சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2015

சினிமா துறையில் ஜொலிக்க வேண்டுமா ?


நட்புறவுகளுக்கு வணக்கம்.
       பொதுவாகவே நிறைய பேருக்கு சினிமா உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணத்திற்காக புகழுக்காக என்ற காரணம் மட்டும் அல்லாமல் அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு அனைவரையும் அது தன்பால் இழுக்கத்தான் செய்கிறது.
   ஒரு சமயம், இதில் நம் திறமைகளை வெளிகாட்டினால் அது பல்லாயிரக் கணக்கான மக்களிடம் சென்றடையும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். எந்தத்திறமையானாலும் அதை மற்றவர்கள் கண்டு களித்துப் பாராட்டினால் தானே அந்தத் திறமைக்காண அங்கிகாரம் கிடைத்ததாக ஆகும்.
   ஏனோ கொஞ்ச நாட்களாக எனக்கும் இந்த ஆசை துளிர்விட ஆரம்பித்து விட்டது. இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு முன்பே என் எண்ணங்களுக்குச் சிறகு முளைத்து விட்டது. என்ன செய்வது ? நானும் சராசரி மனுஷி தானே….. ஹி ஹி ஹி.....
   சரி… சினிமாத்துறையில் நுழைந்து மின்னுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தவிர சினிமாத்துறையில் நுழைந்த அத்தனை பேருமே மின்னிவிடவில்லை. ஏதோ சிலர்தான் பிரபலங்காளாக ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.
   அப்படி பிரபலங்களானவர்களை ஒரு வரிசைப்படுத்தினேன்.
   என்ன ஓர் ஆச்சர்யம் !!!!!
   நான் வரிசைப்படுத்திய பல பிரபலங்களின் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஜ, ஜி, ஜோ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற எழுத்துக்கள் உள்ளவர்களே நிறைய பேர்களாக இருந்தார்கள்.
உதாரணமாக

சிவாஜி
எம். ஜி. ஆர்
பாலாஜி
எஸ் எஸ் ராஜேந்திரன்
ஜெய்சங்கர்
ஏ எம் ராஜன்
நாகேஷ்
சரோஜா தேவி
டி.ஆர் ராஜகுமாரி
எம் என் ராஜம்
விஜய குமாரி
கே ஆர் விஜயா
ஜெயந்தி
வாணிஸ்ரீ
உஷா நந்தினி
ரஜினி
கமலஹசன்
ஸ்ரீதேவி
ஸ்ரீ பிரியா
சுகாஷினி
விஜய்
அஜித்
தனுஷ்
ஜோதிகா
டி எம் சௌந்தர்ராஜன்
ஜானகி
எல் ஆர் ஈஸ்வரி
ஜிக்கி
ஸ்வர்ண லதா
பாரதிராஜா
பாக்கியராஜ்
பாண்டியராஜன்
டி ராஜேந்தர்…..

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே உள்ள நட்சத்திரங்கள் மின்னிட இப்படி ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களைத் தன் பெயரில் வருவது போல் அமைத்துக்கொண்ட காரணமாகக் கூட இருக்கலாம்.
    உடனே நானும் என் பெயரை எப்படி எப்படியோ மாற்றி எழுதிப் பார்த்தேன். ம்ம்ம்….. எதுவும் தேறவில்லை. ஆனால் உங்களில் யாருக்காவது சினிமாத்துறையில் நுழைந்து மின்னிட ஆசை இருந்தால் உங்களின் பெயரை ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ எழுத்துக்கள் சேர்ந்து வருமாறு அமைத்துப் புகழ்பெருங்கள்.

பின்குறிப்பு
    இந்த ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. வடமொழி எழுத்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

20.10.2015

புதன், 10 டிசம்பர், 2014

நினைவுகள்!!



இன்று வாழும் வாழ்க்கையிலே
    இனிக்கும் இன்பம் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வதனின்
    அழிக்க முடியா நினைவுகளே!
நன்றே அல்ல என்றாலும்
    நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
    இயங்கிச் சுற்றும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
    பிரித்துத் தெளிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
    கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
    காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாமல்
    தானே சுற்றும் நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
    சொக்க வைத்த செந்தமிழும்
வல்ல புகழின் முதலடியாய்
    வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்
    மேனி தொட்ட அந்நாளும்
நல்ல சுவையாய் முன்வந்து
    நடன மாடும் நினைவுகளே!

நல்லோர் என்று நினைத்தவரோ
    நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
    கருணை அற்று நடந்ததையும்
பொல்லாப் பழியைப் பிறர்சுமக்கப்
    பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லாக் காலச் சுவடுகளாய்
    நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
    மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
    எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
    உலகிற் கதனைக் காட்டாமல்
மண்ணில் மறையும் நாள்வரையில்
   கண்ணுள் மின்னும் நினைவுகளே!

அருணா செல்வம்

09.12.2014

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?



