Tuesday, 14 May 2013

புது வீடு!! (நிமிடக்கதை)                     
     
    கமலாவிற்கு இன்று மனம் நிறைந்த மகிழ்ச்சி. காலையில் நடந்த தன் புது வீடு புகுவிழாவிற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் மூக்கில் விரல் வைப்பது போல் பார்த்தது மேலும் அவளுக்குப் பெருமிதத்தைக் கொடுத்தது.
    தான் வாழ்ந்த பழைய வீட்டை இடித்துப் புதுவீடாக அதுவும் இப்பொழுது உள்ள நாகரிக வசதிகளுடன் கட்டிய இந்த வீட்டிற்காக அவள் பட்ட துன்பங்களை எண்ணிப் பார்த்தாள்.
   திருமணம் முடித்து வந்த அன்றே பெய்த மழையில் வீடு முழுவதும் ஒழுகியது. உறவினர்கள் என்று வந்தால் தங்க முடியாது. இருந்த ஒரேயொரு சின்ன அறையில் தான் அவள் கணவரின் தங்கை படுத்துக்கொள்வாள். திருமணமான இவர்களுக்கு என்று எந்த ஒரு ஒதுக்குப்புறமும் கிடையாது. மாமியாரும் மாமனாரும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு வெளியில் படுப்பார்கள்.
   அதிலும் மாமியாருக்கு ஆஸ்துமா தொல்லை. வெளி காற்று ஒத்துக்கொள்ளாது. அவர்கள் படும் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காமல் இவளே அவர்களை வெளியில் படுக்க விடுவதில்லை. இதற்கு நடுவிலும் மாதவன் பிறந்தான். அவனுக்கும் ஆஸ்துமா இருந்ததால் குழந்தையை டவுனில் இருக்கும் தன் தாய் வீட்டிலேயே விட்டு வளர்த்தாள்.
   அவள் மாதவனைப் பார்க்கப் போகும் பொழுதெல்லாம் “அம்மா எனக்கு உன் கூடவே இருக்கனும்ன்னு ஆசையா இருக்குதும்மா... நானும் உன் கூடவே இருக்கிறேன்ம்மா...“ என்று பிள்ளை அழுவும் பொழுதெல்லாம் “இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க ராசா. வீடு கட்டி முடிச்சதும் நீ அங்க வந்திடு... அப்புறம் பெரிய வீட்டில் ஜாலியா இருக்கலாம்...“ என்று கவலையுடன் பேசி சமாதானப் படுத்திவிட்டு வருவாள்.
   வீட்டைச் சுற்றி நிறைய இடம். எப்படியாவது இந்த வீட்டை இடித்துப் பெரியதாகக் கட்டிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அவள் கணவன் வயலில் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் நாத்தனாரைக் கட்டிக்கொடுக்கவும், மாமியார் மாமனார் இறுதியாத்திரைக்கும், பிள்ளையின் படிப்புச் செலவிற்குமே சரியாய்ப் போயிற்று.
   மாதவன் வளர்ந்து தான் காதலித்தப் பெண்ணையே கட்டிக்கொண்டாலும் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றாமல் விட்டுவிடவில்லை. அவன்கொடுத்தப் பணத்துடன் வீட்டைச்சுற்றி இருந்த அதிகப்படியான இடத்தை விற்றுவிட்டு கமலா இந்த வீட்டைக் கட்டி முடித்துவிட்டாள்.
   மனம் நிறைந்து விட்டது போல் இருந்தது.

   வெயில் இறங்க இறங்க ஒவ்வொரு உறவினர்களாகக் கிளம்பினார்கள். கடைசியாக மாதவனும் மனைவி குழந்தைகளுடன் கிளம்ப... கமலாவிற்கு மனம் பகீரென்றது. “நீயும் கிளம்புறியாப்பா..?“ என்று கேட்டாள்.
   “ஆமாம்மா.... நாளைக்கு பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போகனும். நானும் அவளும் வேலைக்குப் போகணும் இல்லையா...?“ என்றான்.
   “ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இருந்துட்டு  போயேன்பா....“ என்றாள் கெஞ்சலாய்.
   “ரெண்டு நாள் லீவா....? வீடு கட்ட நிறைய கடன் வாங்கி இருக்கேன். அந்த கடனை எல்லாம் அடைக்கிற வரைக்கும் லீவெல்லாம் போட முடியாதும்மா. நேரம் கிடைக்கும் பொழுது நீங்க கிளம்பி வாங்க. நான் கிளம்புறேன்....“
    கிளம்பிப் போய் விட்டான்.

    வீட்டிற்குள் வந்த கமலா மற்ற வேலைகளை முடித்துவிட்டு கணவனைத் தேடினாள். உழைத்து உழைத்துத் தேய்ந்த உடல்.... தோட்டத்தில் இருந்த கட்டிலில் உறங்கி விட்டிருந்தான்.
    கமலா தான் கட்டிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ அந்த வீடு அவளைப் பயமுறுத்துவது போல் இருந்தது. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு என்பது புரிந்த பொழுது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேசாமல் வந்து தன் கணவனின் கட்டிலின் பக்கத்தில் பாயை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.

அருணா செல்வம்.
14.05.2013