வெள்ளி, 29 நவம்பர், 2013

சுட்டிப் பெண்!!




சுட்டிப் பெண்ணே! சொல்லமுதே!
      சொக்கத் தங்கத் தமிழ்த்தேனே!
எட்டி நின்றே பார்த்தாலும்
      என்னை ஏதோ செய்பவளே!
குட்டி போட்ட  பூனைபோல
      விட்டே அகல முடியாமல்
கட்டிப் போட்டு விட்டாயோ
      காதல் கயிறு கொண்டென்னை?

மொட்டு விரிய மணம்வீசும்!
      மூடி வைத்தால் மனமேங்கும்!
சிட்டு போல பறப்பவளே!
      சிந்தை நனைய வைத்தவளே!
இட்டுக் கட்டி விடும்பாட்டில்
      இனிய கருவைத் தருபவளே!
சொட்டுத் தேன்போல் கவியினிக்க
      சொல்லேன் அன்பாய் ஒருவார்த்தை!

தீட்டு கின்ற கவிகளிலே
      தெளிவாய் நீதான் தெரிகின்றாய்!
மூட்டும் மோக உணர்வினிலும்
      முன்னால் வந்து வதைக்கின்றாய்!
மீட்டும் இசையோ தெரிவதில்லை
      மென்மை இதயம் உணருமடி! 
ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
      எழுதும் கவிகள் உண்மையடி!

அருணா செல்வம்.

10.05.2012

வியாழன், 28 நவம்பர், 2013

பெரிய சொத்து!!


   “என்னங்க... நீங்க பேசாம வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க“ கண்களில் தளும்பி நின்ற கண்ணீரை மறைத்தபடி சொன்னாள் அபர்ணா.
   “என்ன அபர்ணா.... என்னாச்சி உனக்கு?“ சற்றுக் குழப்பத்துடன் கேட்டான் சேகர்.
   “ஆமாங்க. நமக்குக் கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆயிடுச்சி. இனிமேலும் எனக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைப் போயிடுச்சி“ என்றாள் குரல் தழுதழுக்க.
   “அபர்ணா.... உனக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து உனக்குக் குழந்தையே உண்டாகி இருக்கவில்லை என்றால் இப்படி யோசிக்கலாம். ஆனால்... கல்யாணம் ஆன உடனே தரிச்சதை, வீட்டுல ரெண்டு தங்கைகள் கல்யாணத்திற்கு நிற்கிறார்கள் என்று அம்மா சொன்னதால கலைச்சே. இரண்டாவது என் தங்கையும் அதே நேரத்துல கர்ப்பமா இருந்ததால, இந்த நேரத்துல வேண்டாம்ன்னு என் அம்மா சொல்லுக்கே கலைச்சே. அந்த பாவமோ என்னவோ அதன் பிறகு உனக்குக் கருவே கூடலை. ப்ச்சி“ கவலையுடன் சொன்னான்.
   “அது என்னோட தப்பு தாங்க. மற்றவர்களுக்காக என் குழந்தையைக் கலைச்சேன். நான் அப்பவே அதற்கு ஒத்துக்காமல் இருந்திருந்தா... இப்படி பேசி இருக்கமாட்டேன்.“ வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
   “கவலை படாதே அபர்ணா. இதுக்குக் காரணம் நீ மட்டும் இல்லை. நானும் அம்மாவும் தான் காரணம். அன்னைக்கு இருந்த சூழல் அப்படி. நானும் தான் வாய்பேசாமல் சம்மதித்தேன். அப்போது வேற வழி நமக்குத் தெரியலை. அதுக்காக இப்போ பழியை உன்மேல மட்டும் சுமத்த முடியாது. பொறு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்“ என்றான் ஆறுதலாக.
   “இன்னும் கொஞ்ச நாள் கழித்து இந்த முடிவை எடுக்கிறதைவிட இப்பொழுதே இதற்கு ஒரு முடிவு எடுக்கலாமே.“ என்று அவள் சொல்ல,
   “நான் எற்கனவே ஒரு முடிவு எடுத்திட்டேன் அபர்ணா“ என்றான்.
   “என்ன அது?“
   “ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்ன்னு தான்“
   “அது முடியாதுங்க“
   “ஏன்...?“
   “இந்த முடிவுக்கு உங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு நீங்க ஒரே ஆண்பிள்ளை. தன் பிள்ளையோட வாரிசு தான் அவங்களுக்குத் திருப்தியைத் தரும். அது மட்டுமில்லாம உங்களுக்குத் தான் எந்த குறையும் இல்லையே“ என்றாள் பெருமூச்சுடன்.
   “அதுக்காக... நா..“ அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து பேசி இந்த முடிவை எடுத்து என்னிடம் சொன்னால் எனக்கு அது தாங்க முடியாத கவலையைத் தரும். அதைவிட நானே ஒதுங்கிக் கொள்வது தான் நல்லது. இந்த முடிவை நானே உங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்புகிறேன்“ என்று எழுந்து போனாள்.
   அவன்,“சரி“ என்று சத்தமாகச் சொன்ன வார்த்தை ஈயத்தைக் காய்ச்சி காதில் விட்டது போல் வலித்தது.

   அபர்ணா மனங்கனக்க வீடு திரும்பியதும், சேகர் ஒரு காகிதத்தை நீட்டி கையெழுத்துக் கேட்டான். அபர்ணா புரியாமல் பார்த்தாள். “அபர்ணா... இது விவாகரத்து பேப்பர். நமக்கு விவாகரத்து ஆனால் தான் நான் வேற கல்யாணம் பண்ணிக்க முடியுமாம். கையெழுத்துப் போடு“ தாளை நீட்டினான்.
   அபர்ணா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
   “ம்... கையெழுத்துப் போடு. நீ தானே எப்போ பார்த்தாலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத வடியிற. உன் திருப்திக்காகத்தான் இந்த ஏற்பாடு. அம்மா... ஏற்கனவே நல்ல இடத்துல பார்த்து ஏற்பாடு செஞ்சி வச்சிட்டாங்களாம். இப்போ நீ தான் சம்மதிக்கணும்.“ திரும்பவும் தாளை அவன் முன் நீட்டினான்.
   அபர்ணா... பதில் பேச முடியாது வேர்த்துப் போய் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
   “சேகர்... நீ சும்மா இரு. நான் அவளிடம் பேசிக்கிறேன்.“ அவனின் அம்மா அவன் கையிலிருந்தத் தாளை வாங்கிக் கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள். அபர்ணா மிரட்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
   “என்ன அபர்ணா பயந்துட்டியா...? கவலைப்படாதே. உனக்குக் குழந்தைப் பிறக்காததுக்கு நானும் ஒரு காரணம் தான். கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க வீட்டுல இருக்கும் பொழுது உன்னைத் திடிர்ன்னு கல்யாணம் பண்ணி அழைச்சிக்கினு வந்துட்டான். அந்த கோபம் எனக்கு அப்பொழுது அதிகமா இருந்தது. என்னோட கோபத்தை மாற்ற நான் சொன்னதுக் கெல்லாம் நீ சரின்னு சம்மதிச்சே. என் பெண்களைப் பற்றி நான் யோசிச்சேனே தவிர உன்னை பத்தி கவலைப்படலை. அதுவும் என்னோட தவறு தான். அதுக்கு பிரயசித்தம் தான் இது. இந்தா இந்தத் தாளுல கையெழுத்து போடு.“ தாளை நீட்டினாள்.
   அபர்ணா ஏதும் புரியாதவளாக அவளைப் பார்த்தாள். நெற்றியில் புத்த வியர்வை காதோரத்தில் வழிந்தது. அவளின் பயந்த முகத்தைக் கண்டவள், “அபர்ணா... இது சேகர் சொன்னது போல விவகாரத்து பத்திரம் கிடையாது. ஒரு குழந்தையைச் சட்டப்படி தத்து எடுக்கிறதுக்கான பத்திரம். பயப்படாமல் கையெழுத்து போடு“ என்றாள்.
   அதைக் கேட்டதும் நம்பாதவளாக அபர்ணா சட்டென்று அந்தத் தாளை வாங்கிப் படித்துப் பார்த்தாள். “மாமீ... இதுக்கு எப்படி நீங்க ஒத்துக்கினிங்க?“ அதிர்ச்சியுடன் கேட்டாள்.
   “ஏன்?“
   “தன் பிள்ளையோட வாரிசா இருக்கனும்ன்னு தானே எந்த அம்மாவும் விரும்புவாங்க.... நீங்க எப்படி...“
   “எல்லா அம்மாவும் அதைத் தான் விரும்புவாங்க. அவங்களுக்கெல்லாம் சொத்து பத்துன்னு வசதி இருக்கும். நாளைக்கு அதை ஆள ரத்த சொந்த வாரிசுக்கு ஆசைப்படுவாங்க. நமக்கு அந்த பிரட்சனையே இல்லையே. இப்போ இந்த குழந்தையை வளர்ப்போம். நாளைக்கு உன் வயத்துல ஒரு குழந்தை பொறந்தா அதை வளக்கலாம். நமக்கு அந்த மனசே பெரிய சொத்து அபர்ணா“ என்று சொல்லியபடி தாளை வாங்கி மகனிடம் கொடுத்தாள்.
   அதை வாங்கிக் கொண்டவன், “அபர்ணா... வா... நாம மூனு பேரும் போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம்“ என்று அழைக்க முழுமகிழ்ச்சியுடன் கிளம்பினாள் அபர்ணா.
    
