Thursday, 23 May 2013

இதுவும் அன்புதான்!! (நிமிடக்கதை)

     புனிதா தன் தாய்வீட்டினுள் நுழைந்ததும் அவள் தங்கை சாதனா, “வாக்கா.... என்ன நீ மட்டும் வந்திருக்க? மாமா எங்க?“ கேட்டாள்.
    “அவர் வரலடி. நான் மட்டும் தான் வந்தேன். பிள்ளைகளுக்கு எக்ஸாம் டைம் இல்லையா...? அவரைப் பாத்துக்கச் சொல்லிட்டு நா மட்டும் கிளம்பி வந்துட்டேன்“ என்றாள்.
    “உண்மையாவா...? உன்னை விட்டு மாமா பிரிஞ்சி இருக்க மாட்டாரே... எப்படி...? என்னால நம்பவே முடியலைக்கா“ என்றாள் சாதனா. புனிதா புன்முறுவலுடன் பேசாமல் இருந்தாள்.
    சாதனாவே ஆச்சர்யம் தாங்காமல் தொடர்ந்தாள். “எனக்குத் தெரிஞ்சி நீ கல்யாணம் செய்து போன இந்த இருவது வருஷமா ஒரு முறை கூட மாமாவ விட்டுட்டு வந்ததில்லை. அம்மா சாவுக்குக் கூட உடனே வராம வேலைக்கு போன மாமா வரும்வரைக்கும் காத்திருந்து கடைசி நேரத்துல தான் வந்தே. அந்த அளவுக்கு உன்னைப் பொத்திப் பொத்தி வச்சிருப்பாரு. அவர் போய் உன்னைத் தனியே மும்பாயிலிருந்து அனுப்பினார் என்றால் என்னால் நம்பவே முடியலைக்கா“ என்றாள்.
   “நம்பி தான்டி ஆகனும். எனக்கும் வயசாவுது இல்லையா...? அவர் கூட வந்தால் அவரைக் கவனிக்கவே எனக்கு சரியா இருக்கும். உங்க கூட கொஞ்ச நேரம் கூட தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்காத படி கூடவே இருப்பார். நீயே பல முறை இதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணி இருக்கிற. அதனால தான் நான் விடாப்பிடியா நானும் வர்ரேன்னு சொன்னவரை வரவேண்டாம்ன்னு சொல்லி வருப்புறுத்தி விட்டுட்டு வந்தேன்“ என்றாள் புனிதா.
   “நீ செஞ்சது ரொம்ப தப்புக்கா. மாமாவுக்கு உன் மேல அவ்வளவு பிரியம். அதனால் தான் அவர் உன்னை எங்கேயும் தனியா அனுப்பாமல்... எங்கேயாவது போகனும்ன்னா அவரும் உன் கூடவே வந்து எப்பொதும் உன் கூடவே இருக்கிறது... இதையெல்லாம் பாக்குறப்போ நான் உன்னைக் கிண்டல் பண்ணினாலும் மாமாவ நினைச்சி ரொம்ப பெருமை பட்டு என்னவர்கிட்டே பேசுவேன் தெரியுமா...? புள்ளைங்களுக்கு உன் மாமியார் தொணைக்கு இருக்கிறாங்க தானே...? பின்னே எதுக்காக நீ அவரை விட்டுட்டு வந்தே?“
   பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே... சொந்தங்கள் வர ஆரம்பிக்க தன் அம்மாவின் திவச காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு புன்முறுவலுடன் ஒதுங்கினாள் புனிதா.

    அனைத்தும் முடிந்து மும்பாய்க்குக் கிளம்பும் பொழுது அவளின் கையைப்பிடித்து அப்பா கேட்டார். “புனிதா... உண்மையைச் சொல்லுமா... உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சண்டையா...?“ என்று.
   அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள் “அப்படியெல்லாம் எதுவும் சண்டை இல்லைப்பா. என் கணவரைப் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே... எதுக்கெடுத்தாலும் புனிதா... புனிதான்னு என்னையே சுத்தி சுத்தி வருவார். தனியாக விட்டு பழக்கமில்லை. எதையுமே தனியா முடிவெடுத்துச் செய்ய மாட்டார். எதுக்கெடுத்தாலும் நான் வேண்டும். இப்படியே போனால் நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னுன்னா உயிரையே விட்டுடுவார். அந்த மாதிரி இருக்கிறதும் சரியில்லைப்பா. அவரைக் கொஞ்சம் தனியா விட்டு பழகனும். அதனால தான் நான் தனியா வந்தேன்.. மற்றபடி சண்டை சச்சரவு எதுவும் இல்லைப்பா.“ என்றாள் புனிதா.
    மகள் சொன்னதை யோசித்தார். அவள் சொல்வதும் உண்மைதான். தான் இருக்கும் வரையில் இன்பத்தைக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியாவது போங்கள் என்று நினைத்திடாமல்... தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்... புரிந்ததும் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டு இரயில் ஏற்றி அனுப்பினார்.

அருணா செல்வம்.
24.05.2013