    
   வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
    “பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
    “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
     “அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
    “நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
    “தெரியவில்லை.“
    “தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
    “ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
    “இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
    அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
    வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

புதன், 24 செப்டம்பர், 2014

மனித உறவுகள் மேம்பட 20 வழிகள்!!



1.நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.

3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்.

4. விட்டுக் கொடுங்கள்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.

10. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா செய்திகளையும் நம்பி விடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

15. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

17. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

20. பிரட்சனை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

படித்ததைப் பகிர்ந்தேன்

அருணா செல்வம்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பொறுப்பு!! (நிமிடக்கதை)


   “ஏங்க.... உங்க தம்பிக்கு கல்யாணம் வச்சிருக்கிற இந்த நேரத்துல எதுக்கு உங்க அம்மாவோட நகைகளையெல்லாம் வித்து இவ்வளவு அவசரமா அப்பாட்மெண்டு வாங்குகிறார் உங்க அப்பா....?“
   குமுதா தன் மாமானாரிடம் நேருக்கு நேராக கேட்க முடியாத கேள்வியைத் தன் கணவனிடம் கேட்டாள்.
   “இது என்னம்மா கேள்வி.... நம்ம வீட்ல ரெண்டு ரூம்தான். ஒன்னுல நாம ரெண்டு குழந்தைங்களோட இருக்கிறோம். இன்னொன்னுல அப்பா அம்மா இருக்கிறாங்க. புதுசா கல்யாணம் பண்ணிக்கிற தம்பியும் அவன் பொண்டாட்டியும் எங்க தங்குவாங்க...? அதனால தான் அப்பா அவ்வளவு அவசரமா இந்த அப்பாட்மெண்டைத் தம்பிக்காக வாங்குகிறார்ன்னு நினைக்கிறேன்“ என்றான்.
   “வாங்கலாம் தாங்க. அதுக்கு இவ்வளவு அவசரமா நகைகளை எல்லாம் வித்து வாங்கனுமா....? கொஞ்ச காலத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் இல்ல...“ என்றாள் குமுதா.
   “என்ன குமுதா பேசுற? தம்பி என்ன என்னை மாதிரி அப்பாவோட மளிகை கடையிலா வேலை செய்யிறான்...? நல்ல வேலையில கைநிறைய சம்பாதிக்கிறான்.  தவிர வர்ற பொண்ணு நல்லா படிச்சவ. கொஞ்சம் வசதியான குடும்பத்துல இருந்து வருது. அதுக்கு இந்த வீடு சரிபடுமா? அப்பா எல்லாத்தையும் பொறுப்பா யோசிச்சி தான் முடிவு பண்ணுவார். பேசாம தூங்கு...“ என்று சொல்லிவிட்டு அவன் தூங்கிப் போனான்.
   அவன் சொல்வதும் உண்மைதானே.... மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து அதிக படிப்பும் இல்லாமல் இந்த வீட்டில் வாழ வந்த தனக்கு இதையெல்லாம் கேட்கக்கூட தகுதி இருக்கிறதா... என்று எண்ணிய படி அவளும் உறங்கிப் போனாள்.

   “குமுதா.... நான் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றேன். நீ கிளம்பி ரெடியா இரு“ என்றார் மாமா காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே.
   “எங்க மாமா போறோம்....?“ குமுதா கேட்டாள்.
   “ரிஜிஸ்டர் ஆபிசுக்குமா. இப்போ கடைக்குப் பக்கத்திலேயே ஒரு அப்பாட்மெண்ட் வாங்க இருக்கிறேன் இல்லையா... அதை உன் பேருக்குத் தான் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன். நீ கிளம்பி இரு. நான் வந்து அழைச்சிக்கினு போறேன்“ என்று சொல்லிபடி கையலம்பினார்.
   “என் பேருக்கா.... அந்த அப்பாட்மெண்டை உங்க சின்ன பிள்ளைக்கு வாங்கிறதாக தானே அவர் சொன்னார்“ சற்றுத் தயங்கியே கேட்டாள் குமுதா.
   “இல்லைம்மா. இந்த அப்பாடமெண்டை உங்களுக்காகத் தான் வாங்கறேன்“ என்றார்.
   மனம் சட்டென்று மகிழ்ந்தாலும், சற்று மன உறுத்தலுடன்... “எதுக்காக மாமா இவ்வளவு அவசரம்? கல்யாணம் முடிஞ்ச பிறகு கொஞ்சம் பொறுமையா பணம் சேர்ந்த பிறகு வாங்கலாமே. இவ்வளவு அவசரமா நகையெல்லாம் வித்து வாங்கனுமா...?“ கொஞ்சம் கவலையுடன் கேட்டாள்.
   “அவசம் தான்மா. நீ வந்ததிலிருந்து எங்களோட சேர்ந்து இருந்து நம்ம குடும்பத்தோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிகிட்ட. உனக்கு குடும்பத்தை எப்படி அனுசரிச்சி போகனும் என்ற அனுபவம் வந்திடுச்சி. இனி நீங்க தனியா இருந்து குடும்ப பொறுப்புகளைச் சுமக்கனும். அது தான் நல்லது. இனிமே புதுசா வர்ற பொண்ணு உன் இடத்துல இருக்கட்டும். அவளும் இந்த குடும்பத்தோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிகிட்டும். கொஞ்ச காலம் கழிச்சி அவங்க தனியா போறதுன்னா போகட்டும்.
   அது மட்டுமில்லாமல்  நீ இங்க இருந்தா... எப்போதும் போல நீயே எல்லா வேலையையும் செய்வ. சில நேரங்களில் அதுவே ஈகோவா மாறும். அதுவும் சரிபடாது. நீ இங்கே இருந்தா புதுசா வர்ற பொண்ணுக்குக் குடும்ப பொறுப்பு வராது. அதனால தான் இவ்வளவு அவசரமா இந்த வீட்டை வாங்குறேன். பத்து மணிக்கு கிளம்பி இரு. கல்யாணத்திற்கு முன்பு அடுத்த வாரத்திலேயே புதுமனை புகுவிழா வச்சிடலாம்....“ என்று சொல்லியபடியே.... கிளம்பிச் சென்றார்.
   தன் அப்பா எந்த முடிவு எடுத்தாலும் பொறுப்பாக யோசித்தே நல்ல முடிவாக எடுப்பார் என்று தன் கணவன் சொன்னதின் உண்மை புரிந்து மகிழ்ந்தாள் குமுதா.

