வியாழன், 14 நவம்பர், 2013

இது சரியா? – பதில்சொல்லுங்கள்!



   போன சனிக்கிழமை அன்று என் தோழி என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஓர் இளம் மருத்துவர். ரொம்ப நாட்கள் கழித்து அவளைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
   இரவெல்லாம் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் இந்தத் தகவலை என்னிடம் சொல்லி, இந்தக் கேள்வியையும் கேட்டாள்.
   அவள் சொன்னது....
   அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் 92 வயதான ஒருவர் அட்மிட் ஆகி இருந்தார். அந்த மனிதர் நன்றாக பேசுகிறார். நன்றாக சாப்பிடுகிறார். நன்றாக தூங்கி எழுகிறார். ஆனால், அவருக்குக் கொஞ்ச நாட்களாகச் சிறுநீர் கழிப்பதில் தான் பிரட்சனை ஏற்பட்டுள்ளது.
   அதை ஆராய்ந்து பார்த்ததில் அவரின் சிறுநீர் குழாயில் கல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது தெரிந்ததால், அவர் அறுவை சிகிட்சை செய்து கொள்வதற்காக அன்று மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.
   அவருக்கு மறு நாள் அறுவைசிகிட்சை நடைபெற இருந்ததால் முதல்நாள் என் தோழியின் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்.
   அன்று, “சிரி“ நாட்டிலிருந்து வந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் என் தோழிக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.
   என் தோழி, நாளை அறுவைசிகிட்சை நடைபெற இருக்கும் அந்த நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைச் சரிபார்த்து எழுதிக் கொடுத்து அக்கரையுடன் கவனித்தும் கொண்டாள்.
   இதைக் கண்ட “சிரி“ நாட்டு டாக்டர் “இதெல்லாம் இவருக்குத் தேவைதானா...?“ என்று சொல்லி சற்று நக்கலாக சிரித்திருக்கிறார்.
   அவள், அவரிடம் அங்கே எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று காரணம் கேட்டாள்.
   அதற்கு அவர், “அந்த நோயாளிக்கு 92 வயதாகிவிட்டது. அவரை அப்படியே சாக விடுவது தான் நல்லது. இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்?“ என்று கேட்டிருக்கிறார்.
   மருத்துவராக இருந்துக்கொண்டு இப்படி பேசுகிறாரே என்று என் தோழி சற்று கோபப்பட்டாலும் மனத்தை அடக்கிக்கொண்டு “நோயிக்காக சிகிட்சைப் பெற வந்தவரை அப்படியே விடுவது தவறில்லையா... உங்கள் நாட்டில் இப்படித்தான் டாக்டர்கள் நடந்து கொள்வார்களா...?“ என்று கேட்டிருக்கிறாள்.
   அதற்கு அவர், “எங்கள் நாட்டில், என் வாழ்நாளில் இவ்வளவு வயதான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. எங்கள் நாட்டில் அறுபதிலிருந்து எழுபதுவரை அவர்களாகவே நடந்து சிகிட்சைக்கு வரும் பச்சத்தில் டிரிட்மண்ட் கொடுப்போம். பொதுவாக எழுபது வயதிற்கு மேல் உடல் உபாதைகள் வந்தால் யாரும் மருத்துவ மனைக்கு வருவதில்லை. அவர்களின் குடும்பத்தாரும் அழைத்து வர மாட்டார்கள். வயதானவர்களுக்கு வரும் பிரட்சனைகள் தான் என்று பெரிதுபடுத்த மாட்டார்கள். அப்படியே விட்டுவிடுவார்கள்.
   ஆனால் இங்கே... இந்த வயதானவருக்கு இப்படியொரு சிகிட்சை. ஆச்சர்யமாக இருக்கிறது. நன்கு யோசித்துப் பார்த்தால் தேவை அற்றது. அவருக்கு உபயோகப்படும் மருந்து மாத்திரை மற்றும் நேரத்தை சிறுவயதானவர்களுக்கு உபயோகித்தால் அவர்களுக்கும் நாட்டிற்கும் உபயோகப்படும்“ என்றாராம் கோபமாக.
   அவர் சொன்னதில் உண்மை இருந்தாலும் அதை என் தோழியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
   அதை அவள் என்னிடம் சொன்னாள். நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
   இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். அந்த “சிரி“ நாட்டு மருத்துவர் சொன்னது சரியா...?

குழப்பத்துடன்

அருணா செல்வம்.

36 கருத்துகள்:

  1. மருத்துவர் சொன்னது சரியா...?
    200% correct.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பக்கிரிச்சாமி ஐயா.

      நீக்கு
  2. மிகவும் நுணுக்கமான பிரச்சினை. நம் அன்றாட வாழ்வில் பலரும் சந்திக்கும் கேள்வி இது. இதற்கு மேலோட்டமாக பதில் சொல்ல முடியாது. அவரவர்கள் சூழ்நிலை, குடும்ப நிலை, பொருளாதார வசதி, ஆள் பலம் இவைகளை வைத்துத்தான் முதியவர்களை எப்படி வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. மருத்துவர் என்பவர் தெய்வத்திற்கு சரியாக மக்களால் பார்க்கப் படுபவர்களுக்கு கொஞ்சம் இரக்க மனசும் சேவை மனப்பான்மையும் இருக்க வேண்டும்.

    உங்கள் தோழியின் கோபம் நியாயமானதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மனோ சார்.

      நீக்கு
  4. வணக்கம்
    சிரி நாட்டு மருத்துவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் என்றால் 92வயது தாத்தா அவரின் நாட்டுக்காக எத்தனை தடவை வியர்வை சிந்திருப்பார் அவர்களின் உழைப்பில் தான் அந்த நாடு வளர்கிறது......என்பதை சிரி மருத்துவர் உணரவில்லை அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்... அவர்கள்தான் இளம் சமுதாயம் சுவீட்சமாக வாழ வழி திறந்தவர்கள்....மருத்தவராக இருப்பது உயிரை பாதுகாக்கத்தான் ஆனால் உரை பறிக்க அல்ல... உங்கள் தோழி சொல்வது சரிதான் சிரி மருத்துவர் சொல்வது தவறான கருத்துஇது என்னுடைய கருத்து....இளைஞ்ஞனாக இருக்கட்டும் முதியவராக இருக்கட்டும்.. உயிர் என்பது ஒன்றுதானே அதை உணர வில்லை சிரி மருத்துவர் ....இது என்னுடைய கருத்து...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு

  6. வணக்கம்!

    தமிழ்மணம் 2

    நரிநாட்டுக் காரா் நடையெனக் கண்டேன்
    சிரிநாட்டுக் காரா் செயல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  7. 92 வயது என்பது அனுபவங்களின் பொக்கிஷம்...


    இறப்பு என்பது இயற்கையாகத்தான் வரவேண்டும்... மற்றவர்களால் அல்லது அலட்சியத்தால் வரவிடக்கூடாது...

    மருத்துவர்கள் தன் கடமையை செய்ய வேண்டும் அவருடைய தந்தையாக இருந்தால் இப்படித்தான் செய்வாரா....


    அவரு்ைய செயலை நான் கண்டிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அவருடைய செயலை நான் கண்டிக்கிறேன்.“ - நல்ல தைரியசாளிதான் நீங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சௌந்தர்.

      நீக்கு
  8. //அந்த “சிரி“ நாட்டு மருத்துவர் சொன்னது சரியா...?///


    அவர் சொன்னது தவறு.... அந்த வயதானவர் அவரின் அப்பாவாக இருந்தால் அவர் அப்படி சாகவிடுவாரா என்ன? அந்த வயதானவரின் மருத்துவத்திற்கு ஆகும் செலவை சிறுவர்களுக்கு செலவிடலாம் என்று சொல்பவர் தான் டாக்டராக இருந்து அதிகப்படியாக சம்பாதிக்கும் பணத்தை சிறுவர்களின் சிகிச்சைக்காக செலவழிக்கலாமே அவர் அப்படி செய்வாரா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டராக ஆனதே சம்பாதிப்பதற்கு தானே...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  9. என்னை பொறுத்தவரை வயதாகிவிட்ட காரணதுக்காக சிகிச்சை அளிக்காமல் விடுவது மனிதாபிமற்ற செயல் ..! நாளாகி விட்டது தேவையற்ற பொருள் என்று ஓரத்தில் போட்டுவிடுவதற்கு உயிர் ஒன்றும் குப்பை இல்லை... அதே மருத்துவர் 70 வயதாகி நோய் வந்தால் கவனித்து கொள்ளாமல் சாக தயாராகிகிவிடுவரா? எத்தனை வயதாக இருந்தாலும் உயிர் இருக்கும் வரை வாழத்தானே வேண்டும்? 6 வயதானாலும் 60 வயதானாலும் துன்பம் எல்லோருக்கும் ஒன்றுதான்...! இதில் குழப்பமே வேண்டாம். இத்தனை வயதுக்குமேல் இவர்கள் வாழ்ந்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று நினைத்தால்.... காலம் வேகமாக ஓடும்... நமக்கும் ஒரு நாள் அந்த வயது வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி உஷா.

      நீக்கு
  10. “சிரி“ நாட்டு மருத்துவர் சொன்னது சரியா...?
    பிழை தான்!
    "நோயைக் குணப்படுத்தி
    ஆளைச் சுகப்படுத்தலே (உயிரைக் காப்பாற்றுதலே)
    மருத்துவத்தின் நோக்கம்" என்று
    மருத்துவம் படிக்கும் போதே
    “சிரி“ நாட்டு மருத்துவர்
    படிக்க மறந்து போயிட்டார் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே அதையெல்லாம் கற்றுத் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. வயதுக்கும் வாழ்விற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ?..இந்த வயதிலும் திடகாத்திரமாக இருக்கும் வயோதிபர் தன் இளவயது முதற்கொண்டு இன்று வரைக்கும் எவ்வளவு கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் தன்
    வாழ்நாளைக் கழித்திருப்பார் ?..கண்ணியமான அந்த மனிதர் தன் உயிர் பிரியும் போதும் உவாதைகள் இல்லாமல் இருக்க வேண்டும்
    என்றே நினைத்திருப்பார் இதில் என்ன தவறு இருக்கின்றது ?..இது தனி மனித சுதந்திரம் இதை விவரிக்கும் வைத்தியருக்குத் தான் ஒன்று புரியவில்லை
    உயிர் போகும் தருவாயில் இருப்பது குழந்தையாக இருந்தால் என்ன
    கிழவனாக இருந்தால் என்ன வலியும் வேதனையும்இருவருக்கும்சமம் தானே ?..இங்கே வைத்தியர் தன் கடமையை மறந்து பேசியது தான் தவறு .அந்த வயோதிபர் மீண்டும் பூரண நலன் பெற்று வாழ வேண்டும் என்று நானும் பிரார்த்திக்கின்றேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. சிரி மருத்துவர் கூற்று தவறானது! உயிர் எல்லோருக்கும் ஒன்றே! வயதாகிப்போனால் அப்படியே விட்டுவிடுவது அவர்கள் கலாசாரமாக இருக்கலாம்! நம் கலாசாரம் அப்படிப்பட்டது அன்று. மூத்தவர்களை காப்பது நம் கடமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கலாச்சாரம் அப்படிதான் என்பதைச் சொல்லிவிட்டாரே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  13. மருத்துவத்தில் மிக முக்கியமாக சில முடிவுகள் எடுக்கப்படவேண்டும்:
    ஒன்று Quality of Life...இதை விக்பீடியாயாவில் படிக்கவும்.
    அடுத்தது : When to pull the plug.
    இது இரண்டையும் கொஞ்சம் படியுங்கள். ஒரு பின்னூடத்தில் தெரிவிக்க கூடிய கருத்து அல்ல! இது விரிவாக விவாதம் செய்ய வேண்டிய தலைப்பு:
    __________
    எம்டன் மகன் 2006 or 2007 மாயாஜாலில் படம் பார்த்தேன் என் நண்பன் குடும்பத்தினருடன். நாடு நன்றாக இரவில் முன்னேறி உள்ளது. நிற்க.

    அதில் நாசரின் மாமனாருக்கு பால் ஊற்றி கொல்லும் அல்லது கொல்ல முயற்சிக்கும் (சரியாக ஞாபகம் இல்லை) காட்சி ஒன்று வரும். என் நண்பன் மனிவியைக் கேட்டால் அப்படி கிராமங்களில் நடப்பது உண்டு என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

    பதிலளிநீக்கு
  14. `சிரி’ நாட்டுக்கார டாக்டர் கூற்று மனதினை வலிக்கச் செய்கிறது.
    பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை. இருக்கும் வரை வேண்டியவற்றைச் செய்து காக்கவேண்டியது கடமையேயாகும்.

    இங்கு ஜேர்மனியில் ஆக்சிடெண்ட் ஒன்றினால் மூளை இயக்கம் அற்று 11 வருடங்களாகக் கோமா - செமிகோமா நிலையில் இருப்பவருக்கு சில மாதங்களுக்குமுன் அவசியமான ஒரு ஆபரேஷன் செய்யும் நிலை.
    அதற்குமுன் வழமையான கேள்வி பதில் ஆபரேஷனுக்கு கையெழுத்திட்டுக் கொடுக்கும் தருணம் அந்த ஆபரேஷனைச் செய்ய இருக்கும் பெரிய டாக்டர் நோயாளியின் மனைவியிடம் நாம் இவருக்கு இந்த ஆபரேஷன் செய்வதே மிகுந்த சிக்கலுடன்தான். ஆயினும் செய்யவேண்டிய ஒரு கட்டாய நிலையில் செய்யப் போகின்றோம். ஒருவேளை ஆபரேஷன் செய்யும் இடையில் இவரின் இருதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டால்... அல்லது இயக்கம் தடைப்படுவதாய் இருந்தால்....
    அவருக்கு உடனடி மேலுதவி செய்து இருதயத்தைச் செயற்படுத்துவதா? இல்லை...
    11 வருடங்களாக சுய உணர்வோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இப்படியே கிடப்பவரை அத்தோடு போதுமெனக் கைவிடுவதா? உங்கள் விருப்பம் என்ன?
    என்ன செய்வதென நீங்களே முடிவு சொல்லுங்கள் என்றார்.
    அத்துடன்,
    இந்த நிலையில் ஒருவேளை என் அண்ணனோ இல்லை அப்பாவோ என்றாலும் நானே அவர் வாழ்ந்தவரை போதும் இத்தோடு சிச்சையை நிறுத்துவோமெனத்தான் முடிவெடுப்பேன் என்றார்...
    அவர் மனைவி அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து இல்லை இறுதிக் கணம்வரை செய்யக்கூடிய அத்தனை வைத்திய முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவ் ஆப்பரேஷன் நடந்தது.

    நடுத்தர வயதுக்கார நோயாளிதான் அவர். இறைவன் கருணைகொண்டால் பழைய நிலைக்கு உணர்வுகள் திரும்பி இன்னும் வாழமுடியும். அப்படியிருக்க எப்படி இத்தகைய மிருகத்தனமான கேள்வியை இவர்களால் கேட்க முடிகிறது...

    இது கதையல்ல... என் வாழ்க்கையில் நானே அனுபவித்த இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டம் சம்பவம் இது.

    வெளிநாட்டு வைத்தியம் திறமென்பர். ஆனால்...
    மனதை, உணர்வை விற்றுக் கசாப்புக்கடையில் வேலை செய்பவர்களாய்த்தான் என் கண்களுக்கு இவர்களைத் தெரிகிகிறது.
    இவர்களிடம் கருணையை எப்படி......

    பதிலளிநீக்கு
  15. சகோதரிக்கு வணக்கம்..
    படித்ததும் பதறிப் போனேன். உயிர் என்பது இறைவன் கொடுத்தது இல்லையா! அதை எடுப்பதற்கும் அலட்சியப் படுத்துவதற்கும் இங்கு யாருக்கும் உரிமை இல்லை. மருத்துவரின் கடமையை சரியான கண்ணோட்டத்தில் சிரி நாட்டு மருத்துவர் பார்க்க தவறி விட்டார். ஆனால் தங்கள் தோழி மனிதத்தை தனது வார்த்தையில் கோர்த்து வசை பாடுயிருப்பது கண்டு அவர் மேல் மிகுந்த மரியாதை பிறக்கிறது. அவருக்கு வணக்கங்கள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    பதிலளிநீக்கு
  16. இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு, இங்கு பின்னூட்டத்தில் நான் இதை எழுத முடியாது! அதற்கு பதில்..இதை ஒட்டி நான் ஒரு பதிவே போடுகிறேன்.

    இந்த பின்னூட்டங்கள் உணர்சிகளின் கொந்தளிப்பு; ஆற அமர யோசனை செய்தால் உங்கள் தவறுகள் உங்களுக்கு புரியும்!

    மறுபடியும், உங்கள் உணர்சிகளை முழுவதும் மதிக்கிறேன்.
    Please do not jump to conclusions that westerners are heartless people; they (doctors) have to follow the letter of the law----unlike Indian counterparts!

    எதிர் பாருங்கள்...என் பதிவை..

    பதிலளிநீக்கு
  17. என்ன அக்கிரமம். சிரி நாட்டில் அப்படியெல்லாம் நடக்கும் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. அது அந்த மருத்துவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இது கொலைக்கல்லவா சமம்?

    பதிலளிநீக்கு
  18. டாக்டர்ஸ் எல்லோரும் மனிதர்களே... சராசரி மனிதருக்கு இருக்கும் குறைகள் அவர்களிடமும் இருக்கும்...
    விபத்தில் காயம்பட்ட ஒருவரை ஒரு பெரிய பொது மருத்தவ மனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் வழியில் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவ உதவியாளர்கள் காயம்பட்டவரின் உறவினர்களை இந்தக் காலை கொஞ்சம் ஒடிச்சு திருப்புங்க என்று சொல்ல .... உறவினர்கள் அவரை செவுள் அறையாய் அறைந்தது நினைவிற்கு வருகிறது..

    பதிலளிநீக்கு
  19. வலிகளும் வேதனைகளும் ஒருநாள் சிலி நாட்டு மருத்துவருக்கும் வரும்..அப்பொழுதுதான் தெரியும் அலட்சியத்தின் வலி அதைவிடப் பெரிதென்று.,

    பதிலளிநீக்கு
  20. இந்த மாதிரியான கேள்விகளுக்கான பதில் அவங்க அவங்க புரிந்துணர்தல்ல இருக்கு. உயிர் கண்டிப்பா எல்லோருக்கும் ஒண்ணு தான். நாம இதுக்கான விடையை அந்த நோயாளியின் இடத்தில நம்மள வச்சு பாக்கணும் ... விடை எதுவாயிருந்தாலும் அது தான் சரி

    பதிலளிநீக்கு
  21. சில நாடுகளில் இப்படி நடப்பதுண்டு.......

    பதிலளிநீக்கு