Friday, 3 May 2013

எழுத முடியுமா? (சுவையான நிகழ்வு)
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    மூன்று நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சுவையான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
    அந்த வருடம் “கம்பன் விருத்த்த்தில் வைத்த விருந்து“ என்ற கவிதை நூலை வெளியிடுவதாக இருந்ததால் அதற்கு வாழ்த்துரை கேட்க என் ஆசிரியரின் ஆசிரியர் திரு. சித்தன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.
    தமிழ்மாமணி, பாவலர்மணி சித்தன் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர். இப்பொழுது இவருக்கு வயது 93. (வயது தான் இவ்வளவு. ஆனால்... இவர் இன்றெழுதும் காதல் பாடல்களைப் படித்தாலும் மனம் சொக்கும்)
    இவரின் மாணவர்களில் ஒருவர் தான் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள். (இவரும் குருவிற்குத் தகுந்த மாணவர் தான் என்பதை இவரின் “காதல் ஆயிரம்“ “ஏக்கம் நூறு“ படித்தவர்களுக்குத் தெரியும்)
    இந்தக் கவிஞரிடம் பயின்ற மாணவி நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

    இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன்.
    திரு. சித்தன் ஐயா அவர்களிடம் நான் என் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து வாழ்த்துரை வழங்குமாறு அன்புடன் பணிந்து கேட்டேன்.
    அவரும் என் நூல்பிரதியை வாங்கி நோட்டம் விட்டுவிட்டு “நிறைய வெண்பா எழுதியிருக்கிறாய். படித்துப் பார்க்க வேண்டும். உனக்கு எப்பொழுது வாழ்த்துரை தர வேண்டும்?“ என்று கேட்டார்.
    “ஒரு வாரத்திற்குள் கொடுத்தால் நல்லது ஐயா“ என்றேன்.
    அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு “ம்... சரி தருகிறேன். ஆனால் அதற்கு முன்பு நான் ஒரு ஈற்றடி தருகிறேன். அதை வைத்து நாளைக்குள் ஒரு வெண்பா எழுதிவிட உன்னால் முடியுமா...? என்று கேட்டார்.
   (ஈற்றடி என்றால் வெண்பாவின் கடைசி வரி)
   நானும் இதற்கு முன் இலங்கை ஜெயராஜ் அவர்கள் தந்த “வித்தகர்க்கு வேண்டாமே வீம்பு“ “போதாது போதாது போ“ போன்ற ஈற்றடிகளுக்கு உடனடியாக வெண்பா எழுதி பழக்கமாகி விட்டதால்... வெண்பா தானே... அது என்ன பெரிய விசயம் என்று நினைத்தாலும் “கொடுங்கள் ஐயா. முயற்சிக்கிறேன்“ என்று பணிவாக கேட்டேன்.
    அவரும் உடனே, “சம்போடு ராமாநு சம்“ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதி வா“ என்றார்.
    “சம்போடு ராமாநு சம்“... நான் ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். இதில் ராமாநுசம் என்றால் ஒரு பெயர் என்று புரிகிறது. ஆனால் “சம்போடு“ என்றால் என்ன....? புரியவில்லை. அவரிடமே கேட்டேன்.
    “சம்போடு“ என்றால் என்ன ஐயா?“ கேட்டேன்.
    அவர் உடனே, “யாருக்குத் தெரியும்? நான் உன் வயதில் இருக்கும் பொழுது என் ஆசிரியர் கொடுத்த ஈற்றடி இது. ஆனால் நானும் உன்னைப் போல் குழம்பி கடைசியில் எழுதிவிட்டேன். நீயும் போய் எழுத முயற்சித்துப் பார்.“ என்றார்.
   அங்கேயே அமர்ந்து ரொம்ப நேரம் யோசித்தும் எதுவும் தெரியாததால் “ஐயா... யோசித்து எழுதி நாளை கொண்டு வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
   வந்ததிலிருந்து எல்லா தமிழ் அகராதியையும் எடுத்துத் தேடினேன். அப்படி ஒரு வார்த்தையே இல்லை. நான் அப்பொழுது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்ததால் என் ஆசிரியரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும் விடாமல் அன்றிரவு முழுவதும் யோசித்தேன்.
   நட்புறவுகளே.... இங்கே வெண்பா இலக்கணம் தெரிந்தவர்கள் இருந்தால் இந்த “சம்போடு ராமாநு சம்“ என்ற ஈற்றடிக்கு யோசிக்க அவகாசம் தருகிறேன்.
   யோசிக்க நேரமில்லாதவர்கள் தொடருங்கள்....
-


-


-


-


-


-


-


-


-


-
    யோசித்து... யோசித்து... கடைசியில் ஒரு வழி கிடைத்தது. இந்த வார்த்தை வகையொளி செய்து கொடுக்கப்பட்டாதாக இருக்குமோ... என்று யோசித்தேன்.
    வகையொளி என்பது மரபு இலக்கணத்தில் ஒரு சொல்லைப் பிரித்து எழுதுவதாகும். சங்க இலக்கியங்கள் அனைத்திலும் இந்த வகைதான் அதிகமாகக் கையாளப்பட்டு உள்ளது. இவ்விதம் படிப்பதற்கு மிகவும் கடினம் என்பதால் என் ஆசிரியர் முடிந்த வரையில் 99 விழுக்காடு வகையொளி செய்யாமல் தான் எழுத வேண்டும் என்றும் அப்படி முடியாத நேரத்தில் ஒரு விழுக்காடு வேண்டுமானால் இதனைக் கையாளலாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
    அதனால் நான் வகையொளி படுத்தி கவிதைகள் எழுதுவதில்லை.
    ஆனால் இவ்விடத்தில் வேறு வழியில்லாமல் வகையொளி படுத்தி இரண்டு வெண்பா எழுதி கொண்டு போய் சித்தன் ஐயா அவர்களிடம் காட்டினேன்.
    அதைப் படித்து என்னை வியந்து பாராட்டியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பின்பு உடனடியாக என் கவிதை நூலுக்கு “சாற்று கவி எழுதி தந்தார்.

இதோ அந்த வெண்பாக்கள்.


சம்பளம் வாங்கியதும் சட்டென்றே ஓடிவிடும்!
உம்பலம் கண்டதனால் கேட்கின்றேன்! – உம்மென்று
சும்மா தரவேண்டாம்! காசுக்கே கொஞ்சம்ர
சம்போடு ராமாநு சம்!

நாடிருக்கும் இந்நிலையில் நாமுயர நன்மைக்கும்
வீடிருந்தும் வேடிக்கைக் காட்டிடவும் – காடிருக்கும்
கொம்போடு கோடிட்டே ஆடும் புலிபோல்வே
சம்போடு ராமாநு சம்!அதாவது 
“ரசம்போடு ராமாநு சம்“ என்றும்
புலிபோல் “வேசம்போடு ராமாநு சம்“ என்றும்

வகையொளி படுத்திய ஈற்றடியாய் முடித்துக் கொடுத்தேன்.

நட்புறவுகளே... இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்பதால் உங்களுடன் பகிர்ந்தேன்.

அன்புடன்
அருணா செல்வம்.
03.05.2013