கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2014

காசா? கல்யாணமா? (முடிவு)



    “கௌரி மேடம் மீட்டிங்குல இருக்கிறாங்க. முடியிற நேரம் தான். நீங்கள் காத்திருப்பதென்றால் அந்த ஹாலில் காத்திருங்கள்“ என்று அந்த அலுவக ஊழியர் சொல்லிவிட்டுச் சென்று அரை மணிநேரம் கடந்த பிறகு தான் கௌரி ஒரு கும்பல் புடைசூழ ஓர் அறையைவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இவளைக் கடந்து சென்றாள்.
    மலர் அவளை வியப்புடன் பார்த்தாள். கௌரிக்குப் படிப்பு முடிச்சதும் அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது என்றும் அதே அலுவலகத்தில் மேலும் மேலும் பதவி உயர்வுகள் கிடைத்திருக்கிறது என்றும் விக்ரம் சொல்லி கேட்டிருக்கிறாள். அப்பொழுது அதையெல்லாம் மலர் பெரியதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் இங்கே பார்க்கும் பொழுது மலருக்குப் பிரமாண்டமாகத் தெரிந்தது.
   அவள் பலபேருக்கு உத்தரவு இடுபவள் போல் தெரிகிறாள். இவள் சொல்வதைத் தலையாட்டிக்கொண்டே குறிப்பு (நோட்ஸ்) எடுத்தபடி மற்றவர்கள் அவள் பின் செல்கிறார்கள்.
   இதையெல்லாம் பார்த்த போது மலர், இவளே பலபேருக்குப் புத்தி சொல்கிற அளவிற்கு இருக்கிறாள். இவகிட்ட நாம என்னவென்று பேசுவது.... பேசாமல் போய்விடலாமா.... என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.... “ஐ... மலரக்கா. ஐய்யோ. உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக்கிறீங்க....?“ என்று குழந்தைத் தனமாக கேட்டபடி அவள் எதிரில்வந்து அவளைக் கட்டி முத்தமிட்டாள் கௌரி. 
    மலர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள்.
   “நல்லா இருக்கேன் கௌரி. ஒரு வேலையா இங்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சி. நீ இங்க தானே வேலை செய்யிற? அப்படியே உன்கூடவே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு தான் உன் ஆபிசுக்கு வந்தேன்“ என்றாள் மலர்.
   கௌரி இதை நம்பாதது அவளின் முகத்தில் தெரிந்தாலும் அதை மறைத்து “அப்படியா? சரி வாங்க போகலாம்“ என்று சொல்லியபடி இறங்கி நடந்தாள். மலரும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

   காரை ஒரு திறந்தவெளி ரெஸ்டெராண்டில் நிறுத்திவிட்டு ஓர் அமைதியான சூழல் உள்ள இடத்தில் மலரை அமர வைத்துவிட்டு எதிரில் அமர்ந்ததும், “இப்போ சொல்லுங்க அக்கா. என்ன விசயமா என்னைப் பார்க்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறீங்க?“ மெல்லிய புன்முறுவலுடன் கௌரி கேட்டாள்.
   மலர் அவளின் புத்திசாலி தனத்தை உணர்ந்து அதற்கு மேல் இவளிடம் பொய் சொல்வது தவறு என்ற எண்ணத்துடன் நேரிடையாக விசயத்திற்கு வந்தாள்.
   “நான் உண்மையைச் சொல்லிடறேன். உன்னோட கல்யாணத்தைப் பற்றி பேச தான் வந்தேன்.“ என்றாள்.
   “விகரம் அண்ணா எங்கிட்ட பேச சொல்லி உங்கள அனுப்பினாரா....?“ கௌரி கேட்டாள்.
   “விக்ரம் அண்ணா இருக்கட்டும். நானே ரொம்ப நாளா கேட்கனும்ன்னு இருந்தேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?“
   இவளின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமலிக்க... “உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா? இருந்தா சொல்லு. நானே பக்கவமா விக்ரம் கிட்ட சொல்லுறேன்“ என்றாள் மெதுவாக.
   “அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா.“
   “நெஜமா சொல்லு. நீ யாரையும் காதலிக்கல.....?“
   கௌரி வெறுப்பாய் ஒரு புன்னகையை வெளியிட்டாள். “காதலிக்கிற வயசு வந்த போது, மனசைப் படிக்கனும் என்ற லட்சிய சங்கிலியால கட்டி போட்டிக்கினு இருந்தேன். அது ரொம்ப இறுக்கிடுச்சின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மனசு மறுத்துப் பேச்சின்னு நினைக்கிறேனுக்கா.“ என்றாள் கௌரி.
   சற்று யோசித்த மலர், “வாழ்க்கையில லட்சியம் எல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக மனசை கட்டுப்படுத்தி வாழுறதும் நல்லது தான். ஆனால் இப்போ உன் லட்சியம் எல்லாம் நிறைவேறிடுச்சே. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே....“ கேட்டாள்.
   “இல்லக்கா. எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் வரலை.“
   “அப்போ இப்படியே இருந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா...?“
   “இன்னும் அந்த முடிவுக்கெல்லாம் வரலை. பார்ப்போம்“ பொதுப்படையாகச் சொன்னாள் கௌரி.
   “இனிமேல என்ன பாக்குறது? எனக்கெல்லாம் வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற வயசு வர்றதுக்கு முன்னாடியே பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணிட்டாங்க. உன் வயசுல என்னோட குழந்தைங்க ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிட்டது தெரியுமா?“
   “தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.
   “என்ன சொல்ல வர்ற நீ? புரியலை. எங்களை மாதிரி நீங்களும் எதுவும் தெரியாமல் வாழ்க்கையைத் தொடங்கிடக் கூடாதுன்னு தான் பெண்களைப் படிக்க வைக்கறாங்க. அவ காலுல அவ நிக்கனும்ன்னு நெனச்சி தான் வேலைக்கி அனுப்புறாங்க. இப்போ படிச்சதால உனக்கு நல்ல தெளிவு வந்திருக்கும். வாழ்க்கை என்றால் என்னன்னு புரிஞ்சிருக்கும். இவனைத்தான் நீ கட்டிக்கனும்ன்னு யாரும் உன்னை கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு பிடிச்சி நீயே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிற பக்கவம் வந்திருக்கு இல்லையா?“ சற்று கோபமாகவே கேட்டாள் மலர்.
    கௌரி ஒரு பெருமூச்சு விட்டாள். “பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ என்றாள் வெறுப்பாய்.
   மலர் யோசித்தாள். கௌரி சர்வர் கொண்டு வந்து வைத்தக் காபியைக் குடித்து முடித்தாள். மலர் காபியைக் கலக்கிக் கொண்டே பேசாமல் இருந்தாள்.
   “அக்கா.... உண்மையான காதல் என்று வர்ற வயசுல என்னையும் சிலபேர் காதலிப்பதாக சொன்னார்கள். காதலில் விழுந்தால் நாம் படிக்கனும், சம்பாதிக்கனும் என்ற லட்சியம் எல்லாம் போயிடும் என்ற பயத்தாலே அதெல்லாம் கூடாது என்ற மனக்கட்டுபாடோட இருந்தேன். இப்போ அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளைகளோட இருக்கிறார்கள். என்னை உயிரக்குயிராய் காதலிப்பதாக சொன்னவன் கூட இன்னைக்கு தன் குழந்தையை ஸ்கூலுல சேர்க்க லைனுல நிக்கிறான். என்னைவிட நன்றாக படித்தவர்கள் கூட காதல், கல்யாணம் என்ற ஒரு வட்டத்துக்குள் விழுந்து அதில் கஷ்டப்படுவதையும் சுகமாகத் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது வேறு விசயம். ஆனால் எனக்கு அந்த வட்டத்துக்குள் விழ ஆசை இல்லை மலரக்கா“ என்றாள் கௌரி.
   மலர், இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
    கௌரியே தொடர்ந்தாள். “இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“ என்றாள் கௌரி.
   நல்ல பாயிண்ட் கிடைத்தது என்ற நினைப்பில் மலர் நிமிர்ந்து உட்கார்ந்து “அதுக்காக காசையே கட்டிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா? உடம்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் உணர்வு என்ற ஒன்று இருக்கிறதே.... அதை நீ யோசிக்கிறதில்லையா...?“ கேட்டாள்.
   “வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ என்றாள் சட்டென்று கௌரி.
   “சரி கௌரி. இந்த வயதைவிடு. பிற்காலத்தில் உனக்கு என்று ஒருவர் வேண்டாமா....? இப்படியே வாழ்ந்தால் கடைசியில் தனிமரமாகத்தான் இருக்கனும்“ கொஞ்சம் கோபமாகச் சொன்னாள் மலர்.
   கௌரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சொன்னாள். “கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.

