மரபுப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபுப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மார்ச், 2020

கொம்புடைந்த வெண்பா!



.
உள்ளத்தின் கொம்புடைந்தால் உற்றவுயிர் போக்குவதாம்!
கள்ளுணர்வின் கொம்புடைந்தால் காண்வழியாம்!– கொள்ளையெழில்
கன்னியரின் கொம்புடைந்தால் கானமிடும்! காலமிடும்
பின்னடைவின் கொம்புடைந்தால் பீடு!
.
உள்ளம்நெஞ்சு கொம்புடைந்தால் நஞ்சு.
கள்ளுணர்வுபோதை கொம்புடைந்தால் பாதை.
கன்னியர்பெண்ணின் கொம்புடைந்தால் பண்.
பின்னடைவுசோதனை கொம்புடைந்தால் சாதனை.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கொம்புடைதல் என்பது தமிழில் உள்ள கொம்பிருக்கும் சொற்களில் உள்ள கொம்புகளை நீக்குதல் என்பதாகும். உதாரணமாககொல்என்ற சொல்லின் கொம்பை நீக்கினால்கால்என வரும். வெண்பாவில் கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்புடைந்த வெண்பாஎனப்படும்.)

வெள்ளி, 13 மார்ச், 2020

தமிழெனும் மொழியினிலே…. !



நொண்டிச் சிந்து ! - 2
.
தமிழெனும் மொழியினி லே – முழ்கித்
தண்ணொளி வீசிடக் கண்டிருந் தேன்!
அமிழ்தெனும் வார்த்தையி லே – நீந்தி
அழகெனும் கவிதையில் பழகிவந் தேன்!

பெண்ணெனும் பேதமை யால் – அதில்
பிணைந்திட்ட வார்த்தையில் இணைந்திருந் தேன்!
விண்வெளி பறப்பது போல் – இதயம்
விரித்திட்ட சிறகென வரித்திருந் தேன்!

வளமிடும் கவிதைகண் டேபூவை
வருடிடும் வண்டென உருகிநின் றேன்!
உளமெனும் கூட்டுக்குள்ளேதேனை
ஒளித்திடும் அழகினில் களித்துநின் றேன்!

இசையதன் மயக்கத்தி லே – என்னுள்
இறங்கிய உணர்வினில் மறந்திருந் தேன்!
திசையெனும் எட்டினி லும் – அதன்
திருமுகம் கண்டிட விரும்பிநின் றேன்!

மனமிடும் கலைகளி லே - இன்ப
மலரினுள் மணமென வளரவிட் டேன்!
குணமதை அறியவில் லைஉண்மை
கொடுத்திடும் அடிதனில் ஒடுங்கிவிட் டேன்!

குழந்தையின் உயர்வுகண் டே – அன்னை
கொடுமைகொ டுமையெனத் தடுப்பது மேன்?
பழமையில் சூழ்ந்துகொண் டே – குரு
பகைமையை வளர்த்தியுள் திகைப்பது மேன்?

குறையெது தேடிநின் றேன் – சினம்
கொண்டிடக் கருமையாய்க் கண்ணிசைக் கும்!
இறையிடம் கொடுத்துவிட் டேன் – கரு
இன்னிசைக் கொட்டிடப் பண்ணிசைக் கும்!
.
பாவலர் அருணா செல்வம்
14.03.2020