நட்பறவுகளுக்கு வணக்கம்.
போனவாரம் இத்தாலி சென்று வந்தோம்.
அது குறித்த பணய அனுபவங்களை உங்களுடன் பகிர இருக்கிறேன். இத்தாலியில் பார்க்க
வேண்டிய இடங்களைக் கேமராவில் படம் பிடித்தாலும், காட்சிகளைக் கண்களில் பிடித்து
மனத்தில் வைத்திருப்பது ஏராளம். உண்மையில் பார்க்க வேண்டிய இடம். நான் கண்டவைகளை
முழுமையாக சொல்ல முடியாது என்றாலும் ஓரளவிற்கு நான் தெரிந்துக் கொண்டதை உங்களுடன்
பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
இத்தாலியில் சில நாட்கள்!!
திங்கள் (4.8.2014) அன்று
பிரான்சில் “புவ்வே“ என்ற சிறு ஊரிலிருந்த விமான நிலையத்திலிருந்து மதியம் 1.55
மணிக்கு விமானம் புறப்பட்டது.
இங்கிருந்து விமானத்தில் இத்தாலியில்
“பைசா“ செல்ல 1.30 மணி நேர பயணம் தான். ஆனால் விமான நிலையம் செல்ல... பரிசோதனை
என்று புறப்படும் நேரத்திற்கு முன்பு இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிட வேண்டும்.
அதனால் நாங்கள் 11 மணிக்கே விமான நிலையம் சென்று விட்டோம்.
பயணச்சீட்டின் விலை ஒருவருக்குப்
போய் வர 180 யுரோக்கள். (ஒரு யுரோ நம் ஊர் ரூபாயில் கிட்டத்தட்ட 80 ரூபாய் ஆகிறது.
மொத்தம் 14,400 ரூபாய்)
இவ்வளவு பணம் கட்டியும் கையில் ஒரே
ஒரு சிறிய பை அல்லது 50 க்கு 26 செண்டி மீட்டரில் ஒரு சிறிய பெட்டி மட்டுமே
எடுத்துச் செல்ல வேண்டும். கையில் டிக்கெட் மற்றும் பணம் வைத்துக் கொள்ளும் அளவில்
மிகச் சிறிய கைப்பை கொண்டு செல்லாம். மற்றபடி கையில் கேமராவோ மற்ற பொருட்களோ
வைத்துக் கொள்ள கூடாது. அப்படி வைத்திருந்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதல் கிலோவிற்கு
15 யுரோவும் அதற்கு மேல் 20.. 25... என்று ஏற்றிக் கொண்டே செல்கிறார்கள்.
திரும்ப வரும் போதும் இதே
நிபந்தனைகள் தான். அதனால் மேற் கொண்டு பொருட்களை மிகவும் யோசித்து வாங்கும் படியாக
இருந்தது.
மாலை 3.25 க்கு விமானம் தரை
இறங்கினாலும் வெளியில் வர மணி நான்கு ஆகிவிட்டது. ஏற்கனவே இணையத்தில் அனைத்தையும் சரிவர
தெரிந்து வைத்திருந்ததால் அங்கிருந்த பேரூந்து நிலையம் சென்று, காத்திருந்து
ஏறினோம். நாற்பது நிமிட பயணம். ஒருவருக்கு 1.50 யுரோ டிக்கெட். இந்த டிக்கெட்டை
வாங்கினால் வாங்கியதில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்யலாம். அதன் பிறகு அது
செல்லாது. ஐந்து மணி அளவில் நாங்கள் தங்கும் விடுதியை அடைந்தோம். ஓட்டல் ஓர் இரவுக்கு
ஒருவருக்கு 28 யுரோ. காலை உணவு கிடையாது. காலை 10 மணிக்கு காலி செய்துவிட
வேண்டும்.
ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு
இத்தாலியின் உலகப் புகழ் வாய்ந்த “பைசா சாய் கோபுரத்தைப்“ பார்க்கச் சென்றோம்.
இந்த இடம் நாங்கள் தங்கிய ஓட்டலில் இருந்து இருபது நிமிட நடைப்பயணம் தான்.
வழியில் நிறைய கடைகள். ஓட்டல்கள்.
டூரிஸ்ட் ப்லேஸ் என்பதால் அனைத்துமே விலை அதிகமாக இருந்தது. ஒரு தண்ணீர்
பாட்டிலின் விலை நான்கு யுரோ. நாங்கள் சென்ற அன்று 29 டிகிரி அளவு வெய்யில். உஷ்ணம்
உயிரைக் குடிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடித்தோம்.
போகும் வழியில் பார்த்ததைச் சொல்ல
வேண்டும் என்றால் இத்தாலி மக்கள் ஒல்லியான தேகம் உடையவர்களாக இருந்தார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கு அழகான உடலமைப்பு. முகத்தில் மூக்கு என்னமோ அனைவருக்குமே
செதுக்கி வைத்தது போல் தான் இருந்தது. பொன்னிற முடி. அதைப் பலர் கலர் பூசி
கெடுத்து இருந்தார்கள்.
இத்தாலியில் இந்த இடம் உலகப் புகழ்
வாய்ந்தது என்பதால் எல்லா நாட்டுக்காரர்களும் இருந்தார்கள். இதில் சீனா, ஜப்பான்,
ரஷ்யா, தாய்லாந்து காரர்களின் அளவே மிக அதிகமாக இருந்தது. மற்றபடி பாக்கிஸ்தான்
காரர்கள் அதிகமாக சிறுசிறு கடைகள் வைத்திருந்தார்கள்.
இவர்களின் முக்கிய உணவு பிட்ஸா,
ஸ்பகத்தி என்னும் நூடூல்ஸ். பிட்ஸா நம்மூர் சப்பாத்தி போன்றும் நூடூல்ஸ் நம்மூர்
அரிசி சாப்பாடு போன்றும் உள்ளது. இதில் ஆலிவ் காய்கள் ஆலிவ் எண்ணையும் அதிகம்
பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு பிட்ஸாவின் குறைந்த விலை 9.90
யுரோ. ஸ்பகத்தியும் அவ்வளவே. இது ஒவ்வொன்றும் ஓட்டலின் தரத்திற்கு ஏற்ப
மாறுபடுகிறது. சில ஓட்டல்களில் ஒரு பிட்ஸாவின் விலை 30 யுரோ.
இப்படியே ஒவ்வொன்றாகப் பார்த்துக்
கொண்டு “பைசா“ கோபுரத்தின் அருகில் வந்து சேர்ந்தோம்.
பைசா நகரத்தின் உலக அதிசயமான
சாய்ந்த கோபுரத்தைப் பற்றிய விளக்கத்தையும் படங்களையும் அடுத்தப் பதிவில்
வெளியிடுகிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.