------------------------------------------------------
    மலர் யோசித்தாள். இவள் சொல்வதும் உண்மை தான். அதற்காக இவளை இப்படியே விட்டுவிடவும் கூடாதே.
   என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்.....?

நட்புறவுகளே.... உங்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.

“என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்....?“

   இந்தக் கதையைச் சிறுகதையாக எடுத்துக்கொள்ளாமல் உண்மைக் கதையாக எடுத்துக் கொண்டு பதில் கூறுங்கள்.
      
நட்புடன்
அருணா செல்வம்.

22.07.2014

புதன், 25 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால்.....




நட்புறவுகளுக்கு வணக்கம்.

   நம் மதுரைத் தமிழன் இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? என்ற தலைப்பில் தொடர் பதிவிட என்னையும் அழைத்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தொடர்ந்து சாமானியன் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    நம்மின் சுயத்தை நாமே மறந்துவிட்ட நிலையில் நம்மைப் பற்றி நாமே அறிந்துக்கொள்ள இந்தத் தொடர் பதிவின் கேள்விகள் உதவியாக இருக்கிறது என்பது உண்மை. நன்றி மதுரைத் தமிழன்.
   சீரியசாக எழுத வேண்டுமாம்.
   அதற்காக நான் பதில் எழுதும் முன் என் கணவரின் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி வைத்தால் பதில் சீரியசாக வரும் என்று மதுரைத் தமிழன் சொன்னதால் உண்மையில் அதன் படியே எழுதியுள்ளேன்.

1.உங்களுடைய 100வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

    என்னை மறக்காமல், என்னை நினைத்துப் பார்த்து, என் 100வது பிறந்த நாளில் என் பெயரைச் சொல்லி மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளை அறியும் ஆற்றலைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது? எதற்காக?

    இப்பொழுது தான்.
    காரணம்.... நமது மதுரைத் தமிழன் அடிவாங்கி அடிவாங்கியே சிரிப்பைத் தொலைத்து விட்டார் போலும். அதனால் தான் “கடைசியாக“ என்று எழுதியிருக்கிரார். பாவம் தான் அவர்“ என்று அவரை நினைத்துச் சிரித்தேன்.

4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

    “பவர் கட்“ என்றால் கரெண்ட் கட்டாவதைத் தானே சொல்கிறீர்கள்....?))
    இங்கே குளிர்காலமாக இருந்தால் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு எடிசனைத் திட்டிக்கொண்டே சோபாவில் சுருண்டு விடுவேன்.
    கோடைகாலமாக இருந்தால் என் கணவருடன் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சேன் நதியோரத்திற்கச் சென்று விடுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    ஆண் பிள்ளையிடம் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழவேண்டும் என்றும்,
    பெண்பிள்ளையிடம் விட்டுக் கொடுக்கிறேன் என்று அடிமையாகி விடாதீர்கள் என்றும் சொல்வேன்.

6. உலகில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புகிறீர்கள்?

    உலகில் என்றால் எவ்வளவோ பிரட்சனைகள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் உடனடியாக தீர்க்க முடியும் என்றால் இலங்கை பிரட்சனையை உடனடியாகத் தீர்ப்பேன்.

7. உங்களுக்கு ஒரு பிரட்சனை. அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

    யாரிடம் கேட்டாலும் பிரட்சனை பெரியதாகுமே தவிர குறையாது. அதனால் எனக்கு நானே சுயஆய்வு செய்து பார்ப்பேன். இருப்பினும் முடிவு தெரியவில்லை என்றால் காலத்தின் கையில் விட்டுவிடுவேன்.

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

    அவர் என்னைப் பற்றி ஏதும் “அறியாதவர்“ என்று மன்னித்து சும்மா விட்டுவிடுவேன்.

9. உங்களின் நண்பரின் மனைவி இறந்து விட்டால் என்ன சொல்வீர்கள்?

    ஆறுதல் சொல்ல வார்த்தை தெரியாததால் (இல்லாததால்) நானும் அவருடன் சேர்ந்து அழுதுவிட்டு வருவேன்.

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

    தோழிகளுக்குப் போன் செய்து அரட்டை அடித்து (வெட்டியாக) பொழுதைப் போக்குவேன்.

    அனேகமாக நீங்கள் அனைவரும் எழுதிவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் தொடர் பதிவிட யாரையும் அழைக்க முடியவில்லை. இருப்பினும் இன்னும் யார் யாரெல்லாம் எழுதவில்லையோ அவர்கள் அனைவரையும் என் சார்பாகத் தொடர் பதிவிட அழைக்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

25.06.2014

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது யாருடைய தவறு? (அனுபவம்)






 இரண்டு மாதங்களுக்கு முன் என் தோழி, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். அவரை சோதித்த டாக்டர், இரத்தப் பரிசோதனை தாளைப் பார்த்து விட்டு அவருக்கு கொழுப்பும், சர்க்கரையும் குறைவான தைராய்டும் இருப்பதாகச் சொல்லி மருந்து எழுதி தந்தும் இருக்கிறார்.
    அந்த அம்மா நம் ஊரிலேயே கொழுப்பிற்கும் தைராய்டுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார். இங்கேயும் அதே மருந்தைத் தான் டாக்டர் மூன்று மாதத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனால் அந்த அம்மா தொடர்ந்து அந்த மருந்துகளைச் சாப்பிட்டும் இருக்கிறார். இதன் நடுவில் கொழுப்பைக் குறைக்க உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என்று ஏதேதோ செய்தும் இருக்கிறார்.
   இப்படியே இருக்க...
   போன மாதம் ஒரு நாள் என்தோழி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அருணா... அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை. டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கிவிட்டேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு வேலை. நான் வேலைக்குப் போயே ஆகவேண்டும். அதனால நீ அவங்களை அழைத்துக்கொண்டு போக முடியுமா...?“ என்று கேட்டாள்.
  நானும் சரியென்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றேன். அந்த அம்மாவிற்குப் பிரென்சு மொழி தெரியாததால் நானே அவர்களுக்கு என்ன என்ன செய்கிறது என்று கேட்டு அதை டாக்டரிடம் சொன்னேன்.
   அவர்கள், “இதயம் அடிக்கடி படப்படப்பாக இருக்கிறது. வாயிற்றுப் போக்கு இருக்கிறது, உடம்பெல்லாம் வலிக்கிறது“ என்று சொன்னதை நான் டாக்டரிடம் சொன்னேன்.
   டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு உடம்பு வலிக்கும் வயிற்று போக்கைக் கட்டுப்படுத்தவும் மாத்திரைகளை எழுதித் தந்தார். அதனுடன் இரத்தப் பரிசோதனைக் கான சீட்டையும் தந்து, தான் ஒரு மாதகால விடுமுறையில் செல்ல இருப்பதால் அவசியம் இரண்டு நாளில் இரத்தப் பரிசோனை ரிசல்ட்டுடன் வந்து தன்னைப் பார்க்கும் படி சொன்னார்.
   நானும் மருந்தை வாங்கிக் கொடுத்துவிட்டு விசயத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
   மூன்று நாள் கழித்து தோழி மீண்டும் அழைத்தாள். “இரத்தப் பரிசோதனையின் தாள் சற்றுத் தாமதமாகக் கிடைத்துவிட்டதால் அந்த டாக்டரைப் பார்க்க முடியவில்லை. அதனால் வேறு ஒரு டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கி விட்டேன். ஆனால் அதற்கும் என்னால் போக முடியாது. அதனால் நீ தான் போகவேண்டும்“  என்று என்னிடம்  கெ(கொ)ஞ்சினாள்.
   திரும்பவும் நானே அந்த அம்மாவை வேறு ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர், அம்மாவைப் பரிசோதித்து விட்டு, “தைராய்டுக்கு மாத்திரை எடுக்கிறீர்களா...?“ என்று கேட்டார். நான் அந்த அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மாவும் தான் பல வருடங்களாக தைராய்டுக்கு மாத்திரை எடுப்பதாகவும், அந்த மாத்திரை இன்னும் இருப்பதாகவும் சொன்னதை டாக்டரிடம் சொன்னேன். “தொடர்ந்து தைராய்டு மருந்தை எடுங்கள். நல்ல சத்தான உணவாகச் சாப்பிடுங்கள்“ என்று சொல்லி வைட்டமின் டி, டானிக், மாத்திரை என்று எழுதிக் கொடுத்தார்.
    மருந்தை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு டாக்டர் சொன்னதையும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

    ஆனால் அடிக்கடி போன் செய்து விசாரித்தேன். தோழியின் அம்மா எப்பொழுதுமே உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறார்கள் என்ற பதில் வரும். கவலையாக இருக்கும். இருந்தாலும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நாளாக சரியாகிவிடும் என்று தோழிக்கு ஆறுதல் சொன்னேன்.

    ஒரு மாதம் கழித்து என் தொழி, நேற்று அவர்களின் டாக்டர் ஊரிலிருந்து வந்ததும் தன் அம்மாவை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வந்ததும் எனக்குப் போன் செய்தாள். எடுத்ததும்... “அருணா... போன மாதம் டாக்டரிடம் அம்மாவை அழைச்சிக்கினு போனியே... அப்போ இரத்த டெஸ்ட் தாளை டாக்டரிடம் காட்டினியா...?“ என்று கேட்டாள்.
   “ஓ... காட்டினேனே.... அவங்க கூட தைராய்டு இருப்பதாகவும் அதற்கு மருந்து தொடர்ந்து சாப்பிடவும் சொன்னார்கள்“ என்றேன்.
   “அவங்களே மருந்து எழுதித் தரலையா...?“
   “இல்லை. அம்மா தைராய்டு மாத்திரை வீட்டில் நிறைய இருக்கிறது என்றார்கள்“ என்றேன்.
   “அறிவிருக்கா....? அவங்க சொன்னா நீ கேட்டு எழுதி வாங்கறது இல்லையா...? அதனால இப்போ எவ்வளவு பிரட்சனைப் பார்“ என்றாள் கோபமாக.
   எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நடந்ததை ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தேன். என் மீது தவறு எதுவும் இருந்தது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவளின் அம்மா. அவர்கள் எனக்கும் அம்மா மாதிரி தான். அவர்களின் உடல் விசயத்தில் என்ன அலட்சியமாக நடந்துகொண்டேன் என்பது புரியாததால், “ஏன்... இப்போ என்னவாச்சி?“ என்று பயத்துடனே கேட்டேன்.
    என் குரலில் இருந்த பயத்தை அறிந்த அவள் தன் குரலைச் சற்று மென்மையாக்கி, “நீ மட்டும் என்ன செய்வ? தைராய்டு பத்தி உனக்கு என்ன தெரிந்திருக்கும்...? உன்னோட தப்பில்லை. என்னோட தப்பு தான். இருந்தாலும் நீ டாக்டரிடம் தைராய்டு மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கி வந்திருக்கலாம்“ என்றாள்.
   திரும்பத் திரும்ப இதே பல்லவியா...? எனக்கு எரிச்சலாகியது. “ஏன் இப்போ என்னாச்சி? சொல்லித் தொலையேன்“ என்றேன் சற்று கோபமாக.
   அவள் சொன்னாள்...

   தன் அம்மாவிற்கு பல வருடங்களாக கொலஸ்டிரால், தைராய்டு குறைவாக இருப்பதால் அதை அதிகப் படுத்தும் மாத்திரையையும் சாப்பிட்டு வருகிறார்கள்.
   பிரான்சுக்கு வந்த துவக்கத்தில் டாக்டர் அதே மருந்துக்களையே எழுதித் தந்தார். கூடவே உணவு கட்டுப்பாடு நடைபயிற்சி என்று மூன்று மாதம் முழு மூச்சாய் செய்து இருக்கிறார்கள். அதனால் கொழுப்பும் குறைந்து விட்டது. கூடவே தைராய்டும் சாதாரண நிலையை விட மிக அதிகமாகி விட்டிருக்கிறது.
   மிக அதிமாகி விட்ட தைராய்டுக்கு மேலும் மேலும் தொடர்ந்து அதை அதிகப்படுத்தும் மாத்திரையையே சாப்பிட்டு இருக்கிறார்கள்.  இதனால் இதயத் துடிப்பு அதிகமாகவும், வயிற்று போக்கு, எடைக்குறைவு, எலும்பும் தசையும் சுறுங்கியதால் உடல்வலி என்று பல துன்பங்கள் வந்திருக்கிறது.
   இதற்கு நடுவில் நான் அவர்களை இரத்தப் பரிசோதனை தாளுடன் அழைத்துச் சென்ற போது டாக்டர் தைராய்டுக்கு மாத்திரைச சாப்பிடுவதைப் பற்றி கேட்டார். ஆனால் அது அதிக தைராய்டுக்கான மருந்தா? குறைவான தைராய்டுக்கான மருந்தா? என்று நாங்கள் அறியவில்லை. தைராய்டு என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்.
     மருந்து தொடர்ந்து சாப்பிடுகிறார் என்றதும் அவரும் தைராய்டு அதிகமாக உள்ளதற்குத் தான் சாப்பிடுகிறார் என்று விட்டுவிட்டார். அதை அறியாமல் அந்த அம்மாவும் தொடர்ந்து அதே மருந்தைச் சாப்பிட்டு விட்டு மேலும் மேலும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
  
    நான் டாக்டரிடம் தைராய்டுக்கான மாத்திரையைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது அந்த அம்மாள் சாப்பிட்ட மருந்தையாவது அல்லது டாக்டர் ரசிதையாவது கொண்டு சென்றிருக்க வேண்டும். அல்லது... அம்மாவின் இரத்தப் பரிசோதனை தாளையாவது ஒரு முறை சரியாகப் பார்த்திருக்க வேண்டும். இதையெல்லாம் நினைத்தபோது நான் செய்தது தான் தவறு என்பது புரிந்தது.
   அந்த அம்மாவிடம் உடனே மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் அது தன்னடைய தவறு என்றார்கள். தோழியோ அது தன்னுடைய தவறு என்றாள்.
   உண்மையில் இது யார் தவறு? சொல்லுங்கள் நட்புறவுகளே.

அருணா செல்வம்
10.04.2014







   

சனி, 1 பிப்ரவரி, 2014

உலகிலே ஒருவர்!!



கல்லுக்குள் இருக்கின்ற சிலையைச் சிற்பி
    கற்பனையால் கண்டுநன்றாய் வடிப்பான்! செம்மைச்
சொல்லுக்குள் இருக்கின்ற பொருளைக் கற்றோன்
    சுவைதமிழும் சொக்கப்..பா படைப்பான்! உண்மை
இல்லுக்குள் இருக்கின்ற துயரை அன்பன்
    இல்லாமல் ஓட்டிடவே வைப்பான்! பெண்ணின்
உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
    உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!

 அருணா செல்வம்.