வியாழன், 29 நவம்பர், 2018

எது சேவை?


எது சேவை?

வாழும் உலகம் எந்நாளும்
    வசந்தம் மட்டும் தருவதில்லை!
சூழும் இன்பத் துன்பங்கள்
    சொல்லி விட்டு வருவதில்லை!
தாழும் நிலையும் நிலைசரிந்து
    வீழும் நிலையும் வருவதெல்லாம்
ஊழின் வேலை என்றெண்ணி
    ஒடிந்தும் ஓய்ந்தும் வாழுகின்றோம்!

பிறந்து வளர்ந்த வாழ்வினிலே
    பிறருக் குதவி செய்துவந்தும்
அறத்தின் உயர்வை அறிந்துநன்றாய்
    அகத்தில் அன்பை விதைத்திருந்தால்
இறந்த பின்பும் வாழ்ந்திடுவோம்
    இறையின் நிலையை அடைந்திடுவோம்!
சிறந்த பிறப்பின் நிலையறிந்து
    செய்யும் செயலே உயர்வன்றோ!

கண்கள் போன்று பெற்றவரைக்
    காக்கும் செயலே சேவையாகும்!
மண்ணில் உழைக்கும் வர்க்கத்தை
    மதித்துப் போற்றல் சேவையாகும்!
உண்ணும் உணவைப் பசித்தவர்க்கும்
    உவந்தே அளித்தல் சேவையாகும்!
கண்முன் இருக்கும் எளியோரைக்
    கனிவாய்க் காத்தல் சேவையாகும்!

மெய்யை வளர்க்க நேர்மையெனும்
    மெய்யாய் இருத்தல் சேவையாகும்!
பொய்மை கண்டால் உடனதனைப்
    போக்கும் செயலும் சேவையாகும்!
உய்யும் உலகில் அடுத்தவர்க்கும்
    உதவி புரிதல் சேவையாகும்!
செய்யும் செயலைச் சரியாகச்
    செய்தால் அதுவே சேவையாகும்!

நாவை அடக்கல் உடலுக்கு
    நாமே செய்யும் சேவையாகும்!
பூவைப் போன்ற உள்ளமுடன்
    புரியும் நன்மை சேவையாகும்!
சேவை செய்தல் என்பதெல்லாம்
    சிலரே செய்வார் என்பதில்லை!
தேவை எதையும் எண்ணாமல்
    செய்யும் அனைத்தும் சேவையன்றோ!
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 27 நவம்பர், 2018

தன்மை அணி!





பொருள்தன்மை அணி (பொருட்டண்மை)
     ஒருவரிடம் உள்ள பொருள்களை அதன் தன்மை உடனே பாடுவது பொருட்டண்மை அணி எனப்படும்.

(ம்)
  
படர்ந்திருக்கும் காதுகளும், பானை வயிறும்,
உடனிருக்கும் தும்பிக்கை உந்த! – தொடர்ந்திருக்கும்
கண்கள், துணையாகும் கையும் விநாயகா
உன்தன்மை ஓத உயர்த்து!

பொருள் பெரியதாய் விரிந்து படர்ந்து இருக்கும் காதுகளும், பானையைப் போன்று பருத்த வயிறும், அதனுடன் இருக்கும் தும்பிக்கையும், அதை தொடர்ந்து இருக்கும் கண்களும், துணையாக இருக்கும் கைகளும் உள்ள விநாயகனே உன் தன்மையால் இப்பாடத்தை ஓதிட என்னை உயர்த்து.
    விநாயகரிடம் உள்ள பலவிதமான தன்மைகளை உள்ளது உள்ளவாறு உரைப்பதால் இது பொருட்டண்மை அணி ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.11.2018