செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தொழிலாளர் தினம்!



.
செழிப்பான உலகத்தைச் சோர்வே இன்றிச்
   …..சிறப்பாக்கும் அறிவாளி! வேலை வாங்கிக்
கொழித்திருக்கும் முதலாளி உயர்வைக் கண்டு
   …..குளிந்திருக்கும் செயலாளி! தொழிலை வைத்தே
அழிக்கின்ற சாதியெனும் பிரிவு செய்தோர்க்(கு)
   …..அடிமையான ஏமாளி! ஒருநாள் மட்டும்
தொழிலாளர் எனஉயர்த்திப் புகழ்ந்தே பேசத்
   …..துயர்த்தீரும் உழைப்பாளி உயர்வார் என்றோ?
.
பாவலர் அருணா செல்வம்
01.05.2019

திங்கள், 29 ஏப்ரல், 2019

தங்கமகள் கோமதி மாரிமுத்து!



.
அங்கமெல்லாம் வீரமுள்ள
   ஆன்றோர்கள் நாட்டினிலே
பொங்குகின்ற சாதியினால்
   புதைந்திட்ட வலியோர்கள்!
மங்கியதோ திடமென்று
   மனம்மயங்கும் பொழுதினிலே
தங்கமகள் வென்றுவந்தாய்
   தமிழகமே வாழ்த்துதம்மா!
.
சாதிப்பார் எனநினைத்தே
   சாதிதனில் தேடிநிற்பார்!
சோதியிடம் விளையாடிச்
   தோற்றோடி வந்திளிப்பார்!
மோதியுடன் வந்துபெற்றாய்
   முதல்பரிசு தங்கமதை!
சேதியுடன் நம்படித்தோம்
   சிறப்பென்றே வாழ்த்துகிறோம்!
.
(கலிவிருத்தம்)
பாவலர் அருணா செல்வம்
27.04.2019

வேற்றுப்பொருள் வைப்பு அணி.



வேற்றுப்பொருள் வைப்பு அணி.
முழுவதும் சேறல்!
.
பாடலில் கவிஞன் தான் கருதிய ஒரு நிகழ்வை உரைத்துவிட்டுப், பிறகு அந்த நிகழ்விற்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு செயலை (பொதுப்பொருளை) முற்றாகவும் உரைப்பது ஆகும். (முற்றாக உரைத்தல் என்பது, சிறப்புப் பொருளையும் பொதுப் பொருளையும் உலகமானது முழுவதுமாக ஏற்றுக் கொண்ட செயலை அப்படியே உரைப்பது ஆகும்)
.
கரைத்தொட்டு ஓடும் கடல்அலை நாளும்
இரைந்தாலும் ஓயாது இருக்கும்! – தரையிலே
பொன்னான வாழ்வில் பொதிந்தே நடக்கின்றோம்
இன்பமும் துன்பமும் ஏற்று!
.
பொருள்கரையைத் தொட்டு ஓடும் கடல் அலையானது எந்நாளும் இரைச்சலுடன் ஓயாமல் அலை அடித்துக்கொண்டே இருக்கும். நிலத்திலே நமக்குக் கிடைத்த பொன்னான வாழ்க்கையில் பொதிந்திருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றே வாழ்க்கையை நடத்துகின்றோம்.
    …..பாடலில் கடல் அலையானது இரைச்சலுடன் எந்நேரமும் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கும், என்ற சிறப்புப் பொருளுக்கு,  நிலத்திலே பிறந்த மானிதர்களின் வாழ்வில் இன்பமும் துன்பமும் ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும் என்று ஒரு கருத்தை அதன் மேல் ஏற்றிச் பொதுப் பொருளைச் சொன்னதால் இது வேற்றுப்பொருள் வைப்புஆகியது. உலகில் பிறந்தவர்களின் வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து நடந்து கொண்டே தான் இருக்கும் என்ற உலகறிந்த ஒரு பொருளை சொன்னதால் இதுமுழுவதும் சேறல்என்னும் வகை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2019

சனி, 27 ஏப்ரல், 2019

உயர்ந்த மனம்!



உயர்ந்த மனம்!
.
மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருக்கும் வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்.
.
பாவலர் அருணா செல்வம்

வியாழன், 25 ஏப்ரல், 2019

கையறல் விலக்கு!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
கையறல் விலக்கு!  -- 16
(அணி இலக்கணம்)
.
பாடலில் தனக்கு வேண்டிய ஒன்றினைப்பெற முயலும்போது அதற்கான ஒழுக்கம் இல்லாமைக் காரங்களைக் கூறி அது தனக்குக் கிடைக்காது என்று விலக்குவது கையறல் விலக்குஎனப்படும். (கையறல் என்பது செய்யாமல் விடுத்த செயலுக்காக வருந்துவது).
.
. ம்
அன்னையையும் அப்பனையும் நானடைந்த தொல்லையெனத்
துன்பம் கொடுத்தே தொலைத்துவிட்டேன்! – இன்றென்னை
அன்பாய் அரவணைக்க ஆளின்றி நிற்குமெனக்(கு)
இன்பம் கிடைக்கா(து) இனி!
.
பொருள் எனக்குக் கிடைத்த அன்னையையும் அப்பாவையும் தொல்லை என்று அவர்களுக்குத் துன்பங்கள் கொடுத்ததனால் தொலைந்தார்கள். (இறந்தார்கள்) அதனால் இன்று என்னிடம் அன்பாய்ப் பேசி அரவணைத்திட ஆட்கள் இல்லாமல் நிற்கின்றேன். நான் செய்த தவறால் எனக்கு இன்பம் என்பது இனி கிடைக்காது.
    …..பாடலில் தான் செய்த தவற்றைக்  (கையறல் நிலையை) கூறுவதாலும், அதனால் தனக்கு வாழ்வில் கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு, இன்பம் போன்றவை கிடைக்காது என்று சொல்லி அதனை விலக்குவதாலும் இது கையறல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.04.2019

புதன், 24 ஏப்ரல், 2019

இறந்தகால விலக்கு!



இறந்தகால விலக்கு!
(அணி இலக்கணம் - முன்ன விலக்கணி)
.
பாடலில் இறந்த காலத்தில் நடந்தாகக் கூறிடும் ஒரு நிகழ்ச்சியை விலக்குவது இறந்தவினை விலக்கு எனப்படும்.
.
. ம்
உன்னைப் பிரிந்ததால் ஊண்உறக்கம் இல்லையென்றாய்
என்னுயிர் போனதே என்றழுதாய்! – பின்என்முன்
பேசுவது தேவதையோ பெண்ணோ அணங்கழகோ
வீசுதமிழ்ச் சொல்லால் விளம்பு!

பொருள் முன்னர் என்னைப் பிரிந்ததால் ஊண் உறக்கம் இல்லை என்றாய். என்னுயிர் போனதே என்று அழுதாய். நான் வந்த பின்பு என் எதிரில் வந்து நிற்கிறாய். அப்படியானால் என்முன் பேசுவது தெய்வமா ? பெண்ணா ? மோகினியா ? வீசும் தமிழ்சொற்களால் விளக்கிச் சொல்.
    பாடலில் இறந்த காலத்தில் தன் காதலி சொன்னது பொய் என்று விலக்குவதால் இது இந்த கால விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2019

காரண விலக்கு!



காரண விலக்கு!
(அணி இலக்கணம்)
.
பாடலில் வந்திருக்கும் ஒரு நிகழ்வில் ஏற்படும் காரணத்தால், அந்நிகழ்வை அல்லது அதற்குறிய செயலை விலக்குவது காரண விலக்குஆகும்.
.
உ. ம்
இடியோடு மின்னல் இணைந்த மழையால்
கடிய நடைவழியைக் கண்டாள்! ஒடிந்தமரக்
கம்பு வழிக்கிடந்த காரணத்தால் தாய்வீட்டில்
தெம்புடன் தங்கினாள் தேர்ந்து!
.
பொருள் தாய்வீட்டிற்கு வந்த பெண் தலைவன் வீடு செல்ல வேண்டி இடியுடன் மின்னல் இணைந்து மழைப் பொழியும் நேரத்தில் தான் விரைந்து போகும் பாதையைப் பார்த்தாள். அங்கே காற்றினால் ஒடிந்த மரக்கிளையானது அவள் போகும் வழித்தடத்தில் கிடந்ததால் அதைத் தாண்டி செல்ல முடியாது என்ற காரணத்தால் தாய்வீட்டிலேயே தங்கினாள்.
     …..தான் செல்லும் பாதையில் மரக்கிளை ஒடிந்து விழுந்திருந்த காரணத்தால் தான் வீடு செல்ல முடியவில்லை என்று ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுத் தன் கணவன் வீட்டிற்கு செல்வதை விலக்கி விட்டதால் இது காரண விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2019