Tuesday, 30 April 2013

தென்றல்!!


 தொட்டோ அணைக்க முடியாது!
   தொடாமல் இருக்க முடியாது!
கட்டுக் கடங்கி நிற்காது!
   கண்ணால் பார்க்க முடியாது!
கொட்டிக் கொடுக்க முடியாது!
   கூட்டித் தள்ள முடியாது!
பட்டு உணர்வைத் தரும்தென்றல்
   பருவ கால வசந்தமது!

மெல்லத் தவழும் வேளையிலே
   மேலும் கேட்டு மனமேங்கும்!
வல்லத் தனமாய் ஆகையிலே
   வலிமை மிகுந்து பயங்கொடுக்கும்!
எல்லை எதுவும் அதற்கில்லை!
   எழிலாம் உலகில் இதன்வரவோ
இல்லை என்றால் இயக்கமில்லை!
   இனிமை பொங்கும் வாழ்வுமில்லை!!

தண்ணீர் குளத்தில் தவழ்ந்துவந்தால்
   தனிமை ஏக்கம் தரும்தென்றல்!
பெண்ணின் மேனி தொட்டுவந்தால்
   பெண்மை தொட்டச் சுகதென்றல்!
கண்ணைத் தொட்டுப் போனாலும்
   கண்ணீர் சிந்த வைக்காமல்
மண்ணில் மட்டும் வாழுகின்ற
   மாசே அற்ற நறுந்தென்றல்!!

சின்னச் சின்ன உயிர்களுக்கும்
   சீராய் இதயம் துடிக்கவைக்கும்!
வண்ண வண்ண மலர்களையும்
   வளமாய் வாழ வழிவகுக்கும்!
எண்ணி எழுத முடியாத
   இயலாய் வாழ்வில் இருப்பதனால்
சின்னச் சின்னக் கவிச்சிறையில்
   சிக்கி அடைக்க முடியவில்லை!

(இந்த மாத பிரான்சு குறளரங்கத்தில் கொடுக்கப்பட்ட
தென்றல்“ தலைப்பில் நான் எழுதி வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்
27.04.2013

Saturday, 27 April 2013

கலங்காதே கண்மணியே !!


கலங்காதே கண்மணியே!
காதலென்ற போதையினால்
காலமெல்லாம் அழுதழுது
கண்டெடுத்தப் பயனென்ன?

நன்றிகெட்ட உலகத்தில்
நயவஞ்ச நரிகளினால்
ஏமாற்றம் காண்பதென்ன
இன்றுமட்டும் நடப்பதுவா?

நட்பென்று நலம்பேசி
நாளெல்லாம் நினைக்கவைத்து
நட்பில்லை காதலென்று
நன்னெஞ்சில் விதைவிதைப்பார்!

காதல்மொழி பேசியுடன்
கனவுகாண வைத்துவிட்டு
காதலிக்கத் துவங்கியதும்
கத்தரித்தே ஓடிடுவார்!

உடல்காயம் என்றிருந்தால்
உடனுடனே ஆறிவிடும்!
மனக்காயம் காய்வதற்கு
மருந்தின்றி அலைகின்றாய்!

கள்வடியும் பூவானல்
காய்காய்த்து விதைகொடுக்கும்!
கற்பென்றே நினைப்பதனால்
காலமெல்லாம் துளைத்தெடுக்கும்!

நல்லவனாய் இருந்திருந்தால்
நன்னெஞ்சில் நிறைத்துவிடு!
நம்பிக்கைத் துரோகத்தை
நஞ்சென்றே எறிந்துவிடு!

காதலது வெறுங்கவிதை!
காவியத்தில் அழகுண்டு!
கட்டுடலாய் உள்ளவரைக்
கனிபோலே இனிப்பதுண்டு!

நேரான வாழ்வினிலே
நெடுதூரம் தான்நடக்கக்
கடந்ததையே நினைத்தேங்கி
கலங்காதே கண்மணியே!

(காதலென்ற பெயரில் ஏமார்ந்த பெண்களுக்கு
இந்தக் கவிதை சமர்ப்பணம்)
அருணா செல்வம்.
27.04.2013

Thursday, 25 April 2013

வானுயரம் நாமுயர வேண்டுமென்றால்..


கல்வி !!
(குறள் வெண்பா)

1.
வானுயரம் நாமுயர வேண்டுமென்றால் கல்வியே
தானுயர வைக்கும் தழைத்து!

2.
கல்லாதார் என்பாரே காசுபணம் கொண்டிருந்தும்
இல்லாதார் என்றே இயம்பு.

3.
கடன்பட்டுக் கல்வியைக் கற்றாலும் என்றும்
உடன்தொட்டே ஓங்கும் உயர்வு!

4.
பரந்து விரிந்த உலகில் படிப்பே
பறக்கவைக்கும் பண்பின் சிறகு!

5.
குற்றமற்ற கல்விக்குக் கோடி இணையாமோ?
மற்றவை போகும் மடிந்து!

6.
கூர்கொண்ட கல்விதந்தால் நேர்கொண்ட வாழ்வமைந்து
பேர்சொல்லும் பிள்ளை பிறகு!

7.
காசுபணம் பெற்றிருந்தும் போற்றாது! கற்றவரை
பேசுலகம் போற்றும் புரிந்து.

8.
கல்லாய்ச் சிறுமுள்ளாய்ப் புல்லாய் இருந்திடலாம்
கல்லாமல் வாழ்தலே தாழ்வு!

9.
கல்வியைக் கற்ற கவிஞனின் சொற்களே
நல்வினையைக் காட்டும் நயந்து!

10.
எத்திசை போனாலும் ஏற்றமுடன் பார்த்துயர்த்தும்
சக்தியினைக் கல்வி தரும்!


அருணா செல்வம்.