புதன், 9 அக்டோபர், 2013

புது பெண்ணும் புது நாத்தும்!! (நிமிடக்கதை)
     மைதிலி தன் கணவனைப் பார்த்தாள்.
   மிதுனா திருமணமாகி அவளின் கணவன் வீட்டிற்குச் சென்று பத்துநாள் ஆகிறது. அதிலிருந்தே அவளின் கணவன் எதையோ பறிகொடுத்தது போல் கவலையுடன் இருந்தார். நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிடாமல் இருப்பதும், சரியாக தூங்குவதும் கூட கிடையாது.
   ஏதோ இந்த பத்து நாளில் பத்து வயது கூடிவிட்டது போன்ற முகத்தோற்றம்!
   கல்யாண அலைச்சல் என்று தான் மைதிலியும் நினைத்திருந்தாள். ஆனால் அதன் பிறகும் இவர் ஏன் இப்படி இருக்கிறார்...? யோசனையுடன் அவர் அருகில் வந்தாள்.
   “ஏங்க... ஏன் என்னவோ போல் இருக்கிறீங்க? உடம்பு சரியில்லையா?“ கேட்டாள்.
   “ப்ச்சி... நான் நல்லாத்தான் இருக்கிறேன்“ என்றார் பலகீனமாக.
   “பின்ன ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறீங்க...?“ என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்தார். பின்பு,
   “நெஜமா சொல்லு... மிதுனா போனது உனக்கு கவலையாக இல்லையா...?“ கவலையுடன் கேட்டார்.
   அவள் சற்று யோசித்துவிட்டு, “இதுல என்ன கவலை. அவ கல்யாணம் ஆகி அவளுடைய புருஷன் வீட்டுக்குப் போய் இருக்கிறா. இதுல எனக்கு சந்தோஷம் தானே தவிர, கவலை கொஞ்சம் கூட இல்லைங்க“. என்றாள் சாதாரணமாக.
   “ஏன் பேச மாட்டே... நீ என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகு எத்தனை நாள் உன் அப்பா அம்மாவை நினைச்சி பிழியப்பிழிய அழுதிருப்ப? என் பொண்ணும் அப்படித்தானே இப்போ நம்மை நினைச்சி அழுதுகினு இருப்பாள்...? எனக்கு அதை நினைக்கவே கவலையா இருக்கு மைதிலி.“ என்றார்.
   “உக்கும்... நான் அன்னைக்கு அழதப்போ, என் அப்பா அம்மாவிடம் பேச வசதியா இங்க ஒரு போன் கூட கிடையாது. அம்மா என்னைப் பார்க்கனும்ன்னு லட்டர் போட்டால் கூட இதோ பக்கத்துல இருக்கிற ஊருக்கு அனுப்பி வைக்கமாட்டீங்க. நானெல்லாம் அப்பா அம்மாவை நெனச்சிக்கினே உங்களுடன் வாழலையா...? அது போல அவளுக்கும் பழகிடும். விடுங்க“ என்றாள் மிகச் சாதாரணமாக.
   மனைவி நக்கலாகச் சொன்னதின் அர்த்தம் புரிந்தாலும் மனது கேட்காமல், “நாளை காலையிலேயே போன் பண்ணி அவளையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடலாமா?“ கேட்டார்.
   அவரை நிமிர்ந்து பார்த்தவள் “வாழ வந்த பெண்ணை அடிக்கடி தாய் வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்று உங்க அப்பா தான் சொல்வார்கள். அந்த வார்த்தை நம்ம பெண்ணுக்கும் தான் பொருந்தும். இன்னும் ஒரு மாசம் போகட்டும். ஏதாவது காரணம் சொல்லி கூப்பிடலாம்.“ என்று அவள் சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனித்தாள்.
   அவளை யோசனையுடன் பார்த்தவர், அவள் சொல்வதும் சரிதான். நாற்று வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்க்கக்கூடாது. அப்படியே விட்டால் தான் நன்றாக வேர்பிடித்து வளரும் என்று அவரின் அப்பா அடிக்கடி சொல்வதை நினைத்து மனத்தைத் தேற்றிக்கொண்டார்.

அருணா செல்வம்
10.10.2013

27 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

”நாற்று வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்க்கக்கூடாது"
மிகச்சரியான உவமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//”நாற்று வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்க்கக்கூடாது" //

Good one.... But mostly not followed now-a-days... :(

கீதமஞ்சரி சொன்னது…

வாழ்க்கையின் சூட்சுமத்தை இயல்பாகச் சித்தரிக்கும் கதைக்கரு. பாராட்டுகள் அருணா செல்வம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையை அழகாக ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டீர்கள் பாராட்டுக்கள்

Avargal Unmaigal சொன்னது…

கதை வழக்கம் போல அருமை .பெண்களுக்கு பிள்ளை பெறும் போது வலி ஆனால் அப்பாவிற்கோ பிள்ளைக்கு கல்யாணம் செய்து அனுப்பும் போது வலி வருகிறது.

Avargal Unmaigal சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Unknown சொன்னது…

# ”நாற்று வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்க்கக்கூடாது#
அது குரங்கு செய்ற காரியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் !

Unknown சொன்னது…

”நாற்று வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்க்கக்கூடாது. அப்படியே விட்டால் தான் நன்றாக வேர்பிடித்து வளரும்” மிகச் சரியான உதாரணம். நல்ல கதை அருமையாக உள்ளது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரின் அப்பா சொன்னது சரி தான்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கதை! நன்றி!

ஜீவா சொன்னது…

கதை எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா கல்யாணம் ஆகி போனா கண்டிப்பா அப்பாவ பிரிய தான் வேணுமா? :(

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆழமான கருத்துடைய
அற்புதமான கதை
கடைசி வரிகள் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 6

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

ஆண்கள் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து அனுப்பும் பொழுது தான் பெண்களின் வலியை உணருகிறார்கள்.

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மைதான் “உண்மைகள்“

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

மனம் ஒரு குரங்கு தானே.
அது மனிதருக்குள் அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும் தான்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகான கதை...
நாற்றையும் பெண்ணின் திருமண வாழ்க்கையையும் ஒப்பிட்டுச் சொன்னது சிறப்பு...
வாழ்த்துக்கள்

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அப்பா சொன்னாரா....?

கதை வழியாக நான் தாங்க சொன்னேன்...,)

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

நல்ல கேள்வி தான்.
ஆனால்...
காலங்காலமாக நாம் இந்தியப்பண்பாடு காலச்சாரம் என்ற ஒரு வட்டத்திற்குள் தானே வாழ்கிறோம். என்ன.... இப்பொழுது வட்டத்தைக் கொஞ்சம் பெரியதாக்கி இருக்கிறோம். அவ்வளவு தான் தோழி.

தங்களின் வருகைக்கும் யோசிக்கத் துாண்டிய கேள்விக்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.