(பதிற்றந்தாதி)
அன்பிற் சிறந்த
அமுதமென்றும் ஆனந்த
இன்பிற் பிறந்த
இசையென்றும் – என்னுள்ளம்
தன்னில் கரைந்து
தவழ்ந்தாடத் தாயேநீ
என்னில் மலர்ந்த இறை!
இறையாக நின்றெனைக்
காத்தே இரையை
நிறைவாக ஊட்ட
நெகிழ்ந்தேன்! – மறையாம்
குறளின் வழியில்
வளர்த்தாய்! குளிர்ந்தேன்!
உறவினைக் கண்டே
உணர்ந்து!
உணர்ந்தும் எழுதிட
உள்வரும் வார்த்தை
கொணர்ந்த இனிமைகள்
கோடி! – வணங்கும்
மனிததெய்வம் அன்னையென
மாமனிதர் சொல்லோ
புனிதமென்றே போற்றும்
புகழ்ந்து!
புகழ்ந்திட ஏதெனக்கு
வார்த்தை? பொலிர்ந்து
திகழ்ந்திடும் சூரியனைப்
போற்றா(து) – இகழ்ந்தால்
நிகழும் செயலெல்லாம்
நின்றிடுமா? தாயை
அகத்திலே வைப்போம்
அறிந்து!
அறிந்தேநாம் செய்த
தவற்றையும் அன்னை
அறியாமல் செய்ததாய்க்
கொள்வாள்! – அறிவிற்கோ
அன்பின் அளவு
தெரியாது! ஆண்டவனும்
தன்னுள் வணங்குவான்
தாழ்ந்து!
தாழ்கின்ற தன்னடக்கம்
தன்னை உணர்ந்துயர்வாய்
வாழ்கின்ற வாழ்வின்
வழிகாட்டி! – சூழ்நிலையால்
தன்னைச்
சுமர்ந்தவளைத் தாங்க மறந்தாலும்
தன்னுள்ளே தாங்குவாள்
தாய்!
தாய்பாடும்
தாலாட்டுப் பிள்ளையைத் தூங்கவைக்கும்
வாய்பாடும்
பாட்டில்லை! வாழ்க்கையில் – சேய்வாழத்
தான்பட்ட துன்பமெல்லாம்
தான்மறைத்து பாடுவாள்
தேன்சொட்டும்
செந்தமிழைச் சேர்த்து!
சேர்த்தெழுதும்
சீர்களால் பாபிறக்கும்! அன்னையன்பைக்
கோர்த்தெழுதக்
கொஞ்சுதமிழ் வான்பறக்கும்! – பார்க்கின்ற
ஊர்போற்றும்! அன்னையே
உன்னை அறிந்தெழுதப்
பார்போற்றி
வாழ்த்தும் படர்ந்து!
படர்கின்ற பூங்கொடி
பற்றின்றிப் போனால்
இடர்கின்ற துன்பம்
இழைக்கும்! – திடமாய்
நடக்கின்ற தாயைநாம்
பற்றி நடந்தால்
இடர்வருமோ வாழ்வில்
இசைந்து!
இசையின் இனிமை!
இயலின் பெருமை!
தசையும் தருகின்ற
தன்மை! – திசையெங்கும்
போற்றிடும்
தெய்வம்போல் நின்றுதவும் தன்மையின்
ஆற்றலே அன்னையின்
அன்பு!!
அருணா செல்வம்.
அருமையான அற்புதமான
பதிலளிநீக்குஅழகிய கவிதை
மீண்டும் மீண்டும் படித்து
ரசித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.
\\சேர்த்தெழுதும் சீர்களால் பாபிறக்கும்! அன்னையன்பைக்
பதிலளிநீக்குகோர்த்தெழுதக் கொஞ்சுதமிழ் வான்பறக்கும்! – \\
இங்கே அன்னையின் அன்பும் அழகுத்தமிழும் பிணைந்து அற்புதப் பாவாய் விரிந்து மனத்தினைக் கொள்ளை கொள்ளுதே... வாசிக்க வாசிக்க நாவினிமை கூட்டும் அழகிய அந்தாதிக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.
தங்களின் அழகிய கருத்தோட்டத்திற்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
ஒவ்வொரு வரிகளும் உருக வைக்கிறது... மிக்க நன்றிங்க...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் ஐயா.
மந்திர வரிகள்............
பதிலளிநீக்குநன்றிங்க சிட்டுக்குருவி.
நீக்குஅன்னையின் அன்பை அழகிய தமிழில் அழகாய்த் தந்த சகோவிற்கு எனது வணக்கங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி.
நீக்குநன்றிப்பா.
பதிலளிநீக்குநானும்தான் எழுதி இருந்தேன் என் பாவைக்கு ஒரு பாமாலை, அந்தாதி என்று நினைத்துப் பெருமையும் பட்டேன். அதுவும் மரபு வழியில் இருந்திருந்தால்ின்னும் நன்றாய் இருந்திருக்கலாம். பிறிதோரிடத்தில் ரமணி அவர்கள் சொன்னதுபோல”அந்தாதி போல “இருந்தது. அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்.
வணக்கம் பாலசுப்ரமணியம் ஐயா.
நீக்குஉங்களின் பாடலைத் திரும்பவும் வகைப்படுத்தி அந்தாதி மரபிற்கு கொண்டு வந்து விடுங்கள். அந்தாதி என்பது நிச்சயம் கடினம் கிடையாது. ஒரு பாடல் மரபுடன் இருந்தால் நிச்சயம் அதைக் காலத்தால் அழிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் நம் பாடலை மற்றவர் சொந்தம் கொள்ள முடியாது.
நான் அந்தாதிக்கான விளக்கத்தை அடுத்த பதிவில் இடுகிறேன்.
உங்களின் வாழ்த்திற்கு நன்றி ஐயா.
ஒரு கவிதையின் கடைசி வார்த்தை அடுத்த கவிதையின் முதல் வார்த்தையாய் அமைத்தது அருமை!
பதிலளிநீக்குநமக்கு கவிதையை விமர்சிக்கும் அளவுக்கு திறமை பத்தாது, கவிதை அருமை என்று மட்டுமே சொல்ல முடிகிறது! அன்னையின் புகழ் பாடும் கவிதை அருமை அருமை!
ஒரு கவிதையின் கடைசி வார்த்தை அடுத்த கவிதையின் முதல் வார்த்தையாய் அமைத்தது அருமை! --
நீக்குஇந்த இலக்கணம் தான் “அந்தாதி“ என்பது நண்பரே.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வரலாறு.
தமிழன்னையும் அன்புக்கரசியும் போட்டிபோட்ட வார்த்தைகள்.எப்படித்தான் எழுதுவீர்களோவென்று திகைத்துப்போகிறேன் !
பதிலளிநீக்குஎன் இனிய ஆதாமி ஹேமா...
நீக்குஅழகிய வாழ்த்திற்கு மிக்க நன்றி.
மூன்று விடயங்கள்..
பதிலளிநீக்குமுதலில் பதிற்றுஅந்தாதி என்று எந்தப் பாவகையும் தமிழ் மரபுக் கவிதையில் இல்லை. அந்தாதிதான் இருக்கிறது..
இரண்டு- எளிய வெண்பா வடிவமெனினும் பல இடங்களில் தளை தட்டுகிறது..வெண்பா எழுதப் புகுந்தால் தளை தட்டாமல் எழுதுவது நல்லது; அல்லது வெண்பா எழுதாமல் இருத்தல் அதனினும் நன்று..எல்லோரையும் போல புதுக்கவிதை என்று எதையாவது எழுதி நிரப்பலாம்.
