மாலினி,
திருமணம் முடிந்து முதல் முறையாக சங்கரன் ஐயா காலில் விழுந்து வணங்கினாள்.
அவர், “பதினாறும்
பெற்று பெரு வாழ்வு வாழ்க“ என்று முகம் மலர ஆசி கூறினார்.
மாலினிக்கு
வந்ததே கோபம்..... “என்ன மாமா நீங்க? நீங்க மட்டும் ரெண்டே ரெண்டு பிள்ளைகளோட
நிறுத்திக்கிட்டீங்க. என்னைமட்டும் பதினாறு பெத்துக்க சொல்லுறீங்களே....“ என்றாள்
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு.
“அம்மாடி....
இந்த காலத்துல பதினாறு பிள்ளைங்க பெத்தால் என்னவாவது....? நான் பதினாறு
பிள்ளைகளைச் சொல்ல வில்லையம்மா. பதினாறு பேருகளைச் சொன்னேனம்மா“ என்றார் சங்கரன்
ஐயா சிரித்தபடி.
“பதினாறு
பேருகளா....?“ மாலினி விழித்தாள்.
“ஆமாம்.
அந்தப் பதினாறு பேருகளைக் காளமேகப் புலவர் ஒரு செய்யுளில் எவ்வளவு அழகாக சொல்லி
இருக்கிறார் தெரியுமா...?“
“என்ன
காளமேகப் புலவர் சொல்லி இருக்கிறாரா? எனக்குத் தெரியாது மாமா. நீங்களே
சொல்லுங்கள்.“ ஆவலுடன் கேட்டாள் மாலினி.
அவர் சொல்லத் துவங்கினார்.
துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம்
அதிதானியஞ் சௌபாக்கியம் போக – வறிவழகு
புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது
பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபரனே.
இது தானம்மா அந்த பாட்டு. பொருளைச் சொல்கிறேன் கேள்.
1 துதி – புகழ்
2. வாணி – கல்வி
3. வீரம் – மனவுறுதி
4. விசயம் – வெற்றி
5. சந்தானம் – மக்கட்பேறு
6. துணிவு – தைரியம்
7. தனம் – செல்வம்
8. அதிதானியம் – அதிகமான தானியவளம்
9. சௌபாக்கியம் – சிறந்த இன்பம்
10. போகம் – நல்ல அனுபோகம்
11. அறிவு – ஞானம்
12. அழகு – பொலிவு
13. புதிதாம் பெருமை – புதியதாக வந்து நாளுக்கு நாள்
சேர்கின்ற சிறப்பு
14. அறம் – அறஞ்செய்யும் பண்பு
15. குலம் – நல்ல குடிப்பிறப்பு
16. நோவகல் பூண்வயது – நோயில்லாமையோடு கூடியமைந்த
நீண்ட ஆயுள்
என்று சொல்லப்படுகின்ற இந்தப் பதினாறு பேறுகளையும்
தந்து எனக்கு அருள் செய்வாயாக.
இது தானம்மா அந்தப் பாட்டின் பொருள்.
இவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லி ஆசி கூறாமல்,
இந்த பதினாறு நல்லவைகளும் கிடைக்கவேண்டும் என்று சுறுக்கமாகப் ”பதினாறும் பெற்றுப்
பெருவாழ்வு வாழ்க” என்று நம் முன்னோர்கள் ஆசி கூறினார்கள். நானும் அது போலவே
உன்னை வாழ்த்தினேன்“ என்றார் சங்கரன் மாமா.
“ரொம்ப
நன்றி மாமா. நீங்க இப்படி விளக்கம் கூறலைன்னா நான் இந்தப் ”பதினாறும் பெற்று” என்பதற்கான விளக்கத்தை அறியாமலேயே
இருந்திருப்பேன்“ என்று சொல்லி மகிழ்ந்தாள் மாலினி.
அருணா செல்வம்.
14.05.2014