வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஊனமில்லா மனம் !! (2 நிமிடக் கதை)





   “ஆங்.... அப்படித்தான். பயப்படாத.... இன்னுங்கொஞ்சம் ஸ்பீடா போ. நான் தான் உன் கூட இருக்கிறேனுல்ல. மெயின் ரோடு தானே... அப்புறம் என்ன பயம் உனக்கு.... ம்... அப்படித்தான்...“
   பைக்கின் பின்னால் உட்கார்ந்து கொண்டு வண்டியை ஓட்டும் மாலினிக்கு உற்சாகம் கொடுத்துக்கொண்டு வந்த மகேசனின் கை சும்மா இல்லை.
   “நீங்க கையை வச்சிக்கினு சும்மா இருந்தாலே நான் நல்லா ஓட்டுவேன்.... நடு ரோடு.. கொஞ்சம் சும்மா இருங்க....“ அவள் சிணுங்களுடன் சொல்லிக்கொண்டு மரங்கள் அடர்ந்த அந்த வளைவுப் பாதையில் திரும்பும் பொழுது தான் அந்த விபரீதம் நடந்தது.
    எதிரே வந்த காரின் மீது மோதாமலிருக்கத் திரும்ப... அருகில் இருந்த மரத்தில் மோதி தூக்கி எறியப்பட எங்கே விழுந்தோம்... என்ன ஆனது என்று தெரியாமல்.... சட்டென்று முழிப்பு வந்தது மகேசனுக்கு.
    தலையில் வலியுடன் சேர்ந்த பாரம் அழுத்தக் கண்களைத் திறந்து பார்த்தான். அருகில் அவன் தாய் அமுதா எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் கழுவி விட்டது போல் காய்ந்து இருந்தது.
    வலக்கையில் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. இடக்கையில்
சுரனை இல்லாதது போலவும் இனம் புரியாதது போன்ற பயங்கர வலி.  கையை மெதுவாக அசைத்துப் பார்த்து அசைக்க முடியாமல் கடினப்பட்டு மறுகையால் தூக்கினான். அவன் கை முட்டிக்கு மேலேயே மொட்டையாகக் கட்டுப் போடப்பட்டு இருந்தது. பாதிக்கு மேல் கையைக் காணவில்லை. அந்தக் கவலையைத் தாங்கும் சக்தி கூட இல்லாமல் மௌனமாக அழுதான்.
   சட்டென்று மாலினியின் ஞாபகம் வந்தது. பின்னால் உட்கார்ந்திருந்த நமக்கே இப்படியென்றால்... வண்டியை ஓட்டிவந்த மாலினி.... கவலையில் “மாலினி...என்று கத்தி விட்டான்.
    அவனின் குரலைக் கேட்டதும் அருகில் இருந்த அமுதா உடனே எழுந்து தன் மகனைப் பார்த்து மெதுவாக என்னப்பா“ என்றாள் வாஞ்சையுடன்.
    “அம்மா... மாலினி...அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. அவன் மனத்தைப் புரிந்து கொண்டவளாக “கவலைப்படாத மகேசா... அவளுக்கு ஆண்டன் புண்ணியத்துல ஒரு சின்ன காயம் கூட படலை. அவள் தான் இந்த மூனு நாளா ஆஸ்பத்திரியிலேயே இருந்து உன்னைக் கவனிச்சிக்கினா... இன்னைக்கு ஒனக்குக் கொஞ்சம் பரவாயில்லைன்னு டாக்டர் சொன்ன பிறகு தான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வர்றேன்னு போனாப்பா... கவலை படாதப்பா. அவ நல்லா இருக்கிறா.“
   அம்மா தைரியம் ஊட்டினாலும் இவனால் நம்ப முடியவில்லை. அம்மா பொய் சொல்கிறார்களோ என்ற கவலையுடன் கண்களை மூடினான்.

