வெள்ளி, 29 ஏப்ரல், 2022

பயினி மலர்! (அரக்கு மரம்)

 


பயினிமரம் ஒட்டும் பசையைக் கொடுக்கும்!
வயிரத்தைத் தீட்டஇதை வார்ப்பர்! - தெயிவத்தைப்
பீடத்தில் நிற்கவைக்க பேருதவி செய்திடும்
ஓடத் துளையடைக்கும் ஒட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2022

வியாழன், 28 ஏப்ரல், 2022

கூவிரம் மலர்! (மாவிலங்கம்)

 


கூவிரம் என்பதை மாவிலங்கம் என்பார்கள்!
மூவிலைக் கூட்டாய் முளைத்திருக்கும்! - பூவினும்
பட்டை,இலை, வேரும் பயன்தரும் ! நாள்பட்ட
கட்டியையும் போக்கும் கரைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2022

புதன், 27 ஏப்ரல், 2022

வெட்சி மலர் ! (இட்டிலிப்பூ)

 


வெட்சி மலர்மாலை வேலவனுக் கானதாம்!
இட்டிலிப்பூ என்கிறார் இந்நாளில்! - கட்டுதற்கு
பாங்காக நீண்டும் பலநிறத்தில் பூக்கிறது !
நீங்கா வழகில் நிலைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2022

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

பசும்பிடி ! (பச்சிலைப்பூ)

 


பச்சிலைப்பூ என்னும் பசும்பிடியின் கட்டைகள்
தச்சத் தொழிலுக்குத் தக்கதாம்! - பச்சை
இளமுகிழை மெல்ல இனியமணம் வீசும்!
இளங்கொழுந்தின் வாசம் இனிது!
.

பாவலர் அருணா செல்வம்
26.04.2022

திங்கள், 25 ஏப்ரல், 2022

கோடல் மலர்! (வெண்காந்தள்)

 


ஆறுதலை கொண்டே அருள்பவனுக் கேற்புடை
ஆறுதலை போன்ற அறுவிதழ்கள் ! - சீறுகிற
பாம்புமேல் நோக்கும் படம்போல் அழகாகும்!
ஓம்படுத்த கோடல் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

ஓம்படுத்தல் - போற்றல், பாதுகாத்தல், வளர்த்தல்,

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆத்திப்பூ!

 


அக்கால சோழர்கள் ஆத்திமாலை சூடினர்!
இக்காலம் பீடிசுற்ற ஏற்றதாம்! - கக்குவான்
போக்கிடும்! ஆறாத புண்களை ஆற்றிடும்!
பூக்கள்இலை பட்டையும் பொன்!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

வியாழன், 14 ஏப்ரல், 2022

சிந்து மலர்! (கருநொச்சி)

 


காரம் மிகுந்த கருநொச்சி சிந்தாகும்!
சீரண உள்ளுருப்பைச் சீராக்கும்! - ஈரல்நோய்
கால்கை விரல்குடைச்சல், கட்டிக்குத் தைலத்தை
மேல்தடவ மேன்மையுறும் மெய்!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022

புதன், 13 ஏப்ரல், 2022

குரவம் மலர்! (பாவை மரம்)

 


குறுங்காம்பு கொண்ட குரவம் மலர்கள்
நறுமணம் கொண்டிருக்கும் நன்கு! - சிறுமொட்டுகள்
பாம்பினது கூரிய பற்களை ஒத்திடும்!
பூம்பொடி மிக்கிருக்கும் பூ!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பாலை மலர்! (வெட்பாலை)

 


பாலை மரமெங்கும் பால்வடியும்! மீன்செதிலாய்த்
தோலை அரிக்கும்நோய் தோற்றோடும்! - பாலைமட்டும்
சூரணம் செய்துண்ணச் சூட்டுநோய் போக்கியுடன்
சீரணத்தைச் சீராக்கும் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.04.2022
 

(இலங்கையில் வளரும் பால மரம் என்பது வேறு)

திங்கள், 11 ஏப்ரல், 2022

நந்தி மலர்! (நந்தியா வட்டை)

 


நல்ல குளிர்சியுள்ள நந்திமலர் கண்எரிச்சல்
பல்சொத்தை, போக்கப்  பயன்படும்! - கல்லீரல்
மண்ணீரல் நோயை மரவேர்த்தோல் சீராக்கும்!
பெண்கருப்பை காக்கும் பெரிது!
.
பாவலர் அருணா செல்வம்
11.04.2022

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தில்லை மலர்!

 



.
தில்லை நடராச தெய்வவூர்! இக்கால
தில்லைமர மில்லாச் சிதம்பரம்! - நல்ல
மணம்வீசும் பூக்கள் மனத்தை மயக்கும் 
குணமுள்ளார் நெஞ்சாய்க் குளிர்ந்து!

.
பாவலர் அருணா செல்வம்
09.04.2022

வியாழன், 7 ஏப்ரல், 2022

செங்கோடு மலர்! (செங்கொடுவேரி)

 


செந்நிறத்தில் பூத்திடும் செங்கோடு யாழ்அழிக்கும்
அந்தெனும் பூச்சை அழித்திடும்! - செந்தேனும்
வாசமும் கொண்ட மலர்க்கொத்தை மங்கைமனம்
நேசமுடன் சூடும் நிறைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.04.2022

புதன், 6 ஏப்ரல், 2022

வாழைப்பூ!

 


வாதம், வயிற்றுநோய், வாய்நாற்றம், மூலநோய்,
சீதபேதி, சோகையைச் சீராக்கும்! - மாத
விலக்கு,கண் நோயை விரைவினில்  போக்கி
நலங்காக்கும் வாழைப்பூ நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
06.04.2022

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

துழாய்! (துளசி)

 


வீட்டில் வளரும் வெறும்இலையே நோய்நொடியை
ஓட்டிவிட நன்றாய் உதவிடும் - தீட்டுதற்கு
ஒப்பில்லா நன்மைதனில் ஓங்கும் துழாவிளுள்ள
எப்பயனைச் சொல்வேன் எடுத்து?
.
பாவலர் அருணா செல்வம்
06.04.2022

திங்கள், 4 ஏப்ரல், 2022

58. குருகிலை (அத்தி மரம்)

 


மொட்டு மலராமல் மூடியே காய்காய்த்துக்
கொட்டுமிடி நோக்கும் குருகிலை! - பட்டை,இலை
காய்,கனி,வேர் நம்முடல் காத்திடும்! காஞ்சியிலே
காய்ந்தமரத் தெய்வத்தைக் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
04.04.2022