சுட்டிப் பெண்ணே! சொல்லமுதே!
சொக்கத்
தங்கத் தமிழ்த்தேனே!
எட்டி நின்றே பார்த்தாலும்
என்னை ஏதோ
செய்பவளே!
குட்டி போட்ட பூனைபோல
விட்டே அகல
முடியாமல்
கட்டிப் போட்டு விட்டாயோ
காதல் கயிறு
கொண்டென்னை?
மொட்டு விரிய மணம்வீசும்!
மூடி
வைத்தால் மனமேங்கும்!
சிட்டு போல பறப்பவளே!
சிந்தை நனைய வைத்தவளே!
இட்டுக் கட்டி விடும்பாட்டில்
இனிய கருவைத் தருபவளே!
சொட்டுத் தேன்போல் கவியினிக்க
சொல்லேன் அன்பாய் ஒருவார்த்தை!
தீட்டு கின்ற கவிகளிலே
தெளிவாய் நீதான் தெரிகின்றாய்!
மூட்டும் மோக உணர்வினிலும்
முன்னால் வந்து வதைக்கின்றாய்!
மீட்டும் இசையோ தெரிவதில்லை
மென்மை இதயம் உணருமடி!
ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
எழுதும் கவிகள் உண்மையடி!
அருணா செல்வம்.
10.05.2012
