கம்பனுக்குப் பாமாலை!
கோமான்கள் செய்கின்ற வெறும்செய் கையைக்
கும்மாளம் போட்டுக்கை தட்டி நின்றேன்!
காமாலை கண்ணாக இருந்து வந்தேன்!
கம்பகவி கண்டபின்னால் காதல் கொண்டு
பூமாலை தொடுத்துவந்தால் துவளும் என்றே
பொற்றமிழில் சொல்லெடுத்து வார்த்தைக் கோர்த்துப்
பாமாலை ஒன்றினையே செய்து வந்தேன்!
பக்குவமாய் அதையேநான் பாடி நின்றேன்!
கண்ணிறைந்த கற்பனைகள் கவியில் நீந்த
காணகண்கள் கோடிவேண்டும்! கம்பா உன்றன்
விண்ணிறைந்த விருத்தமெல்லாம் விழியில் ஆட
விருப்பமுடன் உன்புகழைப் பாட வந்தேன்!
எண்ணிறைந்த கவிதைகளை எண்ணி எண்ணி
ஏட்டிலதைக் கூட்டிநல்ல வார்த்தைக் கோர்த்துப்
பண்ணிறைத்துப் பாமாலை செய்திட் டாலும்
பாவலனே உன்புகழின் எல்லை காணேன்!
தித்திக்கும் உச்சரிக்கும் சொற்கள் எல்லாம்
தீந்தமிழின் பூக்களிலே சொட்டும் தேனோ!
எத்திக்கைப் பார்த்தாலும் மிளிரும் சொற்கள்
எத்திசையும் ஒளியுமிழும் உதயன் தானோ!
சித்தத்தை மகிழவைக்கும் சீர்கள் எல்லாம்
சிறப்பாகச் செய்துவந்த மதுவும் தானோ!
இத்தரையில் இக்கவியைப் போற்றி நானோ
இன்கவியாய் ஒருகவியைப் பாடு வேனோ!
கற்றவர்கள் போற்றுகின்றார்! கல்வி மான்கள்
கற்றதனை மற்றவர்க்குச் சொல்ல கேட்க
பற்றவர்கள் கொள்வார்கள் கம்பன் மேலே!
பற்றின்றிக் கற்காமல் குறையாய்ச் சொல்லும்
குற்றமதைப் பெற்றவர்கள் குருடர் அன்றோ!
குற்றமதைப் போக்கிவிட வழியும் உண்டே!
நற்றமிழால் நூற்றெய்த கம்பன் பாவை
நாட்டமுடன் படித்தாலே புகழோ ஓங்கும்!
எண்ணத்தில் வந்தமர்ந்த வார்த்தை எல்லாம்
இன்கம்பன் கொண்டுவந்த செல்வம் தானோ!
வண்ணத்தில் பலபலக்கும் வர்ண னைகள்
வாக்கியத்தால் பூத்துநின்ற பூக்கள் தானோ!
மண்ணுலகில் வாழ்கின்ற மக்கள் எல்லாம்
மனம்மகிழ கம்பனையே கற்று வந்தால்
விண்ணுலக தேவர்களின் இன்ப வாழ்வை
விஞ்சிநின்று வாழ்ந்ததாக இருக்கும் அன்றோ!
(பாரீசில் நடந்த பத்தாமாண்டு கம்பன் விழாவில் “கம்பனுக்குப்
பாமாலை“ என்ற தலைப்பில் வாசித்தக் கவிதை)
அருணாசெல்வம்
07.11.2011
சிறப்பான பாமாலை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
(உடல்நிலை சரியில்லாததால் அதிகம் வலைப்பக்கம் வரமுடியவில்லை.)
வணக்கம்
பதிலளிநீக்குஅருணா செல்வம்
கம்பன் பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது வாசித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன் அவர்களே.
கும்மாலம்??
பதிலளிநீக்குவணக்கம் நம்பள்கி.
நீக்குகும்மாளம் என்பது குதித்து விளையாடுதல் என்று பொருள்.
(ளகரத்தைத் திருத்திவிட்டேன். நன்றி)
அருமையான பாமாலை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பூமாலை வாடிவிடும்! பொன்மாலை நீங்கிவிடும்!
பாமாலை வாடிடுமோ பாவலரே! - ஓ..மாலை
என்றவுடன் ஓடிவரும் இவ்வுலகம்! கம்பனே!
இன்றுடன் வா..வா இசைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
பாரீசில் நடந்த பத்தாமாண்டு கம்பன் விழாவில் “கம்பனுக்குப் பாமாலை“ என்ற தலைப்பில் வாசித்தக் கவிதை மனம் மகிழச்செய்தது ..பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
உங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.