வியாழன், 24 மார்ச், 2016

வண்ண மீன்கள்!!கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசி
    தின்று முடிக்கக் காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.

சனி, 19 மார்ச், 2016

கண்ணதாசன்!
படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற
    பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக
நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி
   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்
குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்
   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்
வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை
   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!

கல்லுக்குள் தேரைபோன்று கவிதைக் குள்ளே
   கருத்தாழ உயிரைவைத்தான்! காதல் பொங்கும்
இல்லுக்குள் இனிமைபோன்றே உயிருக் குள்ளே
   இன்னிசையாய் உருகவைத்தான்! தமிழில் உள்ள
சொல்லுக்குள் சுவைபோல நினைத்துப் பார்க்கச்
   சொக்குகின்ற நிலைவைத்தான்! நிலைத்தி ருக்கும்
நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்
   நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!

கண்ணனுக்குத் தாசனானான்! கவிதைத் தாயின்
   கனிநெஞ்சில் இளையனானான்! இசையின் மன்னன்
பண்ணுக்குப் பொருளானான்! டி.எம். எஸ்சின்
   பாட்டிற்குக் குரலானான்! வினியோ கர்தம்
எண்ணத்தில் பணமானான்! காதல் செய்யும்
   இளையவர்க்கோ இதயமானான்! கவிகள் நெஞ்சில்
வண்ணமிடும் பாவலனின் புகழைச் சொல்ல
   வார்த்தையினைத் தேடுகிறேன் தமிழில் நானே!


அருணா செல்வம்

சனி, 12 மார்ச், 2016

நினைவுகள்!!


இன்று வாழும் வாழ்க்கையிலே
       இனிய வைகள் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வுதனின்
       அழிக்க முடியா நினைவுகளே!
நன்று, அல்ல என்றாலும்
       நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
       இயங்க வைக்கும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
       பிறித்து அறிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
       கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
       காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாத
       தழைத்து வளர்ந்த நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
       சொக்க வைத்தச் செந்தமிழும்
வல்லப் புகழின் முதலடியாய்
       வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்கும்
       மேனி தொட்ட அந்நாளும்
நல்ல வையாய் முன்வந்து
       நடன மாடும் நினைவுகளே!

நல்லார் என்று நினைத்தவரோ
       நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
       கருணை அற்று நடந்ததையும்
பொல்லா பழியைப் பிறர்சுமக்க
       பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லா காலச் சுவடுகளாய்
       நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
       மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
       எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
       உலகிற் கதனைக் காட்டாமல்
விண்ணில் மறையும் நாள்வரையில்
      கண்ணுள் மின்னும் நினைவுகளே!


அருணா செல்வம்

ஞாயிறு, 6 மார்ச், 2016

புதுமைப்பெண்!!தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்ங்கிணற்றில் நீந்து கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!

போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
    புதுமுறையில் போராடி வெற்றி காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
    சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில் கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
    நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
    குளிர்தமிழில் இவ்வாராய்ச் சொல்தல் நன்றே!

இதுதானே பண்பாடு என்று நம்பி
    இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
    ஆண்களிதைக் கையாண்டே அடக்கி விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
    முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
    மாறிவிட்ட நிலையிலது நன்மை இல்லை!

கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
    காலமெல்லாம் காத்திருக்கும் மூடன் போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
    முயற்சியின்றிப் பயந்துநின்றே வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும் வார்த்தை!
    சூடேற்றி அச்சொல்லை உரக்கக் கூறு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
    தரணிபோற்ற பிறந்ததைநீ சொல்வாய்ப் பெண்ணே!

பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
    பொதுப்படையாய் பெரியோர்கள் சொல்லி வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
    மல்லிகையாய்ப் பிறந்துவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
    ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக் கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
    கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!

சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
    சுயமாகச் சிந்தித்தே அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
    வீறுகொண்டே எழுந்தோடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
    தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச் செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை?
    அதைக்கூட அடிமையாக்கி புதுமைக் காண்போம்!

புதிதாகப் பூப்பதுதான் புதுமை என்றும்
    பொதுப்படையாய் யார்சொல்லும் நம்பி டாதே!
உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
    உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
    மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப் போகும்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
       புதியாகச் சிந்தித்தால் போதும் கண்ணே!அருணா செல்வம்

வெள்ளி, 4 மார்ச், 2016

இறைவன், அவன் எங்குள்ளான்?இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
    இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
    மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
    கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
    நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
    எம்மதத்தில் உள்ளதென்று அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
    உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே இருக்கக் காண்பார்!
    பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தில் மறைந்திருக்கும் மழையைப் போல
    கருணையெனும் கடவுளையே தம்முள் காண்பார்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
    அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
    பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
    உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையெனும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைதோன்றும் அவனுக் குள்ளே!!


அருணா செல்வம் 
04.03.2016

புதன், 2 மார்ச், 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! – 5    ‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ?‘‘
    ‘‘ஆறாவதுக்கா….‘‘
    ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே….
    ‘‘ஆமக்கா…. என் அம்மாவுக்கு ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். நான் ஒரே பொண்ணுன்னதால என்னை நல்லா படிக்க வைக்கனும்மின்னு நெனச்சாங்க. அப்பா வயல்ல கூலி வேல செய்றவரு. எப்படியோ ஆறாவது பாஸ் பண்ணினேன். அப்போ மஞ்சா காமாலையால அம்மா செத்துட்டாங்க. அதோட அப்பா குடிக்க ஆரமிச்சிட்டாரு. காரியத்துக்கு வந்த சொந்தக்காரு வீட்டு வேலைக்கு ஆள் வேணும், மரிக்கொழுந்த அனுப்பறியான்னதும் என் அப்பா ஒடனே அனுப்பிட்டாரு.
    அந்த சொந்தக்காரர் தான் என்னை ஒரு வீட்டுல வேலைக்கி விட்டாரு. பத்து வருஷமா அங்கேயே இருந்தேன். போன வருஷம் அப்பா சாவக் கெடக்கிறார்ன்னு ஊருலேர்ந்து தெரிஞ்சவர் ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு.
    என்னதான் கோபம் இருந்தாலும் அப்பா என்ற பாசம் விடுமா ? கிராமத்துக்கு வந்து, நான் வேலைசெஞ்ச வீட்டு மொதலாளி அம்மா கொடுத்த பணத்துல அப்பாவுக்கு வைத்தியம் பாத்தேன். பொழச்சிக்கிட்டாரு. அப்புறம் ஒழுங்கா வேலைக்குப் போச்சி. என்னைத் திரும்பவும் வேலைக்கி அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் தான் மாமா வந்து பொண்ணு கேட்டாரு. யாரு எவருன்னு தெரியாம கட்டிக் கொடுத்திட்டாரு என் அப்பா…..‘‘
    தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொன்னாள் மரிக்கொழுந்து.
    சுயசரிதை எழுத வேண்டியவங்களுக்குத் தான் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றிய கவலை இருக்கும். 
    ‘‘யாரு எவருன்னு தெரியாம ஒண்ணும் உன்னைக் கட்டிவக்கல. தெரிஞ்சி தான் கட்டிவச்சாரு…‘‘
    ‘‘எப்படி ?‘‘
    ‘‘உனக்கு சின்னய்யாவைத் தெரியுமோ இல்லையோ… உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். உன் கிராமத்துல சின்னய்யா அவரோட நண்பரைப் பார்க்க வந்த போது தான் திருவிழாவுல உன்ன பார்த்தாராம். நீ வேற மூக்கும் முழியுமா நல்ல நெறமா லட்சணமா இருந்தியா…. சரி வேலுவுக்குக் கேட்டுப் பார்க்கலாமேன்னு உன் அப்பாகிட்ட கேட்டிருக்காரு. சின்னய்யா என்றதும் உன் அப்பா மறுபேச்சு பேசலையாம். ஒடனே ஒத்துக்கிட்டார்.‘‘
    ‘‘ஓ…. அப்படியா…. ?‘‘
    அப்போது தான் அவளின் கல்யாணத்தின் ரகசியமே புரிந்தது. வேலு வந்ததும் இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊருக்குச் சொல்லிவிட்டு மறுநாளே கல்யாணம் செய்து ஊர் உறவுகளுக்குச் சாப்பாடு போட்டு, எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று நினைத்திருந்தாள். ஓ ! இங்கிருந்து வந்தது தானா அது…. !

    ஆச்சரியமும் அதிசயமுமாகக் கண்களை விரித்துச், சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் கணவனிடம் கேட்டாள் மரிக்கொழுந்து.
    ‘‘ஆமா. எல்லாம் சின்னய்யா தான் செஞ்சாரு. இல்லைன்னா இந்த அனாதைக்குக் கல்யாணமா காட்சியா ?‘‘ என்றான் வேலு.
    எங்கே பிறந்தவளுக்கு எங்கே வாழ்க்கைப் படணும்ன்னு இருக்கிறது…. எப்படியோ நல்லவனாக அமைஞ்சதில் மகிழ்ச்சி தான் என்று எண்ணியபடி பரிமாறினாள்.
   
     அன்றிலிருந்து வேலு சாப்பிடும்போது கோபமாகவே பேசியதில்லை. ஏன் ? எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் ? எந்தத் தவற்றையும் உடனுக்குடன் திருத்தும் ஆசிரியை கூடவே உள்ளவரை.
     அவள் படிப்பாள் என்ற விசயம் ஊருக்கேத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் டவுனில் வளர்ந்ததால் கிராமத்துக்கே உரிய நடை உடை பாவனையில் இருந்து மாறுபட்டவளாகத் தெரிந்தாள் மரிக்கொழுந்து.
    அதனாலோ என்னவோ அந்த ஊர் மக்கள் அனைவருமே அவளிடம் நல்லவிதத்தில் பழகினார்கள்.
    அவள் எங்கேயாவது வெளியில் போகும் போது, ‘‘மரிக்கொழுந்து இந்தக் கடிதாசியைக் கொஞ்சம் படிச்சிக் காட்டேன். என்மகன் வெளிநாட்டிலேர்ந்து எழுதி இருக்கான்….‘‘
    ‘‘மரிக்கொழுந்து இந்த மளிகைக் கணக்கைக் கொஞ்சம் சரி பாரேன். சரியா போட்டிருக்கானான்னு….‘ இப்படிச் சொல்லி மளிகை கணக்குத் தாளை நீட்டவார்கள்.
    ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாகவே பழகினார்கள். ‘இந்தா மரிக்கொழுந்து மல்லாட்டை அவிச்சேன். உனக்கு எடுத்து வச்சேன். சாப்பிடு‘‘ என்பார்கள்.
    இப்படி ஏதோ ஒரு விதத்தில் எல்லோருமே அன்பாக இருப்பதாகப் பட்டது அவளுக்கு.
    அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்று நினைத்தாள், குமாரசாமியைப் பார்க்கும் வரை.
    குட்டை மீசையும், தொப்பை வயிற்றையும் வைத்துக்கொண்டு மார்பு தெரிய பட்டுஜிப்பா போட்டுக்கொண்டு திரியும் குமாரசாமியை நினைக்கும்போது மரிக்கொழுந்துக்குப் பயமாக இருந்தது.

