பலகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 டிசம்பர், 2014

பொரி அரிசி உருண்டை!!



நட்பறவுகளுக்கு வணக்கம்.
    நேற்று புதியதாக திருமணமான தம்பதியர் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக போன் செய்தார்கள். அவர்களுக்கு அவசர அவரசமாக இந்தப் பொரி அரிசி உருண்டையையும் முறுக்கும் செய்து வைத்து உபசரித்தேன்.
    அதிலிருந்து உங்களுக்கும் கொஞ்சம்... “சும்மா“ சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்.

அரிசி – 2 டம்ளர்.
சர்க்கரை – ஒரு டம்ளர் (வேண்டுமானால் மேலும் சேர்த்துக் கொள்ளலாம்)
ஏலக்காய் – ஐந்து (நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்)
முற்றிய தேங்காய் – ஒன்று (துருவி வைத்துக்கொள்ளங்கள்)
உப்பு – கொஞ்சம்.

செய்முறை


     
அடிகனமான பாத்திரத்தில் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக பூக்க வறுக்க வேண்டும்.


    வறுத்தப் பிறகு ஆற வைத்து அதை மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    திரும்பவும் அதே பாத்திரத்தில் ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும்


உப்பு,
சர்க்கரை,
ஏலக்காய் சேர்க்க வேண்டும்.


அரிசிமாவைத் துரலாக சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். நன்கு என்றால் இரண்டு மூன்று நிமிடத்திலேயே வெந்து கட்டியாகி விடும். கட்டி கட்டியாக வராமல் நன்றாக கிளறிக்கொண்டே  இருக்க வேண்டும். 


வெந்து உருண்டைப் பிடிக்கும் அளவிற்கு வந்ததும் துருவிய தேங்காயில் கொஞ்சம் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.


    பின்பு சிறு சிறு உருண்டையாகப் பிடித்துத் துருவிய தேங்காயில் உருட்டி தட்டில் அடுக்கி வையுங்கள்.

    இது தான் பொரி அரிசி உருண்டை

செய்வதற்கு மிகவும் எளிது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். செலவும் கம்மி தான்.

நட்புறவுகளே..... இந்தப் பலகாரத்தை நம் தமிழ்ப்பெண்கள் அனைவருமே மிக நன்றாக செய்வார்கள். நான் எதற்காக இதைச் செய்து வெளியிட்டேன் என்றால்...... நான் சரியாகத்தான் செய்திருக்கிறேனா? என்று தெரிந்துக் கொள்ளத்தான். தவறு இருந்தால்... தோழிகளே பின்னோட்டத்தில் சொல்லிக்கொடுங்கள்.

அன்புடன்

அருணா செல்வம்.

சனி, 20 செப்டம்பர், 2014

“தொதோல்“ செய்து பாருங்கள்!! (சமையல்)



 நட்புறவுகளுக்கு வணக்கம்.
     போன ஒரு பதிவில் நெய் சொட்டச் சொட்ட இருக்கும் “தொதோல்“ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று எழுதி இருந்தேன்.
   அதைப் படித்த ஸ்ரீராம் ஐயா, பாலசுப்ரமணியன் ஐயா, நாகராஜ் ஐயா, மூவரும் “தொதோல் என்றால் என்ன? அதை ஒரு பதிவாகப் போடுங்கள்“ என்று எழுதி இருந்தார்கள்.
    அவர்கள் கேட்டதற்காகவே இந்தப் பதிவு.
   முதலில் இந்த “தொதோல்“ எனக்கு எப்படி அறிமுகமாகியது என்பதைச் சொல்லி விடுகிறேன்.
    “தொதோல்“ என்ற இந்த இனிப்பு பலகாரம் முதலில் ஆங்கிலோ இந்தியர்கள் தான் நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். பாண்டிச்சேரியில் கிருஸ்துவர்கள்தான் இதை அதிகமாகச் செய்வார்கள்.
   கிருஸ்தவர்கள், கிருஸ்மஸ்க்காகச் செய்த மலையைப் பிரிப்பதற்கு முதல் நாள் சிறுவர்களை அழைத்து அவர்களுக்குப் பலகாரங்கள் கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பக்கத்து வீட்டு மலையைப் பிரிக்கும் போது என்னையும் அழைத்துப் பலகாரங்கள் கொடுத்தார்கள். எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவர்கள் ஒரு தட்டில் சிறு துண்டு கிருஸ்மஸ் கேக், கொஞ்சம் முறுக்கு, இந்த “தொதோல்“ கொஞ்சம் வைத்துத் தந்தார்கள். நான் முறுக்கையும், கேக்கையும் சாப்பிட்டு விட்டேன். இந்த தொதோல் மிகவும் கறுப்பாக, பார்ப்பதற்கும் அவ்வளவு ஈர்ப்பும் இல்லாத்தாக இருந்ததால் அதைச் சாப்பிடாமல் வைத்து விட்டேன்.
   இதைப் பார்த்த அந்த வீட்டு அம்மா, “சாப்பிட்டுப் பாரு அருணா. பிடிக்கவில்லை என்றால் வைத்துவிடு“ என்றார்கள்.
   நான் அவர்கள் சொல்கிறார்களே என்று வேண்டா வெறுப்பாக்கத் தான் சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு இன்னும் கொஞ்சம் கொடுக்கமாட்டார்களா....? என்று மனம் ஏங்கி போனது. அவ்வளவு சுவையாக இருந்தது.
   மறுநாள் நான் என் அம்மாவிடம் வந்து “பக்கத்து வீட்டு அம்மா கறுப்பாக ஒன்று செய்து கொடுத்தார்கள். ரொம்ப நன்றாக இருந்தது. அதை நீங்களும் செய்து தாருங்கள்“ என்று கேட்டேன். என் அம்மாவும் அவர்களிடம் விசாரித்துச் செய்து கொடுத்தார்கள். ஆனால் அந்தப் பழைய சுவை இதில் இல்லை. இருந்தாலும் எனக்காகச் செய்த அம்மாவின் மனம் நோகக் கூடாது என்று சாப்பிட்டு விட்டேன்.
   அதன் பிறகு திருமணமாகி இங்கு வந்த பிறகு என் தங்கையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவளின் மாமியார் இந்தத் தொதோலைச் சுவையாகச் செய்திருந்தார்கள். அவர்களிடம் செய்முறை விளக்கம் கேட்டுக் கற்றுக் கொண்டேன்.
   இதில் முக்கிய விசயம் என்னவென்றால் தொதோல் அரிசி தான். நம்மூரில் கிடைக்கும் அரிசி சற்று மொத்தமாக இருக்கிறது. இங்கே சீனா கடைகளில் மிகவும் மெல்லிய கருப்பு அரிசி கிடைக்கிறது. இந்த அரிசியில் செய்யும் போது சுவை மேலும் கூடுதலாக இருக்கிறது.

இதோ செய்முறை விளக்கம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்


கருப்பு அரிசி – இரண்டு டம்ளர்.


சர்க்கரை – நான்கு டம்ளர்


தேங்காய் பால் – ஒரு டம்ளர்.


உடைத்த முந்திரி – அரை டம்ளர்.


நெய் – இரண்டு டம்ளர்.


ஏலக்காய் – எட்டு


உப்பு கொஞ்சம்

செய்முறை


    
  அரிசியைச் சுத்தம் செய்து கழுவி எட்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.


    ஊறிய அரசியை மிக்ஸியில் போட்டு மை போல அரைக்க வேண்டும்.


   அரைத்த அரிசியுடன் உடைத்த முந்திரியைச் (இதனுடன் பாதாம் பயிரையும் சேர்க்கலாம். என்னிடம் கைவசம் இல்லை) சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். மைய அரைக்கக் கூடாது.


   அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து ஒரு சுற்று.


   இந்த மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 


சார்க்கரை,


தேங்காய் பால்,


உப்பு,


சேர்த்து நன்கு கலக்கி வைக்க வேண்டும்.


ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.


   கொதிக்க ஆரம்பித்ததும் இந்த மாவு கலவையை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 


மாவு வெந்து வரும் பக்குவத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிண்ட வேண்டும்.


   இது தான் மிகவும் கஷ்டம். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். துவக்கத்தில் நெய் முழுவதையும் மாவு இழுத்துக் கொள்ளும்.


கடைசியாக நெய் மாவிலிருந்து பிரிந்து வரும். இந்தத் தருவாயில் இறக்கி ஆற விட்டு உண்ணலாம்.

தொதோல்

   இந்த தொதோலை ஒரு மாதம் கூட வைத்திருந்து சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை நம்மை வா வா என்று அழைத்துக் கொண்டே இருப்பதால் ஒரு மாதமெல்லாம் வைத்திருக்க முடியாது.

    இதன் செய்முறை வெண்ணைப்பிட்டு போலவும், மைசூர் பாகு போலவும், அல்வா போலவும் இருந்தாலும் இதன் சுவை இம்மூன்றையும் விஞ்சி விடும்.

செய்து சாப்பிட்டுப் பாருங்கள் நண்பர்களே.

   முக்கியமாக ஒரு விசயம். இதைச் செய்யச் சொல்லிக் கேட்டதால் இன்று அதிக நாள் கழித்து இதைச் செய்துச் சாப்பிடும் வாய்ப்பினை அளித்த அந்த மூன்று பேருக்கும் நன்றி.

அன்புடன்
அருணா செல்வம்.

21.09.2014