Thursday, 18 October 2012

பெருமாளே... பெருமாளே...!! (நகைச்சுவைக் கதை)

       “என்னப்பனே... பெருமாளே.... நீதானப்பா என்னைக் கடைசிவரைக்கும் காப்பாத்தனும். உன்ன நம்பி தானப்பனே என்னோட பிசுனஸ் குடும்பம் எல்லாத்தையும் நல்லபடியா நடத்துறேன். மீதி இருக்கும் காலத்தையும் நீதானப்பா நல்லபடியா நடத்தித் தரணும்... என்னப்பன் பெருமாளே... உன்ன நம்பிதான்பா நானிருக்கேன்....
     தலைக்கு மேல்கையைத் தூக்கி கும்பிட்டுவிட்டு கண்களைத் திறந்தார் நீலநாராயணன். எதிரில் வெலைக்காரன் நின்றுகொண்டு கூப்பீங்கிளாய்யா....என்றான் அவசரமாக.
    சாமி கும்பிட்டு கண்களைத் திறந்ததும் இவன் முகத்தல விழிச்சிட்டோமே என்ற ஆத்திரத்துல உன்னை யாருடா கூட்டா.... மூதேவி. எதுக்குடா இங்க வந்த...?“ அவனிடம் கத்தினார்.
    “ஐயா... நீங்க தான என் பேரவுட்டு கூட்டீங்க... அதான் ஏதோ அவசரம்ன்னு சாப்ட்டத கூட வுட்டுபோட்டு ஓடியாந்தேங்க..என்றான் பெருமாள்.
    அவன் மேல தப்பில்லை. அவன் பேரே பெருமாள். கிராமத்தாள். அவருக்குப் புரிந்ததும் கோபம் சற்று குறைந்து போய் சாப்பிடுடாஎன்றார். அவன் போனான்.
    அவர் அங்கிருந்த அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு ஈசிசேரில் உட்காரும் பொழுது அப்பா... பெருமாளே....என்று சொல்லிக்கொண்டே அமரவும் பெருமாள் கூப்டீங்களா ஐயா...என்று திரும்பி வந்தான். போடா.... போ!”  இந்த முறை சற்று கோபமாக அவர் கத்தவும் அவன் பயந்து போய் நகர்ந்தான்.

