வியாழன், 11 ஜனவரி, 2018

திருமால் மார்கழிப் பாடல்கள்! (1 -15)
(அந்தாதி)
.
மார்கழி மாத மலர்களே வாருங்கள்!
கார்நிறக் கண்ணன் கதைகேட்க! – சீராய்
மணம்பரப்பி முத்தமிழில் மாலையிட்டுப் பாடி
வணங்குவோம் நெஞ்சினில் வைத்து!
.
வையத்தைக் காக்கின்ற வைகுந்தா! சீரேந்த
வையகத்துள் வந்துநீ மாண்பளிப்பாய் ! – ஐயனே !
வாழ்வுறும் துன்பினை மாய்த்துப் பிறப்பென்னும்
ஊழ்போக்கி என்னெஞ்சுள் ஓங்கு!
.
ஓங்கிடும் தீக்குணம் ஒய்யாரம் காட்டிவிடும்!
தூங்கிடும் எண்ணம் துணிவைவிடும்! – தாங்கியே
துன்பத்தைப் போக்கித் துணையிருக்கும் கேசவனை
அன்புடன் போற்றுவோம் ஆழ்ந்து!
.
ஆழ்கடல் கொண்ட அமைதி முகத்தானே!
சூழ்ந்திடும் துன்பம் சுகமழிக்கும்! – வாழ்உலகில்
ஏற்றமுடன் வாழ்வதற்கே ஏழு மலைவாசா
மாற்றமிகும் தீக்குணத்தை மாய்!
.
மாயனே! மாறிடும் மண்ணுலகைக் காத்திடும்
தூயனே என்றும் துணையாக, – நேயமுடன்
சாற்றிடும் பண்ணினும், சாந்தமுடன் உன்புகழைப்
போற்றியே பாடுதே புள்ளு!
.
புள்ளொலி கேட்டுப்பார்! பூவிழி மன்னனின்
உள்ளொலிர் நாமம் உணர்த்திடும்! – உள்ளம்
களித்திடும்! அவ்வொளியால் காது குளிரும்!
கிளிமொழியில் உன்பெயரோ கீசு!
.
கீசுகீ சென்னும் கிளியின் குரலினிமை
வாசுவின் சீரை வழங்கிடுமே! – மாசற்ற
வீழ்அருவி! வாமன விஞ்சையோ! நீரினிலே
கீழ்பார்க்க வானம்நம் கீழ்!
.
கீழிறங்கும் நீரே கிடைத்திட நல்வளம்!
ஆழிதரும் நன்மை அடங்காது! – தோழியே
ஓயாமல் சுற்றும் உலக உயர்வுக்குத்
தூயவனின் நல்லருளே தூண்!
.
தூரிகை கொண்டே தொழுகின்றேன் மாதவனை!
காரிகை கற்றிடும் காரிகைநான்! – பூரித்தேன்!
ஏக்கமுடன் எம்மானை ஏட்டில் எழுதிட
நோக்கமுடன் செய்கிறேன் நோம்பு!
.
நோற்றுத் தருகின்ற நோக்கமெல்லாம் உன்னுடமை!
காற்றுத் தருவதும் உன்கடமை! – ஏற்றமிகு
ஞாலம் நினைத்திருக்கும்! யாதவனே ஊழ்முடிவில்
காலம் உணர்த்திவிடும் கற்று!
.
கற்றே அறிவேனா கார்முகிலா உன்பெருமை?
உற்றே அறிவேனா உன்னருளை! – சிற்றறிவு
கொண்டேநான் தேடுகிறேன் கோபாலா! உன்னுருவோ
கண்ணுள் கமழும் கனை!
.
கனைசங்கு ஊதிக் கருத்துரைத்தாய்! மக்கள்
வினையென்ற வாழ்வை விரித்தாய்! – மனையறம்
இன்பத்தை உன்வாயால் நீகூற நான்படிக்க
பொன்நெஞ்சம் ஆகுதே புள்ளு!
.
புள்ளிவைத்த மார்கழிப் பூக்கோலம் சொல்லிடும்
உள்ளத்துள் நின்றுயர்ந்த உத்தமனை! – கள்ளழகா!
மாங்குயில் இல்லை! மனதாறப் பாடுமென்றன்
ஓங்கும் கருத்தும் உனது!
.
உங்கள் அழகினை ஊர்பேசும்! தோழியரே!
பொங்கும் விழியழகைப் போய்ப்பாரும்! – தங்கமென
அள்ளும் பெருமாள்! அறியாமல் பேசுவோரை
எள்ளி நகைத்திடுவோம் எல்!
.
எல்லையிலா எண்ணம் இறக்கை விரித்திடும்
சொல்லில்லா வார்த்தைகள் சுற்றிவரும்! – வில்லழகா!
உற்றவழி கண்டதனால் ஊர்புகழ உன்னருளை
நற்றமிழில் பாடுமென் நா!
.
(தொடரும்)
.
பாவலர் அருணா செல்வம்
02.01.2018