அருணா செல்வம்
29.11.2013

   

புதன், 27 நவம்பர், 2013

அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி!! (நகைச்சுவை)





    ரொனால்ட் ரீகன், அமெரிக்காவில் அதிபராக இருந்த போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார்.
   “மிஸ்டர் பிரிசிடெண்ட், அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி ஏற்படுமா?“ என்று கேட்டார்.
   “நிச்சயம் ஏற்படாது“ உடனே பதில் அளித்தார் ரீகன்.
   “எப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார் நிருபர்.
   ரீகன் புன்னகைத்தபடி, “அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பெண்ணாவது தனக்கு 35 வயது நிரம்பி விட்டதாகக் கூறுவார்களா?“ என்றார்.
   நிருபரும் “உண்மை தான்“ என்று சொல்லி ஆமோதித்து அவருடன் சிரித்தார்.


படித்ததில் சிரித்தது.

-------------------------------------------------------
சினிமா துறையில் முதல் பெண்மணிகள்!!

1.      தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி, நடிகை அஞ்சலி தேவி. (1959)
2.      தமிழில் முதன் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.
3.      முதன் முதலில் சினிமாவில் கதை எழுதி இயக்கி தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த பெண் ஃபாத்திமா பேகம்.
4.      முதல் பெண் இசையமைப்பாளர்கள் நர்கீஸின் தாய் ஜடான் பாய் மற்றும் சரஸ்வதி தேதி.
5.      முதன் முதலில் திரையில் தோன்றி நடித்த நடிகைகள் துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும். (படம் – 1913 இல் வெளிவந்த மோகின் பாஸ் மாசுர்)
6.      திரையில் தோன்றிய முதல் பெண் குழந்தை நட்சத்திரம் 1918 இல் வெளியான “கிருஷ்ணா ஜனம்“ படத்தில் நடித்த மந்தாகினி.

“அரிய அறிவுத்துளிகள்“ நூலிலிருந்து.

--------------------------------------------------------

திங்கள், 25 நவம்பர், 2013

தாவி குதிக்கும் தலைவர்கள்!!


நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
    நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
    விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
    ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
    இனமாய் நம்மை எண்ணிடுவார்!

மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!


அருணா செல்வம்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

முதல்தரம் இருக்க இரண்டாம் தரம் ஏன்?


   உங்களுக்கு ஹென்றி ஃபோர்டுவைத் தெரியுமா...? அவர் தான் உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு காரைத் தயாரித்தவர்.
   இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஒரு சமயம் இவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களுக்குச் சென்று வர அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன் படுத்தினார்.
   அந்த காலத்தில் ஃபோர்டு கார்களைப் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் புகழ் பெற்றிருந்தன.
   ஆனாலும் ஃபோர்டு கார்களைவிட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இரண்டாம் இடத்தில் தான் இருந்தன.
   முதல் தரமான போர்டு கார்களைத் தயாரிக்கும் ஹென்றி ஃபோர்டு, இரண்டாம் இடத்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறாரே என்று நினைத்துப் பெரிதும் வியந்தனர் பிரிட்டிஷ் மக்கள்.


   ஒரு நாள் இரவு இங்கிலாந்து மன்னர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஹென்றி ஃபோர்டு கலந்து கொண்டார்.
   அப்போது மன்னர் அவரைப் பார்த்து, “மிஸ்டர் ஃபோர்டு... நீங்கள் உங்கள் தயாரிப்பான ஃபோர்டு காரைப் பயன்படுத்தாமல், ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?“ என்று கேட்டார்.
   அதற்கு ஹென்றி ஃபோர்டு, “நிச்சயமாக அரசே. எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு ஃபோர்டு கார் வேண்டும் என்று எனது மேனேஜரிடம் சொல்லி இருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரும் தயாராகி வெளியே வருவதற்கு முன்னாலேயே விற்பனையாகி விடுகிறது.
   எனது மேனேஜர் மிகவும் நேர்மையானவர். அவர் முதலில் வாடிக்கையாளர்களுக்குத் தான் கார்களை விற்பனை செய்வார். அவர்களைத் திருப்திப்படுத்துவது தான் அவரது முதல் நோக்கம். அந்த சமயத்தில் நானே வந்து கேட்டால் கூட காரைத் தரமாட்டார். அதனால் என் சொந்த உபயோகத்திற்கு இன்னும் ஃபோர்டு கார் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறேன்“ என்றார்.


   ஃபோர்டு கார் கம்பெனி மானேஜரின் கடமை உணர்ச்சியையும் அவருக்கு செவிமடுத்து ஒரு சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்ளும் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டையும் நினைத்துப் பெரிதும் வியந்தார் இங்கிலாந்து மன்னர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.



வெள்ளி, 22 நவம்பர், 2013

அணுகுண்டு ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி!!


(படித்ததில் சிந்திக்க வைத்தது)

    உலகில் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
   அதன் உருவாக்கப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர் (Dr. Robert Oppenheimer) அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்னால் அணுகுண்டு பற்றிய விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
   அவர் கூறியதை அங்கு கூடியிருந்த அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
   அப்பொழுது ஒருவர் எழுந்து, “இவ்வளவு ஆபத்தான அணுகுண்டிலிருந்து தப்பிக்க ஏதேனும் பாதுகாப்புக் கருவி இருக்கிறாதா?“ என்று கேட்டார்.
   “இருக்கிறது“ என்றார் டாக்டர் ராபர்ட்.
   “என்ன அது?“
   “அது தான் சமாதானம்!“ என்று கூறிவிட்டு புன்னகைத்தாராம் டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர்.


வியாழன், 21 நவம்பர், 2013

இனிமை தருபவள்!!



நெஞ்சினில் அமர்ந்த சின்னவளே! - என்
    நினைவினில் இன்பம் தந்தவளே!
பஞ்சினில் இலவம் போன்றவளே! - நல்
    பணிவினில் உயர்ந்து நின்றவளே!

கண்களில் காந்தம் கொண்டவளே! - வரும்
   கனவினில் என்னை உண்பவளே!
பெண்களில் தனியாய்த் தெரிபவளே! - தரும்
   பேச்சினில் இனிமை தருபவளே!

தன்னையே நினைக்க வைப்பவளே! - எனைத்
   தனிமையே விரும்பச் செய்பவளே!
என்னிலே முழுதாய் நிலைத்தவளே! - உனை
   எண்ணிடக் கவிகள் விளைந்திடுமே!

அருணா செல்வம்
21.11.2013

புதன், 20 நவம்பர், 2013

“சும்மா“ ஒரு ட்ரீட்!!

நட்புறவுகளுக்கு வணக்கம்.










   நேற்று எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை வலையில் வெளியிட்டு இருந்தேன். அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளாததால் பதிவின் கீழே ஒரு செய்தியாக எழுதியிருந்தேன்.
   அப்படிக் கூடாது. அந்த செய்தியை முன் வைக்க வேண்டும் என்று சில நண்பர்கள் சொன்னதால் அதைத் திரும்பவும் மாற்றி வெளியிட்டேன்.
   வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வெறும் நன்றி மட்டும் போதாது. எங்களுக்கு “ட்ரீட்“ வேண்டும் என்று கேட்ட (அடம்பிடித்த “மதுரைத் தமிழன்“) நட்புறவுகளுக்காக (இங்கே பிரான்சில் எனக்குப் பிடித்தவைகளை) இதை வெளியிட்டேன்.
   இதன் செய்முறைகளைக் கேட்பவர்களுக்கும் விளக்கிச்சொல்ல தயாராக உள்ளேன். (எப்படி இணையத்திலிருந்து சுடுவது? என்பதைத் தான்)

அன்புடன்

அருணா செல்வம்.

திங்கள், 18 நவம்பர், 2013

அங்கீகாரம்!!

நட்புறவுகளுக்கு வணக்கம். 

   என்னுடைய “நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது.
   இதனால் இனி, அனைத்து அரசு பொது நூல் நிலையங்களிலும் எனது இந்தக் கவிதை நூல் இருக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.
---------------------------------------------------------------
அங்கீகாரம்!! (நிகழ்வு)


    இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ஜார்ஜ் ஒரு சமயம் மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்.
   அது பகல் நேரம்.
   ஜார்ஜ் கோதுமை வயல்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு வந்தார்.
   ஒரு வயலில் ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தாள்.
   ஜார்ஜ் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் வந்தார்.
   “பெண்ணே.. நீ மட்டும் இங்கு தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே. மற்றவர்கள் எல்லாம் எங்கே?“ என்று கேட்டார்.
   “மன்னர் பவனி வருகிறாராம். அதைப்பார்க்க எல்லோரும் சென்றிருக்கிறார்கள்“ என்றாள் அந்தப் பெண்.
   “நீ ஏன் செல்லவில்லை?“ என்று கேட்டார் ஜார்ஜ்.
   “நான் வேடிக்கை பார்க்கச் சென்றால் எனக்குக் கூலி கிடைக்குமா? எனக்கு வேலைதான் முக்கியம். வேடிக்கை அல்ல.“ என்றாள் அந்தப்பெண்.
   அவளது கடமை உணர்வையும் உழைப்பையும் கண்டு மனம் மகிழ்ந்த ஜார்ஜ் மன்னர், சில தங்க நாணயங்களை அவளிடம் கொடுத்தார்.
   அந்தப் பெண் திகைத்து அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
   “மற்றவர்கள் இங்கு வந்தபின் அவர்களிடம் சொல்... நீங்கள் எல்லோரும் மன்னரைப் பார்க்கப் போய் விட்டீர்கள். ஆனால் மன்னரோ இங்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றார் என்று“
   சொல்லிவிட்டு ஜார்ஜ் மன்னர் விரைந்து செல்ல...
   இது உண்மைதானா என்று நம்பமுடியாதபடி அந்தப் பெண்மணி, தன் கையிலிருந்த தங்க நாணயங்களையும் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜார்ஜ் மன்னரையும் மாறி மாறி பார்த்தாள்.
   உண்மை தான். என்பதை அவள் கையிலிருந்த தங்க நாணயங்கள் உணர்த்தியது.
   அவள் வாய்ச்சொல்லை மற்றவர்கள் நம்பவில்லை என்றாலும் இந்த நாணயங்கள் அவர்களை நம்பவைக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தாள்.

(படித்ததில் பிடித்தது)
---------------------------------------------------


சனி, 16 நவம்பர், 2013

தாய்ப்பாசம்!! (நிமிடக்கதை)



   சூர்யா நேரம் கழித்து வீட்டில் நுழைந்தபோது அவனின் அம்மா “ஏனப்பா இவ்வளவு நேரம்?“ கவலையுடன் கேட்டாள். “ஆபிஸ்ல இன்னைக்குக் கொஞ்சம் அதிக வேலை. அதனால் தான். அம்மா, எனக்கு ஒரு காப்பி போட்டு கொடு“ என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
   அவன் தன் அறைக்குள் சென்று உடைமாற்றிவிட்டு வந்த பிறகும் அவன் தாய் அவன் கேட்ட காப்பியைத் தராமல் எங்கோ அவசரமாக போக உடைமாற்றிக் கொண்டிருந்தாள்.
  அவனே அடுப்படிக்குச் சென்று காப்பிப் போட முனைந்த போது சத்தம் கேட்டு ஓடிவந்தாள். “சூரியா... காபி தானே... நகரு. நான் இதோ ஒரு நிமிஷத்தில் தர்ரேன்“ அவள் சொல்லவும் பக்கத்துத் தெரு மாமி வரவும் சரியாக இருந்தது.
   “கிளம்பித்தான் காத்திருந்தியா...? வா. கோவில் நடை சாத்திரதுக்குள்ள சீக்கிரம் போய் வந்திடலாம்.“ மாமி அழைக்க... “சூரியா... நீயே காப்பிப் போட்டுக்கோப்பா“ சொல்லிவிட்டு அவசரமாக கோவிலுக்கு ஓடினாள்.
   சூரியா காப்பியைக் கலக்கிக் கொண்டே யோசித்தான். வெளிநாட்டில் இருக்கும் அக்காவிற்கு பிரசவ நேரம். தனியாக இருக்கிறாள். வெளியூரில் வேலைசெய்யும் அண்ணனுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று போனில் இரும்பிக்கொண்டே சொன்னான்.
   இந்த இரண்டு விசயமும் தான் அம்மாவை இப்படிக் கோவில் குளம் என்று சுத்தவிட்டிருக்கிறது. இப்பொழுது மட்டுமல்ல. எப்பொழுதுமே அம்மாவிற்கு அவர்கள் இருவரின் நினைவு தான். கூடவே இருக்கும் நம்மைப் பற்றி கொஞ்சம் கூட அக்கரைக் காட்டுவதில்லையே... என்ற ஆதங்கம் அவனுக்குள் வந்தது.
   பேசாமல் நாமும் வேலையை வெளியூருக்கு மாற்றிக் கொண்டு சென்று விட்டால், அம்மா நம்மைப்பற்றியும் யோசிப்பாள் இல்லையா...? மனம் கணக்குப் போட அவனுக்கு அதுவே சரியென்று பட... அதை அம்மாவிடம் சொன்னான்.
   அவள் உடனே, “வேண்டாம்ப்பா. மற்ற பிள்ளைகள் கண்காணா தூரத்துல இருந்தாலும், நீ என் அருகிலேயே இருக்கிறதால தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறேன். நீயும் வெளியூருக்குப் போயிட்டா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.“ என்றாள் அம்மா.
   “நான் உன் பக்கத்திலேயே இருக்கிறதால தான் நீ என்னை நினைக்கிறதே இல்லையே அம்மா“ தன் ஆதங்கத்தை வெளியிட்டான் குரல் கம்ம.
   “அப்படி சொல்லாதே சூரியா. இன்னைக்கு நீ எப்பொழுதும் போல வேலையை முடிச்சிட்டு நேரத்திற்கு வராததால் நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? மாமி கோவிலுக்குக் கிளம்பி இரு என்று சொல்லி இருந்தாள். ஆனால் நீ நேரத்துக்கு வராததால எனக்கு எதிலுமே மனசு போகவில்லை. நீ வந்ததும் தான் அப்பாடா.. நீ நல்லபடியா வந்திட்டியேன்னு மனசுல திருப்தி வந்தது. நேரமாகிவிட்டது கோவிலுக்குப் போக வேண்டாம் என்று தான் நினைச்சேன். ஆனால், நீ நல்லபடியா வந்திட்டதால அந்த கடவுளுக்கு நன்றியைச் சொல்லிடலாம்ன்னு ஓடினேன். நீ நல்லா இருந்தால் தான் நான் மற்ற பிள்ளைகளை நினைத்துக் கவலைப்பட முடியும் சூரியா.“
   அன்பு பொங்க சொன்னாள் அம்மா.
   தாய்ப்பாசத்தின் அளவை அறியமுடியாமல் கண்கலங்கி நின்றான் சூரியா.


அருணா செல்வம்.

வியாழன், 14 நவம்பர், 2013

இது சரியா? – பதில்சொல்லுங்கள்!



   போன சனிக்கிழமை அன்று என் தோழி என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஓர் இளம் மருத்துவர். ரொம்ப நாட்கள் கழித்து அவளைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
   இரவெல்லாம் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் இந்தத் தகவலை என்னிடம் சொல்லி, இந்தக் கேள்வியையும் கேட்டாள்.
   அவள் சொன்னது....
   அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் 92 வயதான ஒருவர் அட்மிட் ஆகி இருந்தார். அந்த மனிதர் நன்றாக பேசுகிறார். நன்றாக சாப்பிடுகிறார். நன்றாக தூங்கி எழுகிறார். ஆனால், அவருக்குக் கொஞ்ச நாட்களாகச் சிறுநீர் கழிப்பதில் தான் பிரட்சனை ஏற்பட்டுள்ளது.
   அதை ஆராய்ந்து பார்த்ததில் அவரின் சிறுநீர் குழாயில் கல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது தெரிந்ததால், அவர் அறுவை சிகிட்சை செய்து கொள்வதற்காக அன்று மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.
   அவருக்கு மறு நாள் அறுவைசிகிட்சை நடைபெற இருந்ததால் முதல்நாள் என் தோழியின் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்.
   அன்று, “சிரி“ நாட்டிலிருந்து வந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் என் தோழிக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.
   என் தோழி, நாளை அறுவைசிகிட்சை நடைபெற இருக்கும் அந்த நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைச் சரிபார்த்து எழுதிக் கொடுத்து அக்கரையுடன் கவனித்தும் கொண்டாள்.
   இதைக் கண்ட “சிரி“ நாட்டு டாக்டர் “இதெல்லாம் இவருக்குத் தேவைதானா...?“ என்று சொல்லி சற்று நக்கலாக சிரித்திருக்கிறார்.
   அவள், அவரிடம் அங்கே எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று காரணம் கேட்டாள்.
   அதற்கு அவர், “அந்த நோயாளிக்கு 92 வயதாகிவிட்டது. அவரை அப்படியே சாக விடுவது தான் நல்லது. இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்?“ என்று கேட்டிருக்கிறார்.
   மருத்துவராக இருந்துக்கொண்டு இப்படி பேசுகிறாரே என்று என் தோழி சற்று கோபப்பட்டாலும் மனத்தை அடக்கிக்கொண்டு “நோயிக்காக சிகிட்சைப் பெற வந்தவரை அப்படியே விடுவது தவறில்லையா... உங்கள் நாட்டில் இப்படித்தான் டாக்டர்கள் நடந்து கொள்வார்களா...?“ என்று கேட்டிருக்கிறாள்.
   அதற்கு அவர், “எங்கள் நாட்டில், என் வாழ்நாளில் இவ்வளவு வயதான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. எங்கள் நாட்டில் அறுபதிலிருந்து எழுபதுவரை அவர்களாகவே நடந்து சிகிட்சைக்கு வரும் பச்சத்தில் டிரிட்மண்ட் கொடுப்போம். பொதுவாக எழுபது வயதிற்கு மேல் உடல் உபாதைகள் வந்தால் யாரும் மருத்துவ மனைக்கு வருவதில்லை. அவர்களின் குடும்பத்தாரும் அழைத்து வர மாட்டார்கள். வயதானவர்களுக்கு வரும் பிரட்சனைகள் தான் என்று பெரிதுபடுத்த மாட்டார்கள். அப்படியே விட்டுவிடுவார்கள்.
   ஆனால் இங்கே... இந்த வயதானவருக்கு இப்படியொரு சிகிட்சை. ஆச்சர்யமாக இருக்கிறது. நன்கு யோசித்துப் பார்த்தால் தேவை அற்றது. அவருக்கு உபயோகப்படும் மருந்து மாத்திரை மற்றும் நேரத்தை சிறுவயதானவர்களுக்கு உபயோகித்தால் அவர்களுக்கும் நாட்டிற்கும் உபயோகப்படும்“ என்றாராம் கோபமாக.
   அவர் சொன்னதில் உண்மை இருந்தாலும் அதை என் தோழியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
   அதை அவள் என்னிடம் சொன்னாள். நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
   இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். அந்த “சிரி“ நாட்டு மருத்துவர் சொன்னது சரியா...?

குழப்பத்துடன்

அருணா செல்வம்.

புதன், 13 நவம்பர், 2013

பணம் படுத்தும் பாடு!! (நிகழ்வு)


   இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.
   இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் மீது நாள்தோறும் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த நேரம்.
   அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், பி.பி.சி., வானொலி நிலையத்திற்கு போன் செய்து, தான் இன்னும் சில நிமிடங்களில் அங்கு வருவதாகத் தெரிவித்தார்.
   காரணம்...
   அன்று இரவு பி.பி.சி.,யின் தேசிய ஒலிபரப்பில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
   சர்ச்சில் தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. எதிரிகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்ததால் நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
   சாலைக்கு விரைந்து வந்த சர்ச்சில், வழியில் வந்த ஒரு டாக்சியை நிறுத்தி, “பி.பி.சி., நிலையத்திற்குப் போக வேண்டும்“ என்றார்.
   அதற்கு டிரைவர், “டாக்சி வராது சார். இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்குத்தான் நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.“ என்றான்.
   அதைக் கேட்ட சர்ச்சிலுக்குப் பெருமை பிடிபடவில்லை. இந்த இருட்டில் தன்னை யார் என்று இவன் அறியாவிட்டாலும் தன் பேச்சிற்கு இத்தனை மதிப்புக் கொடுக்கிறானே என்று நினைத்த அவர், அவனுக்கு அன்பளிப்பு தர விரும்பினார். உடனே தன் கோட் பைக்குள் கையை விட்டு பத்து பவுண்டு நோட்டு ஒன்றை எடுத்தார்.
   அவர் பணம் எடுத்ததைக் காரின் உள் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான் டிரைவர்.
   சட்டென்று அவன் கண்கள் சுடர் விட்டன!
   அடுத்த வினாடி...
   விருட்டென்று அவர் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கிய அவன், அதைத் தன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டே, “சர்ச்சில் கிடக்கிறார். நீங்கள் ஏறி உட்காருங்கள் சார். உங்களை கொண்டு போய் பி.பி.சி., நிலையத்தில் விட்டுவிடுகிறேன்“ என்றான்.
   அதைக் கேட்ட சர்ச்சில் அசைவற்று அப்படியே நின்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

என் பாட்டிக்குப் பிடிக்காது!! (சிரிக்க - சிந்திக்க)



   இங்கிலாந்தின் அரசராக இருந்த எட்டாம் எட்வர்ட் (ஆட்சி காலம் – 1936), தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.
   அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவரது ஆசிரியர் ஒரு நாள், “சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவார்கள்“ என்றார்.
   அதற்கு எட்வர்ட், “ஐயா... சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?“ என்று கேட்டான்.
   “ஆமாம். சொர்க்கத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி அடிமையாக இருந்தாலும் சரி... ஒன்றாகவே கருதப்படுவார்கள்.“ என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர்.
   அதைக் கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.
   “என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சம்மாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்“ என்று உரத்த குரலில் பேசினான்.
   அதைக் கேட்டு சிரித்த ஆசிரியர், “நீ கூறுவது உண்மைதான்“ என்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

கருணை!!



இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
   இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
   மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
   கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
   நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
   எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
   உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
   பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தின் மறைந்திருக்கும் மழையைப் போல
   காலமுடன் உதவுகின்ற எண்ணம் ஓங்கும்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
   அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
   பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
   உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
   கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!
  
அருணா செல்வம்
08.11.2013

(இந்தப் பாடல்
காய் – காய் – மா – தேமா
   காய் – காய் – மா – தேமா... என்ற இலக்கணத்தில் அமைந்த எண்சீர் விருத்தம்)

இரண்டாம் தாரம்!! (நிகழ்வு)


   ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பழைய புத்தகக் கடைக்குச் சென்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
   அப்பொழுது ஒரு புத்தகத்தைப் பார்த்துச் சற்றே திடுக்கிட்டார்.
   அந்தப் புத்தகம் அவர் எழுதிய புத்தகம் தான்!
   அதை ஒரு நண்பருக்குத் தனது கையெழுத்திட்டு அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகத்தை அவர் பழைய புத்தகக் கடையில் போட்டு விட்டார்.
   “என்ன அக்கிரமம்? எனக்கும் மரியாதை இல்லை. நான் அனுப்பிய இந்தப் புத்தகத்துக்கும் மரியாதை இல்லை. இது மிகவும் மோசமான பழக்கம் அல்லவா? இதை இப்படியே விடக் கூடாது“ என்று எண்ணிய பெர்னார்ட் ஷா அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினார்.
   முன்பு “அன்பளிப்பு“ என்று எழுதி இருந்ததற்கு கீழே “மறுபடியும் என்னுடைய அன்பளிப்பு“ என்று எழுதி அந்த நண்பருக்கே இரண்டாந்தாரமாக அனுப்பி வைத்தார்.
   புத்தகத்தைப் பெற்ற நண்பர் வெட்கப்பட்டார். அன்றே தனது வீட்டில் புத்தகங்களைப் பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.


(தலைப்புக்கும் கதைக்கும் “சம்மந்தம்“ இருக்கிறது தானே!?)