“சாதி, சாதி என்கிறார்களே... அது
எதை வைத்துப் பிரித்திருக்கிறார்கள் மாமா...?“ என்று கேட்ட காமினியை யோசனையுடன்
பார்த்தார் மாமா.
“சாதி என்பது அவரவர் செய்யும்
தொழிலை வைத்துப் பிரித்தார்கள் அம்மா“ என்றார் மாமா.
“அப்படியா....? அப்போ நிறைய சாதி
இருக்குமே“
“ஆமாம்மா. இப்போ அப்படித்தான்
ஆகிவிட்டது“
“எதனால் இப்படி ஆனாது?“ கேள்வி
வாயிலிருந்து உதித்தாலும் அவளின் கண்களில் அதை அறியும் ஆவல் இருந்ததைக் கவனித்தார்
மாமா.
“காமினி.... விளக்கமாகச் சொல்கிறேன்
கேள். பழைய காலத்தில் ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து அதை ஆறு சாதியாகப்
பிரித்தார்கள். ஆனால் அதைக்கூட காளமேகப் புலவர் தொழிலை வைத்துப் பார்க்காமல் அதனுள்
கடவுளை வைத்துப் பாடி இருக்கிறார்“
“அப்படியா....? சாதியைப் பற்றி
காளமேகப் புலவர் பாடினாரா....? என்னவென்று பாடினார் சொல்லுங்கள் மாமா.....“ கெஞ்சளாகக்
கேட்டாள் காமினி.
“ம். சொல்கிறேன் கேளம்மா“ என்று
காளமேகத்தைப் பாடினார் மாமா.
கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரரைத் திருவரசை – அம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாழனுமே
சேணியனு மன்றே தெரிந்து.
அம்மா கேள் – அம்மையே கேட்பாயாக
வாணியனும்– வாணியைக் கொண்டோனான பிரம்மனும்
பொன்னேரிவாழும் வெள் ஆழனும் -
திருமகளாகிய அழகியைத் தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே
பள்ளிகொள்கின்ற திருமாலும்
சேணியனும் – இந்திரனும்
அன்றே தெரிந்து – அந்நாளிலே (சாதியை அறிந்து கொண்டு) உண்மையை அறிந்து கொண்டு
செம்மான் சதுரரை – சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை
திரு அரசை – நடராசப் பெருமானை
கம்மாளன் – கபாலத்தை ஏந்தியவன் என்றும்
அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் - நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன்
என்றும் வாழ்த்தினார். என்றார்.
“மாமா.... எனக்குப் புரியும் படி
விளக்கமாகச் சொல்லுங்கள்“ என்றாள் காமினி. மாமா தொடர்ந்தார்....
அதாவது
தொழிலைக் குறித்து வந்த சாதிகளான வணியன் (வியாபாரம் செய்வோன்), வெள்ளாழன்
(உழவன்), சேணியன் (நெய்வோன்), சதுரன் (அறிஞன்), கணக்கன் (சோதிடன்), வேதியன் (வேதம்
கற்றவன்) என்ற ஆறு சதிகளும் மனிதரின் பெயரால் வராமல் கடவுள்களின் பெயரில் பாடி சரி
செய்து இருக்கிறார் காளமேகம்.
“அப்போ.... இந்த ஆறு சாதிகள்
இல்லாமல் வந்திருக்கும் மற்ற சாதிகள் எல்லாம் எப்படி வந்தது...?“ ஆச்சர்யமாகக்
கேட்டாள் காமினி.
“மற்ற சாதிகள் எல்லாம் ஒவ்வோர்
சாதியிடம் இருந்து வந்த கிளைகள் தான் காமினி. ஆமாம்.... உனக்கு ஏன் இன்று சாதியைப்
பற்றிய எண்ணம் வந்தது...?“
“இன்று பள்ளியில் ஒரு பையன் ”நீ என்ன சாதி?” என்று கேட்டான். நான் ”பெண்சாதி” என்றேன். அதற்கு அவன், “ஆமா....
நான் ஆண் சாதின்னா நீ எனக்குப் பெண்ஜாதி தான் என்றான் கொஞ்சம் நக்கலாக. அது தான்
உங்களிடம் விளக்கம் கேட்டேன் மாமா“ என்றாள்.
“நல்ல
குறும்புக்கார பையன் தான். அவனிடம் இப்படி சொல்லு. உலகில் ஆண்,பெண் என்று இரண்டு
சாதிகள் தான். ஆனால் ஆண்தான் பலசாதிகளில் பிரிந்து கிடக்கிறான். பெண்களுக்குப்
பெண்கள் என்ற ஒரே சாதி தான் என்று சொல்லம்மா.....“ என்று சொல்லியபடிச் சிரித்துக்
கொண்டே சென்றார்.
அருணா செல்வம்
30.07.2014
