வெள்ளி, 31 மே, 2013

தெரிந்தால் சொல்லுங்கள்!! (நசைச்சுவை)





நட்புறவுகளுக்கு வணக்கம்.
   போனவாரம் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அதனுடைய முடிவையும் உங்களிடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று இந்தப் பதிவைக் கொடுக்கிறேன்.
   நாங்கள் நான்கு தோழிகள். எப்பொழுதாவது விடுமுறையில் ஒன்றாக யாராவது ஒரு வீட்டில் சந்தித்துக் கொள்வது வழக்கம். போன வாரத்தில் அப்படித்தான் ஒருநாள் சந்தித்துக் கொண்டோம். பொதுவாக ஆண்களைத் தனியாக அனுப்பிவிட்டு பெண்கள் மட்டும் ஒரே அறையில் இருந்து கொண்டு அரட்டை அடிப்போம். அந்த அரட்டை விடிய விடிய நடக்கும். அதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியான பொழுதுகள்!!
    அப்படித்தான் போன இரண்டு வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசிய போது..... இன்று எதைப் பற்றி பேசலாம் என்று யோசித்ததும்... நான் சொன்னேன்.... “இன்று ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம்“ என்று.
    அனைவருக்கும் அதிர்ச்சி! “என்னது... ஆன்மீகமா...? என்ன ஆச்சி உனக்கு?“ என்றார்கள் ஆச்சர்யமாக!
    உண்மையில் நான் எந்த அளவிற்கு ஆன்மீகப் பற்று உள்ளவள் என்று அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆன்மீகவதியும் இல்லை. அதே சமயம் நாத்தீகவாதியும் இல்லை. ஏதோ ஒரு சக்தி மட்டும் நம்மைவிட மேலானதாக இருக்கிறது. அதற்காக அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவள்.
   இப்படிப்பட்ட நான் ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம் என்றதும் அவர்களுக்கு அதிர்ச்சி. நானும் என் நிலையை எடுத்துச் சொன்னேன். “இன்னும் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியில் “ஆன்மீகம்“ என்ற தலைப்புக் கொடுத்துப் பேச சொல்லி இருக்கிறார்கள். எனக்கு ஆன்மீகத்தைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. யாருக்காவது தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கள்“ என்றேன்.
    உடனே ஒரு தோழி, “அருணா... நான் ஒரு ஆன்மீகக் கதை சொல்கிறேன். நீபோய் மேடையில் சொல்லிவிட்டு கூட கொஞ்சம் உனக்குத் தெரிந்ததைப் பேசிவிட்டு வந்துவிடு“ என்றாள்.
    நானும் உடனே மகிழ்ந்து “சொல்லுப்பா....“ என்று ஆவலாக கேட்க அமர்ந்தேன். மற்ற தோழிகளும் ஆர்வமானார்கள். இவள் தொடங்கினாள். “ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இவர்களைப் பார்க்க உறவினர் ஒருவர் வந்தார். அவர் ஒரே ஒரு பழம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பார்த்துவிட்டுச் சென்றார்“ என்று நிறுத்தினாள்.
   எனக்கு உடனே புரிந்து விட்டதால்... “போதும்பா உன் ஆன்மீகக் கதை. இதுக்கு மேல ஏதாவது சொன்னால் உனக்கு உதைதான் விழும்“ என்றேன் ஏமாற்றமாய்.
   உடனே மற்ற தோழிகள், “உனக்குக் கதை தெரியும் என்றால் நீ பேசாமல் இரு அருணா. நாங்கள் கேட்கிறோம்“ என்றார்கள் என்னை அதட்டி. நானும் பேசாமல் சிரித்துக்கொண்டு இருந்துவிட்டேன்.
    இவள் தொடர்ந்தாள். “அப்போ... அந்த வீட்டு அம்மா சொன்னாள்.. பழம் மிகவும் பழுத்து விட்டது. சரியாக வெட்ட முடியாது. அதை யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாள். அப்பா யோசித்தார். மகன்களை அழைத்து யாருக்கு இந்தப் பழம் வேண்டும் என்றார். இருவருமே தனக்குத் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். உடனே அப்பா ஒரு பந்தயம் வைத்தார்.
   யார் இந்த ஊரை முதலில் சுத்தம் செய்துவிட்டு வருகிறார்களோ அவருக்குத் தான் இந்தப் பழம் என்றார். உடனே இளைய மகன் சுத்தப்படுத்தவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிபோய் சுத்தப்படுத்தி விட்டு வந்தான். வந்து பார்த்தால்.... அப்பா பெரிய மகனுக்குப் பழத்தைக் கொடுத்து விட்டது தெரிந்தது. அதனால் அதிகமாக கோபம் வந்திடுச்சி. உடனே தன் அப்பாவிடம் போய் ஏன் இப்படி செய்தீர்கள்?“ என்று கேட்டான்.
    அதற்கு அப்பா “பெரியவன், ஊரைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்றால் முதலில் நம் வீட்டைச் சுத்தமாக வைக்க வேண்டும்... என்று சொல்லிவிட்டு நம் வீட்டைச் சுத்தப்படுத்தி விட்டு பழத்தைப் பெற்றுக்கொண்டான். ஊரைச் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் முதலில் நம் இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்தாலே ஊரு தாமாக சுத்தமாகும் என்ற அவனது கருத்து எனக்குப் பிடித்தது. அதனால் அவன் தான் போட்டியில் வென்றவன்“ என்றார்.
    உடனே சின்ன மகன் கொபத்துடன் வீட்டை விட்டு வெளியில் போய்விட்டான்“ என்று சொல்லி நிறுத்தினாள். மற்ற இருவரும் மிகவும் உன்னிப்பாக கதையைக் கவனித்துக்கொண்டு இருந்ததைக் கண்டு எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் சிரித்ததுக் கண்டு அவர்களுக்குக் கோபம் வேறு வந்துவிட்டது. “ஏன் அருணா சிரிக்கிற...? கதை நல்லா தானே இருக்கிறது. நல்ல கருத்தாகவும் தானே இருக்கிறது.... நீ மீதியைச் சொல்லுமா....“ என்றார்கள் அவளைப் பார்த்து. அவளுக்கும் அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள்.
   நாங்கள் இருவரும் சிரித்ததைக் கண்டு ஒரு தோழிக்கு மெல்ல சந்தேகம் வந்து.... “இந்தக் கதை திருவிளையாடல் படத்துல வர்ற கதை மாதிரி கொஞ்சம் இருக்குது....“ என்றாள் சந்தேகமாக.
   “அப்பாடா இப்பவாவது புரிஞ்சிதே....“ என்று நான் சொன்னதும் தான் அந்த இருவரும் புரிந்து கொண்டார்கள். அதற்கு கதை சொன்னவள் “இவங்க சீரியஸா கேக்குறதைப் பார்த்தா எங்கே ஔவையார் பாட்டை எல்லாம் பாடவேண்டி வருமோன்னு பயந்திட்டேன் அருணா. அது வரைக்கும் தப்பிச்சிட்டேன்“ என்று சிரித்தாள். நாங்கள் இருவரும் சிரிப்பதைப் பார்த்து ஏமார்ந்தவர்களும் தன் ஏமாற்றத்தை நினைத்து எங்களுடன் சிரித்தார்கள்.

   நட்புறவுகளே.... உங்களுக்கு இந்த நிகழ்ச்சி சிரிப்பை வரவழித்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் இன்றும் இந்த நிகழ்வை நினைத்துச் சிரிக்கின்றேன்.
    இப்படியே சிரித்துக்கொண்டு நான் கேட்க வேண்டிய கேள்வியை மறந்திடாமல் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஆன்மீகம் என்றால் என்ன?

தெரிந்தவர்கள் விளக்கினால் அதையே அந்த நிகழ்ச்சியில் பேசிவிட்டு பெயர் வாங்கி விடுவேன். உதவுங்கள் ப்ளீஸ்.

நட்புடன்
அருணா செல்வம்.
31.05.2013

55 கருத்துகள்:

  1. நீங்க சொல்லுவீங்கன்னு பாத்தா எங்களையே கேக்கறீங்களே? எங்களுக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மூங்கில் காற்று.

      நான், என்னுடைய கருத்து என்ன...? என்பதை
      ஓரளவிற்கு தெளிந்து தெரிந்து வைத்துக் கொண்டதற்கு
      பின்பு தான் அவர்கள் கொடுத்த “ஆன்மீகம்“ என்ற தலைப்பில்
      பேச ஒத்துக்கொண்டேன்.
      ஆன்மீகத்தைப் பற்றி பல புத்தகங்களில் பலவாக இருந்ததைப் படித்தாலும்... மற்ற இறையன்பர்களின் பேச்சைக் கேட்டிருந்தாலும்... நம் வலைக்குள் எழுதும் பதிவர்களின் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறியத்தான்
      இந்தப் பதிவை எழுதினேன்.
      அவர்கள் கொடுத்தப் பதிலிலிருந்து இன்னும் நிறைய தெளிவு பிறந்திருக்கிறது.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி மூங்கில் காற்று.



      நீக்கு
  2. கதை மிக மிக அருமை
    கேள்விக்கான மிகச் சரியான
    சுருக்கமான பதில்தான் தெரியவில்லை
    பேருண்மையை அடைவதற்கான
    உன்னத வழி எனச் சொல்லலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரத்தின சுருக்கமான பதில் இது இரமணி ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. ஆன்மீகம் : பிறரிடம் நம்மை காண்பது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான யோசிக்கத் துர்ண்டிய பதில்
      தனபாலன் அண்ணா.

      மிக்க நன்றி.

      நீக்கு
    2. முந்தைய பதிவான "தெய்வம் இருப்பது எங்கே ?" வாசித்து உள்ளீர்களா...? சொல்ல வேண்டும் நினைத்தேன்... நேரம் கிடைக்கும் போது :

      லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html

      நீக்கு
  4. திருவிளையாடல் கதையை அப்படி சொல்லியிருந்தாலும் நல்ல கருத்தாக சிந்திக்க வைத்த சிரிப்பு..

    பதிலளிநீக்கு
  5. படிக்கும்போது எனக்கே புரிந்துவிட்டது.... உங்கள் தோழியர் மிகவும் தத்திகள் என்று புரிந்துவிட்டது.... மன்னிக்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஸ்கூல் பையன்... என் தோழிகளை இப்படி சொல்லிவிட்டீர்கள்...?
      அவர்களின் புத்திசாளித் தனங்களை வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்.
      (அவர்களிடம் சொல்லி உங்களுக்கு “மன்னிப்பு“ வாங்கிக் கொடுக்கிறேன்.)
      நன்றி.

      நீக்கு
  6. //ஆன்மீகம் என்றால் என்ன?//

    பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இவற்றையெல்லாம் ,முற்றிலும் துறந்து, நம்மிடத்திலேயே உள்ள பரம்பொருளை உணர்ந்து அவரிடம் மட்டும் ஆசை வைப்பதாக இருக்குமோ?



    [இதைச்சொல்வது மிகவும் சுலபம்தான், ஆனால்.......... ?]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்குமோ....?

      இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் சந்தேகத்துடன் கூடிய பதிலுக்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது ஜெயதேவ் ஐயா...?

      ஆன்மீகம் என்றால்...
      1. சிரிப்பு
      2. சிரிக்க வைப்பது
      3. ஒன்றுமில்லை
      4. மௌன புன்முறுவல் புரிவது....

      இதில் ஏதோ ஒன்று தானே... ஓ.கே ஓ.கே.

      நன்றி ஜெயதேவ் ஐயா.

      நீக்கு
  8. கதையை நானும் உண்ணிப்பாயில்ல வாசிச்சிட்டு வந்தேன்...

    ஆன்மீகம் என்றா ஆன்மீகம்தான் யெப்புடி.....

    பதிலளிநீக்கு
  9. ஆன்மிகம் "அனைத்தும் கடந்த நிலை" என்றே பொருள்படும்
    என்பது என் கருத்து .சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. நல்ல கேள்வி... தகுந்த பதில்கள்... நானும் உங்கள் ரகம்தான்.
    ரசித்தேன். விடைகிடைத்து நீங்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக உங்களுக்கமைய வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. நடக்காத ஒன்றை நடந்தாக சொல்லியும் அல்லது இப்படி நடந்தால் எதிர்காலம் இப்படி நடக்கும் என்று கட்டுகதைகளை அள்ளிவிட்டு தான் வாழ பிறரிடம் இருந்து பணத்தை சுருட்டி வாழும் ஒரு முறையைத்தான் ஆன்மிகம் என்று அழைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய ஆன்மீகத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

      தங்களின் வருகைக்கும் மனத்தில் பட்டதை அப்பட்டமாக
      அப்படியே கருத்தாக, பதிலாக சொன்னமைக்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      உங்களின் வலைப்பதிவு துள்ளுகிறது. படிக்க முடிவதில்லை.
      சற்றுப் பாருங்கள்.

      நீக்கு
  12. ஆமாம் யாருங்க அந்த அப்பாவி பெண்கள்.. எங்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்த கூடாதா? எனக்கு கல்யாணம் ஆகுவதற்கு முன்பு நான் எந்த அப்பாவி பெண்களையும் பார்த்ததில்லை கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிதான் இந்த மாதிரி அப்பாவி பெண்களைப் பற்றி கேள்விபடுகிறேன். ஹும்ம்ம்ம்ம்ம்ம்.......அவங்களை கல்யாணம் பண்ணியவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஹும்ம்ம்ம்ம்ம்ம்.......அவங்களை கல்யாணம் பண்ணியவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்“

      உண்மை தான் “உண்மைகள்“
      நன்றி.

      நீக்கு
  13. ஆன்மீகம் ஆத்மா அதன் இலக்கை அடைய வழி சொல்லும் பயிற்சி. அதற்கு முதலில் ஆத்மா அது எங்கு இருந்து வந்தது எப்படி பல இடங்களிலும் உடல்களிலும் வாழ்கிறது. பிறகு ஆதமாவின் இலக்கு என்ன எப்படி அடைவது என்று சொல்லிக்கொடுப்பது. இன்னமும் சொல்லப்போனால் ஆன்மாவின் யோகம் ஆன்மீகம் என்றும் கூட கொள்ளலாம்.

    கதையை இரசித்தேன்....

    அன்புடன்,
    பனிமலர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பிறகு ஆத்மாவின் இலக்கு என்ன எப்படி அடைவது என்று சொல்லிக்கொடுப்பது....“

      இதைத் தான்....
      இதைத் தான்.....கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நாங்களும்
      அறிந்து கொள்வோம்.

      தங்களின் முதல் வருகைக்கும் விரிவான கருத்திற்கும்
      மிக்க நன்றி பனிமலர்.

      நீக்கு
  14. நிஜம்மாவே உங்க தோழிகள் எல்லாம் ரொம்ம்ம்ப்பவே அப்பாவிகள்தான்! இந்த நிகழ்ச்சியை நினைச்சு நினைச்சு நீங்க சிரிச்சதா சொல்றீங்க. எனக்கு ஒரு மென் முறுவல்தான் வந்துச்சு. அப்புறம்... ஆன்மீகம் = தன்னை அறிதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலகணேஷ் ஐயா.

      நீங்கள் அந்த இடத்தில் இல்லை.
      அதனால் உங்களுக்கு மென் முறுவல் மட்டும் வந்தது.
      அவர்கள் கதையைச் சுவாரசியமாக இரசித்த விதத்தை
      நேராகப் பார்த்திருந்தால்..... உங்களுக்கு அந்தக் கொடுப்பனை
      இல்லைங்க.
      தவிர நேற்று முன் தினம் கதை சொன்ன தோழி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அருணா இந்த வாரமும் வந்துவிடு.
      நான் அவர்களுக்காக சரஸ்வதி சபதத்திலிருந்து ஒரு கதை
      ரெடிப்பண்ணி வைத்திருக்கிறேன்“ என்றார்.
      கேட்கும் பொழுதே அவர்களின் முகம் வந்து என்னைச் சிரிப்பில் ஆழ்த்தியது.

      தங்களின் வருகைக்கும் ஆன்மீகம் என்றால் “தன்னை அறிதல்“ என்ற சுறுக்கமான பதிலுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  15. இக்காலத்திற்கு ஏற்ப கதையை மாற்றி யோசித்த உங்கள் தோழிக்கு வாழ்த்துகள்....

    ஆன்மீகம் - அது புரிந்து விட்டால் நாம் இருக்கும் நிலையே வேறாக அல்லவா இருக்கும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

      “ஆன்மீகம் - அது புரிந்து விட்டால் நாம் இருக்கும் நிலையே வேறாக அல்லவா இருக்கும்! :)“

      ஆமாம் அது புரிந்துவிட்டால் திருலோகச் சொர்க்கம் தான்!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  16. உங்க கதையிலேயே இருக்கு பதில்.. தன் வரையில் ஒழுக்கமாக இருப்பது...,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தன் வரையில் ஒழுக்கமாக இருப்பது...,“

      அருமையான பதில்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  17. எனக்கும் ஆன்மீகம் குறித்த தெரிதல் இல்லை... அதை தெரிந்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்பது என் எண்ணம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் தன்னம்பிக்கையான பதில்
      என் மனத்தைத் தொட்டது தோழி.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  18. தன்னலமற்ற சேவையும் பிறரிடம் அன்பு செலுத்துதலுமே என்னைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அருமை... அருமை...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி டினேஷ் சுந்தர் ஐயா.

      நீக்கு
  19. ஆன்மீகம் பற்றிய உங்கள் கேள்விக்கு கருத்தை பதிவாக போட்டுவிட்டேன். நேர நெருக்கடியில் கருத்து கூற இயலுமோ என்றுதான் அதைப்பற்றி பின்னூட்டத்தில் பேசவில்லை.

    பதிலளிநீக்கு
  20. nanum unga casethan...no interest in aanmeegam..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  21. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

  22. வணக்கம்!

    நல்ல நெறியை நவின்றளித்தல்! நற்றவ
    வல்ல வழியை வகுத்தளித்தல்! - தொல்லுலகில்
    ஆன்மீக என்பார்! அகத்துள் அதுமேவ
    வான்மிகம் மின்னும் மலா்ந்து!

    கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாடலுக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  23. ஆன்மிகம் என்றால் என்ன?
    நீங்க இவ்வளவு சீரியஸா இருக்கும் போது நானும் ஏதாவது சொல்லலாம் என்றால் எனக்கு ஆன்மிகம் பற்றி ஒண்ணுமே தெரியாது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தபோது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் படித்த ஞாபகம் உடனே இணைப்பைத் தேடி( அதான் லேட்) ஒரு காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன். நல்லா பேசுங்க நல்லதே பேசுங்க அருணா

    http://www.siththarkal.com/2012/05/blog-post.html



    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துவிட்டேன்.
      தங்களின் வருகைக்கும் எனக்காக பதிலைத் தேடி
      ஒரு பதிவை அறிமுகப் படுத்திய நல்ல எண்ணத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  24. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. உலகை நன்கு அறிந்த பிறகு அந்த நிலையற்ற வாழ்கையை துறப்பவன் துறவி

    உலகை அறிந்த பிறகு மற்றவர்க்கு தன்னை போல் விழிப்புணர்வை உணர்த்துபவன் ஆன்மீக வாதி அவன் சாதாரண மனித வாழ்க்கை வாழ்பவன் தான்

    இது என் கருத்து
    அன்பு மறவா சகோதரன் மாமல்லன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி லிங்கம் அண்ணா.

      நீக்கு
  26. இந்த விளையாட்டு தானே வேண்டாம் என்கின்றது, அடுத்தவர் சொன்ன வாக்கை சொன்னால் என்னிடம் பொருள் கேட்டால் எப்படி. இது தெரியாமல் தான் மக்கள் எல்லா பாபா நந்தாக்களையும் பார்த்து பொருளை கொட்டி மகிழ்கிறார்கள். இறை மறைகளின் படி ஆத்மா ஈசனிடம் இருந்து பிரிந்து வந்தது அது மறுபடியும் சென்று இறைவனை அடைவதே அதன் இலக்கு என்று உலகின் பெரும்பாலான இறைவழி மறைகள் சொல்வது. மேலும் அதே மறைகள் பிறவியும், விணையும் என்ற விதியையும் சொல்கிறது. பிறகு எந்த எந்த பாவங்களுக்கு எவ்வளவு என்று கணக்கு காட்டுகிறது. இதோடு நிற்கும் வரையில் குழப்பம் இல்லை.

    இந்த கோட்பாடுகளை எதிர்த்து நிமித்தகம் தோன்றிய பிறகு விளைந்தது தான் கொடுமை. நிமித்தகம் விணைமறுப்பு கோட்பாடு. ஒரு பொருள் எங்கே எப்படி தோன்றி பிறகு எப்படி அழியவேண்டும் என்றது அந்த பொருளுனுள்ளே உள்ளது என்றது அவர்களின் விளக்கம். எல்லா அறிவியல் கோட்பாடுகளில் சொல்வது போல் சூழ்நிலை அப்படியே இருக்கும் பொழுது என்றும் சேர்த்து சொன்னார்கள்.

    அப்போது சூழ் நிலைகள் மாறினால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு பிறந்த பதில் தான் கிரக நிலைகள் சோதிடமாக பிறந்து வளர்ந்தது. அந்த துறையில் அமோகமாக செழித்து நிற்பது இவைகள் இரண்டும் தான், ஒன்று எந்த பொருளை எப்படி மாற்றி அமைத்தால் இவைகளை சரி செய்யலாம் என்ற பரிகாரமும். எந்த கிரக நிலைகளின் படி எனது வாழ்கையில் எப்படி வரும் என்று சொல்லும் சோதிடமும் தான்.

    இறை நம்பிக்கையை தகர்க்கும் நிமித்தகமும் ஆன்மீகதின் கீழ் வந்தது இந்த வழியில். தற்பொழுது மக்கள் தங்களின் நிலைக்கு பரிகாரம் தேடும் கூட்டம் தான் அதிகம், தனது ஆத்மா என்ன ஆகவேண்டும் என்று எல்லாம் ஒருவரும் நினைப்பது கூட இல்லை, மாற்றாக உடனடி நிவாரத்திற்கு அனுகுங்கள் என்று சொல்லும் இந்த இறை முகவர்களிடம் மாட்டி மகிழ்ந்து கொண்டு அது தான் ஆன்மீகம் என்றும் நம்பியும் அவர்களுக்கு கூட்டம் கூட்டியும் நிற்கிறார்கள் பெரும்பாலானோர்.

    அதிகம் சொல்லி குழப்பிவிட்டேன் போலும், மறனத்திற்கு பிறகு பள்ளத்தை நோக்கு பாயும் நீர் போல் கடவுளை சென்று அடையும் ஆத்மா என்று எல்லா உலக மறைகளும் சொல்கின்றது. அதற்கு சிறப்பாக எதுவும் செய்ய வேண்டாம் என்றதே அதன் பொருள். நிமித்தகத்தை நம்புவோர் இறையை நம்பக்கூடாது, அல்லது நிமித்தகத்தை நம்புவோர் இறையை நம்பக்கூடாது. நமக்கு தான் எல்லா நல்லவைகளின் கலவையும் வேண்டுமே, ஆக இந்த குழப்பம் தீரும் வரை ஆத்மாவை செம்மை படுத்துகிறேன் என்று அதுவும் இதுவும் செய்துக்கொண்டு இருக்க சொல்லி கொடுப்பவர்கள் சொல்வது தான் ஆன்மீகம்.

    உங்கள் பதிவை அருணா என்ன பால் என்ற பதிவில் இருந்து வாசித்து வருகிறேன் என்ன பின்னூட்டம் இட்டதில்லை.

    பதில் மிகவும் நீண்டு விட்டது மன்னிகவும்.

    அன்புடன்,
    பனிமலர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “குழப்பம் தீரும் வரை ஆத்மாவை செம்மை படுத்துகிறேன் என்று அதுவும் இதுவும் செய்துக்கொண்டு இருக்க சொல்லி கொடுப்பவர்கள் சொல்வது தான் ஆன்மீகம்.“

      அருமையாகச் சொன்னீர்கள்!!

      தங்களின் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த விளக்கமான பதிலுக்கும்
      மிக்க நன்றி பனிமலர் அவர்களே.

      நீக்கு
  27. nalla irunthichi.....

    aanmikam sollanum...

    aanaal neramthaan thaamatham...

    பதிலளிநீக்கு
  28. எனக்கு உடனே புரிந்து விட்டதால்... “போதும்பா உன் ஆன்மீகக் கதை. இதுக்கு மேல ஏதாவது சொன்னால் உனக்கு உதைதான் விழும்“ என்றேன் ஏமாற்றமாய். // அவ்ளோ டக்குன்னா புரிஞ்சிடுச்சி ஹா ஹா......

    பதிலளிநீக்கு