மஞ்சள் பூசிய
மலர்க்கொடியே ! – நல்
மணமேடை காண வருகவே !
கொஞ்சும் அழகுத்
தமிழ்மகளே ! – நம்
குலம்வாழக் குளிர்ந்து
வருகவே !
அன்னை ஊட்டிய அன்பினையும்
– உன்
தந்தை காட்டிய அறவழியும்
ஆசான் தீட்டிய
அறிவினையும் – உடன்
ஆண்டான் ஈட்டிய நன்னிலையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே ! (மஞ்சள்)
பிரம்மன் படைத்த
அழகினையும் – நிதம்
பேணிக் காத்த கற்பினையும்
தரமாய்ப் பேசும்
தமிழ்மொழியும் – மனம்
தளரா உழைப்பின்
உயர்வினையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே ! (மஞ்சள்)
உடன் பிறந்தோர்
பாசத்தையும் – உண்மை
உற்றோர் காட்டிய
உணர்வலையும்
ஆடிப் பாடிய தோழியரும் –
அன்று
அவர்கள் பேசிய கேலியையும்
மனத்தில் நிறைத்து வருகவே ! – நல்ல
குணமாய் நினைத்து மகிழவே ! (மஞ்சள்)
உலகம் போற்றும்
சீரனைத்தும் – உன்னில்
உயர்வாய் ஒளியாய்
மின்னுதடி !
குலமும் தழைக்க வேண்டுமடி ! - கை
கோர்த்து இணைய வேண்டுமடி !
மணமகன் காத்தி ருப்பானே –
அவன்
மனம்குளிரக் கண்டு மகிழவே ! (மஞ்சள்)
இசைப்பாடல்
கவிஞர் அருணா செல்வம்
07.11.2015
