மரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 நவம்பர், 2021

கோபுரச் சித்திர கவி!

 



.
சித்தமே! நல்ல சித்தி மாயே!
நித்தம் புதுநிறை நிதியே! கோவே!
பூவே! பொன்னே! தேனே! ஒளியே 
மேவுறு மிமே! மேமே இங்குகி
மதிவிதி மறைத்திடு முன்னை நினைத்தே
எதிரில் நின்றென் நிவாணமே! நிதிநிலை
கலைநிரல் நிறைகிற கடவுளின் கோபுரமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2021

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கும்பச் சித்திரகவி!

 



பதியாகக் காக்கும் கணபதியே!
.
தாயே உன்துதிக்கை தருமே லமே!
மாயே உனைவங்க மாறிடும் வினைளே!
பூவே கொடுக்கும் போதை எமக்கு!
நாவே காக்கும் காக் வியே! நீயே
விதிமணி மதிவான்தேன்! வா!நின்மேன் நியாதி
பதியாகக் காக்கும் கணபதியே!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2021

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

மீன் சித்திர கவிதை!



பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
டே இன்வாயோ ! எழுத்தே இசையமுதோ!
பீடே பின்னிய பெருமொழியோ நற்றேன்!
இன்பம் பெருகிடு மின்ண் தமிழால்
துன்பம் துள்ளியே தோய்ந்துட னோடும்!
வான்தரும் வளம்போல் கூடும் நலமெலாம்!
தேன்போல் பாமகள் தின்றிடு மினிப்பை
ஓடியோடித் தே,வுயிர்த் துடிக்கும் பாவைநீ
பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
பாவலர் அருணா செல்வம்
10.04.2021

திங்கள், 12 அக்டோபர், 2020

காதல் வந்தது பொய்மையோ!

 


கண்கள் மின்னிடும் கன்னிப் பார்வையில்
    காந்த சக்திதான் உள்ளதோ!
எண்ணம் துள்ளிட ஏக்கம் சேர்ந்திட
    இன்னல் பூத்துடன் ஈர்க்குதே!
விண்ணில் சுற்றிடும் வெப்பச் சூரியன்
    விஞ்சிப் பார்வையில் வந்ததோ!
மண்ணில் என்னுடல் மங்கித் தொங்கிட
    வண்ணம் பெற்றுடன் வேர்க்குதே!
 
கன்னம் என்பது கன்னல் சாற்றினில்
    கட்டிப் போட்டஓர் அங்கமோ!
மின்னும் பற்களில் மேன்மை வெண்ணிலா
    மெச்சி அவ்விடம் நின்றதோ!
தென்னங் கீற்றெனத் தீண்டுங் கூந்தலில்
    திங்கள் பூவெனப் பூத்ததோ!
பொன்னில் தட்டிய பொத்தல் பொற்சிலை
    பொங்கிப் பொன்னுடல் பெற்றதோ!
 
சுற்றி வந்தவள் சுற்ற வைத்தது
    சொக்கும் கட்டுடல் பெற்றதோ!
உற்று நோக்கிய ஊழ்மை என்னிலை
    உந்தித் தள்ளிய உச்சமோ!
முற்றும் போக்கிய முத்தி யற்றதால்
   முந்தி நின்றதே உண்மையோ!
கற்றுப் பெற்றதைக் காற்றில் விட்டிடக்
   காதல் வந்தது பொய்மையோ!
.
பாவலர் அருணா செல்வம்
12.10.2020

வெள்ளி, 2 அக்டோபர், 2020

கண்ணே கண்ணுறங்கு!! (தாலாட்டு)

 

 

கண்ணே! மணியே! கற்கண்டே!
     கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
      பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
      முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
      பேசும் கிளியே கண்ணுறங்கு!
 
இன்றோ உனக்கு வேலையில்லை!
      இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
      திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
      அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
      இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!
 
காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
      காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
      விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
      மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
      நலமாய் இன்றே கண்ணுறங்கு!

.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 2 ஜூன், 2020

சித்திரச் சிரிப்பு! (காவடிச் சிந்து)




சித்திரம் போலவள் சிரிக்க – கண்
                   பரிக்க – மனம்
                    அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும் செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத் துப்பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்து ஆடி நெகிழ்வேன் !
.
நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்கக – மனம்
நிம்மதி யாய்அதை ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும் கடல்லையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் – அந்த
வஞ்சியாலே கவி வழியும்!
.
எண்ணத்தில்  வந்த    பெண்ணேஎன்
                       கண்ணேமுகில்
                       விண்ணேவளர்
இன்பத்தைக் கொடுக்கும் மண்ணே! – உன்னை
இலையாகவும் கொடியாகவும் மலராகவும் கனியாகவும்
இறைவன் படைத்த எழிலே! – என்றும்
குறைவில்லாப் இன்பப் பொழிலே!

பண்ணுக்குள் உன்னைநான் தீட்டஇசை
                          மீட்ட - கவி
                          கூட்டநம்
பைந்தமிழ்    அமுதை   ஊட்டகரு
பறந்தேவர அருகேயுற உறவேபெற உயிரேயெனப்
பண்புடன் எழுத்தில் கொஞ்சும்! – அதைக்
கண்டிட ஆடுமென் நெஞ்சம்!
.
பாவலர் அருணா செல்வம்
(என்கம்பனுக்குக் ணினி விடு தூது“ என்ற நூலிலிருந்து…..)

ஞாயிறு, 24 மே, 2020

அத்தைமக இரத்தினமே! - இலாவணி.





.
அத்தைமக இரத்தினமே சித்தமதில் அமர்ந்துகொண்டே
ஆசையினைக் கூட்டுவதும் ஏனோ ஏனோ?
அத்தனையும் உன்செயலால் பித்தனென ஆக்கிவிட்டே
அந்நியமாய் பார்க்கிறது மீனோ மீனோ!
.
அன்புமொழி பேசிடவும் இன்பமுடன் பாடிடவும்
என்னவளே உனைநாடி வந்தேன் வந்தேன்!
பொன்மொழிகள் ஏதுமின்றிப் புன்சிரிப்பும் ஏந்தலின்றிப்
பொய்முகத்தால் ஊடியதால் நின்றேன்  நின்றேன்!
.
ஏட்டினிலே பாட்டெழுதி தீட்டுகிற உணர்வுடனே
ஊட்டிவிட இங்குவந்தேன் தேடித் தேடி!
பாட்டுலகம் எமதென்றே பாட்டெதற்கு உனக்கென்றே
பண்ணரங்கைக் கண்மறைத்தாய் மூடி மூடி!
.
ஆற்றலினைக் கண்டுகொண்டே ஏற்றமிட்ட இவ்வுலகம்
ஆதரவாய்த் தந்ததொரு விருது விருது!
ஏற்றிடவே சென்றுவந்தேன்! ஏதுமொரு தவறுமின்றி
ஏகலைவி யாகிவிட்டேன் கருது கருது!
.
அமிழ்தென்ற பண்ணிருக்கும் தமிழ்கொண்டு கவிபடைக்கும்
அன்னவளை மனம்வைத்தேன் அன்றே அன்றே!
உமிழ்கின்ற எச்சிலென இமிகூட நினைவின்றி
ஒதுக்கிடவே முன்வந்தாய் இன்றே இன்றே!
.
சொட்டுகிற மொழியினிலே சுட்டுவிடும் ஓர்வார்த்தை
சொந்தமதை அழித்திடுமா சொல்லு சொல்லு!
கொட்டகிற கவியினியே சட்டமுடன் எழுதியதைக்
காட்டிவிட்டுத் தள்ளிநின்று கொல்லு கொல்லு!
.
தவறற்ற நினைவலைகள் சுவரிருக்கும் ஓவியமாய்
தவறின்றி நெஞ்சிருக்கு மின்னி மின்னி!
எவரிடத்தில் சொல்வதிதைக் கவரிமுடிப் போல்காத்தே
எனக்குள்ளே மகிழ்கின்றேன் எண்ணி எண்ணி!
.
பொன்னிருக்கும் பொருளிருக்கும் முன்னவரின் தமிழெடுத்துப்
புண்பட்ட நெஞ்சமதை ஆற்று ஆற்று!
புன்னகையும் பொலிந்துவரும் துன்பமெதும் ஓடிவிடும்
பொய்யற்ற தேனையதில் ஊற்று ஊற்று!
.
முத்துக்கள் ஆயிரமும் மொத்தமதைக் கோர்த்தெடுத்து
முத்தழிழால் கொடுத்திடுவாய் பெண்ணே! பெண்ணே!
சொத்தெல்லாம் நீயென்றே பித்தமுடன் வாழ்கின்றேன்
சொல்லியதை வரைந்திடுவாய் கண்ணே! கண்ணே!
.
தீயென்றால் வடுவிருக்கும் நோயென்றால் உடலிளைக்கும்
சீயென்றால் என்செய்வேன் உன்னை உன்னை!
சேயென்றே அழுகின்றேன்! பேயென்று விலக்காமல்
தாயென்றே அணைத்திடுவாய் என்னை என்னை!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2020

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாரதியைப் போற்றுவோம்!





பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல்வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்துவேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?

காட்டுக்கே அரசன் சிங்கமன்றோஅதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும்தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!

வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள்கண்டு
வாடி வதங்கிய பாரதியேதீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியேநாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!

நாட்டுக்கு நன்மையைச் செய்திடவேநல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும்வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!

மூட்டிய வீரச் சொற்களாலேநெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம்தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவேஉடன்
கடமை சூட்டை ஏற்றியதே!

ஏட்டினில் உள்ள இலக்கணத்தையாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப்புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்தஉயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019

திங்கள், 27 மே, 2019

நிகழ்வினை விலக்கு!



முன்ன விலக்கணி!

பாடலில் நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வினை விலக்கிப் பாடுவது நிகழ்வினை விலக்குஎனப்படும். (இது இருக்க அது ஏன்)

. ம்
திருமுகத்தில் தொங்கி தெளிவின்றி ஆடும்
சுருள்கொண்ட கார்குழலும் சொல்லும் அரும்பே
அழகென்று சூட்டினாய்! அஃதிலும் மேலாம்
விழல்போன்ற கூந்தலன்றோ! வீண்!

பொருள் அழகு பொருந்திய முகத்தில் தொங்கி அங்கும் இங்கும் காற்றில் அசைந்து ஆடும் சுருண்ட கூந்தலும் சொல்லும். மலராத அரும்பை அழகென்று சூட்டினாய். ஆனால் அதைவிட அழகானது விழல் போன்ற கூந்தல் தான். அதனால் அந்த அரும்பு வீண்.

பாடலில் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் மலரைவிட அந்தக் கூந்தல் மிக அழகாக இருக்கிறது. அதனால் மலர் வேண்டாம் என்று நிகழ்காலத்தில் நடப்பதை விலக்குவதால் இது நிகழ்வினை விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.05.2019