    பகல் மூன்று மணியளவில் எந்த வேலையும் இருக்காது. அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் கண்ணயர்வது வழக்கம்.
    அப்படிப்பட்ட நேரங்களில் மரிக்கொழுந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது புத்தகம் படிப்பதோ, பூக்கட்டுவதோ, சிறுசிறு கற்களைப் பொறுக்கி சுங்கரங்காய் விளையாட்டு விளையாடுவதோ…. என்று பொழுதைப் போக்குவாள்.
    அப்படி ஒருநாள் தனியாக உட்கார்ந்து கொண்டு கற்களைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தவள், ஊர் பெண்கள் ஐந்தாறு பேர்கள் துணி மூட்டையைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து ‘‘எங்கே போகிறீர்கள் ?‘‘ என்று கேட்டாள்.
    ‘‘மரிக்கொழுந்து நாங்கள் எல்லாம் ஆத்துக்குப் போறோம். போய் துணி துவச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வருவோம். நீயும் வரியா… ?‘‘
    அவர்களில் ஒருத்தி இப்படிக் கேட்டதும், மரிக்கொழுந்துவிற்கு மனம் குதூகலமானது. உடனே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.
    எப்போதோ அம்மாவுடன் ஆற்றில் குளித்தது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் அம்மா கரையில் உட்கார்ந்து கொண்டு துணிதுவைத்துக் கொண்டிருப்பாள். இவள் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டுக் குளிப்பாள்.
    அந்த நாட்களில் சகவயது தோழிகள் நீச்சல் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் இவள் நன்றாக நீச்சல் அடிப்பாள். அதன் பிறகு அம்மா இறந்த பிறகு இவள் ஆற்றில் குளிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. நகரத்தில் எங்கே ஆறு இருக்கிறது ?
    ஏதாவது படங்களில் ஆற்றைக் காட்டினால் ஆசையாகத் தான் இருக்கும். குதித்து நன்றாக நீச்சல் அடிக்க வேண்டும் என்று, முடியுமா என்ன ?
   மனத்தில் பூட்டி வைத்த ஆசைகள்…. சந்தர்ப்பம் கிடைத்ததும் நன்றாக நிறைவேற்றிக் கொண்டாள். தண்ணீரை விட்டு வேளியே வர மனம் வரவில்லை.
    அவளுடன் வந்தவர்கள் எல்லோரும் துணி துவைத்துக் காயவைத்து அவர்களும் குளித்து முடித்து, மீண்டும் காய்ந்த துணிகளை உடுத்திக்கொண்டு, மற்றதை மடித்து மூட்டையாகக் கட்டிக்கொண்டார்கள்.
    அதுவரையிலும் தண்ணீரை விட்டு மரிக்கொழுந்து வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த மல்லிகா சற்றுக் கோபமாகவே கூப்பிட்டாள்.
    ‘‘யேய் மரிக்கொழுந்து , வரப்போறியா இல்லையா ? நாங்க போறோம். வீட்டுல எங்க ஆத்தா தேடும்.‘
    ‘‘நீங்க வேணா போங்க. எனக்கு வழி தெரியும். நான் அப்புறமா வர்றேன்…‘‘ என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனாள்.
    அவர்களெல்லாம் கிளம்பிப்போய் சூரியன் மறையத் தொடங்கி இலேசான குளிர் காற்று வீசத்தொடங்கிய போது தான் மரிக்கொழுந்துவிற்கு வீட்டுக்குப் போகணும் என்ற எண்ணம் வந்தது.
    வழியை வரும் போது பார்த்துக் கொண்டு தான் வந்தாள். திரும்பவும் சரியான வழிதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.
    ஆற்றின் கரையைக் கடந்தால் ஒரு கற்றாழைக் காடு வரும். அதைத் தாண்டினால் கொஞ்சம் தூரம் வயல் இருக்கும். அதற்கு நடுவில் ஒரு வாழைத்தோப்பு. வாழைத் தோப்புக்குள் நுழைந்து வெளியேறினால் திரும்பவும் வயல்காடு. அதையும் தாண்டினால் ஊர் வந்துவிடும்.
    மனத்தில் எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஈர உடையுடன் இருந்ததால் இலேசாகக் குளிர ஆரம்பித்தது. கற்றழைக் காட்டையும் வயலையும் தாண்டும் போதே ஈர உடையும் தலைமுடியும் ஓரளவிற்கு காய்ந்து விட்டிருந்தது.
    வாழைத்தோப்பில் நுழைந்ததும் ஒருவித மகிழ்ச்சி மனத்துள் வந்து புகுந்துக்கொண்டது.
    அந்த மகிழ்ச்சியில் ஏதோ ஒரு சினிமா பாடலைப் பாடியபடியே போனவளை, ‘‘இந்தா புள்ள நில்லு‘‘ என்று வந்த ஆண் குரலைக் கேட்டு சட்டென்று நின்றாள்.
    அந்தக் குரலுக்குரியவனைப் பார்த்த போது கிராமத்துப் பண்ணையார் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளோ அத்தனை லட்சணங்களையும் கொண்டிருந்தான் குமாரசாமி.


(தொடரும்)