Friday, 19 July 2013

காதல் கடிதம்! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் போட்டி)


   எப்படித் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் தொடங்கி விட்டேன்.
   இந்தக் கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டீர்கள். நேற்றுவரை நானும் தான் இப்படி ஒரு கடிதம் எழுதுவேன் என்று நினைக்கவில்லை.
   மாமா... காதல் என்ன முட்டாள் தனமா...? காதலைப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எப்படி எப்படியோ புகழ்ந்து பேச, அது எனக்கு மட்டும் முட்டாள் தனமாகத் தெரிவது எனது காதல் தோல்வியில் முடிந்தது என்பதாலா...?
    மாமா என்று உரிமையுடன் எழுதும் எனது மனது அன்று உங்களிடம் உள்ள உறவை எவ்வளவு அலட்சியப் படுத்தியது! என்னை விட ஆறு வயது மூத்தவர் என்றாலும் மாமன் மகன் தானே என்ற உரிமையில் ஒருமையிலும் சற்று குறைவாக அழைத்ததை இப்பொழுது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது.
    நித்தம் ஒரு தாவணியில் பட்டாம் பூச்சியாய் பறந்த என்னை உங்கள் அறிவோ, அழகோ எதுவும் செய்யவில்லையே...
    நான் எழுதிய துளிக்கவிதை ஓர் இதழில் வெளி வந்ததை உங்களிடம்தான் முதன் முதலில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிவந்த என்னுள் காதலும் கலந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் தான் இருந்தது.
    ஆனால்... அந்தக் காதல் கவிதைக்காக நீங்கள் திடிரென்று என் கன்னத்தில் இட்ட முத்தம் இன்னும் ஈரப்பதமாக என் நெஞசிலே ஒட்டிக்கொண்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா... அந்த ஈரத்தின் வலிமை என் நெஞ்சை இன்று முள்ளாகக் குத்துகிறது என்றால்தான் நம்புவீர்களா...?
    இளமையில் ஏற்பட்ட காதல் நினைவுகள் ஆறாத புண்ணாக நெஞ்சில் பதிவது எவ்வளவு பெரிய அவதி... சில நேரம் அதுவே அசிங்கமும் கூடத்தான்...
    அன்று உங்கள் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள்... அதுவரை அப்படி ஓர் எண்ணமே எனக்கு இல்லை என்று நான் சொன்னால் அது முற்றிலும் பொய்தான் என்பது எனக்குத் தெரியும். ஒருவர் ஒருவரைப் பார்த்து ஒரே நேரத்தில் ஏற்படுவது தானே காதல்! அது நமக்குத் தெரியவர எவ்வளவு நாட்கள்... ஆண்டுகள்...!
    அதன் பிறகு வந்தவைதான் எத்தனை இனிமையான நாட்கள்...! நாம் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டது கூடக் கிடையாது. எப்போதாவது ஒரு பார்வை. அதில் தான் எத்தனை பொருள்! மற்றவர்களுக்குப் புரியாத அந்தப் பார்வையில் நாம் புரிந்துக்கொண்ட வார்த்தைகள் தான் எத்தனை...! எத்தனை...!

    மூன்று தங்கைகளைக் கரையேற்ற நீங்கள் படித்த படிப்புக்கு தேவையான வேலை தேவைப்பட்டது. அதே நேரம் இரண்டு தங்கைகளுக்குத் தடையாக நான் நந்தியாக இருப்பது என்னைப் பெற்றவர்களுக்கு எரிச்சலாக இருந்தது. கணவன் என்று ஒருவர் திணிக்கப்பட்டு, அவர் கைபற்றி கடல் கடந்து வெளியேறும் போது உங்கள் மனத்திலிருந்து நான் வெளியேறிவிட வேண்டும் என்று எவ்வளவு கடவுள்களை வேண்டி இருப்பேன் என்று தெரியுமா உங்களுக்கு?
    எப்படிப்பட்ட மனவலியுடன் பண்பாடு, கட்டுப்பாடு என்று கட்டிய கணவருடன் வாழப் பழகிக்கொண்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் என் மனத்தின் காயத்திற்கு மருந்து போட்டது என் கணவரின் அன்பான வார்த்தைகளும் அனுசரணையான அரவணைப்பும் தான்.
    எனது மனவலிக்குக் காரணம் காதல் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமா... இல்லையா... என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அவர் என்னிடம் காட்டின அன்புக்கு களங்கமே சொல்ல முடியாது.
    கால்கள் இல்லாத காலங்கள் ஓடிக்கொண்டே இருக்க... எனது காதல் கனவுகளும் இறந்த காலம் என்ற கடலில் கரைந்து விட்டது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், உங்களுக்கு அந்தக் காலங்கள் தேங்கி நின்று குட்டையாகி விட்டன என்பதை பத்தாண்டுகள் கழித்து நாட்டுக்குத் திரும்பி வந்த போதுதான் தெரிந்து கொண்டேன்.
    கடமைகள் அனைத்தும் முடித்தும், திருமணமே வேண்டாம் என்றிருக்கும் உங்கள் மனத்தில் உள்ள காதல் குட்டை சாக்கடையாக மாறி உங்கள் மனத்தை நாற்றமடிக்க வைத்துவிட்டதோ...
   சிறு வயதில் ஏற்படும் காதல் எவ்வளவு புனிதமானது... ஆனால் அதுவே கைசேராமல் போனால் எவ்வளவு விகாரமானது என்பது உங்களைப் பார்த்தப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
    ஆனால் அந்த நிலையிலும் உங்களை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா... என்று ஏங்கிய என் மனத்தில் காதல் இல்லை. வெறும் கரிசனம் மட்டுமே இருந்தது.
    உங்கள் போக்கால் மனம் ஒடிந்துப் போயிருந்த என்னைக் காணவந்த உங்கள் தங்கையிடம் என் மனஎரிச்சலைக் கொட்டியதும் அவள் உங்களிடம் அதைச் சொல்ல... அதன்பிறகு உங்களுக்காகவே காத்துக்கொண்டிருந்த உங்கள் தாய்மாமன் மகளைத் திருமணம் செய்ய நீங்கள் சம்மதிச்சப் பிறகுதான் நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்... மகிழ்ச்சியாக!
   
    இதோ மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறேன். என் மனத்தில் இருந்த காயமெல்லாம் ஆறி வடுக்கள் கூட மறையத் தொடங்கிவிட்டன. நேற்றுவரை நான் உங்களைக் காணாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த வடுக்கள் கூட காணாமல் போயிருக்கும்.
    ஆனால்... உங்கள் நெஞ்சத்தில் அந்த காதல் காயங்கள் ஆறவில்லை என்பது மட்டுமல்லாமல், அதைக் கிண்டி கிளறி புண்ணாக்க உங்கள் மனைவியே வார்த்தை என்ற வாள் கொண்டு அறுப்பதைப் பார்த்ததும் யார் மீது தவறு என்று அறியாமல் தவித்துத் துடிக்கிறேன்.
    மாமா... நேற்று இருளத் தொடங்கும் நேரம். கடற்கரை சிமெண்ட் பலகையில் நான் என் மகனுடன் அமர்ந்திருக்க... ஒரு இரண்டு வயது குழந்தை அருகில் வந்து என் மகனைப் பார்த்து சிரித்தது.
    அப்பொழுது ஒரு பெண், ரசிகா... ரசிகா... என்று குரல் கொடுத்துக்கொண்டு குழந்தையைத் தேடிக்கொண்டே வர, யார் என்னைக் கூப்பிடுவது? என்று தெரியாமல் நான் விழித்தேன். ஆனால் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.
     ஏன்டி ரசிகா... சனியனே... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுவது? ஒரு அஞ்சி நிமிசம் என்னை நிம்மதியா இருக்க விடுறியா...? கல்யாணத்துக்கு முன்னாடி பத்து வருசமா ரசிகா... ரசிகான்னு அந்த சனியனை நெனைச்சிக்கினு கிடந்தாரு உன் அப்பா... இப்போ உனக்கும் அந்த பேரை வச்சி ரசிகா ரசிகான்னு என்னைக் கத்தவிடுறாரு. சீ... இந்த பேரு என்னைக்கு என் வாழ்க்கையிலிருந்து தொலையுமோ அன்னைக்குத்தான் எனக்கு நிம்மதி...
    என் நெஞ்சத்தைக் கிழித்த வார்த்தைகள்!
    அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டாள்.
    அவளுக்கு என்னை யார் என்று தெரிந்திருக்காது. நல்லதுதான்! ஆனால் நான் அவளைத் தெரிந்து காண்டேன். அந்த இருள் சூழ்ந்த நேரத்திலும் உங்களை நான் கண்டுகொண்டேன்.
    என் எதிரிலே நீங்கள், உங்கள் மனைவி, மகள்!
     சனியன்... இந்தப் பேரை குழந்தைக்கு வைக்காதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா...? எனக்குக் கிடைக்காதவ என் மகளா பிறந்திருக்காள்ன்னு சொல்லி அவ பேரை வச்சீங்க. இந்த சனியனும் உங்கக்கூடவேவா இருந்திடப் போவுது...? ஆனால்... நானு... நீங்க மட்டும் தான் என் வாழ்க்கைன்னு, நீங்க விலகி விலகிப் போனாலும் நான் உங்களையே ஒட்டி ஒட்டி வர்றேனே... என்னை என்னைக்குத் தான் புரிஞ்சிக்குவீங்களோ? என உங்கள் மனைவி புலம்பிக்கொண்டே நடக்க, நீங்கள் ரசிகாவைத் தூக்கிக்கொண்டு பின்னால் செல்ல...
    இப்பொழுது என் மனத்தில் குத்திக்கொண்டிருப்பது இன்ப வேதனையா... நெரிஞ்சி முள்ளா... என்பது எனக்குத் தெரியவில்லை.
    ஆனால் எதுவாக இருந்தாலும் ஒன்று விழுங்கிவிட வேண்டும். அல்லது வெளியே துப்பிவிட வேண்டும். நீங்களும் தான்!
    விழுங்க முயற்சி செய்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. அதனால்.... துப்பிவிட்டேன் கடிதத்தில் வார்த்தையாக.
    இந்தக் கடிதம் உங்களைச் சேர வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. என் மனபாரம் குறைய வேண்டும் என்பதற்காக.
    இந்த கடிதம் உங்களுக்குக் கிடைத்தால் உங்கள் மனபாரம் அதிகமாகும் என்பது எனக்குத் தெரியும்.
    உங்கள் ரசிகா வளர வளர உங்களின் மனபாரம் காலத்தால் கரைந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எனது மனபாரத்தை (இந்தக் கடிதத்தை) இரண்டாக, நான்காக, எட்டாக... கிழித்து மறைந்துபோன காதலுக்கு நினைவு சின்னம் தேவையில்லை என்று தீயிட்டு கொளுத்தி விடுகிறேன்!
    அது எரிந்து சாம்பலாகட்டும்!  நம் காதலைப் போல!
                               என்றென்றும்
                                  ரசிகா.

(கற்பனை கதை)
அருணா செல்வம்
20.07.2013