அருணா செல்வம்

14.08.2014

வியாழன், 24 அக்டோபர், 2013

தீபாவளி வேண்டும்!!



மேல் மட்ட மக்கள்!!

வருடம் முழுதும் செய்த பாவத்தை
ஒருநாள் வந்திடும் கங்கையில்
குளித்துக் கழுவிவிட்டு,
சூரியோதயம் காணாத கண்களால்
சூரிய நாராயணுக்காகப் படைத்துப்
பணம் இருக்கும் பகட்டைப்
பலகாரத்தில் காண்பித்து,
வயிறார உண்ண முடியாமல்
வந்திருக்கும் நோயிக்குப் பயந்து,
பிச்சையிட வேண்டுமானாலும்
பிறரைக் கூட்டிக் காண்பித்துப்,
பகவானைக் கண்டிட
பகட்டு நகையுடையுடன்
மிடுக்காய்ச் சென்றிடுவார்...
மிகையானவருக்குத் தீபாவளி!!

நடுத்தர மக்கள்!!

கௌரவம் பார்த்துக்
குடும்பம் நடத்திக்
கரன்சியைக் கடவுளாக்கிக்
காய்ந்த வயிற்றைத் தடவி
பக்கத்து வீட்டுக்காரனை விட
பகட்டாகக் காட்டிக்கொண்டு,
வருடத்தில் ஒருமுறை
வந்திடும் போனஸ் பணத்திற்கு
ஓராயிரம் பொருள் வாங்க
கற்பனை செய்து கொண்டு,
ஒன்றும் வாங்க முடியாத
விலைவாசி உயர்வைக் கண்டு,
ஆசையாக காத்திருக்கும்
பிள்ளைக்குக் கூட கொடுக்காமல்
அடுத்த வீட்டு பலகாரத்தைப்
பெருமையுடன் இன்னொரு வீட்டுக்குக்
கொடுத்தனுப்பி விட்டு,
“யார் கொளுத்தினாலும்
பட்டாசு கரியாகும்“ தானென்று
உயர்வான தத்துவத்துடன்
அடுத்தவர் வெடியைக் காண்பித்தே
ஆறுதல் அடைந்து,
அடுத்த தீபாவளியைச்
சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற
சிந்தனையுடன் போகும் தீபாவளி!!

கீழ் மட்ட மக்கள்!!

வருடத்தில் ஒருநாளாவது
புத்தாடை அணிந்து,
புதுப்படம் பார்த்துவிட
கையிருப்பைக் கரைத்து,
மேலும் கடன்வாங்கி
காய்ச்சியதைக் குடித்துவிட்டு,
கறிமீன் ருசிபார்த்து
“நரகாசுரனா...? யார் அவன்?
அவனை அழிக்க
அவதாரம் எதற்கு?
என்னெதிரில் வரச்சொல் அவனை
ரெண்டுல ஒன்னு பாக்குறேன்...“ என்றும்,
“இன்னா தைரியம் இருந்தா
மக்கள கொடும படுத்தினான்....
.......! ஏய்... நரகாசுரா...
என் எதுருல வாடா...“
கட்டியிருந்த புது வேட்டி
கழண்டு விழுவதையும்
இலட்சியப் படுத்தாமல்.....

இவனுக்காகவே
“தீபாவளி“ என்று ஒருநாள்
திருநாளாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்
07.11.2010


(“தீபாவளி திருநாள் அவசியம் தானா?“ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, பதிலாக நான் எழுதிய புதுக்கவிதை இது. நன்றி)