மூன்றாவது அரௌனா செல்வேமே என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதை அருணா செல்வம்'தான் என்று(நியராலஜிக்காக) சாதிப்பது தவறு. நியுமராலஜியின் முதல் விதி,இப்படி மொழியின் ஓசையைச் சிதைத்துப் பெயரை மாற்றுவதல்ல.கெய்ரோ முதல் சேதுராமன் வரை எவரும் இப்படி வழிகாட்டவில்லை!
பெயரை வெளியிடப் பயப்படும்
நீக்குநபருக்குப் பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை.
பெயர் தொலைத்த நண்பருக்கு,
நீக்குகவிஞருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமை அவர் காட்டும் நாகரிகம். மங்கும் மரபினுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் இவரைப் போன்ற ஒருசிலரைக் காத்துப் போற்றல் வாசகராகிய எம் கடன்.
தமிழில் பதிற்றுப் பத்திலும் அந்தாதி இருக்கிறது ( நான்காம் பத்து) பதிற்றுப்பத்தந்தாதியும் இருக்கிறது. ( சிவஞான யோகிகளின் கலைசை பதிற்றுப்பத்தந்தாதி).
உங்கள் வாதத்திற்காக இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் வெண்பாவும் அந்தாதியும் தமிழில் உண்டு தானே! அதைக் கொண்டு புதிய வடிவைப் படைத்திருப்பவரைப் பாராட்ட அல்லவா வேண்டும்.
வெண்பாவில் தளைதட்டலைத் திருக்குறளிலேயே காட்டமுடியும்.
“ "அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு" (குறள். 943)
இங்கு உண்க அஃதுடம்பு எனத்தளை தட்டவில்லையா?
ஆய்தம் அலகு பெறுமென்றால்,
"தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று" (குறள். 236)
எனுமிடத்தில் தளை தட்டாதா? இதற்கு உங்கள் சமாதானம் என்ன?
முயற்சிகளைப் பாராட்ட வேண்டும் நண்பரே!
தவறுகளைச் சுட்டிக் காட்ட எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக எல்லாவற்றிற்கும் குறைகூற என்று ஆரம்பித்தால் எதுவுமே எழுத முடியாது.
நான் உங்களைப் போன்ற தமிழறிஞனோ புலவனோ இல்லை. ஆனால் நானறிந்தவரை இப்பாடல்களில் தளைப்பிறழ்ச்சியைக் கண்டேனில்லை. தங்களுக்குத் தெரிந்தால் தாராளமாய்க் காட்டலாம். நானும் கற்றுக் கொள்வேன்.
இறுதியாக கவிஞரின் பெயரை நீங்கள் அணுகியிருக்கும் விதத்தில் உங்கள் நோக்கம் புரிகிறது.
கடலை உங்கள் குவளைகளில் மொண்டு காலி செய்ய முடியாது நண்பரே!
நன்றி!
சேர்த்தெழுதும் சீர்களால் பாபிறக்கும்! அன்னையன்பைக்
பதிலளிநீக்குகோர்த்தெழுதக் கொஞ்சுதமிழ் வான்பறக்கும்! – பார்க்கின்ற
ஊர்போற்றும்! அன்னையே உன்னை அறிந்தெழுதப்
பார்போற்றி வாழ்த்தும் படர்ந்து!
அழகிய அன்னைக்கான வெண்பா...மேலும் சிறந்த பென்பாக்கள் யாக்க என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீராளன்.
(பென்பாக்கள்...???? :)
ஐயோ மன்னிக்கவும் .......நேரடியா தமிழில் டைப் பண்ணுவதால் இப்படி இடைக்கிடை தவறு நடக்கிறது கவனிக்கவில்லை தயைகூர்ந்து மன்னிக்கவும்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று இந்தியாவின் சுதந்திர நாளில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/blog-post_15.html?showComment=1376568104980#c892188592548843204 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
nalla kavithai
பதிலளிநீக்குஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்து விட்டு கருத்திடுங்கள் சகோ
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html