வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கலைவாணர் சொன்ன “மை“ கள்!


                     
  
    ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.
    “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
    “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.
    அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
    “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
   கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

பிடித்ததைப் பகிர்ந்தேன்.
அருணா செல்வம்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பேன்டா....!! (நிமிடக்கதை)




    இரண்டு கைகளிலும் மாவுகட்டுப் போட்டு மருத்துவமனையில் படுத்திருந்த நந்திதன் கண்களைத் திறந்து தன் நண்பர்களைப் பாவமாகப் பார்த்தான். எதுவும் பேசவில்லை. ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
    “டேய் நந்து... எதுக்காக இப்போ அழுவுற? அது தான் நாங்க வந்துட்டோம் இல்ல... கவலைப்படாதடா...“ ஒரு நண்பன் அவன் கண்களைத் துடைக்க இன்னொருத்தன் ஆறுதலாக சொன்னான்.
    அவன் எதுவும் சொல்லாமல் கண்களை மூடினான்.
    பக்கத்தில் கவலையுடன் நின்றிருந்த அவன் அம்மாவிடம் அவனின் நண்பர்கள் வந்தார்கள். “என்னம்மா ஆச்சி...? எங்களுக்கு உடனே தகவல் கொடுத்திருக்கலாம் இல்லையா...?“ ஒருவன் கேட்டான்.
    “நீங்கள் எல்லாம் கோகுலனோட கண்யாணத்திற்கு போயிட்டீங்க. இவனும் அன்னைக்கு நைட்டு தான் கிளம்பினான். போன பஸ் தான் ஆக்சிடன்ட் ஆயிடுச்சி. ரெண்டு கை எழும்பும் உடஞ்சிடுச்சாம். எனக்கு மறுநாள் காலையில தான் தகவல் வந்துச்சி. நான் ஓடியாந்து பார்த்தேன். நல்ல வேலை உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொன்னபிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சி. உங்களுக்குத் தகவல் சொல்ல போறேன்னு சொன்னேன். ஆனால் நந்து தான் ”வேணாம். கோகுலனக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். புது மாப்பிள்ளை. அதனால தெரிவிக்க வேணாம்ன்னு சொல்லிட்டான்.“ என்றாள் கவலையுடன்.
    “சரி எங்களுக்காவது சொல்லி இருக்கலாம் இல்லையா...?“ இன்னொருவன் கேட்டான்.
   “அதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டான். அவங்க கல்யாணத்தைச் சந்தோஷமா முடிச்சிட்டு வரட்டும். பிறகு சொல்லிக்கலாம். ஒன்றும் சீரியஸ் இல்லை தானேன்னு சொல்லிட்டான்.“ என்றாள்.
   “சரிம்மா... ஆனால் எதுக்காக அழுவனும்...?“
   “அது வந்தப்பா... வயசு பிள்ளையில்லையா...? ரெண்டு கையும் அசைக்க முடியாத அளவு கட்டு போட்டு இருக்கிறது. எல்லாத்துக்குமே அடுத்தவரோட உதவிய கேக்கனும். அவனுக்குப் பிடிக்கலை... அதுதான் ரொம்ப கவலைப்படுறான்...“ கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.
   சற்று நேரத்தில் அங்கு வந்த நர்ஸ், “நீங்கள் எல்லாம் கொஞ்சம் வெளியே போறீங்களா...? அவருக்குத் துணி மாத்தனும்“ என்றாள் தன் மெல்லிய குரலில்.
   “நன்றி சிஸ்டர். ஆனால் நீங்கள் செய்ய வேண்டாம். என்ன செய்யனுமோ எங்ககிட்ட சொல்லிடுங்கள். இனிமே எல்லாவற்றையும் நாங்க அவனுக்குச் செய்கிறோம்.“ என்றான் ஒரு நண்பன்.
   நிமிர்ந்து அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த நர்ஸ்,     “நல்லதுப்பா. இதுக்கெல்லாம் கொஞ்சம் சகிப்புத் தன்மை வேண்டும். எங்களுக்குப் பழகிடுச்சி. இங்கே நானே செய்கிறேன். இது என் கடமை. அவன் டிச்சார்ஜ் ஆனப்பிறகு நீங்கள் செய்யுங்கள்.“ என்றாள் புன்முறுவல் மாறாமல்.
   “வேண்டாம் சிஸ்டர். எங்களை நாங்களே சுத்தப்படுத்திகிற போது நாங்க சகிப்பாவோ, சலிப்பாவோ நினைக்கிறதில்லை இல்லையா... அதே மாதிரி எங்க நண்பனுக்குச் செய்யிறதை எங்களுக்கே செய்துக்கிறதா நினைச்சி செய்துவிடுகிறோம். இது எங்களோட கடமையாக நீங்க நெனச்சிக்கோங்க. ப்ளீஸ் சிஸ்டர்“ என்றான் ஒருவன்.
   சற்று நேரம் யோசித்தவள், “சரி. உங்க விருப்பம் போல செய்யுங்கள். நல்ல ஃபிரண்ஸ் கிடைத்தால் எந்த சோகத்தையும் தாங்கிடலாம். நந்து... உனக்கு நல்ல ஃபிரண்ஸ் கிடைத்திருக்கிறார்கள். கவலைப்படாதேப்பா....“ என்று சொல்லியபடி நகர்ந்தாள் நர்ஸ்.
   நந்திதன் தன் நண்பர்களை நன்றி கலந்த பார்வையால் பார்த்தான். அவன் முகத்தில் படிந்த புன்முறுவலைக் கண்டு நண்பர்கள் மகிழ்ந்தனர்.
   இக்கட்டான நேரத்தில் தான் நல்ல நண்பர்களை அறிய முடியும்.

அருணா செல்வம்
05.08.2013

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

அழகு !! (நிமிடக்கதை)




    தரகர் கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
   என்ன செய்யலாம் ... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான்.
   “அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? அந்தப் பெண்ணையும் பார்த்து விடலாம்“ என்றான் மாதவன்.
   அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித்துச், “சரிப்பா பாத்திடலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறாள். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த சோடியா தெரியுது. மற்றபடி மீதி எல்லாமே பொருந்தி வருது......“ அவள் பேச்சை இழுக்க, “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கனும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள்... எனக்கு அவளைக் காட்டுங்கள்“ என்றான் பிடிவாதமாக மாதவன்.

   வேறு வழியில்லை. அனைவரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மையில் மேனாகவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகு. மாதவனுக்குப் பார்த்ததும் இவளைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரும் நல்ல கலகலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசிவிட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்“ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.

    வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்“ என்றான் மாதவன்.
    “சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது...?“ யோசனையுடன் கேட்டார் அப்பா.
    “பிடிக்கலை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை... இல்லையென்றால் பொருத்தம் பத்தலைன்னு ஏதாவது சொல்லிடுங்கள். ஆனால் எனக்கு இந்தப் பெண்தான் வேணும்“ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

   உடனே தரகரை வரவழித்தார் அப்பா. தரகரிடம், “மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிடுங்கள்“ என்றார்.
    அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?“ என்று கேட்டார்.
    “அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண்டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க.“ என்றார் தரகர் தலையைச் சொறிந்தபடி.
    “இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்...“ என்றார் அப்பா.
    “அது முடியாதுங்க.“
    “ஏன்...?“
    “ஏதோ பொருத்தம் பத்தலைன்னு சொன்னாங்க“
    இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பா யோசித்தபடி.... “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு தானே சொல்லி பொண்ணோட படத்தைக் காட்டினீங்...? பிறகென்னவாம்...?“ சற்று காரமாக கேட்டார்.
    “அது வந்துங்க....“ திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு மெதுவாக அவர் காதருகில் வந்து “உங்க பிள்ளை... அந்த பொண்ணுக்கேத்த அழகு இல்லையாம். அதனால பொண்ணுக்குப் பிடிக்கலையாம்“ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் தரகர்.
    அப்பா பெருமூச்சுடன் அமர்ந்தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் நிலைகண்ணாடியைப் பார்த்தான்.
      அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!

அருணா செல்வம்.
02.08.2013