திருமால் மார்கழிப் பாடல்கள்! 
(அந்தாதி – 16 - 30)
.
நாயனம் ஊத நடனமிடும் நங்கையரின்
தூய மனத்தைத் துளைத்துநல் – நேயக்
குழலுாதும் கண்ணா! கொடிதெலாம் மாறி
அழகாகும் உன்னிசை அம்பு!
-
அம்பலம் கட்டி அமுது படைத்திவேன்!
செம்பொருளே! உன்றன் செயல்களைச் – செம்மொழியால்
தெள்ளத் தெளிவாய்த் தெரிவிக்க நீஎன்றன்
உள்ளத்துள் உன்குரலால் உந்து!
-
உந்திடும் ஆசைகள் ஓயாமல் வந்திடும்!
தந்திடு நன்றைத் தயாளனே ! – பந்தத்தில்
உற்றதெலாம் வேண்டிட ஊறு விளைத்திடும்
குற்றங்கள் போக்கவே குத்து!
-
குத்திடும் வார்த்தைகள் கோபத்தில்! கோபாலா
மெத்தெனப் பேசி மிளிரவை! – உத்தமனே
சொத்தாம் திருக்குறள் சொல்லை எனதாக்கு!
முத்தன்றோ நற்றமிழில் மூன்று!
-
முப்பாலை உண்ட முகுந்தா! வளராழி
உப்பாகி  என்னுள் உறைபவனே! – எப்பொழுதும்
ஊற்றுச் சுரக்கும் உயர்வான நன்னிலையாம்
ஏற்றத்தை என்னுள்ளே ஏற்று!
-
ஏற்றமிகு வாழ்வை எனக்களிப்பாய்! காகுந்தா
போற்றியுனைப் பாடிப் புகழ்வதற்கே – ஆற்றல்..தா!
இன்னுலகில் உன்றன் இருப்பிடத்தைத் தேடியே
அன்புடன் ஓடுவேன் அங்கு!
-
அங்குமிங்கும் எங்கும் அருளைத் தருபவனே!
திங்கள் முகத்துத் திருவரங்கா! – தங்கி
வணங்கும் அடியோர் வளநெஞ்சில் நீயே
மணக்கும்தேன் மாரி மலை!
-
மாரிமலை கொண்ட மலைவாழும் வேங்கடவா!
நேரிழையாள் நெஞ்சில் நிலைத்தவனே! – பேரிடர்
துன்பத்தில் ஆழ்ந்தவளைக் கண்துடைத்துக் காத்தஉன்
அன்புருவைக் கண்ணுற்றேன் அன்று!
-
அன்றுன்னைப் பாடினாள் ஆண்டாள்!  அடிதொழுது
இன்றுன்னைப் பாடுகிறேன்! என்றுதான் – உன்னருளை
மங்களமாய்ப் பாடி மகிழ்வேனோ ! என்றும்…நீ
மங்கை யொருத்தி மகன்!
-
ஒருத்திமகன் என்றே உலகில் பிறந்தும்
கருத்திலே ஈரன்னைக் கண்டாய்! – திருமாலே
பெற்றவள்போல் மாற்றாள் பெருமை உரைத்தநீ
மற்றெல்லா நல்லுயர்வில் மா!
-
மாலே மதுசூதா! மங்கள வெண்ணிறப்
பாலே!  நயமாய்ப் பழகுவதைப் – போலே
துணையாக முன்நின்று பின்தூற்றிப் பேசி
வினைசெய்யும் கூடாரை வெல்லு!
-
கூடாரை வெல்லும் குலவிளக்கே! கோபாலா
நாடா திருந்தமனம் நாடியதே! – வாடாப்பூக்
கொய்துனக்குப் பண்மாலைக் கோர்த்த எனக்குதவி
செய்வாய்க் கறவைகள்பின் சென்று!
-
கறவைகள்பின் சென்றும் கடமையினைக் காத்தாய்!
உறவுகள்முன் என்னை உயர்த்திச் – சிறக்கவைத்தாய்!
தேரோட்டும் கண்ணா! தெளிதமிழில் நானெழுதும்
சீராட்டும் பாட்டுனக்குச் சிற்று!
-
சிற்றின்ப வாழ்வின் சுகமறிந்தோம்! பேரின்பம்
உற்றறிந்தே உன்னடி பற்றுகின்றோம்! – பெற்ற
உலகத்தில் உன்சங்கின் ஓசையினைக் கேட்டால்
கலங்கிடுமே வங்கக் கடல்!
-
வங்கியம் வாசித்து வன்மை வினைமுடிப்பாய்!
பொங்கும் நலத்தைப் புகுத்திடுவாய்! – தங்கமெனச்
சங்கத் தமிழளிப்பாய்! சாந்த மருளிடும்
மங்கலமே உன்திரு மார்பு!
-
பாவலர் அருணா செல்வம்
12.01.2018

நட்புறவுகளுக்கு வணக்கம்

    திருமால் மார்கழி பாடல்களான இந்த அந்தாதியை, ஆண்டாளின் முப்பது திருப்பாவையில், பாடல்கள் தொடங்கும் முதற்சொற்களைக் கொண்டு அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடினேன்.


அன்புடன் அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக