Tuesday, 18 June 2013

காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன்!! (புனைவு)
    
 நான், நான்காக மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன், என்னைப் பார்த்துக், “கண்மணி... அன்போட காதலன் நான்... நான் எழுதிய கடிதம்ன்னு... அப்படின்னு பழைய டைலாக்கையே போடலியே...“ என்றான்.
   நான் முறைத்ததும்... “சரி சரி முறைக்காதே...“ என்று சொல்லிபடி கடிதத்தைப் பிரித்தான். பிரித்தவன் படிக்காமல் “ஐயையோ.... இதுவா காதல் கடிதம்...? கால் பக்கத்துக்குக் கூட எழுதலை. இதை போய் காதல் கடிதம்ன்னு சொன்னா யாராவது ஏத்துக்குவாங்களா...? போச்சி. போச்சி... எல்லாம் போச்சி... மத்தவங்க எல்லாம் காதல் கடிதத்தைப் பக்கம் பக்கமா எழுதி தள்ளுறாங்க. வரிக்கு வரி வர்ணனை வேற... நீ என்னன்னா... இவ்வளோண்டு தான் எழுதி இருக்கிற. நான் இதைப் போய் கொடுத்தால் நிச்சயமா செலெக்ட் ஆக மாட்டேன்னு தெரிஞ்சிடுச்சி“ அழுவாத குறையாக சொன்னான்.
   எனக்குக் கோபமாக வந்தது. இவனுக்குக் காதல் வந்தது என்றால் இவனே காதல் கடிதம் எழுதனும். அதை விட்டுவிட்டு என்னிடம் வந்து கேட்டதே தப்பு. சரி போனால் போகிறது என்று எழுதிக் கொடுத்தால் அதைப் படிக்காமலேயே குறை சொல்பவனை என்ன செய்வது?
   நான் பேசாமல் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து அவனே கேட்டான். “இதை எழுதறதுக்குத் தான் மூனு நாள் கேட்டியா...? நீ கேட்டதைப் பார்த்தா பக்கம் பக்கமா எழுதி குவிச்சி இருப்பேன்னு நினைச்சேன்.“ என்றான் ஒருவித ஏளனமாக.
    நான் சட்டென்று அவன் கையில் இருந்த கடிதத்தைப் பறித்துக்கொண்டேன். அதை இழந்ததால் அவன் எதுவும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
   நான் சொன்னேன். “காதல் கடிம்ன்னா... பக்கம் பக்கமா எழுதனும், நிறைய வர்ணிக்கனும் என்றெல்லாம் இல்லை. மனத்தில் பட்டதை நமக்குப் பிடித்தவரின் மனத்தில் படுமாறு எழுதினாலே போதும். உண்மையான அன்பிருந்தால் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காகிதத்தில் “நான் உன்னை விரும்புகிறேன்“ என்று எழுதிக் கொடுத்தாலே போதும். அது தான் உண்மையான காதலருக்கு மிகப்பெரிய காதல் கடிதம்“ என்றேன்.
   “அதெல்லாம் சரிதான். ஆனால் நம்முடையக் காதலைக் கொஞ்சமாவது எடுத்து விளக்கிச் சொன்னால் தானே நாம் எவ்வளவு காதலிக்கிறோம் என்று தெரியும்“ என்றான் முணங்கலாக.
   “நானும் அதைத் தான் எழுதி இருக்கிறேன். முதலில் படிச்சிப்பாரு. கடிதத்தில் எவ்வளவு வரிகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. அதில் உள்ள சொர்ப்ப வரிகளில் உள்ள வார்த்தைகளின் வீரியம் தான் முக்கியம்.“ என்றேன் சற்று கோபமாக.
   அவன் கடிதத்தை வாங்கி பிரித்துப் படித்தான். படித்தவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். சற்று நேரம் பேசாமலேயே இருந்தான். நானும் பேசாமலேயே இருந்தேன். திரும்பவும் படித்தான். திரும்பவும் என்னைப் பார்த்தான். “சும்மா சொல்லக் கூடாது... அருமை. என் மனசைத் தொட்டுடுச்சிப்பா...“ என்றான் நெகிழ்வாக.
   நான் கொஞ்சம் பெருமிதமாக நெளிந்தேன்.
   “ஆமாம்... உனக்கு எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது....? யாராவது உனக்கு எழுதிக் கொடுத்தாங்களா...?“ சந்தேகத்துடன் கேட்டான்.
   “இது தானே வேணாங்கிறது. ஏதோ சின்ன வயசுலேர்ந்து ஃபிரெண்டு. முதல் முறையா காதலிக்கப் போறதால கேட்டியேன்னு எழுதி கொடுத்தா.... நீ கேக்கமாட்டே... சரி சரி. இப்பவாவது சொல்லு. யார் கிட்ட கொடுக்கப் போறே?“ ஆவலாகக் கேட்டேன்.
   “நம்ம திடங்கொண்டு போராடு சீனு கிட்ட தான்“ என்றான் இலேசான புன்முறுவலுடன்.
   “என்னா...து சீனு கிட்டையா...?“ கண்கள் விரிய கேட்டேன்.
   “ஆமாம்... சீனு கிட்டே தான்“ என்றான் அவன் சிரித்தபடி.
   “டேய்... சீனு ஆம்பளைடா....“ என்றேன் அதிர்ச்சி மாறாமல்.
   “ஆமாம். ஆம்பளைதான். அதுக்கென்ன இப்போ.“ அவன் அலட்சியமாகச் சொல்ல நான் அவனைச் சந்தேகமாகப் பார்த்தபடி “டேய்.... அவனாடா நீ...“ என்றேன்.
    “ஏய்....“ என்றான் குரலை உயர்த்தி. சற்று நேரத்தில் புரிந்துகொண்டு... “சீச்சீ.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நம்ம திடங்கொண்டு போராடு சீனு, அவரோட வலையில “எழுத மறந்த காதல் கடிதம்“ என்ற தலைப்புல ஒரு போட்டி வைக்கிறார். அந்த போட்டியில கலந்துக்கத்தான் உங்கிட்ட காதல் கடிதம் கேட்டேன்.“ என்று விளக்கினான். எனக்குக் கொஞ்சம் மூச்சு சீரானது.
   “டேய்... போட்டிக்கா கேட்டே... ஒழுங்கா சொல்லி இருந்தால்... நல்லா வர்ணிச்சி பெரிசா எழுதி கொடுத்திருப்பேன். பேசாம... அந்த கடிதத்தைக் கொடுடா. வேற எழுதித் தர்றேன்.“ கையை நீட்டினேன்.
   “இல்லப்பா. இந்த கடிதமே போதும். இந்த கடிதம் பரிசு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. என் மனசுக்குத் திருப்தியா இருக்கு. அது போதும் எனக்கு. நன்றிப்பா...“ சொல்லியபடி கடிதத்தைத் திரும்பவும் பிரித்துப் படித்துக்கொண்டே சென்றான்.

அருணா செல்வம்.
19.06.2013