வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இன்பத்தின் இருப்பிடமே...!!! (கவிதை)
சொல்லெல்லாம் உனைப்பாடச்
   சுகம்பெற்றுச் சுடருதடி!
பல்லெல்லாம் முத்தாகப்
   பளபளத்து மின்னுதடி!
புள்ளெல்லாம் பறப்பதுபோல்
   நற்புலமை சிறக்குதடி!
உள்ளெல்லாம் உன்நினைவு   
   ஊற்றாக ஊறுதடி!

அணைவிட்டு அடைத்தாலும்
   ஆசையலை அடங்கிடுமோ!
கணையிட்டு மன்மதனும்
   கால்வலிக்கக் காத்துள்ளான்!
உனைத்தொட்டுக் கவிபடைக்க
   உன்னருளே வேண்டுமடி!
இணையிட்டு எதைச்சொல்வேன்!
   இன்பத்தின் இருப்பிடமே!!


அருணா செல்வம்.

20 கருத்துகள்:

 1. தங்கள் படைப்புகளைப் படிக்கப் படிக்க
  எனக்கும் மரபுக் கவிதை எழுதலாமோ
  என ஆசைவருகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரமணி ஐயா.

   உங்களின் இருண்மை கவிபோல் என்னால் படைக்க முடியவில்லையே என்று நாளும் நான் ஏங்குகிறேன்.

   உங்களின் ஸ்டெய்லே தனி்! அது யாருக்கும் வராதுங்க. அதற்கு உங்களின் இரசிகர்களே சாட்சி.

   இலக்கியத்திலிருந்து தானே இலக்கணம் வந்தது.
   எழுதுங்கள் ஐயா. உங்களின் உயர்ந்த கருத்துக்களை எப்படி எழுதினாலும் எங்களுக்கு இனிக்கத்தான் செய்யும்.
   நன்றிங்க ஐயா.

   நீக்கு
 2. அழகான வரிகள்...

  /// உனைத்தொட்டுக் கவிபடைக்க
  உன்னருளே வேண்டுமடி!
  இணையிட்டு எதைச்சொல்வேன்!
  இன்பத்தின் இருப்பிடமே!! ///

  அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 3. வார்த்தைகளை அழகாக கோர்த்துள்ளீர்கள்
  ரசித்து படித்தேன்

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. ஐயா... நீங்கள் “பின்னி எடுக்கிறீர்கள்“ என்று எழுதியதைப் படித்ததும் அன்று படிக்காததால் என் அப்பா பிரம்பால் பின்னி எடுத்தது ஞாபகம் வந்திடுச்சிங்க.

   நன்றிங்க ஐயா.

   நீக்கு
 5. ரமணி ஐயாவின் ஆவலே என்னிடத்திலும் எழுகிறது சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாலாட்டுப் பாடும் தாயின் வார்த்தைக்கு
   அதில் ஒளிந்திருக்கும் அன்பு தான் மரபு.
   மனம் நிறைந்து வாழ்த்தும் போது
   அதில் நிறைந்திருக்கும்
   நிறைவு தான் மரபு.

   கவிதாயினி... உங்கள் கவிதைகளில் அன்பும் உண்மையும் நல்லெண்ணமும் நிறைந்திருக்கிறது. அதனுள்ளே மரபும் மறைந்திருக்கிறது.

   நன்றிங்க சசிகலா.

   நீக்கு
 6. மன்மதனையும் கால்கடுக்க காத்திருக்கவைக்கும் கல்மனதுக்காரியோ அக்காரிகை? அழகிய வரிகளில் அற்புதம் நிகழ்கிறது.பாராட்டுகள் அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்மனதுக்காரி என்றெல்லாம் சொல்லாதீங்க. அப்புறம் நாத்தியிடம் சண்டைக்கு வந்துவிட போகிறாள். பிறகு என்பாடு திண்டாட்டமாக போய்விடும். இதுதான் ஊடல்ன்னு நினைக்கிறேன் அக்கா.

   பாராட்டிற்கு நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

   நீக்கு
 7. நானும் முயற்சி செய்தேன்.....உங்கள் கோர்வை அடுக்கு எழுத்து வரவே மாட்டுதாம் !

  பதிலளிநீக்கு
 8. அன்பின் அருணா - மிக மிக இரசிக்க வைத்த இனிய கவிதை - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப் பட்ட கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு