருணா... நீயாவது அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து எனக்குச் சொல். நீ அவரின் முகவரியையாவது டெலிபோன் நம்பரையாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் அவர் மனைவிக்குத் தெரியாமல் அவருடன் பேசி என்னிடம் வரவழித்து விடுவேன். ப்ளீஸ்... அருணா... எனக்கு உதவி செய்....“ என்று கெஞ்சலாகச் சொன்னார். எனக்கும் பாவமாக இருந்தது.
     நானும் அவர் கையைப் பிடித்து “நான் நிச்சயம் உங்களுக்கு உதவுகிறேன்“ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு மனம் கனக்க நகர்ந்தேன்.
    காலம் கடந்து வந்த காதல்!!! இந்தப் பெண்மணிக்குள் தீயை வார்த்துவிட்டுச் சென்றுள்ளது.
     “ஆக்நெஸ்... நான் ஒங்கூட வரமாட்டேன்... நீ போ.... அவரைத் தேடித் தர்றேன்னு சொல்லிவிட்டு இன்னமும் தேடலை... நீ பொய் சொல்கிறாய்.... நீ இன்னைக்கே எல்லா டிராவல்ஸ் ஏஜென்சிக்கும் போய் விசாரிக்கனும்... நீ சரின்னு சொன்னால் தான் நான் உன் கூட வருவேன்.... நான் வரமாட்டேன்.. நீ போ...
    நான் வண்டியில் உடகார்ந்து ஸ்டார்ட் செய்யும் வரை அந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. இன்னமும் கேட்டுக்கொண்டே
தான் இருக்கிறது!

அருணா செல்வம்.
05.08.2012

திங்கள், 17 மார்ச், 2014

மறந்து விட்டேன்...!!





செவ்வாய் திறந்து
நீ உதிர்க்கும்
பூவெல்லாம்
எனக்கு வேதமடி!

இறந்து விடு
என்று நீ
சொல்லி இருந்தாலும்
இறந்து விடுவேன்
உன் நினைவுடன்!

மறந்து விடு
என்று சொன்னாய்
மறந்து விட்டேன்
மறுகணமே..
உன் சொல்லை!!

அருணா செல்வம்.

வியாழன், 13 மார்ச், 2014

எதிலும் வெற்றி அடைய வேண்டுமா?




     “இந்த ராத்திரி நேரத்துல எங்க கிளம்புற ராமசாமி....?“ கேட்டபடியே வந்தார் முனைவர் .....
   “வா முனைவா... இந்த வீரப்பான் என்ன செஞ்சான் தெரியுமா....?“
   “என்ன செஞ்சான்?“
    “போன வருஷம் அவசத்துக்கு எங்கிட்ட கடன் வாங்கினான். தோபாரு எழுதி கையெழுத்துக் கூட போட்டுக் குடுத்திருக்கிறான். வருஷம் ஒன்னாச்சேன்னு வேலைக்காரனை அனுப்பி பணம் கேட்டா... நான் ராமசாமிகிட்ட பணமே வாங்கலைன்னு சொல்லி அனுப்பிட்டான். அதான் ஒரு எட்டு நானே போயி கேக்கலாம்ன்னு கௌம்பிறேன்“ என்றார் ராமசாமி.
    “கேட்க வேண்டியது தான். ஆனால் அதுக்கு இந்த ராத்திரி நேரம் வேண்டாம். காலையில போய் கேளு“
    “ராத்திரியா இருந்தா என்னா.... பணம் என்னோடது. எனக்குத் தான் அதோட அருமை தெரியும்.“
    “சரிதாம்பா. நானும் இல்லைன்னு சொல்லலை. ஆனால் இப்போ போனால்... அவனுக்குக் கண்ணு சரியா தெரியாது. ராத்திரி நேரத்துல குடிச்சிட்டு வேற இருப்பான். அவன் போன வருஷம் கஷ்டத்துல நிறைய பேருகிட்ட கடன் வாங்கினான். அதில் உன்னை மறந்து போய் இருப்பான். நியாயமான ஆளு. அதனால நாளைக்கு நேராபோய் அவனைப் பார்த்துப் பேசு.“ என்றார்
   “அப்போ.... காலையில போய் கேட்டால் நல்லதுன்னு சொல்லுறியா...?“
   “நான் சொல்லலைப்பா.... காளமேகப் புலவர் காலம் அறிந்து செயல் பட வேண்டும்ன்னு ஒரு பாட்டில் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.“
    “அப்படியா...? எங்க அந்தப் பாட்டைச் சொல்லு.“ ஆவலாகக் கேட்டார் ராமசாமி.
   “இந்த பாட்டுல என்ன ஒரு விசேசம் என்றால், இது வெறும் ககர வர்க்கம் மட்டுமே அமைச்சிப் பாடி இருக்கிறார்.“
    “ககர வர்க்கமா....? அப்படின்னா...?“
    “ககர வர்க்கம்ன்னா.... க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, என்ற எழுத்துக்கள் தான். இந்த எழுத்துக்களை மட்டுமே பாட்டில் எழுதி இருக்கிறார். மற்ற எந்த எழுத்துக்களும் இல்லை. இதை “வித்தாரச் செய்யுள்“ என்று சொல்கிறார்கள்“
    “அப்படியா...? எங்க அந்த செய்யுளை சொல்லு பார்ப்போம்“
  
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

    “இது தான் பாடல். என்ன பொருள் வியங்கியதா...?“
    “என்ன.... பொருள் விளங்கியதாவா....? ஏன் கேக்க மாட்டே.... ஏதோ காக்கா காக்கான்னு சொல்லிட்டு பொருளைக் கேட்டால்... நான் எங்க போவேன்? அதை நீ தான் சொல்லனும். சொல்லு“ என்றார் சற்று கடுப்புடன் ராமசாமி.

    முனைவர் சொல்லத் துவங்கினார். “அதாவது
காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதல் ஆகாது. (கூகை என்றால் ஆந்தை)
கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதல் ஆகாது.

கோக்கு கூக் காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றும் கைக்கும். (கோ என்றால் அரசன்)

கொக்கொக்க – கொக்கைப் போல (அதாவது சரியான சமயம் வரும் வரை காத்திருத்தல்)
கைக்கைக்கு – பகையை எதிர்த்து
காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா – (கைக்கு ஐக்கு ஆகா) காலமற்றதாயின் தலைவனுக்கும் இயலாதாகிப் போகும்.

   “என்ன ராமசாமி... இப்போ பொருள் புரிந்த்தா...?“
   “திரும்ப பொருளை மட்டும் சொல்லு“
   “காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் காக்கை இரவிலும் ஆந்தை பகலிலும் வெல்ல முடியாது. (அதுபோல) அரசன் தன் நாட்டை பகையிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் கொக்கைப் போல சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
   பகையை எதிர்த்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற காலம் இல்லை என்றால் அரசனுக்கு வெற்றி என்பது இல்லை என்றாகிவிடும். இது தான் அந்த பாடலின் விளக்கம். இப்போ விளக்கம் புரிஞ்சுதா?“ முனைவர் கேட்டார்.
   “நீ விளக்கம் சொன்னதும் புரிஞ்சுது. ஆனா... இது எல்லாருக்கும் புரியுமா...? புடிக்குமா...?“ ராமசாமி சந்தேகமாகக் கேட்டார்.
   “அதை அவங்களே சொல்லட்டும். நான் கிளம்புறேன்“ கிளம்பினார்.


அருணா செல்வம்.

செவ்வாய், 11 மார்ச், 2014

தலைவலி!!




நெற்றிப் பொட்டின் மத்தியிலும்
   நீண்ட வகிட்டுக் குள்ளேயும்
சுற்றிப் பார்க்கும் கண்களையும்
   சுற்றி வலித்த தலைவலியால்
வற்றிப் போன குளம்போல
   வலியால் மண்டை வெடிக்கிறது!
கற்றைக் குழலைத் தலைதாங்கும்
   கடுக்கும் வலியைத் தாங்கிடுமா?

வலையில் எழுத அமர்ந்தாலும்
   வகையாய் சமைக்கப் போனாலும்
அலையில் பேச நினைத்தாலும்
   அமைதி யாகப் படுத்தாலும்
தலையில் ஏன்தான் இவ்வலியோ
   தனித்து நானே சிந்தித்தேன்
விலையே இல்லா வலைதளத்தில்
   விழாமல் போன வாக்கினாலா?


அருணா செல்வம்.

11.03.2014

ஞாயிறு, 9 மார்ச், 2014

சிவனுக்கு “அரை“க்கண் தானாம்!!



    “டேய்... நீ செஞ்ச காரியத்துக்கு எனக்கு மட்டும் சிவன் மாதிரி நெற்றிக்கண் இருந்தா... அப்படியே உன்னை எரிச்சிடுவேன்“ உருவத்திலும் குரலமைப்பிலும் வீ.கே ராமசாமி மாதிரி இருந்த முதலாளி இப்படி கத்தவும் நாகேஷ் உடலமைப்பில் இருந்த வேலைக்காரன் அலட்சியமாகப் பார்த்து லேசாக சிரித்தான்..
   “டேய்... நா கோவத்துல திட்டுறது ஒனக்கு அலட்சியமா போச்சா....“ கோபத்துடன் அவனைப் பார்த்துக் பற்களைக் கடித்தார்  முதலாளி.
   “நா ஒன்னும் உங்கள அலட்சியப்படுத்தலங்க. நீங்க எப்போதும் சொல்லுற இந்த வார்த்தையை நினச்சிதாங்க சிரிச்சேன்.“ என்றான்.
   “ஏண்டா... எனக்கு சிவன் மாதிரி நெற்றிக்கண் இல்லை என்பது ஒனக்கு சிரிப்பா வருதா...? தோபாருடா.... எனக்கு மட்டும் அந்த மூணாவது கண் இருந்திருந்தா நிச்சயம் உன்னை எரிச்சிருப்பேன்.“ கோபத்தில் மூச்சு வாங்கியது.
   “அதாங்க முடியாது. ஏன்னா... சிவனுக்கு மூணு கண் இல்லையாம்.“
   “அட அசடே.... படிக்காத முண்டம். நான் வணங்கும் சிவனை நீ அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஐயோ... முக்கண் முதல்வா.... இவனுக்கு நல்ல புத்தியக் கொடுப்பா....“ வானத்தைப் பார்த்து வேண்டினார்.
   “ஐயா.... சிவனுக்கு மூணு கண் இல்லையாம். அரைக்கண் தானாம். இதை நான் சொல்லலை. நீங்க எப்பப்பாரு என்னை இப்படித் திட்டுறீங்களேன்னு உங்க நண்பர் கிட்ட கவலையா சொன்னேன். அதற்கு அவரு தான் இப்படி சொன்னார்“. என்று சொல்லவும் அந்த நண்பர் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது.
   “ஏன்னப்பா முனைவா.... நீயா இவன்கிட்ட சிவனுக்கு அரைக்கண்ணு தான்னு சொன்ன?“ வந்தவரைக் கேட்டார் முதலாளி.
   “சிவனுக்கு அரைக்கண் தான் என்று நான் சொல்லலை. ஆனால் சிவனுக்கு அரைக்கண் தான் உள்ளது என்பதைப் பழங்கால புலவர் காளமேகம் என்பவர் இப்படி பாடி இருக்கிறார்.“ என்றார்.
   “காளமேகப் புலவரா...? சரி. அவர் சிவனுக்கு அரைக்கண்ணு தான் உள்ளதுன்னு எதை வைத்துச் சொன்னார்? சொல்லு“ என்றார் ஆர்வமாக முதலியார்.
   “அவர் பாடியதைச் சொல்கிறேன் கேள்.

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே – மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையுமித னாலென் றறி.  

இந்த வெண்பாவின் பொருளைச் சொல்கிறேன் கேள்.

அதாவது

முன்னோர்கள் சிவபெருமானை மூன்று கண்கள் உடையவன் என்று சொல்வார்கள். ஆனால் அவனுக்கு உள்ளது அரைக்கண் தான். எப்படியென்றால் உமையாளின் கண் ஒன்றரை ஆகும் (ஆதாவது சிவனின் சமபாதி உமையாள். அதனால் அவளின் கண்கள் ஒன்றரை)  மற்று ஊன் கண் வேடனுடையது (அதாவது கண்ணப்பனார் தன் கண்களில் ஒன்றை சிவபெருமானுக்குப் பொருத்தினார் என்பதைச் சிவபுராணத்தில் சொல்லி இருக்கிறார்கள்) அதனால் மீதி இருக்கும் அரைக்கண் தான் சிவபெருமானுக்கு உரியதுஎன்று பாடி இருக்கிறார்.
அதனால் தான் உன் வேலைக்காரனிடம் அப்படி சொன்னேன்.“ என்றார்.

    முதலாளி, “பாருடா.... அந்தக் காலத்துல எப்படியெல்லாம் பாடி இருக்கிறாங்க....“ என்று வாயில் கை வைத்தபடி வியந்தார்.
    “இது மட்டும் இல்லப்பா.... இன்னும் குறிப்புக்காக சிலேடையாக வித்தாரச் செய்யுளாக நிறைய பாடல்கள் காளமேகப் புலவர் பாடியிருக்கிறார். நான் நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொன்றாக சொல்கிறேன். இப்போ கிளம்புகிறேன்“ என்று சொல்லியபடி கிளம்பினார்.
   இனி நம்மை பழையபடி திட்டமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வேலையாள் முதலாளியைப் பார்த்தான்.

(படித்ததைக் கற்பனைக் கதையுடன் சேர்த்துப் பதித்தேன். நன்றி)

அருணா செல்வம்.

வெள்ளி, 7 மார்ச், 2014

நான் பூதமான கதை!! (நகைச்சுவை நிகழ்வு)



   
   ஒரு முறை ஒரு திருமணத்திற்குப் போக என் அண்ணன் அண்ணி அவர்களின் ஆறு வயது மகள் சோனியாவும் ஊரிலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நாங்களும் அந்தத் திருமணத்திற்கு போவதாக ஏற்பாடு.
   திருமண தம்பதியர்க்குப் பரிசு பொருள் வாங்காததால், எங்களைக் கிளம்பி ரெடியாகி இருக்கும்படி சொல்லிவிட்டு என் கணவருடன் அவர்கள் இருவரும் கடைக்குச் சென்றுவிட்டனர்.
   நானும் மற்ற வேலைகளை முடித்துவிட்டு, சோனியாவை அழகாக உடுத்திவிட்டேன். பின்பு அவளை டீ.வி பார்க்கச் சொல்லிவிட்டு, நானும் குளித்து அலங்காரம் (மேக்கப்) பண்ணிக்கொண்டேன்.
   திருமணத்திற்குப் பட்டுப்புடைவையைக் கட்டிக்கொண்டதால் எந்த வேலையும் செய்ய விரும்பாமல் நாமும் டீ.வி பார்க்கலாம் என்று ஹாலுக்கு வந்தேன்.
   என்னைக் கண்டதும் சோனியா கண்களை ஆச்சர்யமாக விரித்து... “அத்தை... நீங்க ரொம்ப ரொம்ப....“ அதற்கு மேல் அவளுக்குச் சொல்லத் தெரியாமல் வார்த்தையைத் தேடினாள். நானும், ஆஹா... நாம்ம அண்ணன் பொண்ணு நம்மைப்பற்றி ஏதோ சொல்ல வருகிறாள் என்று நினைத்து... “என்ன சொல்லவர்றே சோனியா? சொல்லும்மா“ என்றேன் ஆவலாக.
   அவள் சில நொடிகளில் வார்த்தையைத் தேடிவிட்டு, “அத்தை.. நீங்க.... நீங்க....ரொம்ம்ம்ம்ப பூதம் அத்தை“ என்றாள். (எனக்கு ஷாக்)
   “பூதமா...?“ கேட்டேன்.
   “ஆமா. நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள்.
   எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
   குளித்துவிட்டு ஈரத்துடன் பவுடர் போட்டதால் பூத்துவிட்டதோ என்று நினைத்து முகத்தை உடனே அழுத்தத் துடைத்துவிட்டு, “இப்போ பரவாயில்லையா...?“ என்று கேட்டேன். அவள் சற்று யோசித்துவிட்டு “இப்பவும் நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள் லேசாக சிரித்தபடி.
   எனக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தத் திம்மாத்துண்டு வாண்டு என்னைக் கலாய்க்கிறதா...என்று நினைத்தபடி, “பரவாயில்லை சோனியா... நீயாவது உன் வாழ்க்கையில ஒரு பூதத்தைப் பார்த்திருக்கிற. ஆனால் நான் இது வரையில எந்த ஒரு பூத்தையும் பார்த்ததில்லை“ என்றேன் சற்று வாட்டமாக முகத்தை வைத்துக் கொண்டு.
   அவள் உடனே, “ஏன் அத்தை அப்படி சொல்லுறீங்க? நீங்க ஒரு பூதம். உங்க அக்கா ஒரு பூதம், உங்க தங்கச்சி ஒரு பூதம், உங்கள் அம்மா கூட பூதம் தான்“ என்றாள்.
   ஐயோ... இவளைப் பேசவிட்டால் நம் குடும்பத்தையே பூதக்குடும்பம்ன்னு சொல்லிடுவாள் என்று நினைத்து “போதும் போதும் போய் டீவிய பாரு.“ என்று சற்று கோபமாகச் சொன்னேன். அவள் என்னை ஒருமாதிரி கவலை கலந்து பரிதாபமாக பார்த்து விட்டு திரும்பிக்கொண்டாள்.
   எனக்கும் அவள் முகத்தை அப்படிக் கண்டதும் சற்று கவலையாகிவிட்டது. அவள் சின்னப்பிள்ளை. அவள் மனத்தில் பட்டதைச் சொன்னாள். இதைப்போய் பெரியதாக எடுத்துக் கொண்டோமே... என்று என்னையே நொந்துக்கொண்டேன்.
   இருந்தாலும் திரும்பத்திரும்ப கண்ணாடியைப் பார்த்து, ஏன் அப்படி சொன்னாள்? எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது. அப்படி ஒன்றும் பூதம் போல் தெரியவில்லையே என்று நினைத்தபடி சரியானதையே திரும்பத் திரும்பச் சரிசெய்தேன்.

   சற்று நேரத்தில் கடைக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் அண்ணி... “வாவ் சூப்பரா இருக்கிறீங்க“ என்றார்.
   எனக்கு சந்தேகம். “நான் சரியாகத் தானே உடுத்தி இருக்கிறேன்? ஏதாவது மாற்றமாகத் தெரிகிறதா?“ என்று கேட்டேன்.
   “ஏன்?“ என்று சொல்லியபடி என்னைச்சுற்றிப் பார்த்துவிட்டு, “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. நல்லா அழகாகவே இருக்கிறீர்கள்“ என்று சொன்னார்.
   நான் உடனே... “நீங்க இப்படி சொல்லுறீங்க. உங்க பொண்ணு என்னை என்ன சொன்னாள் தெரியுமா...?“ என்றேன்.
   என் அண்ணி ஆர்வமாக... “என்ன சொன்னாள்?“ என்று கேட்டார்.
   “அவள் என்னை பூதம்ன்னு சொன்னாள்“ என்றேன். அதைக் கேட்டதும் என் அண்ணிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. என் அண்ணனை ஏளனமாகப் பார்த்தபடி வேறு சிரித்தார். அண்ணனும் சிரித்தார்.
   நானும் அண்ணனைப் பார்த்தேன். என் பாவமான முகத்தைக் கண்ட என் அண்ணன், “அது ஒன்னும் இல்ல அருணா. நேத்து கிளம்பும் போது எனக்கும் உங்க அண்ணிக்கும் சின்ன வாக்குவாதம். அந்த நேரத்துல டீவியில மை டியர் பூதம்“ன்னு விளம்பரம் வந்திருக்கிறது. சோனியா அதைக் கேட்டுட்டு “பூதம்“ன்னா என்ன அப்பா என்று கேட்டாள். நான் கோபத்துடன் இருந்ததால “தோ... உங்க அம்மா மாதிரி இருக்கிறவங்களைத் தான் பூதம்ன்னு சொல்லுவாங்க“ என்றேன்.
   அப்படி சொன்னதும் உன் அண்ணி என்னை முறைச்சிது. நான் உடனே “உங்க அம்மா மாதிரி அழகா இருக்கிறவங்களை பூதம்“ன்னு சொல்லுவாங்ன்னு மாத்தி சொல்லிட்டேன். அதனால் தான் அவ உன்னை அப்படி சொல்லி இருக்கிறாள்“ என்றார் அண்ணன் சிரித்தபடி.
   அப்பொழுது தான் அவள் சொன்னத்தின் காரணம் புரிந்தது. திருப்தியுடன் நானும் சிரித்துவைத்தேன்.

அருணா செல்வம்.


புதன், 5 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!! (முடிவு)




இலக்கணத்தைப் பிழையின்றி எழுதி வைத்தும்
   எதுகையையும் மோனையையும் அழகாய்த் தந்தும்
இலக்கியத்தின் தன்மைகேற்ப இயற்கைக் காட்சி
   இன்பத்தின் அணியுடனே அழகாய் ஈந்தும்
நிலவுலகின் மானிடரின் உயர்ந்த பண்பை
   நேர்மையுடன் தந்தாலம், உன்னைக் கேட்க
பலநாளாய் என்மனத்தில் கேள்வி உண்டு
   பாவலனே கேட்டிடவே வந்தேன் இன்று!

எத்தனையோ கதையுண்டாம் உலகில் என்றும்!
   எடுத்தெழுத தமிழுண்டு மகிழ்வு பொங்க!
அத்தனையும் இத்தரையில் நிலைத்து நின்றே
   அழியாத புகழ்படைக்கும்! அதனைக் கண்டு
சித்தத்தில் யாரையுமே தழுவி டாமல்
   சீர்சிறக்கத் தமிழிலேயே படைத்தி ருந்தால்
மொத்தத்தில் தமிழ்நூலின் மூலம் என்றே
   முழுமூச்சாய் உன்புகழே நிலைத்தி ருக்கும்!

சொற்பூவில் தேன்சொட்டத் தொடுத்த மாலை!
   சுவைத்தமிழின் சூத்திரத்தைப் பொதித்த கோவை!
கற்பூர ஆராத்தி காட்டி வீட்டில்
   கடவுளுக்கு நிகராக நோக்கும் பார்வை!
தற்கால மனிதர்க்கும் காட்டும் நேர்மை!
   தமிழுக்கு அணியாக நின்ற தன்மை!
கற்காலக் கற்பனையில் யாரோ செய்த
   காவியத்தைக் கதையாக ஏனோ செய்தாய்?


அருணா செல்வம்.

செவ்வாய், 4 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!! (தொடர் -2)



இயற்கையினை இயற்கையாகச் சொன்ன போது
   இன்கரும்பின் சாற்றினிலே நனைத்துத் தந்தாய்!
செயற்கையினை இயற்கையாகச் சொன்ன போதும்
   செந்தமிழின் தேன்சொட்டச் சேர்த்துத் தந்தாய்!
தயக்கங்கள் கவிகளுக்குத் தேவை யில்லை!
   தடுமாற்றம் என்பதெல்லாம் தமிழில் இல்லை!
மயக்குவது மங்கையர்சொல் மட்டும் இல்லை!
   மதுகலந்த சொற்களாலும் மயக்கம் தந்தாய்!

சிங்களர்கள் தொல்லைதரும் சிறிய தீவில்
   சீதையினைச் சீரழியச் சிறையில் வைத்தாய்!
எங்களவர் சிறையுடைத்து மீட்டு விட்டார்!
   இருந்தாலும் இருக்கிறதே இன்றும் தொல்லை!
சிங்கமாகச் சீறியெழுந்தும் அரக்கத் தன்மை
   சின்னதாகக் கொஞ்சமும் குறைய வில்லை!
மங்கலங்கள் பாடிவிட்டு முடித்த காதை
   மறையாமல் தொடர்கிறதே அய்யோ பாவம்!

விதிவகுத்த பாதையிலே அழைத்துச் சென்றாய்!
   வீரத்தால் வெற்றியினை வாங்கித் தந்தாய்!
பதிவகுக்கும் பாதையினைக் காத்து நோக்கி
   பதிவிருதை சீதையவள் கலங்கி நின்றாள்!
மதிமயக்கம் கொண்டவனை மதியால் வெல்ல
   மங்கையரால் முடியாதோ கதையில் சொல்ல
கதிகலங்கி நிற்பதுதான் பெண்கள் வாழ்வாம்!
   கதைபடைத்த கம்பா!நீ ஏனோ சொன்னாய்!!

(தொடரும்)

அருணா செல்வம்.

திங்கள், 3 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!!




(ப்ரான்சு கம்பன் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை)

தமிழ் வணக்கம்

கம்பனிடம் கேள்விகேட்கக் கன்னித் தமிழைநான்
தெம்புடன் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தேன்! – வம்பின்றி
நம்பிக்கை வைத்தே நயத்துடன் நான்கேட்கக்
கும்பிட்டு நின்றேன் குனிந்து!

குரு வணக்கம்

கருவெடுத்து நன்றாய்க் கவியெழுதக் கற்பித்தாய்!
உருவெடுத்து வந்தேன்! உயிரில் – இருக்கும்
திருவே தீந்தமிழை இவ்வவையில் பேச
குருவே துணிவைக் கொடு!

அவை வணக்கம்

ஆறறிவு கொண்டவர்கள் அந்தமிழின் இன்பத்தை
நூறறிவு கண்கொண்டு நோக்கிநிற்க! – சீராய்ச்
சுவைத்தமிழின் சொல்கேட்கச் சூழ்ந்திருக்கும் சான்றோரின்
அவைவணங்கி நின்றேன் அறிந்து!

கம்பனிடம் ஒரு கேள்வி

நிலையில்லா உலகத்தில் நிலைத்து நின்று
    நெடும்புகழை அடைந்துவிட்ட ஈடில் இன்பம்!
கலைஞர்களின் கருத்துகளில் புகுந்து நின்று
   கவித்தமிழின் தாயாகத் தவழும் தெய்வம்!
தலைநிமிர்ந்து தைரியமாய்த் தமிழர் நின்று
   தரணியிலே வேறுண்டோ என்றே கேட்டு
விலையில்லாச் செல்வமுண்டே எம்மி டத்தில்
   விண்ணமுதம் வேறுண்டோ என்றே சொல்லும்!

இத்தரையில் இன்பங்கள் என்ன வென்றால்
   இலக்கியத்திற்(கு) இணையாக எதுவும் இல்லை!
எத்தரையில் இப்புகழைத் தொட்ட வர்கள்
   இருந்தாரோ இருப்பாரோ என்றே கேட்டால்
சத்தியமாய்ச் சரித்திரங்கள் நிறைய உண்டு!
   சாதித்த வரலாறும் உலகில் உண்டு!
சுத்தமான இலக்கணத்தில் மூழ்கி வந்த
   சுகமான இராமகதைக்(கு) ஈடும் உண்டோ!

(தொடரும்)


அருணா செல்வம்.