சனி, 11 ஆகஸ்ட், 2012

இதயம் ஏந்தி வணங்குகிறேன்!!! (கவிதை)
திருக்குறள்.

சின்னச் சின்னச் சொல்லெடுத்துச்
    செந்தேன் கடலில் ஊறவைத்துக்
கன்னல் கொடியில் நாரெடுத்துக்
    கனியின் சாற்றில் நனைத்தெடுத்து
வண்ண வண்ணப் பூக்களினை
   வடிவாய்க் கைகள் தொடுப்பதுபோல்
கன்னித் தமிழைச் சேர்த்தெழுதிக்
    கவியில் கருத்தைத் தொடுத்தாரோ?

எண்ணம் எல்லாம் தமிழாகி
    எழுதும் எழுத்தில் கலந்துவிட
விண்ணில் பூத்த விண்மீனே
    வேண்டி வந்து விழுந்துவிடப்
பொன்னில் வார்த்த பொற்பூப்போல்
    பொலிந்து சொற்கள் மின்னிவிடக்
கண்ணில் இருக்கும் பாவையைப்போல்
    கருவை உருவாய்ச் சேர்த்தாரோ?

அருளும் பொருளும் இன்பமென
    அழகாய்ப் பிரித்தார் முப்பாலில்!
உருளும் மனத்தை நிலைநிறுத்த
    உயர்வாய்ச் சொன்னார் அறப்பாலில்!
இருளும் மனிதர் வாழ்வுயர
    ஏற்றம் மொழிந்தார் பொருட்பாலில்!
மருளும் மங்கை மனம்மகிழ
    மதுவைக் கலந்தார் இன்பத்தில்!

எதுதான் இல்லை திருக்குறளில்?
    எடுத்துப் புரட்டிப் பார்த்திட்டேன்!
மதுதான் குறள்கள் ஒவ்வொன்றும்
    மனத்தை நன்றே மயக்கிவிடும்!
அதுதான் அன்பும் அறத்தையும்
    அழியாப் புகழை அளிக்கிறது!
இதுதான் வாழ்க்கைத் தத்துவமே!
    இதயம் ஏந்தி வணங்க்கிறேன்!!


(குறளின் பெருமை தொடரும்)
அருணா செல்வம்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க நண்பரே.

   நீக்கு
 2. குறளின் பெருமையை மிக மிக
  அழகாச் சொல்லிச் செல்லும் பதிவு
  அருமையிலும் அருமை
  தொடரும் எனச் சொன்னது
  அதிக மகிழ்வளித்தது
  ஆவலுடன் காத்திருக்கிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னது எனக்கு அதிக ஊக்கத்தைத் தருகிறது ஐயா.
   நன்றிங்க ரமணி ஐயா.

   நீக்கு
 3. சிறப்பிற்கு மேலும் சிறப்பு...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்க முயற்சித்தேன் ஐயா.
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 4. திருக்குறளின் பெருமை எத்தனை முறை சொன்னாலும் கேட்கலாம்.அழகு தமிழில் திருக்குறள் புகழ்மாலை அன் உள்ளம் கவர்ந்தது உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

   நீக்கு
 5. இரட்டை வரியில் முழுவாழ்வையே சொல்லும் திருக்குறளைப் புகழ்ந்துகொண்டே இருக்கலாம்.அதைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் அருணா.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 6. அழகான வரிகள் ......சின்ன சின்ன மெட்டெடுத்து வந்தது செந்தமிழ் பாட்டு....இந்த பாடல் தான் ஞாபகத்துக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிங்களா சிட்டுக்குருவி... இதையும் பாடிப்பாருங்கள்.
   நன்றிங்க சிட்டு.

   நீக்கு
 7. அன்பின் அருணா

  குறளின் பெருமை சொல்லவும் வேண்டுமோ - அருமை அருமை - எளிய நடையில் கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா.

   உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சீனா ஐயா.

   நீக்கு
 8. அன்பின் அருணா - குறளின் பெருமை பேசும் பதிவு - கண்டு கேட்டு மகிழ சுட்டுக இச்சுட்டியினை. http://cheenakay.blogspot.in/2008/10/blog-post_12.html

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு