வியாழன், 21 ஜனவரி, 2021

அணிகள் மின்னும் அருங்கோவில் !

 


    என் ஆசிரியர் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், என் “அணி இலக்கணம்“ என்ற நூலுக்காக அளித்த பாராட்டுக் கவிதையை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

.

அணிமேல் ஆசை அகமேவி

          அருணா செல்வம் இந்நூலைப்

பணிமேல் பணிகள் சிறப்பனபோல்

          பாங்காய்ப் படைத்தார் வாழ்த்துகிறேன்!

மணிமேல் காணும் நல்லழகாய்

          மனத்தை மயக்கும் வெண்பாக்கள்!

அணைமேல் அணையாய்த் தமிழ்காக்கும்!

          அறிஞர் போற்றும் புகழ்சேர்க்கும்!

 

அருமைத் தண்டி ஆரமுதை

         அருணா செல்வம் தினம்பருகிப்

பெருமை பெருகும் இந்நூலைப்

          பேணிப் பெற்றார் வாழ்த்துகிறேன்!

கருணை கமழும் கோவிலெனக்

         கருத்தைக் கவரும் வெண்பாக்கள் 

அருணை அப்பன் அடிகாட்டும்!

         அகிலம் போற்றும் அறமூட்டும்!

 

அல்லும் பகலும் தமிழழகை

        அருணா செல்வம் தலைசூடி

வெல்லும் வல்ல திறமேந்தி

         விளைத்தார் இந்நூல் வாழ்த்துகிறேன்!

சொல்லும் பொருளும் சுவையேந்திச்

        சுரக்கும் தூய வெண்பாக்கள்

செல்லும் இடத்தில் சீர்மீட்டும்!

        சிறப்பே மின்னும் பேர்கூட்டும்!

 

அன்னைத் தமிழின் திருவடியை

        அருணா செல்வம் கைப்பற்றிப்

பொன்னை நிகர்த்த இந்நூலைப்

         புனைந்தார் நன்றே! வாழ்த்துகிறேன்!

முன்னைப் புலவர் புலமைநலம்

         முற்றி மணக்கும் வெண்பாக்கள்

தென்னை நீராய்க் குளிரூட்டும்!

         பின்னை உலகுக் கெழிற்சூட்டும்!

 

அறமே ஓங்கும் வண்ணத்தில்

        அருணா செல்வம் கவிகற்றுத்

திறமே ஓங்கும் இந்நூலைத்

        தீட்டித் தந்தார் வாழ்த்துகிறேன்!

மறமே ஓங்கும் வண்டமிழின்

        மாண்பை வார்க்கும் வெண்பாக்கள் 

நிறமே ஓங்கும் மொழிசூட்டும்!

         நிலமே ஓங்கும் வழிகாட்டும்!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

07.05.2020

திங்கள், 18 ஜனவரி, 2021

திண்ணை வீடு!

 


.

மனம்படைத்த மாந்தரெல்லாம் அமைத்த வீடு
…………மற்றவர்க்கும் உதவிடவே கட்டி வைத்தார்!
இனம்செழிக்க வேண்டுமென்றே நெஞ்சம் கொண்டே
…………இருபக்கத் திண்ணைவைத்தே உதவி செய்தார்!
தினம்நடக்கும் நிகழ்ச்சியாவும் ஓய்வு கொள்வோர்
…………திரைக்காட்சி போல்சொல்லி மகிழ்ந்து போவார்!
கனம்நெஞ்சில் இல்லையன்று ! திண்ணை வீட்டைக்
…………காட்டுகின்ற ஒற்றுமையின் உயர்வாய்க் கொள்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2021

செந்தமிழ்ப் பா….பாடு !

 




(அசை இயைபு வெண்பா)
.
நற்றமிழர் போற்றும் நலமிக்க பண்பாடு!
பெற்றதினால் நன்குயரும் பெண்பாடு! -  பிற்பாடு
கற்றதெலாம் மற்றவர்க்குக் கன்னலென நீ....பாடு!
பற்றெனவே செந்தமிழ்ப்பா.... பாடு!
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2021


வெள்ளி, 15 ஜனவரி, 2021

காணும் பொங்கல் 2021!

 


காணும் பொங்கலோ
   காளை அடக்குதல்
      கலைகள் உயர்வதற்கும்,
நாணும் பெண்களை
   நலமாய் மணஞ்செய
      நல்லோர் நடத்திவைத்தார்!
ஆணும் பெண்ணுமாய்
   அமைந்த வாழ்விலே
      ஆன்றோர் வகுத்துவைத்த
பேணும் நன்மையைப்
   பேசும் உலகெலாம்
      பெருமை தரும்செயலே!  
 
பொன்னும் புதுஉடை
   பூவும் அணிந்திடப்
      பூத்த மனத்துடனே
அன்பில் மூழ்கிடும்
   அறிஞர் முதியவர்
      அவரைத் தேடிநின்று
இன்பம் பொங்கிட
   இனிமை விளைந்திட
      இன்சொல் பேசிவந்தால்
என்றும் மகிழ்வுடன்
   எண்ணம் மிளிர்ந்திட
      ஏற்றம் பொங்கிடுமே! 
 .
பாவலர் அருணா செல்வம்
16.01.2021

வியாழன், 14 ஜனவரி, 2021

மாட்டுப் பொங்கல் வாழ்த்து! 2021

 


 

உழைப்பின் உயர்வென
   உணர்த்தும் சொல்லினை
      உடையது மாடுஅன்றோ!
தழைக்கும் வயலினைத்
   தாங்கும் ஏருடன்
      தகவாய் உழுவுமன்றோ!
குழந்தை பசியினைக்
   கொடுக்கும் பாலினால்
      கோவே போக்குமன்றோ?
அழைத்தே இவைகளை
   அன்பாய் வணங்குதல்
      ஆன்றோர் வழியன்றோ!  
 
தொழிலை விரும்பிநல்
   தொண்டாய்த் தொடர்கிற
      தூய உழவரையும்
மொழியும் தமிழினை
   முறையாய் உரைத்திடும்
      முதுமைக் கவிகளையும்
வழியில் நன்மையை
   வகுத்தே கொடுத்திடும்
      வாய்மை அறிஞரையும்
விழிபோல் எண்ணியே
   விந்தை உலகினில்
      விரைந்தே வணங்கிடுவோம்!  
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2021

புதன், 13 ஜனவரி, 2021

தை பிறந்தாள்!

 


(இயைபு வெண்பா)

.
தேக்கமாய் நின்றிருந்தோம்! தேடியதன் கொற்றத்தைத்
தாக்கியுடன் போக்கித் தழைத்திடும் – ஊக்கத்தை,
சிந்தையில் இன்பத்தைச், செல்வத்தில் ஏற்றத்தைத்
தந்திட வந்தாளே தை!
 
பாவலர் அருணா செல்வம்
14.01.2021

பொங்கல் வாழ்த்து!

 


துள்ளி எழுப்பிடும்
   தூவும் பனிமழை
      தொடங்கும் சிறுகாலை!
புள்ளி வைத்துடன்
   பொலியும் நிறமுடன்
      புணையும் பூக்கோலம்!
கொள்ளை அழகதில்
   குலவும் உயிர்க்கெனக்
      கொஞ்சம் அதனுடனே
வெள்ளை அரிசிமா
   விரும்பிக் கலந்திட
      வேண்டும் வாழ்வதற்கே
 
விண்ணின் அமுதமாய்
   விளைந்த அரிசியை
      விரும்பிப் பொங்கலிட்டு
மண்ணில் விளைந்தநல்
   மஞ்சள் வாழையும்
      மலரும், செங்கரும்பும்
கண்ணாம் உழவனின்
   கனத்த உழைப்பினைக்
      கண்டு நன்றியுடன்
பெண்ணும் ஆணுமாய்ப்
   பெருமை பொங்கிடப்
      பிணைந்தே அதைஉண்போம்!  
 
வானில் நலங்களை
   வழங்கும் ஒளியையும்
      வளஞ்செய் மழையினையும்
மேனி உருப்பெறும்
   மேன்மைப் பலம்தரும்
      மேகம் காற்றினையும்
தீனித் தினம்தரும்
   தேர்ந்த நிலத்தையும்
      தெளிந்த நீரினையும்
தேனின் இனிமையாய்த்
   தெய்வப் பதமெனச்
      சேர்ந்து வாழ்த்திடுவோம்!  
 
எங்கும் இன்பமே
   இளமை நிறைத்திடும்
      இனிமை தரும்நாளாம்!
பொங்கும் புன்னகை
   புதுமை விளைந்திடப்
      பொலியும் இந்நாளில்
திங்கள் ஒளியெனத்
   திகழும் மதியுடன்
      திண்மை பெற்றிடவும்
அங்கம் அழகுடன்
   ஆயுள் நீண்டிட
      அருணா வாழ்த்துகின்றேன்
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2021

செவ்வாய், 12 ஜனவரி, 2021

போகிப் பொங்கல் பொங்குவோம் !

 


 

இன்பம் பொங்கிடும்
   இனிமை சேர்த்திடும்
      இயற்கைத் திருநாளாம்!
நன்மை செய்திடும்
   நலங்கள் விளைத்திடும்
      நம்மின் மகிழ்நாளாம்!
துன்பம் விலகிடும்
   துயரம் போக்கிடும்
      துணிவாய்த் திகழ்நாளாம்!
பொன்னாய்ப் பொங்கிடும்
   புதுமை புரிந்திடும்
      பொங்கல் திருநாளே!   
 
புதிய ஆண்டினுள்
   பழமைக் கழிவினைப்
      போக்கி வளம்பெறவே
முதிரா விடியலில்
   மூண்ட தீயினுள்
      முந்தி அதைப்போட்டோம்!
பொதியாய் நிறைந்தநம்
   புண்மைச் செயலையும்
      புரிந்தே எரித்திட்டால்
மதியின் ஒளியென
   மனமும் நிறைந்திடும்
      மகிழ்வைக் கண்டிடலாம் !  
.
பாவலர் அருணா செல்வம்
13.01.2021

திங்கள், 11 ஜனவரி, 2021

ஐந்திணை!




(எண்சீர் விருத்தம்)
.
ஐந்திணையை வகுத்துவிட்ட நம்மின் முன்னோர்
……..ஆராய்ந்து காட்டிவிட்டார் தமிழர் வாழ்வை!
பைந்தமிழின் பெருமையினைக் குறிஞ்சி, முல்லை,
……..பாலையுடன் மருதநெய்தல் நிலமாய்ச் சொன்னார்!
பைந்தொடிகள் மனம்கண்டு அறிய வைத்த
……..பழம்பெரும் புலவர்களை என்ன சொல்வோம்!
ஐந்திலக்கின் ஆழறிவைப் படித்துப் பார்த்து
……..அகத்திணையும் புறத்திணையும் அறிவோம் என்றும்!
 
குறிஞ்சியெனும் மலைசார்ந்த இடத்தில் எல்லாம்
……..குறிசொல்லும் குறவனுடன் குறத்தி வாழ்வை
நெறியான முறையினிலே சொல்லிச் சென்றார்!
……..நிறைவான புணர்தலுக்குக் கூதீர் காலம்,
செறிவான முன்பனியும், பொழுதாம் யாமம்!
……..சிறப்பான முருகனையே வணங்கி நின்றார்!
வெறியாடல் வெகுசிறக்க அருவி நீரும்,
……..விளைவித்த திணையரிசி உண்டு வாழ்ந்தார்!
 
முல்லையெனும் காடுடைய ஆயர் எல்லாம்
……..முறையான பிரிவுகளைப் பொறுத்தி ருந்தார்!
நல்லழகு திருமாலே அவரின் தெய்வம்!
……..நல்லிசையாம் குழலூதல், மாடு மேய்த்தல்,
மல்லுகட்டி ஏறுதழுவி இன்பம் கொண்டார்!
…..…மழைக்காலம் மாலைநேரம் பொழுதாய்க் கண்டு
நல்வரகு திணைமாவு உணவாய்க் கொண்டு
……..நாயகனின் வரவுக்காய்க் காத்து வாழ்ந்தார்!
 
மருதநில மக்களுக்கோ வயலே செல்வம்!
……..மற்றொருத்தி வருவதனால் நிமித்தம் ஊடல்!
பெரும்பொழுது வைகறையும், காலம் எல்லாம்!
……..பிரிக்கின்ற இந்திரனே இங்கே தெய்வம்!
எருமையினை ஏர்பூட்டி உழுது வந்து
……..ஏற்றமிகு நெல்லரிசி உண்டு வாழ்ந்தார்!
விரும்பாத வேலையினைத் தலைவன் செய்ய
……..விரும்பியவள் என்றென்றும் ஊடல் கொள்வாள்!
 
நெய்தநில மக்களுக்கோ கடலே எல்லாம்!
……..நெஞ்சுருகும் இரங்கல்தான் இவர்கள் வாழ்வு!
பெய்கின்ற மழைபகவான் இங்கே தெய்வம்!
……..பிற்பகலும் கார்காலம் பொழுதாம் இங்கு!
செய்தொழிலோ கடல்காணும் மீனும் உப்பும்
……..சேர்ந்திருக்கும் பரதவர்கள் விற்றே உண்பார்!
மெய்யில்லா தொழிலாலே துன்பம் கொண்டு
……..மீண்டுவர தலைவியர்கள் விடுவார் கண்ணீர்!
 
பாலைக்கோ நிலமில்லை! குறிஞ்சி, முல்லை,
……..பசுமையற்ற நிலத்தினையே முன்னோர் சொன்னார்!
வேலையென மறவரிவர் குற்றம் செய்து,
……..வெண்பகலில் கொற்றவையை வணங்கி வாழ்ந்தார்!
சோலையற்ற வாழ்வினிலே பிரிதல் சோகம்
……..சுமையான வாழ்வாகும் நிலமோ பாலை!
ஓலையதன் வடிவினிலே தொன்னூல் சொன்ன
……..உயர்வான ஐந்திணையும் தமிழர் வாழ்வே!
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2021