   அவன் திரும்பவும் கண்ணைத் திறந்த போது மாலினி அருகில் இருந்தாள். இவனை அன்புடன் பார்த்தாள். மகேசன் அவளை உற்று பார்த்தான். அவள் எப்பொழுதும் போலவே ஆரோக்கியமாக இருந்தாள். கோபத்துடன் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
   அவள் அவன் தலையை ஆதரவாக வருடி என்ன மகேஷ்.. வலிக்கிறதா..?என்றாள்.
   “ஆமாம் வலிக்கிறது தான்... எல்லாம் உன்னால வந்தது. பைக் ஓட்ட கத்துத்தர சொல்லி கேட்டு என் ஹெல்மெட்டையும் வாங்கி போட்டுக்கினே... இப்போ யாரு கஷ்ட படுறாங்க பார்த்தியா...? எங்க அம்மா அப்பவே சொன்னா... இந்தப் பொண்ணு வேணாடான்னு... நெறைய படிச்சி வேலைக்கு போறா... திமிர் புடிச்சவளா இருப்பா போல தெரியுதுடா....ன்னு சொன்னாங்க. நான் தான் கேக்காம ஒங்கூட சுத்தினேன். இப்போத்தான் புரியுது. சனியனைப் பாக்கெட்டுலேயே வச்சிக்கினு சுத்தினேன்னு... இப்போ அவஸ்தை படுறேன். நீமட்டும் ஜம்முனு இருக்கே... சே நீயெல்லாம் ஒரு பொண்ணா... இனிமேல என் மூஞ்சியில முழிக்காத போ....கத்தினான்.
    அருகிலிருந்தவர்கள் அனைவரும் அவர்களையேப் பார்த்தார்கள். மாலினி பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டு வெளியே ஓடினாள்.
   அதைக் கண்ட அமுதா... “என்ன மகேசா... இந்த மாதிரி பேசிட்ட... அந்தப் பொண்ணு மட்டும் இல்லைன்னா நீ உயிர் பொழச்சியே இருக்க மாட்டே... மூனு நாளா அவ பட்ட பாடு கூட இருந்த எனக்குத் தான் தெரியும்... என்னப்பா நீ...
   மகனை இந்த நேரத்தில் திட்ட கூட முடியாமல் மனம் வருந்தும் தாயைப் பார்த்தான் மகேசன்.
   “அம்மா... நான் அவளை வேணுமின்னு தான் திட்டுறது போல நடிச்சேன்ம்மா... பாவம் அவள். நல்ல பெண். என் மேல உயிரையே வச்சிருக்கிறா. அவ நல்லா இருக்கனும். என்னை மாதிரி ஒரு கையில்லாதன் அவளுக்குத் தகுதியாகனவனாக இருக்க முடியாதும்மா. அவள் என்னை மறக்கனும்... வெறுக்கனும்... அதற்காகத் தான் அப்படி பேசினேன்ம்மா... நான் செஞ்சது தப்பா...தாயின் கையைப் பிடித்து அழுதவனைக் கண்டு தானும் அழுதாள் தாய்.

   மறுநாள் எதுவும் நடக்காதது போல் வந்த மாலினி மகேசனைப் பார்த்தாள். அவன் கண்மூடி உறக்கத்தில் இருந்தான். தட்டில் சாப்பாடு போட்டு “இந்தாங்க.. சாப்பிடுங்க...என்று அமுதாவிடம் தட்டை நீட்டிய மாலினியை நிமிர்ந்து பார்த்தாள் அமுதா.
   மாலினி லேசாக சிரித்துவிட்டு.. “என்ன அத்தை அப்படி பாக்குறீங்க... உங்க மகன் என்னைப் போன்னு சொன்னதும் போயிடுவேன்னு நினைச்சீங்களா...? போக மாட்டேன் அத்தை. அவருக்கு இந்த நிலைமை வர காரணம் நானில்லைன்னு அவருக்கு நல்லா தெரியும். இருந்தாலும் அதை அவர் மறைச்சிப் பேசும் பொழுதே புரிந்து கொண்டேன் அவரோட நல்ல மனசை. இதே நிலைமை எனக்கு ஆகியிருந்தால் நானும் அப்படித்தான் பேசி இருப்பேன். ஆனால் அதுல உண்மை இருக்காது. ஏன்னா... நாங்கள் ரெண்டு பேருமே உடலைப் பார்த்து காதலிக்கவில்லை அத்தை....“ 
    என்று சொல்லிக்கொண்டு கண்களில் நீர் வழிந்தோட நின்றிருந்தவளைக் கண்திறந்து காதலோடு பார்த்தான் மகேசன்.

அருணா செல்வம்.

13 கருத்துகள்:

  1. அற்புதமான கதை.!

    பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. ரெண்டரை நிமிட கதை.. அடடா உருக்கமான மனதை தொட்டது.. உண்மையிலே பாராட்டுகிறேன்.. (இல்லாட்டி மொக்கையா கமென்ட் பண்ணுவது உங்களுக்கே தெரியுமே) அருமைங்க.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உண்மையான பாராட்டிற்கு (நம்புகிறேன்)
      மிக்க நன்றி ஹாரி.

      நீக்கு
  4. சுருக்கமாய் நறுக்கென்று இருக்கிறது. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  5. சுருக்கமாக நெஞ்சில் உறைக்கவைக்க இனி நானும் அருணா உங்களிடம் தொடரைவிட்டு பாடம் படிக்க வரணும்!ம்ம் நேரம் தான் பிரச்சனை ஐபோனில் பின்னூட்டம் போடும் வசதி செய்தால் நானும் வருவேன்! அருமைக்கதை வித்தியாசமான் நடை மனமார்ந்த பாராட்டு இது மொய்க்கு மொய் என்று நினைக்க வேண்டாம் !நம் நேரச்சிக்கல் அறீவீர்கள்தானே!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம்....

      தங்களின் வருகைக்கும் மொய் இல்லாத மெய்யான பாராட்டிற்கும் மிக்க நன்றி.
      (நீங்கள் ஐபோனில் பின்னோட்டமிட நான் என்ன எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் விளக்கினால் முயற்சிக்கிறேன்.)
      நன்றி.

      நீக்கு
  6. நல்லதொரு செய்தி சொல்லும் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு