செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கண்ணே... காதல் பிறப்பிடம்!! (கவிதை) 
எண்ணப் பறவை சிறகுவிரித்(து)
    எழுந்து பறக்க உதவிவிடும்!
வண்ணம் என்ப(து) என்னவென
    வகையைப் பிரித்து உணர்த்திவிடும்!
உண்ணும் முறையும் உயிர்வாழ
    எண்ணும் மனித மனங்களுக்கு
கண்கள் என்ப(து) ஓருறுப்பு!
    காணும் செயலால் பேருறுப்பு!

குறும்புப் பார்வை குத்திழுக்கும்!
    குவளை மலர்கள் மறைந்திருக்கும்!
கரும்புச் சாற்றின் சுவையிருக்கும்!
    காதல் அதிலே கமழ்ந்திருக்கும்!
அரும்பு போன்று கண்விரிய
    ஆசை வண்டாய் ஆடிவரும்!
இரும்பு உடலாய் இருந்தாலும்
    இலவம் பஞ்சாய் மிதக்கவிடும்!

பண்கள் படைக்கும் பாவலர்கள்
    பசுமைத் தமிழில் மைநிரப்பிப்
பெண்கள் கண்ணை வண்டென்றும்
    பிளக்கப் பாயும் அம்பென்றும்
விண்ணில் ஓடும் மீனென்றும்
    மண்ணில் வாடும் மலரென்றும்
தண்ணீர் வாழும் கயலென்றும்
    தாகத் துடனே எழுதிடுவார்!

பெண்ணின் கண்கள் போதைதரும்!
    பூத்த மலரால் பாதைதரும்!
கண்கள் பேசும் மொழியாலே
    காளை நெஞ்சம் சோலைபெறும்!
மண்ணில் மகத்தாய் வாழ்ந்தாலும்
    விண்ணில் மிதக்க விட்டுவிடும்!
கண்ணும் கண்ணும் கவ்வுவதால்
    கண்ணே காதல் பிறப்பிடமே!


(கண்கள் மேலும் கவியெழுதும்)
அருணா செல்வம்.


21 கருத்துகள்:

 1. அழகான வரிகள் ரசனை மிக்கது........ரசிச்சேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசனையைக் கண்டு நானும் மகிழ்ந்தேன்.

   (பதிவிட்ட மறுநிமிடமே படித்துவிட்டீர்களே!!)

   நன்றிங்க சிட்டுக்குருவி.

   நீக்கு
 2. அழகிய கவிதை
  உங்கள் தமிழ் இனிமையாய் இனிக்கும் ரகசியம் என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “தமிழுக்கும் அமுதென்று பேர்“ -
   என்பதை நீங்கள் அறியாதவரா தோழரே!

   தாங்கள் நீண்ட இடைவேளியிட்டும் வந்தமைக்கு மிக்க நன்றிங்க.

   நீக்கு
 3. அழகுமிகு வரிகள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 4. நல்ல கவிதை சகோ! ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மிக்க நன்றிங்க கோவி சார்.

   நீக்கு
 6. மோனையில் நிறைந்திருக்கும் கவிதையை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 7. ''...ஆசை வண்டாய் ஆடிவரும்!
  இரும்பு உடலாய் இருந்தாலும்
  இலவம் பஞ்சாய் மிதக்கவிடும்..''
  அப்படிக் கண் பற்றி பல்லாயிரம் எழுதலாம்.
  சிறப்புடன் எழுதப் பட்டுள்ளது.
  நன்று கவிதை.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க கோவை கவி அவர்களே.

   நீக்கு
 8. பெண்ணின் கண்கள் போதைதரும்!
  பூத்த மலரால் பாதைதரும்!
  கண்கள் பேசும் மொழியாலே
  காளை நெஞ்சம் சோலைபெறும்!
  மண்ணில் மகத்தாய் வாழ்ந்தாலும்
  விண்ணில் மிதக்க விட்டுவிடும்!
  கண்ணும் கண்ணும் கவ்வுவதால்
  கண்ணே காதல் பிறப்பிடமே!


  கண்கள் காவியம் அருமை
  காதல் கோட்டைக்கு ண்கள் தானே தலைவாசல்
  மனம் கவர்ந்த பதிவு
  அடுத்த பஹிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க ரமணி ஐயா!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க சசிகலா.

   நீக்கு
 10. கண்களின் உவமைகளனைத்தையும் தேர்ந்தெடுத்தக் கவிவரியால் எடுத்துரைத்துப் பெருமைப்படுத்திவிட்டீர்கள். கண்ணே காதல் பிறப்பிடம் என்பது எத்தனை உண்மை. கண் பேசும் மொழிக்கு மொழிபெயர்ப்பாளர் தேவையே இல்லையே... அற்புதம். பாராட்டுகள் அருணா செல்வம்.

  குவலை - குவளை என்றிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரிபாருங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

   நீங்கள் சொன்னது சரிதான். குவளை மலர் என்று தான் இருக்கவேண்டும்.
   தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி அக்கா.

   நீக்கு
 11. அன்பின் அருணா

  கண்ணே காதலின் பிறப்பிடம் - கவிதை அழகா இல்லை படம் அழகா ? கடும் போட்டி - அழகிய கண்ணை விவரிக்கும் கவிதை தான் அழகு. காதல் இரசம் சொட்டும் கவிதை - கண்ணும் கண்ணும் கவ்வுதலில் உதட்டினை வெல்கின்றன. வண்டா - அம்பா - மீனா - மலரா - கயலா - கவிஞனின் கற்பனைக்கு எல்லை ஏது ? என்றும் தணியாத தாகம் . ஓறுருப்பு பேருறுப்பாக மாறுவது செயலினால் ..... நல்லதொரு கற்பனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு