திங்கள், 25 பிப்ரவரி, 2013

எப்படி இருந்த நான் இப்படி....





காலை உதயத்தைக்
காணாத என் கண்கள்
காலை விடியலுக்காய்க்
காத்திருந்து சிவந்துவிட...

அன்றாடம் அம்மா கைமணம்
அமிர்தமாய் இனித்திடும்
காப்பி கூட சுடுதண்ணீர்
சுவையுடன் நெஞ்சிக் குழியில்
இறங்க மறுக்க...

வாரிய தலையைத்
திரும்பத் திரும்ப
அலைத்து அலைத்துச்
சரிசெய்தும் சரிவராமல்...

இட்லிக்குச் சட்னிதான்
தோதென்று சொல்லிக் கொண்டே
தோசைக்கு அருகிலிருந்ததைக்
குழம்பென்று முடித்தவுடன்...

“இங்கிருந்த புளிகரைசல்
எங்கே போனது...?“
அம்மாவின் குரலை
அலட்சியம் பண்ணிவிட்டு...

தேவைப்படுவது
எதுவெனத் தேடாமல்
தேவையற்றதை மறக்காமல்
எடுத்துக்கொண்டு...

வெளிக்கிளம்பும் முன்னால்
கண்ணாடியில் முகத்தைப்
பார்த்துப் பார்த்துக்
குறை எதுவெனத் தெரியாமல்
ஏதோ ஒன்று குறைவதென்று
நினைத்து நினைத்து
ஏக்கப் பெருமூச்சுடன்
கிளம்பிப் போய்க் காத்திருந்தால்...
வரவேயில்லை!!

நேற்று இந்நேரம் தானே...
அந்தப் பார்வையில்
ஆழம் இருந்ததே...
யார் அது? எந்த ஊர்?
வந்தால் இன்று தைரியமாகக்
கேட்டுவிட வேண்டுமென்று...

எனக்கு நானே
ஓர் அசட்டுச் சிரிப்புடன்!
போகிறவர் வருகிறவர்
ஒருமாதிரி பார்க்க...

காலை வெயில்
கவித்தவத்தை இழந்து விட...
உச்சிக் கொதிக்க
உள்ளுணர்வு சொன்னது...
நாளைக்கு இன்னும் கொஞ்சம்
சீக்கிரம் வந்துவிட
வேண்டுமென்று!!


அருணா செல்வம்.

44 கருத்துகள்:

  1. ஹா ஹா சூப்பர் கவிதை! நாளைக்கு இன்னும் கொஞ்சம் சீக்கிரம் போங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மணி ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      (நீங்கள் உங்கள் இடுகையில் சொன்னது போல் யார் நமக்கு ஓட்டு போட்டார்கள் என்று பார்க்கப் போய் கடைசியில் என் இடுகைக்கே மைனஸ் ஓட்டு விழுந்துவிட்டது..... கவலையாகி விட்டது.....)

      நீக்கு
    2. நீங்களும் ஒட்டுக்கடலில் சங்கமமா? It takes the joy out of blogging...

      நீக்கு
    3. நம் திறமையை அறிந்து கொள்ள இதுவும் ஒரு வழி என்று நினைக்கிறேன் ரெவெரி சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. 1.மரபுக் கவிதை மட்டுமல்ல புதுக் கவிதையிலும் அசத்தி இருக்கிறீர்கள்
    2.முதலில் பெண்ணின் எண்ணங்கள் என்று நினைத்துவிட்டேன். ஆண் எழுதியது போல் எழுதப்பட்டுள்ளது
    3."வாரியத் தலை" என்றதும் ஏதோ வாரியத் தலைவர் நினைவுக்கு வந்தது. (வாரிய தலையா? வாரியத் தலையா? எது சரி )
    4.இது போல் புதுக் கவிதைகளும் அவ்வப்போது எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் காற்று....

      1. மரபென்பது தமிழ்மகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள்
      கொண்டு வந்து அவளை ஆடவைத்து அதை இரசிக்கத்
      தெரிந்தவர் மட்டும் பார்த்து இரசிப்பது.
      புதுக்கவிதை என்பது.... தன் விருப்பம் போல்
      அவளை ஆடவைத்துத் தமிழ் தெரிந்த அனைவரையும்
      இரசிக்க வைப்பது...
      இரண்டிலும் தமிழ் தான் ஆடுகிறாள். இதில் “அசத்தல்“
      என்பது அவரவர் இரசிப்பைப் பொறுத்தது தான்.

      2. கவிஞன் என்பவருக்கு பால் பாகுபாடு கிடையாது. இருவரின் உணர்வினையும் அறிந்து எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

      3.நான் ஒற்றுப் பிழைகள் அதிகம் செய்வேன். இதற்காக நான் என் ஆசிரியரிடம் நிறையத் திட்டுகள் வாங்கியும் இன்னும் திருந்தவில்லை. (அதனால் எனக்குச் “சந்தக் கவிதைகள்“ சொல்லிக் கொடுக்க மாட்டேன். போய் இலக்கணத்தை நன்றாகக் கற்று விட்டு வா“ என்று சொல்லிவிட்டார்.

      4. மூன்று நான்கு நாட்கள் அமர்ந்து யோசித்து எழுதும் மரபுக் கவிதைகளைவிட மூன்று நான்கு நிமிடங்களில் எழுதிடும்
      புதுக் கவிதைகளுக்கு வலையில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
      ஆதலால் இனி நிறைய புது கவிதைகள் தான் எழுதலாம் என்று
      இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிகமிக சிறப்பாக இருக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள் தோழி!

    அருமையாக இருக்கிறது
    அருணா உம் அழகுகவிதை
    காலை விடியலில் தொடங்கி
    கால்கடுக்கக் காத்தகதை
    தேடல் கொண்ட இதயம்
    திடமாக, நாளைவரும் உதயம்
    நலமாகத்தானென ஆதங்கம்
    சொன்னகதை அருமை !புதுமைதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை விடியல் தொடங்கி,பின்
      கால்கள் கடுக்க நின்றிருந்தும்
      மாலை வரையில் ஏமார்ந்தும்
      மாற்ற மில்லை மனத்தினிலே!
      பாலைப் போன்ற பசுங்காதல்
      படிக்கப் படிக்கப் புதுமைதான்!
      சோலை தென்றல்! சொல்லினிமை!
      சொக்கு கின்றேன் இளமதியே!!

      வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  5. அழகு்த தமிழில் கவிதை அணிகலன்களைச் செய்த அருணா, எளிமைத் தமிழில் எம்மை ஈர்த்திருக்கிறீர் இம்முறை. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  7. உங்கள் கவிதை 'எனக்கு' ஒரு பெண் கூறுவது போல இருப்பதால்...
    மேலும், அப்படி ஒரு பெண் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பதை அவ்வளவாக நம்பமுடியாததால்...

    உங்கள் கவிதையை பட்டி பார்த்து டிங்கரிங் செய்து....
    ஒரு சந்தேகத்திற்கு இஅடமில்லமல்,
    ஒரு ஆண் கூறுவது மாதிரி எழுதலாமா?
    அதற்க்கு, உங்கள் அனுமதி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி....

      இந்தக்கவிதை நான் ”ஆண்“ ஆக இருந்த போது எழுதிய கவிதை.

      நான் ஆணாக இருந்த போது...இந்த மாதிரி.... இதைவிட நல்ல நல்ல கவிதைகளும் எழுதியிருக்கிறேன். அவைகளைத் தொடர்ந்து வெளியிடுகிறேன்.

      நீங்கள் இந்தக் கவிதையைப் பட்டிப்பார்த்து உங்களின் ஸ்டெயிலில் டிங்கரிங் செய்து உங்களின் பெயரை அவசியம் கீழே போட்டு வெளியிட்டுக் கொள்(ல்)ளுங்கள்.
      எனக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது.

      தொடருங்கள் உங்களின் கவிதை பயணத்தை.
      வாழ்த்துக்கள்.
      நன்றி.

      நீக்கு
    2. நன்றி அருணா!

      கவிதை சரிப்படாது; காரணம், சில வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருக்காது. நான் என் மனதில் படுவதை எழுதுவேன், அதனால் தான...

      உங்கள் கவிதைக்கு துளியும் சம்பந்தம் இல்லமால் நான் கதை எழுதுகிறேன்...

      தலைப்பு, பிறகு...

      நீக்கு
    3. //இந்தக்கவிதை நான் ”ஆண்“ ஆக இருந்த போது எழுதிய கவிதை.//


      என்ன இது ஒன்னும் புரியலயே உங்கள் பர்சனல் என்றால் இதை வெளியிட வேண்டாம்

      நீக்கு
    4. பாஸ்... இதில் பர்சனல் எதுவும் இல்லை.
      நான் போன வருடம் வலையில் எழுதத் துவங்கியதும் என்னை எல்லோரும் “ஆண்“ என்று நினைத்து “நண்பா“ “நண்பரே“ என்று அழைத்தே கருத்திட்டார்கள்.
      முதலில் குழப்பமாக இருந்தாலும் இதுவும் நல்லதே என்று நானும் ஆண் இடத்திலிருந்து காதல் பாடல்களை எழுதினேன்.
      பின்பு சிலருக்குக் குழப்பம் வந்ததால் அந்தக் குழப்பத்தைத் தெளிவிக்க இந்த இடுகையை வெளியிட்டேன்.
      படித்துப் பாருங்கள் பாஸ்.

      http://arouna-selvame.blogspot.com/2012/12/blog-post_11.html

      தவிர நான் பெண் என்பதால் “ஆண்“ பாடுவதைப் போல் எழுதக் கூடாதா என்ன...?

      நீக்கு
    5. அறிந்தேன் உங்கள் PROFILE பார்த்து ..கேள்விக்கு மன்னிக்க !

      நீக்கு
  8. அருமை... ரசித்தேன்...

    http://www.bloggernanban.com/2012/09/who-voted-on-tamilmanam-thiratti.html ---> இவ்வாறு தானே பார்த்தீர்கள்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன் ஐயா.

      நீங்கள் கொடுத்த இந்த லிங்கில் நான் பார்க்கவில்லை.
      ஐடியா மணியண்ணன் பதிவில் பார்த்துச் செய்து... அது சரியாக செய்யாமல் எனக்கு தானே மைனஸ் ஓட்டு விழுந்து விட்டது.

      இதில் ஒரு சிறப்பு இருக்கிறது பாருங்கள். “தனக்குத் தானே மைனஸ் ஓட்டுப் போட்டுக் கொண்ட முதல் வலைபதிவர்“ என்ற பெருமையும் கிடைத்து விட்டதல்லவா...?

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  9. நல்ல கவிதை.

    காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கும். அடுத்த நாள் இன்னும் சீக்கிரம் போகட்டும்! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை என்பதெல்லாம் ரொம்ப நேரம்.
      இன்றிரவே அங்கே போய் அமர்ந்துவிட வேண்டியது தான்...!!!

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  10. பாவம் நாளைக்காவது அவள் வந்து விடட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைக்கு அவள் வந்து காத்திருக்கட்டும்.

      தங்களின் வருகைக்கும் அன்பிற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

  11. “இங்கிருந்த புளிகரைசல்
    எங்கே போனது...?“
    அம்மாவின் குரலை
    அலட்சியம் பண்ணிவிட்டு...

    அட கடவுளே இப்படி ஒரு மயக்கமா பாத்து எங்கனயாச்சும் தடுக்கி விட்டுட போகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தங்க சொன்னேன்...
      “எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேனே..“ என்று.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மலர்பாலன்.

      நீக்கு
  12. புளிக்கரைசலைத் தொட்டு தோசை சாப்பிடும் அளவுக்கு பாதித்திருக்கிறது நினைவு!
    சூப்பர் அருணாஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சென்னை பித்தன் ஐயா.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. புளிக்கரைசலுக்கும் குழம்புக்கும் வேறுபாடு கூடத்தெரியாத அளவு மயக்கம்!
    சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் “காதல் மயக்கமாம்“...
      கேள்விப்பட்டு எழுதினேன்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  14. சிறப்பான மயக்கக் கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  15. காலையில் விழிப்பதால் கனவுபோய் நிஜமாய் நடக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடடா... அப்படியும் நடந்திருக்குமோ.....
      யோசித்து அடுத்தக் கவிதையில் எழுதிவிடுகிறேன்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  16. இரு பொருள் பட எழுதி உள்ளது சிறப்பு அன்பரே

    பதிலளிநீக்கு
  17. காதலின் ஆரம்ப காலத் தவிப்பு. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  18. புளிக்கரைசலை சாப்பிட்டுவிட்டு வெயில்ல போன எப்படியோ இருந்த நீங்க இப்படித்தாங்க ஆயிடுவீங்க!நாளைக்கு ஒழுங்கா இட்லிக்கு சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு போங்க, அவங்க வருவாங்க!

    நல்ல கவிதை அருணா, பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அறிவுரையை நிச்சயம் கடைபிடிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.

      நீக்கு
  19. அருமையா இயல்பா இருக்கு..எத்தனை முறை கண்ணாடிய பாத்தாலும் ஏதோ குறையற மாறியே இருக்கும்..அப்படியே சொல்லிடிங்க..உண்மை..

    பதிலளிநீக்கு