    அன்று மதியம் தொலைபேசியில் வந்த விசயத்தைக் கேட்டு கொஞ்சம் மனம் கலங்கியவர் என்னப்பனே... பெருமாளே... நீதான்பா இந்த பிரட்சனையிலிருந்து என்னைக் காப்பாத்தணும்... என்று அந்தப் பெருமாளை வாய்விட்டு தியானிக்கவும் இந்தப் பெருமாள் என்னங்கையா... எங்கிட்ட போயி கெஞ்சிக்கினு.... இத செய்யிடான்னா செய்யப்போறேன்... சொல்லுங்கையா... என்ன செஞ்சி உங்கள காப்பாத்துணும்....?“ பவ்வியமாக நின்றான் வேலைக்கார பெருமாள்.
     அவருக்குக் கோபம் தலைக்கேறியது. ஏன்டா அறிவுகெட்ட பெருமாளு... உங்கிட்டையா ஒதவி கேட்டேன் நானு? தராதரம் தெரியாதவனே...போ. போயி வேலைய பாரு....கோபத்துடன் அவர் கத்தவும் ஐயா... கத்தாதீங்க. உங்களுக்கு பிரசர் ஏறிடும். நான் போயி தண்ணீ கொண்டாறேன். சொல்லிக் கொண்டே ஓடினான்.
    பெருமாள் கோவிலுக்குப் போய்வந்த அவர் மனைவி பங்கஜம் வீட்டினுள் நுழைந்த்தும்
    “எங்க அந்தப் பெருமாள் முண்டம்...? கோயிலுக்கு போயிட்டு வர்ரேன். செறுப்பை இங்கேயே இருந்து பாத்துக்கோ பெருமாள்ன்னு சொல்லிட்டு நிக்க வச்சிட்டு போய்வந்து பாத்தா என் செறுப்பைத் தூக்கித் தலையில வச்சிக்கினு பெருமாள் கோயில் மாடுமாதிரி ஒக்காந்துக்குனு இருக்கான். கேட்டதுக்கு வெயிலா இருக்குதாம்... அதுக்கு நெழல்ல போயி நிக்க வேண்டியது தானே... இந்த பெருமாளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லைங்க. பேசாம அவனை ஊருக்கே அனுப்பிடுங்க...மனைவி சொல்லிவிட்டுச் சென்றாள்.
    நீலநாராயணன் யோசித்தார். பெருமாள் நல்லவன். கிராமத்தான். வெள்ளேந்தி. ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது யாரையோ பார்க்க வந்தவன் நடக்க முடியாமல் தள்ளாடி விழ இருந்த சமையத்தில் அவர் எப்போதும் கூப்பிடும் பெருமாளைக் கூப்பிட்டுக்கொண்டே விழவும் அவர் விழுந்து விடாமல் இவரைத் தாங்கிப் பிடித்ததில் இருந்து இவர் மனத்தில் இடம்பிடித்து விட்டான். விசாரித்த்தில் வேலை தேடி வந்தவன் என்பது தெரிந்ததும் அவனை  எடுபிடி ஆளாகச் சேர்த்துக் கொண்டார். எதைச் சொன்னாலும் செய்தான்.
     அவனை அனுப்பிவிட அவருக்கு விருப்பமில்லை. அதே சமயம் அவர் வணங்கும் பெருமாளைக் கூப்பிட்டால் இவன் வந்து நின்று விடுகிறான். கோபத்தில் திட்டவும் முடிவதில்லை. அவனைத் திட்டும் பொழுது அந்த பெருமாளையேத் திட்டுவது போல் இருக்கும் அவருக்கு. என்ன செய்வது? யோசித்தார்.
     முடிவுக்கு வந்ததும் அவனைக் கூப்பிட்டார். வந்து பவ்வியமாக நின்றான். 
    பெருமாளு... இன்னையிலேர்ந்து உன்பேர குப்பன்னு மாத்திட்டேன். இனிமேல குப்பன்னு கூப்பிடும் போது மட்டும் வந்தா போதும்என்றார்.
    குப்பனா... மனம் ஏத்துக்க வில்லை.
    பெருமாளுக்குக் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டு சொன்னான்.
    “ஐயா... அது முடியாதுங்க. எங்க ஊருல கொலதெய்வத்துக்கு பொங்க வச்சி வச்ச பேருங்க. பேர மாத்துனா தெய்வ குத்தம் ஆயிடுங்க.என்றான்.
    “அப்போ... நீ வேலைய விட்டு போயிடு.என்றார். அவருக்குத் தெரியும். என்ன சொன்னால் எது நடக்கும் என்று. பெருமாளுக்குப் புரிந்தது.
     “ஐயா... பேர மாத்தனும்மின்னா திரும்பவும் கொலதெய்வத்தக்கு பொங்க வச்சி குறி கெக்கனுங்க. அது என்ன பேர சொல்லுதோ அதை தாங்க வைக்கனும். அதுக்கு ஒரு மூவாயிரம் செலவாகுங்க. நான் எங்கங்க போவேன்? எனக்கு ஒங்கள வுட்டு போவ மனசில்லங்க. பேர மாத்தி நீங்க கூப்பிட்டா ஒங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமாயிருக்குங்க.என்றான் பணிவாக.
    அவர் யோசித்தார். தெய்வ நம்பிக்கை மிக்கவர். அதே சமயம் அவனை உண்மையிலேயே வேலையை விட்டு அனுப்ப அவருக்கு விருப்பமில்லை. எப்படியாவது பேரை மாத்தினா போதும் என்று நினைத்தவர் பணத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
   
     ஒருவாரம் கழித்து வந்தான்.
     “என்னப்பா... உன் குலதெய்வம் பேர மாத்த ஒத்துக்கிச்சா...?“ கேட்டார்.
     ஒத்துக்காம.... மூவாயிரமில்ல செலவு பண்ணிருக்குது. ஒத்துக்க வச்சாச்சி. என்றான்.
     “அப்போ என்னன்னு பேரை மாத்துனாங்க....?“ அவசரமாகக் கேட்டார் நீலநாராயணன்.
     கொலதெய்வத்துக்கு பொங்கல்லாம் வச்சி படைச்சிட்டு பெரிய பெருமாள்ன்னு பேர மாத்திட்டாங்கய்யா...என்றான் வேலைக்கார பெருமாள்.
     அவர், “ என்ன... பெரிய பெருமாளா....? ஐயோ... பெருமாளே... பெருமாளே... என்று தலையில் அடித்துக்கொண்டார்.
     பெருமாள் ஒன்றும் தெரியாதது போல் சிரித்துக்கொண்டான்.


அருணா செல்வம்.