வியாழன், 28 நவம்பர், 2019

இதயச் சிறகு !



.
ஆசைகொண்டு காத்திருந்தேன்
அத்தைமகன் வரும்நாளை!
நேசநெஞ்சை அறிவானோ
நினைவவனைச் சுழல்கிறதே!

வண்ணமயில் போல்நானே
வானத்தைப் பார்த்திருக்க
வளம்கொழிக்கும் மழையாக
வந்தாலே ஆடிடுவேன்!

வழிமேலே விழிவைத்தே
வந்தவழி காக்காமல்
வானத்து மேகமதை
வகையென்றே தூதுவிட்டேன்!

என்நினைவில் உள்ளதெல்லாம்
புன்னகைக்கும் உன்முகமே!
பொன்னிறத்துத் தாவணியும்
உன்நினைவைச் சொல்கிறதே!

எழுத்தாணி இங்கில்லை
எழுதிவிட ஓலையில்லை!
இதயத்தைச் சிறகாக்கி
உன்திசையில் பறக்கவிட்டேன்!
.
பாவலர் அருணா செல்வம்
28.11.2019

திங்கள், 25 நவம்பர், 2019

பிரிமொழிச் சிலேடை!



    ஒரு பாடலில் வந்திருக்கும் பொருளானது, அப்பொருளின் தன்மைக்கும், அதனின் எதிரான தன்மைக்கும் பொருந்தும் படி வருவதுபிரிமொழிச் சிலேடைஎனப்படும்.
. ம்
கார்நிறைவா தாரமுகைக் காற்றடித்துத் தொட்டணைக்க
சேர்முறைமா மன்மேனிச் சீண்டிருக்கும்! – கூர்காற்றால்
ஆடுமுடைத் தேடும்புள் ஆவலிக்கக் கட்டவிழும்
கூடும் குளிர்காலக் கூற்று!

குளிர்காலத்தில் நடக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு பாடலிலேயே ஒருவகையானச் சொற்களாலேயே அமைந்துள்ளது. இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது பிரிமொழிச் சிலேடைஆகியது.


குளிர்கால இன்பத்தைச் சொல்லுங்கால்,… அழகு நிறைந்த உடலை மழையில் மலரும் பருவத்து அரும்பாக, வாடைக் காற்றானது தொட்டு அணைக்க, சேரும் முறையுள்ள மாமன் மேனியைத் தீண்டிவிட மகிழ்ச்சிதரும். மிகுதியான காற்றால் உடலானது ஆடுவதால் உடையைத் தேடும். மதுபானத்தால் ஆசை அதிகமாக மனக்கட்டானது அவிழ்ந்து திரும்பவும் கூடி மகிழ்வது தான் குளிர்காலத்தில் நடப்பது.

குளிர்காலத்தில் துன்பத்தைச் சொல்லுங்கால் --- அச்சம் நிறைந்ததும், வன்மையான சத்தமுடைய மழைக்கூட்டமும், பேய்க்காற்றும் தொட்டு அணைக்க, நெற்குதிரில் உள்ள கருவண்டானது மந்திரம் ஓதுவது போல மேனிதனில் ஆரவாரித்துத் தொந்தரவு செய்யும். கூர்மையான குளிர் காற்றால் உடல் ஆட போர்த்திக்கொள்ள துணியைத் தேடும். காற்றால் பறவைகள் புலம்ப அதன் கூடுகளின் கட்டுகள் அவிழ்ந்து மண்ணில் விழுவது தான் குளிர்காலத்தில் நடப்பது.

கார்- கரியது, அச்சம், அழகு,
ஆதாரம்பற்றுக்கோடு, ஆதாரம், நிலை, உடல்
தாரம்வல்லிசை, மழை,
முகைகூட்டம், மலரும் பருவத்து அரும்பு
காற்றுவாடை, பேய்,
சேர்நெற்குதிர், சேருதல்,
மாஅழகு, வண்டு,
மன்கணவன், மந்திரம்
மேனிஉடல்
சீண்டுதல்தொந்தரவு செய்தல், தீண்டியுணர்த்துதல்,
கூர்கூர்மை, மிகுதி,
புள்பறவையினம், மதுபானம்
ஆவலிக்கஆசைப்படுதல், புலம்பல்,

இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது “பிரிமொழிச் சிலேடைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019

சிலேடை வெண்பா!



செம்மொழிச் சிலேடை!

    பாடலில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் பல பொருளைக் குறித்துப் பாடுவதுசெம்மொழிச் சிலேடைஎனப்படும்.
சொற்கள் ஒவ்வொரு பொருள் படும் பொழுதும் பிரிவதில் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று வேறு வேறு பொருளைத் தருவது செம்மையான மொழி ஆகும்.

. ம்
துடியிடைக் கச்சிட்டுத் துள்ளிடும் போது
முடியடியும் ஆடவைத்த மோக வடிவழகே!
கண்ணரும்மை போகவெனைக் காதலுடன் பார்க்குமுனை
எண்ணிடவே நெஞ்சேங்கும் இங்கு!

பாடலில் கொண்டுள்ள சொற்கள் நடனமாடும் பெண்ணைக் குறிப்பது போல் திருவண்ணா மலை இறைவனைச் சிலேடையாக குறிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் குறிப்பிடும் பொழுது - உடுக்கை போன்ற இடையுடன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடிடும் பொழுது பார்ப்பவனை முடிமுதல் அடிவரையும் ஆடவைத்த மோகத்தைத் தரும் வடிவம் கொண்ட அழகே. உன்றன் கண்ணில் அரும்பி வழியும் மையானது அலைந்து போக என்னை அன்புடன் பார்க்கும் உன்னை நினைப்பதற்கே என் நெஞ்சானது ஏங்கும் இங்கு.

திருவண்ணாமலையாரைக் குறிப்பிடும் பொழுதுஉடுக்கையுடன் இடையில் புலிக்கச்சையும் அணிந்து தாண்டவம் ஆடும் பொழுதும், பிரமனுக்காகவும் திருமாலுக்காகவும் நீண்டு வளர்ந்து அடிமுடியைக் காணாது ஆடவைத்த பஞ்சமாயையில் ஒன்றான நெரும்பின் வடிவழகே, முக்கண் கொண்டருளும் அருணாசலனே, தீவினைப் பொங்கிவரும் வாழ்வில் அதனைப் போக்கும் அன்புடன் பார்க்கும் உன்னை நினைத்தாலே என் நெஞ்சமானது ஏங்கும் இங்கு.
   திருவண்ணாமலை அருணாசலத்தை நினைத்தாலே முக்தி பெறலாம் என்பது உலக வழக்கு.

துடிஉடுக்கை, பெண்ணின் உடுக்கைப் போன்ற இடை,
கச்சுமார்புத்துணி, இடையில் கட்டுதல்
துள்ளல்ஆடல், குதித்தல்
முடிதலைமயிர், தலை (குடுமி)
அடிகாலடி, ஆதி
ஆடல்நடனம், வெற்றி
மோகம்காம மயக்கம், பஞ்சமாயையில் ஒன்றான நெருப்பு
கண்விழி, ஞானம் உணர்த்துவது (முன்றாவது கண்)
அரும்முகைத்தல், முளைத்தல்
மை - , கண்மை, தீவினை

பொருள்இப்பாடலில் உள்ள தொடர்கள் நடனமாடும் பெண், திருவண்ணாமலையில் உறையும் ஈசன் ஆகிய இருவருக்கும் பொருந்துவதாக இருப்பதால் இதுசிலேடை அணிஆகியது. இத்தொடரில் இருவருக்கும் சொற்களின் பொருள் ஒரே நிலையில் இருந்து பொருள் படுவதால் இதுசெம்மொழிச் சிலேடைஆகியது.

    செம்மொழி என்பது, சொற்களைப் பிரித்தாலும் இரு பொருளுக்கும் பொருந்தும் வகையில் சொற்களின் தன்மை ஒரே நிலையில் மாறுபடாமல் இருப்பது ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019

வியாழன், 14 நவம்பர், 2019

காணி நிலம் வேண்டும்!



.
தேனாற்றின் கரையினிலே
   தென்னைமரச் சூழலிலே
கானாறு கவிபடைக்க
   காணிநிலம் வேண்டுமம்மா!

நீரோடி நிலமிளக
   நேராக வரப்பமைத்து
ஏரோட்டித் தினமுழைத்து
   இன்னிசைக்க வேண்டுமம்மா!

பாத்திகட்டி விதைவிதைத்துப்
பருவமுடன் நாத்துநட்டுக்
காத்திருந்து களைபறித்துக்
கண்நிறைய வேண்டுமம்மா!

பாட்டுப்பாடி நீரிரைக்க
   பருவமங்கை அருகிருந்து
காட்டுகின்ற கண்ணசைவால்
   களைப்பாற வேண்டுமம்மா!

கதிர்சாயும் வேளையிலே
   காவலுடன் காத்திருந்து
குதிர்மூழ்க பயிர்சேர்ந்து
   குதுகலிக்க வேண்டுமம்மா!

விற்றுவிட்டு மீதியுள்ள
   விதைநெல்லைத் தனிவைத்து
மற்றவர்க்குப் பகிர்ந்தளித்து
   மறுவிளைச்சல் காணவேண்டும்!

மாடுகன்றும் உணவருந்தி
   காடுகழனி காக்கவேண்டும்!
வீடுமனைப் பிள்ளையுடன்
   நாடுகாத்து வாழவேண்டும்!

மனம்மகிழ்ந்து தினம்வாழ
   மண்மகளை வேண்டுகிறேன்!
கனவுகளை நினைவாக்க
   காணிநிலம் வேண்டுமம்மா!
.
பாவலர் அருணா செல்வம்

புதன், 6 நவம்பர், 2019

காதல் நிலவு!



.
ஆற்றங்கரை ஓரம்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்!
அழகிய வானில்
அலைகழித்தாள் என்னை!
பளிங்குபோல் மின்னிய
அவளழகைப்
பாசமுடன் பார்த்தேன்.
பாவையவள்
வெண்பல் காட்டி
வெள்ளையாய்ச் சிரித்தாள்.
ஆசை அளவுமீற
அவளிடத்தில்
வார்த்தையால் கொட்டினேன்.
அமைதியுடன் கேட்டதே
அவள்மேல் என்
ஆசை அதிகமானது.
தொட முயன்றேன்.
மிக உயரத்தில் இருந்தாள்.
எம்பிக் குதித்தேன்.
எள்ளி நகைத்தாள்.
ஏமார்ந்து தலை குனிந்தேன்
என் காலடி
நீரில் கிடந்தாள்.
தொட்டுப் பிடித்தேன்.
துள்ளி ஓடினாள்.
கோபத்துடன்
எட்டி உதைத்தேன்.
கலங்கி அழுதாள்.
எழுந்து நடந்தேன்
என்னுடனே வருகின்றாள்.
என்செய்வேன் ?
அவளோ வெகு உயரத்தில்…. !
ஆனால்
ஒன்று தெரிந்தது
என் விடியல்
வெகு தூரத்தில் இல்லைஎன்று! 
.
பாவலர் அருணா செல்வம்
06.11.2019

திங்கள், 4 நவம்பர், 2019

தமிழுடைமை!




.
உயர்ந்தோருக்(கு) உன்னத ஓர்உருவம் தந்தே
வியந்திட வைத்திருந்த வீரம்பயம்தரப்
பொன்மொழிகள் எங்கேனும் போய்விடும் என்றதைத்
தன்னுடைமை ஆக்கினார் தாழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
04.11.2019