செவ்வாய், 29 ஜனவரி, 2019

முதனிலைக் குணத் தீவகம்! - 1


   பாடலில் குணத்தைக் குறிக்கும் சொல்லானது முதற்சொல்லாக வந்து பாடல் முழுவதும் சென்று பாடலின் பல இடத்திலும் பொருந்தி வருவதுமுதனிலைக் குணத் தீவகம்ஆகும்.

உ. ம் 
கருத்தது வானம் கருமுகில் தோன்ற
பொருளற்றோன் வீட்டின் புறனாய்! – கருவற்ற
பெண்ணின் மனமாய்! பெரும்பொருள் இல்லாத
பண்ணாய்! இருளுள் பதைத்து!

பொருள்கருமுகில் தோன்றியதால் வானம் கருத்தது. அப்படிக் கருத்ததால் பொருள் அற்றவனின் வீடுகளின் புறமும் கருத்தது. குழந்தைப்பேறு இல்லாதவள் மனமும் கருத்தது. பொருள் இல்லாத பாடலும் கருத்தது இருளைக் கண்டு.
    பாடலில்கருத்ததுஎன்பது குணம் பற்றி வந்த பண்புச் சொல். முதலில் இருக்கும் அச்சொல் பாடலின் இருக்கும் வீடு, மனம், பாடல் ஆகிய சொற்களோடும் இயைந்து பொருளைத் தந்துள்ளதால் இதுமுதன்நிலைக் குணத் தீவகம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
30.01.2019

வெள்ளி, 25 ஜனவரி, 2019

விரூபக உருவகம் – 8
    பாடலில் ஒரு பொருளுக்கு அதற்கு பொருந்தாத தன்மைகள் உள்ளவைகளைக் கூட்டி உருவகஞ்செய்வது “விரூபக உருவகம்“ எனப்படும்.

உ. ம்
தேயா நிலவழகு, தென்றல் கொடுந்தன்மை,
பாயா ஒளிவெள்ளம் பாவைமுகம்! – ஓயா(து)
உறங்கும் அலைகடலை ஒற்றொளிரும் வெண்மை
நிறமதிதான் என்பேன் நிறைந்து!

பொருள் – தேயாத நிலவின் அழகும், தென்றல் தரும் கொடுமையான தன்மையும், பாய்ச்சாத ஒளிவெள்ளமும், ஓயாமல் உறங்கும் அலைகடலின் மேல் தோன்றி ஒளிரும் வெண்மையான நிறமுடைய மதிதான் என்பேன் அவளின் முகம்.
    பாடலில் நிலவானது தேயும் தன்மையுள்ளது. தென்றல் இன்பம் தருவது. ஒளி என்பது எங்கும் பாய்ந்து வெளிச்சத்தைத் தருவது. கடல் ஓயாதது. இப்படிப் பொருந்தாத தன்மைகளை உருவகமாகக் கூட்டி அப்பெண்ணின் முகத்துக்கு உருவகஞ்செய்ததால் இது “விரூபக உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2019

வியாழன், 24 ஜனவரி, 2019

சிறப்பு உருவகம் – 7
    பாடலில் ஒரு பொருளை எடுத்து அதற்கு சிறந்தவைகளை உருவகம் செய்து, பின்பு அவற்றாலேயே உருவகமாக்கி உரைப்பது “சிறப்பு உருவகம்“ எனப்படும்.
.
உ. ம்
பச்சைப் பசுமையைப் பட்டுடலில் போர்வையாய்
உச்சிநீர் வெள்ளி உருகோட – இச்சையற்றோர்
வாழும் குடிலாய் மலைக்கூடு எவ்வுயிர்க்கும்
சூழும் நலங்கள் சுடர்ந்து !

பொருள் – தனது பட்டுப்போன்ற உடலில் பச்சைப் பசுமையான மரம் செடிக்கொடிகளைப் போர்த்திக் கொண்டு, உச்சியிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சி வெள்ளியைப் போல் உருகியோட, இச்சையை அற்றவர்க்கு வாழும் இடமாகவும், மற்ற எல்லா உயிர்களுக்கும் நலம் தருவதாகவும் மலையாகிய கூடு இருக்கிறது.
    பாடலில் பச்சைப் போர்வை, உச்சிநீர் வெள்ளி, குடில் என்று மலையின் சிறப்புகளை உருவகம் செய்து வந்தும், அந்த மலையானது மற்ற உயிர்களுக்கு வாழும் இருப்பிடமாக இருக்கிறது என்று சிறப்புடன் உருவகிப்பதால் இது “சிறப்பு உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2019

புதன், 23 ஜனவரி, 2019

வியநிலை உருவகம் – 6

    பாடலில் ஒரு பொருளின் அங்கங்களில் உள்ள பலவற்றினுள், சிலவற்றை மட்டும் உருவகம் செய்தும், சிலவற்றை உருவகம் செய்யாமல் விட்டும், கடைசியில் அந்தப் பொருளையே உருவகம் செய்து உரைப்பது “வியநிலை உருவகம்“ எனப்படும்.

உ. ம்
செங்கண் சிறியனவாய் செய்கை பெரியனவாய்
தொங்குகரப் பாறை துணையாக – எங்கும்
பதமின்றிப் பொங்கிப் பிளிர்கிறதே அந்த
மதங்கொண்ட யானை மலை!

பொருள் – செம்மையான கண்கள் சிறியதாகவும், அதனின் செயல்கள் பெரியதாகவும் தொங்கிடும் தும்பிக்கை என்னும் கரமாகிய கடின பாறை துணையாகவும் எங்கும் பக்குவம் இன்றிக் கோபமுடன் பொங்கிப் பிளிறுகிறது அந்த மதங்கொண்ட யானையாகிய மலை.
   பாடலில் கூறப்பட்ட பொருள் யானை. இவ்யானையின் கண், செயல், தும்பிக்கை ஆகிய மூன்றில் தும்பிக்கைக்குப் பாறையை உருவகப்படுத்தி விட்டு மீதியை உருவகப் படுத்தவில்லை. ஆனால் கடைசியில் இவ்வுறுப்பினை உடைய யானையை மட்டும் மலை என்று உருவகப்படுத்தி இருப்பதால் இது “வியநிலை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்.
23.01.2019

செவ்வாய், 22 ஜனவரி, 2019

இயைபில் உருவகம் – 5
   பாடலில் பலபொருள்களைத் தம்முள் இயையாமை வைத்து உருவகஞ் செய்வது “இயைபிலுருவகம்“ எனப்படும். (இயைபு உருவகத்தில் உருவகமும் பொருளும் தம்மில் இயைபு உடையதாய் அமைப்பது. இது இயைபு இல்லாமல் உருவகஞ் செய்வது)

உ. ம்
தோளிரண்டும் தூணாகத் தொன்னிதழ் அம்பாக,
நீளிரங்கும் கைகள் நெடுங்கடல்! – கேளிரண்டு
காது பிறையெழில்! கந்தனின் நாமத்தை
ஓதுவதால் நல்லுயர்வு உண்டு!

பொருள் – கந்தனின் தோள்கள் இரண்டும் தூணாகத், தொன்மையான உதடுகள் அம்பாக, நீண்டு இறங்கி இருக்கும் கைகள் நெடிய கடலாக, கேட்கும் காது பிறையின் எழிலாக உள்ள கந்த பெருமானின் நாமத்தை ஓதுவதால் நல்ல உயர்வுகள் நமக்கு உண்டு.
   தோள்கள், உதடு, கைகள், காது என வந்திருக்கும் பொருட்களில் இயைபு வந்தும், இதற்கு உருவகமாக வந்த தூண், அம்பு, நெடுங்கடல், பிறை ஆகியவை தம்முள் இயைபு இல்லாதவனாக வந்துள்ளதால் இது “இயைபில் உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

இயைபு உருவகம். – 4
   பாடலில் பல பொருட்களை உருவகம் செய்யும் போது, அவை தம்முள் இயைபு உடையதாக வைத்து உருவகம் செய்வது “இயைபு உருவகம்“ எனப்படும்.

உ. ம்
சீர்முகச் செம்பூவும், செவ்விதழ்ச் செங்கனியும்
கூர்மூக்கு மொட்டையும் கொண்டிருக்கும் – பார்வை
கொடுக்கும் கணிவுடன் கொஞ்சிடும் வஞ்சி
நெடுநெஞ்சுள் நிற்பாள் நிறைந்து!

பொருள் – சீர்முகமாகிய செம்பூவும், செம்மை இதழாகிய செங்கனியும், கூரிய மூக்காகிய மொட்டும், கொஞ்சிடும் பார்வைதரும் கணிவும் கொண்டிருக்கும் பெண்ணானவள் நீண்ட வாழ்நாளில் என் உள்ளத்துள் நிறைந்து நிற்பாள்.
    பாடலில் செம்பூவும், செங்கனியும், மொட்டும், என உருவகம் இயைபு உடையதாய் வந்துள்ளது. தவிர, முகம், உதடு. மூக்கு ஆகியவற்றுள் தம்முள் இயைபு உடையதாகிய பூ, கனி, மொட்டு என வந்துள்ளதாலும் இது “இயைபு உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

வியாழன், 17 ஜனவரி, 2019

தொகைவிரி உருவகம்! – 3
பாடலில் ஆகிய என்ற மாட்டேற்றுச் சொல் தொகையாகவும், விரிந்தும் வருவது “தொகைவிரி உருவகம்“ எனப்படும்.

உ. ம்
பாம்பு படுக்கையா, பாய்அலை ஊஞ்சலா,
ஓம்புகரம் சாய்மரமாய், ஓய்வெழில் – மேம்படும்!
மேனிக் கரியவனின் மௌனமொழி மின்னுலகில்
வானின் மழையமுதின் வார்ப்பு!

பொருள் – பாம்பினைப் படுக்கையாகவும், பாயும் அலைகளை ஊஞ்சலாகவும், காத்திடும் கைகள் சாய்மரமாகவும், ஓய்வெடுக்கும் எழில் உயர்வானது. கருமை மேனியை உடைய திருமாலின் மௌனமாகிய மொழியானது வாழுலகில் வானிலிருந்துபெய்யும் மழையாகிய அமுதமாகும்.
   பாடலில் படுக்கையாக, ஊஞ்சலாக, சாய்மரமாக, என்பதில் ஆகிய, ஆ என விரிந்தும், மொனமொழி, மழையமுது என்பவை தொகையாகவும் உருவகம் வந்துள்ளதால் இது “தொகைவிரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2019